உண்மையின் ஊர்வலம் .. (4)

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

புதியமாதவி, மும்பை


ஒல்லியான உடல்.. எப்போதும் கண்ணடித்து சிரிக்கும் முகம்.

அவளைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம்.

மதியம் உணவு நேரத்தின் போது அவளுடைய சாப்பாடு மேசையைச் சுற்றி

எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாய்.

என் தோழியர் பலர் அவளுக்கும் தோழியர் என்பதால் அவளைச் சந்திக்கும் போதெல்லாம் ஸ்நேகம் வளர்க்கும்

புன்னகைப் பரிமாறல்கள் தொடரும்.

கடக் காட்டன் புடவையில் என்னைப் பார்த்தால் என் புடவையைத் தொட்டுப் பார்த்து என்னைக் கட்டிப் பிடித்து

ரசிப்பதில், அப்போது நான் ஒரு இரண்டும் கெட்டான் நிலையில் தத்தளிப்பதைக் கண்டு ரசிப்பதில் அவளுக்கு

எப்போதும் குஷி.

அடுத்த முறை எனக்கும் சேர்த்து இதைப் போல புடவை உங்கள் தமிழ்நாட்டிலிருந்து வாங்கிவா என்று செல்லமாக

சொல்லிவிட்டு நகர்வாள்.

அப்போதெல்லாம் அவளுக்குப் புடவைக் கட்டினால் எப்படி இருக்கும் என்று

கற்பனைச் செய்து என் மனம் சிரிக்கும்.

பார்சி இனத்தவருக்கே உரிய நிறம். அவர்கள் சம்பிரதாயப்படி திருமணம் ஆனப் பெண்கள் கைகளில் சிவப்பு

நிற கண்ணாடி வளையல் ஒன்றிரண்டு அணிந்திருப்பார்கள். அவள் கைகளிலும் ஒற்றை வளையல் சிவப்பு நேரத்தில்

கண்ணாடி வளையல்களுக்குரிய சத்தங்களின்றி வாய்ப்பொத்திக் கிடக்கும்,

அதற்கும் சேர்த்து வைத்து அவள் சிரிப்பொலி எப்போதும் அவளிருக்கும் இடத்தை எல்லோருக்கும் அலை ஒசைகளில்

ஒலிப்பரப்பிக் கொண்டிருக்கும்.

தீடாரென ஒரு வாரம் அவள் வேலைக்கு வரவில்லை. அவள் சாப்பாடு மேசையில்

மெளனவிரதம். அதுவே என்னவோ போலிருந்தது. அவர்கள் மேசையைக் கடக்கும்போது என் தோழியிடம் அவளைப்

பற்றிக் கேட்ட போது

சொன்னாள்..ஷி லாஸ்ட் ஹர் ஹஸ்பெண்ட்.

அவளைப் பற்றி ஒவ்வொரு செய்திகளும் அதன்பின் அவர்கள் சொல்ல…என்னால் நம்பமுடியவில்லை.

அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவளும் அவனும் சந்தோசமாக மும்பையின்

கடற்கரை, ஓட்டல் , தியேட்டர் என்று சுற்றிக் கொண்டிருக்க ஒரு நாள்

அவன் உடலிலிருந்த ஒரு கட்டியை மருத்துவர் பரிசோதிக்க அதன் பின் அதுவே

புற்றுநோயின் ஆரம்பம் என்று அறியப்பட்டது. அவன் அவளை அதன்பின் மணமுடிக்க மறுத்தான். அவளோ இந்த

மருத்துவ சோதனை மணம் செய்து கொண்டபின் நடந்திருந்தால்.. அல்லது எனக்கு இப்படி ஒரு வியாதி

வந்திருந்தால்.. அவனால் அவள் காதலுக்கு முன்னால் எதுவும் வாதிட்டு வெல்ல முடியவில்லை.

அதன் பின் 11 வருடங்கள். முதலில் பெண் குழந்தை. இரண்டாவது ஆண் குழந்தை. அவன் இரண்டாவது குழந்தை

வேண்டாம் என்று மறுத்தும் அவள்

அவனின் அடையாளமாக அவளுடன் வாழப்போகும் அவனை கருவில் அழிக்க

மறுத்தாள். வாழ்க்கை ஓடியது..அவனுக்கு மருத்துவச் செலவுகள்,.. அவளுக்கு

ஆபிஸ், குழந்தைகள், குழந்தைகள் கவனிப்பு..என்று.

மீண்டும் புற்றுநோயின் தீவிரம் தாக்கியபோது மருத்துவம் கை கொடுக்கவில்லை.

யாரையும் தன் இல்லத்திற்கு துக்கம் விசாரித்து வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். யாரும் அதனால்

போகவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து அவள் மீண்டும் வேலைக்கு வந்தாள்.

வழக்கம் போல அவள் சாப்பாடு மேசையைச் சுற்றி நண்பர்கள் கூட்டம்..

ஆண்களும் பெண்களுமாய்.. சிரிப்பொலிகளின் சத்தம்.

அவள் கையில் எப்போதும் இருக்கும் ஒற்றையாகக் கிடந்து தவிக்கும் சிவப்பு நிறக் கண்ணாடி வளையல்

மட்டுமில்லை.

வழக்கம்போல என்னைத் தாண்டிச் செல்லும்போது என் காட்டன் புடவைகள்

கசங்க கட்டிப் பிடித்து கண்ணடித்துச் சிரிக்கிறாள். என் கண்களின்

இமைகளில் ஈரம் .. அதை மறைப்பதற்கு நானும் அவளுடன் சேர்ந்து சத்தமாகச்

சிரிக்கின்றேன்.

—-

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation