கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

அக்னிப்புத்திரன்


பொடாவில் மாதக்கணக்கில் உள்ளே அடைப்பட்டுக் கிடந்த வைகோ, ஒரு உறுதியான முடிவுடன் வெளியே வந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் கூட்டணிக்கட்சிகளின் பலத்தால் வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் திமுகவும் கூட்டணிக்கட்சிகளும் வெற்றி பெற்றன. இந்த வெற்றிக்கூட்டணியில் வைகோ தொடர முடியாமல் போனதற்கு என்ன காரணம் ?

கடலில் சுனாமி உருவாகி கரையை நோக்கி செல்லும்போது அதன் மேற்பரப்பு அமைதியாகவே இருக்கும். ஆனால் ஆழ்கடலில் பிரளயமாக அலை உருவாகி கொந்தளித்துக் கரையை நோக்கி அசுர வேகத்தில், விரைந்து சென்று கரையைத் தாக்கி மிகப்பெரிய அழிவை உண்டாக்கும். கடற்மேற்பரப்பினைப் போல மதிமுகவும் வைகோவும் மகிழ்ச்சியாக இருப்பதாக வெளியில் காட்டிக்கொண்டாலும் ஆழ்கடல் சுனாமி போல வைகோவும் சரி, உண்மையான மதிமுக தொண்டர்களும் சரி அவர்களின் அடிமனதில் மிகவும் கொந்தளித்தே காணப்படுகிறனர்.

ஒருசில சுயநலநபர்களின் வற்புறுத்தலே வைகோ ‘பாதை மாறிய வெள்ளாடாக ‘ போனதற்கு முக்கியக் காரணம் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தவுடன் மதிமுகவினர் வெடி வெடித்தனர் இனிப்பு வழங்கினர் என்று பத்திரிக்கைகளில் செய்தி வருவது எல்லாம் அதிமுகவின் தயவில் இருக்கும் சில மதிமுக நிர்வாகிகளின் ‘செட்டப் ‘ வேலைகள். உண்மையில் மதிமுகவின் உண்மையான தொண்டர்கள் அதிமுகவுடன் அணி சேர்வதைக் கிஞ்சித்தும் விரும்பவில்லை.

வைகோபாலசாமியை முன்னிலைப்படுத்திக்கொண்டு கண்ணப்பன், எல். கணேசன், செஞ்சி இராமசந்திரன் போன்ற மக்கள் செல்வாக்குச் சிறிதும் இல்லாத குட்டித் தலைவர்கள் வைகோவிற்குக் கடுமையான நெருக்குதல் கொடுத்து அணி மாறச்செய்துள்ளனர். சுயபுத்தி சிறிதும் இல்லாத வைகோ வசமாக ஏமாந்து நிற்கிறார். அதன் விளைவுதான் மாறி மாறி வைகோ அடித்த சகிக்கமுடியாத பல்டி. எந்தக்கட்சிதான் இதற்கு விதிவிலக்கு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இது பொருந்தும்தானே என்று ஆயிரம் எடுத்துக்காட்டுகளைக் கூறி, சப்பைக்கட்டுக்கட்டியும் வியாக்கியானம் கூறியும், பேட்டியும் தருகிறார் வைகோபாலசாமி. ஆனால் இவரைபோல எந்த ஒரு அரசியல்வாதியும் குறுகிய காலத்தில் இத்தனை முறை பல்டி அடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காலையில் கலைஞர்தான் அடுத்த முதல்வர் என்றும் மாலையில் அம்மாவுக்குத்தான் அடுத்த ஆட்சி என்றும் மாறிமாறிப் பேசி, அரசியல்மீதும் அரசியல்வாதிகள் மீதும் ஒரு நம்பகத்தன்மை இல்லாத ஒருசூழ்நிலையை உருவாக்கிவிட்டார். இதுவரை நடுத்தர மக்களிடம் கொள்கைவாதி போல தோற்றமளித்த வைகோ ஒரே நாளில் கோமாளியாக மாறி காட்சியளித்தது பரிதாபமானதுதான்.

10 மணியளவில் திமுகவிடமும் 11 மணிக்கு அதிமுகவிடமும் மாறி மாறிப் பேரம் பேசி அரசியல் வியாபாரியாக மாறிய வைகோவை நம்பி முன்பு சென்ற தொண்டர்களும் தற்போது திமுகவிற்குத் திரும்பத் தொடங்கிவிட்டனர் என்பதே உண்மை.

ஏற்கனவே அரசியல் என்பது ஒரு சாக்கடை என்ற எண்ணம் பொதுமக்களிடம் பரவி விரவிக் கிடக்கின்றது. இதன் விளைவு தேர்தலில், நன்றாகப் படித்த உயர்தரப்பிரிவு வாக்காளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் போன்ற பலர் வாக்களிக்க முன்வருவதில்லை. விளைவு மோசமான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நாடு நாறிப் போய்விடுகிறது. இதில் முக்கியமான ஒரு விஷயம், ஜனநாயகக்கடமை ஆற்றத் தவறிய வாக்காளர்களும் பின்பு இந்த மோசமான ஆட்சியால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே வேடிக்கையான உண்மையாகும்.

இதை முன்பே உணர்ந்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நன்கு சிந்தித்து ஓட்டளிக்க படித்தவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் முன்வர வேண்டும் என்று மக்களாட்சியில் நம்பிக்கையுள்ளவர்கள் வலியுறுத்தும் இப்போதைய சூழலில் வைகோ போன்ற அரசியல் கோமாளிகள் அடிக்கும் கூத்தில் மேற்கண்ட வாக்காளர்கள் மீண்டும் அரசியல்வாதிகளை எள்ளி நகையாடி, குறை கூறியும், அடிக்கடி வண்ணம் மாறும் ‘பச்சோந்தி ‘ அரசியல்வாதிகளுக்கு, நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணி வாக்களிக்கச் செல்லுவதில்லை. வாக்குச்சாவடிக்குச் சென்று நீண்ட வரிசையில் நின்று வெயிலில் வாடி வாக்களிக்க வேண்டுமே என்றும் அலுத்துக்கொண்டும், தங்களின் ஜனநாயகக்கடமையிலிருந்து தவறி விடுகின்றனர். கிடைக்கும் விடுமுறையை நன்றாக ஓய்வு எடுத்து அனுபவிக்கிறார்கள். கால் மேல் கால் போட்டுக்கொண்டு நிம்மதியாகத் தொலைக்காட்சியில் மெகாத் தொடர் பார்த்துக்கொண்டு பொழுதை ஓட்டிவிடுகிறார்கள். ஓட்டுப்பதிவுக்குச் செல்வதில்லை.

படித்த, நடுத்தர மற்றும் உயர்தர வகுப்புப்பிரிவு வாக்காளர்களின் இம்மாதிரியான மெத்தனப்போக்கிற்கு, மதிமுகவின் வைகோபலசாமி, சுப்ரமணியசுவாமி, திருமாவளவன், பார்வட்பிளாக் கட்சி நடிகர் கார்த்திக் போன்ற இன்றைய அரசியல் கோமாளிகளின் கொள்கையற்ற நடவடிக்கைகள் பெரிதும் காரணமாக அமைகின்றன. இந்தப்பட்டியலில் அண்மையில் கட்சி தொடங்கிய நடிகர் விஜயகாந்த்தும் சேர்ந்துவிடுவாரா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.

அதிமுகவின் கருணைப்பார்வையில் இருக்கும் மதிமுகவின் இரண்டாம் மட்டத்தின் ஒரு சில தலைவர்கள் தந்த அளவுக்கு அதிகமான நெருக்குதலே, அம்மா பக்கம் குதித்த ‘தெனாலி இராமனின் பூனையாக ‘ வைகோ இன்று பரிதாபமாகக் காட்சியளிக்கிறார்.

எந்த முகத்துடன் அதிமுகவுக்கு ஓட்டுக்கேட்டு, பிரச்சாரம் செய்யப்போகிறாரே தெரியவில்லை இந்தக் கொள்கை வீரர்.

ஒருசில திமுக தொண்டர்களுக்கு வைகோ மீது பாசம் இருந்தது என்னவோ உண்மைதான். அவரின் ஆவேசமான மேடைச் சொற்பொழிவுகள் அவர்களை ஈர்த்தது. ஆனால் வைகோவின் அந்தர் பல்டி, ஆகாச பல்டி திமுக தொண்டர்களிடையே கடும் வெறுப்பையும் கோபத்தையும் கிளறிவிட்டுள்ளது. திமுக தொண்டர்களின் மனதில் இருந்து சுத்தமாக வைகோ துடைத்தழிக்கப்பட்டிருக்கிறார். திமுகவிற்கு தேர்தலில் வெற்றியோ தோல்வியோ ஆனால், நிச்சியமாக இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய வெற்றி. அந்த வகையில் ஸ்டாலின் ஒரு அதிபுத்திசாலிதான் என்று அடித்துக் கூறலாம். அமைதியாகவே இருந்து அற்புதமாகக் காய் நகர்த்திருக்கிறார். வைகோ பாவம் ஏமாந்த சோணகிரி என்பதை தன் அரசியல் நடவடிக்கையால் அம்பலமாக்கிக் கொண்டார் என்றே தோன்றுகிறது. கவிழும் கப்பலில் கடைசிப் பயணியாக அவசர அவசரமாக ஏறிக்கொள்ளும் அப்பாவியாகவே வைகோ தெரிகிறார்.

திமுகவிற்கு ஒரு அற்புதமான வாய்ப்பு வந்து அமைந்திருக்கிறது. எதிரியையும் துரோகியையும் ஒரு சேர ஒன்றாகப் புறங்காணச்செய்ய அருமையான வாய்ப்பு. திமுகவும் அதன் தோழமைக்கட்சிகளும் திட்டமிட்டுத் தீவிரமாக ஒற்றுமையுடன் உழைத்தால், கண்டிப்பாக அதிமுக கப்பல் கரை சேராது. அதில் ஏறிய கடைசிப்பயணியின் நிலையும் அதோ கதிதான். ஆனால் திமுகவின் கூட்டணிக்கட்சியினர் ஒற்றுமையாக ஒன்றுபட்டு கடுமையாக உழைப்பார்களா என்பது இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இதை நம்பிதான் கோபாலசாமியும் அணி மாறியுள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க களம் சூடுபிடித்து திமுக கூட்டணிக்கட்சியினர் ஒற்றுமையாக உழைத்தால் அதிமுகவும் மதிமுகவும் கூட்டாகவே தோல்வியைச் சுவைக்க வேண்டிவரும். ஆனால் அதற்குத் திமுகவிடம் புதிய தேர்தல் அணுகுமுறை வேண்டும்.

கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியதால் திமுகவினர் கவலைகொள்ளத் தேவையில்லை. சென்ற தேர்தலில் அதிமுக தனது கூட்டணிக்கட்சிகளாக காங்கிரஸ். பாமக மற்றும் இரண்டு கம்னியூஸ்டு கட்சிகளின் துணையொடுதானே பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து ஆட்சிக்கு வந்தது.

சரி, சென்ற தேர்தலில் தனியாக நின்ற மதிமுக, இந்தத்தேர்தலில் ஜெயுடன் கூட்டுச் சேர்ந்து நிற்பதால் பாதிப்பு வருமே என்று எண்ணக்கூடும். வைகோவை தேச விரோதி என்று முத்திரை குத்திப் பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக்க வேண்டும் என்று ஊருக்கு ஊர் சென்று வைகோ ஓட்டு கேட்டுப் பிரச்சாரம் செய்தால் மக்கள் இவரைப் பற்றி என்ன எண்ணுவார்கள் ? போலி வேடதாரி, முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சரியான சந்தர்ப்பவாதி என்றுதானே எண்ணுவார்கள். இந்தப் பொருந்தாத கூட்டு, கண்டிப்பாக மக்களால் எள்ளி நகையாடப்பட்டு நிராகரிக்கப்படும் என்பது உறுதி. நேற்றுவரை ஜெயலலிதாவை காளி. நீலி என்று ஏகவசனத்தில் பேசி வந்த மதிமுகவினர் இன்று அதிமுகவினரின் ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெறுவது என்பது நடக்காத ஒரு காரியமாகவே முடியும். மதிமுக நிற்கும் பெரும்பாலான தொகுதிகளில் அக்கட்சி தோல்வியையே தழுவும்.

முன்பு ஒரு முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோது, அதிமுவின் பொதுக்கூட்ட மேடையிலேயே மதிமுகவினரை அவமதித்து பேசியவை எல்லாம் நிகழ்ந்தன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சுயமரியாதையை இழந்த அனுபவம் வைகோவிற்கு ஏற்கனவே உண்டு.

மதிமுக உண்மையிலே பலம் மிக்க ஒரு அமைப்புதானா ? அப்படி எல்லாம் பலமான ஓட்டு வங்கி கொண்ட கட்சி என்று கூற இயலாது.

சென்ற சட்டமன்றத்தேர்தலில் அதிகமான தொகுதிகளில் கட்டுத்தொகை அதாவது ஜாமீன் தொகையை இழந்து சரித்திர சாதனை படைத்த இயக்கம்தான் மதிமுக. குறைந்த அளவு வாக்குவங்கி கொண்ட ஒரு சிறிய அமைப்புதான் மதிமுக. அதுவும் சென்ற தேர்தல் வரை எந்தக் கட்சியையும் சாராத நடுநிலையான வாக்காளர்கள் வைகோ ஒரு கொள்கைவாதி என்று நினைத்துப் போட்ட ஓட்டுக்களுக்கும் இப்போது அவராகவே வேட்டு வைத்துக்கொண்டார்.

பொடாவில் உள்ளே போனதால் தமது கட்சி வளர்ந்திருப்பதாகக் கூறும் வைகோ, யார் பொடாவில் உள்ளே தூக்கிப்போட்டார்களோ அவர்களுக்கே ஓட்டு போடும்படிக் கூறினால் இதைவிட சிறந்த நகைச்சுவை இந்த ஆண்டில் இருக்கவே முடியாது.

மதிமுகவின் ஓட்டு வங்கியாகக் கருதப்பட்ட ஒரு பிரிவினர்களின் ஓட்டையும் தற்போது அதே இனத்தைச் சேர்ந்த கேப்டன்ன் நடிகர் விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு பிரித்துவிடக்கூடிய நிலையில் வலிமை குன்றிய நிலையில் மதிமுக தள்ளடித் தடுமாறி நிற்கிறது.

ஒரு சில தொகுதிகளில் மூன்றாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ஓட்டுகளை பெறும் ஒரு சாதாரண ஓட்டு வங்கி கொண்ட கட்சியாகவே மதிமுக இருக்கிறது. தன் பலம் என்ன என்று தெரியாததாலோ அல்லது தெரிந்துகொண்டோ தன் வலிமை பற்றித் தற்பெருமை அடிப்பதாகவே தெரிகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மாவட்டம் மற்றும் கரூர், குளித்தலை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் சற்று வலுவாக இருக்கலாம். கிருஷ்ணசாமி மற்றும் திருமா கட்சிகளைப் போன்ற உதிரிக்கட்சிகளுக்குரிய பலத்தைப் போன்றுதான் இதுவும். அதனால் மதிமுகவுடன் கூட்டணி அதிமுகவிற்கு எந்தவிதத்திலும் இலாபமாக இருக்கப் போவதில்லை. இலாபம் இல்லாமலா இப்படி வருந்தி வருந்தி மதிமுவை அழைத்தார்கள் என்று எண்ணக்கூடும். அதிமுகவின் நோக்கம் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும். அவர்கள் திட்டமிட்டது எல்லாம் பாமகவை வளைக்கத்தான். ஆனால் மருத்துவர் இராமதாசு உறுதியாக இருந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் சபலத்தன்மை கொண்ட மதிமுவை கூட்டணியிலிருந்து உடைத்திருக்கிறார்கள். அவ்வளவுதான். இது வெற்றிக்கு உதவுமா ? பயன் தருமா ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-அக்னிப்புத்திரன்

—-

agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்