கிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

யுவன் சந்திரசேகர்


படைப்பிலக்கியம் போலவே, மொழிபெயர்ப்பும் ஒரு சிருஷ்டிகர மனோநிலையைக் கோருவதுதான். படைப்பிலக்கிய முயற்சிகளுக் குக் கிடைக்கும் கெளரவமும், அங்கீகாரமும் மொழிபெயர்ப்புக்குக் கிடைப்பதில்லை என்றபோதும், மொழிபெயர்ப்புப் பணிக்குப் பின்னாலுள்ள அர்ப்பணிப்புணர்வு மிகுந்த மதிப்புக்குரியது. தான் படித்து, தன் மனம் முழுக்க நிரம்பிய பிற மொழிப் படைப்பைத் தாய்மொழியில் சமர்ப்பிப்பதற்கு மூலமொழியை அறியாத, சக வாசகர்கள் மேல் கொண்ட கரிசனம் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும் ?

ஆங்கிலத்தில் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும், ஆங் கிலம் தேசிய மொழியாக இல்லாத தேசங்களிலிருந்து வெளி யாகும் படைப்புகளுடனான நேரடித் தொடர்பு மொழி பெயர்ப்பு என்னும் சாதனத்தின் மூலமே சாத்தியமாகிறது. உலக வரை படத்தின் ஏதோவொரு மூலையிலுள்ள தேசத்தின் இலக்கியமும் ஆங்கிலம் என்ற ஊடகத்தின் வழியாக உலகம் முழுவதும் பரவுவ தற்கு, இந்த நேரத்தில் கூட, எங்கோ ஒரு தனிமனம் தன்னுடைய தனிமையையும் அக்கறையையும் கலந்து உழைத்துக் கொண்டு தான் இருக்கும்.

தமிழ்ப் படைப்புலகின் அந்தரங்கத்தைப் பாதித்திருக்கின்றன பிறமொழிகளிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட படைப்புகள். தமிழ் நவீன இலக்கிய முயற்சிகளின் ஆரம்பக் கட்டத்தில், ஆங் கிலக் கவிஞர்கள், உரைநடையாளர்களின் செல்வாக்கு தமிழ்ப் படைப்புலகின் மீது இருந்திருக்கிறது. இயற்கையின் வனப்பையும், மனித மனத்தின் பொதுவான தளங்களையும், தேசபக்தியையும் தமிழிலக்கியம் பேசிக்கொண்டிருந்தது அப்போது. பிறகு, ரஷ்ய மொழிபெயர்ப்புகளின் தாக்கம், மிருதுவான மொழியில், மனித உறவுகளின் சிடுக்குகளைச் சற்று மிகையுணர்வு தொனிக்கப் பேசியது தமிழ் இலக்கியம். பிறகு, ஸார்த்தர், காம்யு போன்ற மேற்கத்தியச் சிந்தனையாளர்களின் வரவுடன், கனத்த சொற்களில் கருத்துக்களைச் சுமந்து பேசத் தொடங்கியது தமிழ்ப் படைப்பிலக் கியம். தற்போது, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் செல்வாக்கு. இந்தப் போக்குகளின் துவக்கத்துக்கும் தொடர்செயல்பாட்டுக்கும் மொழிபெயர்ப்பின் சேவையும் கணிசமானது.

மொழிபெயர்ப்பை இரண்டுவிதமாகப் பிரிக்கமுடியும் என்று தோன்றுகிறது.

1. விஞ்ஞான பூர்வமான மொழிபெயர்ப்பு.

2. ரசனைபூர்வமானது.

முதல் வகையாளர்கள், தருமொழியிலுள்ள மூலப்படைப்பின், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, ஒரு காற்புள்ளியோ முற்றுப் புள்ளியோ கூட விடுபடாமல் பெறுமொழிக்குள் வந்தாக வேண்டு மென்று விரும்புகிறவர்கள். இடர் தரும் ஒரு கலைச்சொல்லைத் தமிழில் பெயர்ப்பதற்கு முதற்சொல்லின் வேர்ச்சொல் வரை சென்று ஆராய்ந்து மொழிபெயர்க்கிறார்கள். என் நண்பர் தி. அ. ஸ்ரீனிவாசன் ஒரு முறை சொன்னார் : ‘வேற்று மொழி யிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கும்போது, மூலமொழியில் உள்ள வாக்கிய அமைப்பைக்கூட அதே மாதிரி மொழிபெயர்க்க முயல வேண்டும். இதன் மூலம் தமிழில் புதிய வகையான வாக்கியப் பிரயோகங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. ‘

இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், புனைகதை யல்லாத எழுத்துக்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது. தவிர, இரு வேறு மொழி இலக்கணங்கள் ஒன்றையொன்று சந்திக் கும் புள்ளியில், இரண்டு தனித்தனியான, சுயேச்சையான கால -வெளிப்புலங்கள் சந்திக்கின்றன. தொலைக்காட்சிப் பெட்டியின் உள்ளிருக்கும் மின்னணுத் தகட்டை வானொலிப்பெட்டிக்குள் பொருத்துவது மாதிரியான விஷயம்தான் இது. ஒலித் தொடர்பு ஒருவேளை நிறுவப்பட்டுவிடலாம். காட்சிக்கு எங்கே போவது ?

புனைகதையைப் பொறுத்தமட்டில், அதிலும் குறிப்பாக, உரை யாடல்களைப் பொறுத்தமட்டில், மூலக் கதையிலுள்ள பாத்திரங் கள் எதிர்கொள்ளும் உணர்வு முடிச்சுகளைப் பெறுமொழி இலக் கியக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ள நேரும்போது, என்னவித மான வார்த்தைப் பரிவர்த்தனை நிகழக் கூடுமோ அதே விதமாக மொழிபெயர்ப்பதுதான் சரியாக இருக்கும். கதை மாந்தருடன் வாசகமனம் அனுபவ நெருக்கம் கொள்வதற்கு அனுசரணையாக இருக்கும்.

ஒரு மொழியிலுள்ள பழமொழிகளை, பிரதேசக் கொச்சை களை, அந்தந்தக் கலாசாரத்திற்கே உரிய பிரத்தியேகப் பிரயோகங் களை இன்னொரு மொழியில் கொண்டுவருவது மிகவும் கடின மான காரியம். பெறுமொழியில் அவற்றுக்கு ஈடாகப் புழங்கும் பிரயோகங்களைத்தான் பயன்படுத்தியாக வேண்டும்.

பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற ஆங்கில மொழிப் பரிச்சயத்தில் ஊறித் திளைத்த இந்திய மனங்களுக்கு, அமெரிக்க இலக்கியங் களை இந்திய மொழிகளில் பெயர்ப்பது மிகவும் சிரமம் தரும் வேலை. குறிப்பாக, வில்லியம் ஃபாக்னர் போன்ற எழுத்தாளர் களின் நடை, மிக மிகப் பெரிய சவால்களை விடுக்கக் கூடியது. அமெரிக்க நாட்டுப்புறப் பேச்சு வழக்கின்படி, அவர் இயல்பாக எழுதிப் போகும் உரையாடல்களைத் தமிழ்ப்படுத்துவது பெரும் நெருக்கடி தரக்கூடிய பணி. இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில், படர்க்கை ஒருமைக்கு மாத்திரம் பயன்படும் does என்ற பிரயோ கத்தை, தன்மை ஒருமைக்கும் பயன்படுத்துவார்கள் ஃபாக்னரின் பாத்திரங்கள். அவற்றைத் தமிழ்ப்படுத்தும்போது தமிழின் இலக் கண ஒழுங்கு தாறுமாறாகக் குலைந்து விடும். உதாரணமாக, ‘நான் போகமாட்டான் ‘ என்றோ, ‘நீ போக மாட்டான் ‘ என்றோ தமிழில் எழுத முடியுமா என்ன ? இதுபோக, அமெரிக்கக் கலாச் சாரத்திற்கே உரிய பேச்சு வழக்குகள். நான் மொழிபெயர்க்க நேர்ந்த ஒரு பத்தியில் lemon ெ என்ற வார்த்தை வந்தது. ஆங்கிலம் அறிந்த யாருக்கும் எலுமிச்சையின் ஞாபகம்தான் வரும். கொச்சை வழக்கில், இந்தச் சொல்லுக்கு, ‘பலவீனமான, அல்லது திருப்தி தராத அல்லது ஏமாற்றமளிக்கக் கூடிய நபர் அல்லது பொருள் ‘ என்று கூறியது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி. ஒரு மோட்டார் ஸைக் கிளின் உரிமையாளன் வெறுப்பில் உதிர்த்த சொல் அது. நான் ‘உதவாக்கரை ‘ என்று மொழிபெயர்த்தேன். கறாரான ஒரு பார்வை, இது பொருத்தமற்ற மொழிபெயர்ப்பு என்று சொல்லக் கூடும்தான். அந்த வண்டியுடன் அந்தக் கதாபாத்திரம் பட்ட அவஸ்தைகளை அதற்கு முந்தைய மூன்று பத்திகளின் விவரிப்பில் நான் உணர்ந் திருந்தேன்.

மொழிபெயர்ப்பு முன்வைக்கும் பிரதான பிரச்னை, இரண்டு மொழி இலக்கணங்கள் சார்ந்தது மட்டுமே அல்ல. தம்முடைய Doctor Brodie ‘s Report என்ற நூலிலுள்ள முன் குறிப்பில், போர் ஹெஸ் எழுதுகிறார் : ‘இந்தப் புத்தகத்தை நாங்கள் மொழிபெயர்க் கும்போது கொண்டிருந்த உத்தேசம், இந்தப் புத்தகத்தை வாசிப்ப வருக்கு இது ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டது மாதிரித்தென்பட வேண்டும் என்பதுதான். அவ்விதம் செய்தபோது, விரைவிலேயே எங்களுக்குத் தெரியவந்தது : சாதாரணமாக அறியப்பட்டது போல, ஆங்கிலமும், ஸ்பானியமொழியும் ஒரே பொருள் தரத்தக்க வார்த் தைகளைக் கொண்ட இரு வேறு தொகுதிகள் அல்ல. மெய்ம் மையைக் காணவும் ஒழுங்கமைக்கவும் சாத்தியப்படுத்துகிற இரு வேறு மார்க்கங்கள். ‘

ஆக, (நில அமைப்பு, உணவு முறை, உடையணியும் பாணி, சடங்குகள் இத்யாதிகளில் மிக மிக மாறுபட்ட) வேற்றுமொழி மெய்ம்மை ஒன்றை, தமிழ் மெய்ம்மையின் கண்ணாடி வில்லை வழி காட்சிப்படுத்துவது என்பது, மிக மிக யதேச்சையான ஒரு செயல்தான். ஒரு மொழிபெயர்ப்பாளர் தேர்வு செய்யும் சொற் கூட்டத்தை இன்னொருவர் முற்றாக நிராகரித்து வேறு ஒரு சொற் தொகுதியை ஈடுபடுத்த முடியும்.

முந்தைய காலகட்டங்களில் ஹெமிங்வேயின் சில நாவல்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. மொழிபெயர்ப்பில் ஈடுபாடு கொண்ட நண்பர் ஒருவருக்கு ‘போரே நீ போ ‘ (A Farewell to Arms) ‘மணியோசை யாருக்காக ‘ (For Whom the Bell Tolls) என்ற தலைப்புகளிலேயே அபிப்பிராயபேதம் ஆரம்பித்து விடுகிறது. அவற்றை முறையே, ‘ஆயுதங்களுக்கு விடைகொடுத்தல் ‘, ‘மணி யோசைக்குரியவர்கள் ‘ என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும் என்கிறார். அவர் கூறுகிறவற்றில், இரண்டாவது தலைப்பு எனக்கும் உவப்பானதுதான். முதலாவதின் ஓசை, நயமாக இல்லை என்றும், கட்டுரைக்குரிய தலைப்பு என்றும் சொன்னேன். ரொம்ப நேரம் சண்டை போட்டோம், முடிவு எதையும் எட்டாமல்!

மொழிபெயர்ப்பாளரின் மொழி அக்கறைகள், அரசியல் அக் கறைகள் சார்ந்து ஒரே நூல் இரண்டு வெவ்வேறு விதமான வாசிப் புகளை மூலப் படைப்புக்கு வழங்கக் கூடும். தமிழ் விளியிலுள்ள பன்மை ஒருமை வேறுபாடுகளை அறவே கொள்ளாத You போன்ற பொதுவார்த்தையைக் கூட ‘நீ ‘ என்றோ ‘நீங்கள் ‘ என்றோ மொழி பெயர்ப்பது, மொழிபெயர்ப்பாளனின் மனச்சாய்வுக்குச் சான்றாவது தான். மூலக் கதையின் மாந்தருக்குள் நிலவும் உறவு நிலையை மொழிபெயர்ப்பாளன் என்னவாகக் கவனம் கொள்கிறான் என்பதைப் பொறுத்தது இது.

எனவே, மொழிபெயர்ப்பில் செயல்படுவது இரண்டு விதமான மனோதளங்கள். ஒன்று, விஞ்ஞான பூர்வமான, தர்க்க ரீதியான அணுகுமுறை. ஏற்கனவே குறிப்பிட்டது போல, புனைகதை அல் லாத எழுத்துக்களை மொழிபெயர்க்கும்போது இதுவே சிறந்த அணுகுமுறை. இதன் காரணமாகத் தமிழின் கலைச்சொல் வளம் பெருகும். புதிய புதிய சொற்கோவைகளை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் மொழிபெயர்ப்பாளனுக்கு உண்டாகும். சிருஷ்டிகர மனோநிலையை நோக்கி அவனது மனம் நகர்ந்தாக வேண்டி வரும்.

ஆனால், புனைகதைகளைப் பொறுத்தவரை (குறிப்பிடத்தக்க அளவில் பேட்டிகளுக்கும் கூட) இந்த அணுகுமுறை பெருமளவும் உதவிகரமாக இருப்பதற்கில்லை – மூல ஆசிரியனின் மொழி அமைப்பிலேயே தர்க்கபூர்வமான சுழல்தன்மையும், வெளிப்படை யான விவாதத் தன்மையும் இல்லாத பட்சத்தில். உதாரணமாக, காஃப்காவை மொழிபெயர்ப்பதற்கும், ஹெமிங்வேயை மொழி பெயர்ப்பதற்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை பயன்தராது.

இரண்டாவது வகை, மொழிபெயர்ப்பாளனுக்குள் இருக்கும் வாசகன் செயல்படுவது. மூலக்கதையின் மாந்தருக்கிடையிலான உறவு நிலைகள் பற்றி, ஒரு வாசகனாக, தான் என்ன பெறு கிறானோ அதைப் பெறுமொழியில் பதிவு செய்வது. விஞ்ஞான ரீதியான அம்சங்கள் எதுவும் அற்று, உணர்வு பூர்வமான, தன் சொந்த ரசனை சார்ந்த மொழிபெயர்ப்பு. இதில், மூல மொழிச் சூழலின் விசேஷமான அம்சங்கள் பல விடுபட்டிருக்கும் என்றா லும், கதைச் சூழலும் கதாபாத்திரங்களும் சதையும் ரத்தமும் கொண்ட உயிர்வடிவங்களாக வாசக மனத்தில் உருப்பெறச் செய்துவிடும். தன் மொழியில் உருவாகிப் புழங்கும் இலக்கிய அமைதியை அளவீடாகக் கொண்டதாக இருக்கும் இவ்வகை மொழிபெயர்ப்பு.

எம். எஸ். என்று நண்பர்களால் அறியப்படும் திரு. எம். சிவசுப்பிர மணியன், எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கிழவனும் கடலும் ‘ நூலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் விதத்தை, மேற் சொன்ன வகைகளில் இரண்டாவது வகைப்பட்டதாகவே சொல் வேன். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த, நீண்ட கால வாசகர் என்ற முறையில், ஹெமிங்வேயின் கதாபாத்திரங்களுடன் அவர் கொள்ளும் நெருக்கமான உறவின் வழியாகவே இந்த நாவலைத் தமிழாக்கியிருக்கிறார். கெடுபிடி இல்லாத சரளமான வாக்கிய அமைப்பு, சன்னமான சொற்கள், மூல மொழியில் உள்ளது போலவே வேகமான வாசிப்புக்கு இடம் தரும் மொழி ஓட்டம் ஆகியவற்றை இந்த மொழிபெயர்ப்பின் சிறப்புகளாகச் சொல்ல வேண்டும். நாவலின் விவரணைப் பகுதிகள் மிகக் கவனமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. உரையாடல்களைப் பொறுத்த வரை, சில இடங்களில் எனக்கு ஆட்சேபணை இருக்கத்தான் செய்கிறது. ஏற்கனவே சொன்னபடி, இது தவிர்க்கவியலாதது.

பொதுவாக, ஒரு நூல் தமிழுக்கு வருகிறதென்றால், அடிப் படையான சில கேள்விகளை அது எதிர்கொண்டாகவேண்டும். 1. மூல மொழிச் சூழலில் அந்த நூலின் பங்களிப்பு என்ன. 2. பெறுமொழியில் அந்த நூல் வருவதற்கான அவசியம் என்ன. 3. தான் வெளிவந்த காலத்துக்கும் சம காலத்துக்கும் இடையிலான கால நகர்வை அந்த நூல் எவ்விதம் சமாளித்துத் தன் யெளவ னத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 4. மாறிவிட்ட, நவீன மொழியமைப்பில் மீண்டும் மொழியாக்கம் பெறும்போது அந்த நூல் கொண்டிருக்கும் வசீகரம் எத்தகையது.

ஆனால், இந்தக் கேள்விகளால் தீண்ட முடியாத பொது உயரத் தில் இருக்கும் நூல்கள் இருக்கவே செய்கின்றன. உலக எழுத் தியக்கத்தில் தம் முத்திரையைப் பதித்தவை. எல்லாக் காலங் களிலும் செல்வாக்குச் செலுத்தக் கூடியவை. அடுத்தடுத்து வரும் இளந்தலைமுறை வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை. ஹெமிங்வேயின் நூல்கள் இந்த வரிசையில் வருகிறவை.

உணர்ச்சிப் பெருக்கற்ற சொற்களில், உணர்ச்சிமயமான சந் தர்ப்பங்களை எழுதிச் சென்றவர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. புற வயமான எழுத்துப் பாணி அவருடையது. சாகசங்களும், தீரமும், காதலும், தர்மசங்கடங்களும் நிறைந்த சந்தர்ப்பங்களைப் பதிவு செய்தவர். சிக்கனமான வாக்கியங்களில், விரிவான விவரிப்புகள் அற்ற சொல்லல் முறையில், சுருக்கமான உரையாடல்கள் வழி யாகவே தம் கதைகளை நகர்த்திச் சென்றவர். அலங்காரமற்ற நேரடியான நடை கொண்ட எழுத்து. நேரடியான வார்த்தைகளில் பதிவு பெறாத மெளன இடைவெளிகளும், ரகசியங்களும் நிரம் பியது. அவருடைய கதைமாந்தரின் உரையாடல்களை மொழி பெயர்ப்பது மிகவும் சவாலான வேலை. அவருடைய சிறுகதை (Happy Life of Francis Macomber) ஒன்றில், இப்படி ஒரு வாக்கியம்: Now, the wife Well, the wife. Yes, the wife, Mm, the wife. இதை யார் மொழிபெயர்த்தாலும் ஆங்கிலத்தில் உள்ள வேகத்தையும் அழகையும் தமிழில் கொண்டுவந்துவிட முடியாதென்றே தோன்று கிறது.

தமிழில் ஹெமிங்வேயின் செல்வாக்கு பல எழுத்தாளர்களிடம் செயல்பட்டிருக்கிறது. குறிப்பாக, ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப் பால் ‘ நாவலைப் படிக்கும்போது, ஹெமிங்வேயின் ஞாபகம் வந்து வந்து செல்லும். அசோகமித்திரன், சா.கந்தசாமி போன்ற எழுத் தாளர்களின் சொல்லல் முறையிலும் ஹெமிங்வேயின் தாக்கத்தை உணரமுடியும்.

ஹெமிங்வேயின் நாவல்களில் எனக்குப் பிடித்தது For Whom the Bell Tolls தான். (என்னுடைய அபிப்பிராயத்தில், இந்த நாவலுக் குத்தான் நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது என்னுடைய அபிப்பிராயம்தானே. தவிர, விருதுகளும் பரிசு களும் எந்தச் சூழலிலும் சர்ச்சைக்குரியனவாய்த்தானே இருந்தாக வேண்டும்!) ‘கிழவனும் கடலும் ‘ மிக நீளமாக எழுதப்பட்ட ஒரு சிறுகதை என்றே தோன்றுகிறது. ஒரு நாவலுக்குத் தேவையான அகண்ட வெளியும், சிடுக்கான கால அமைப்பும், தத்துவார்த்த மான ஆழ்விசாரணையும், விந்நியாசங்கள் அதிகம் கொண்ட கதா பாத்திரங்கள் மற்றும் உறவுச் சிக்கல்களும் என எதையுமே கொண்டிராத படைப்பு.

இதை ஒரு நாவல் என்று அழைக்கத்தான் தயக்கம் கொள் கிறேனேயொழிய, வழக்கமான அவருடைய படைப்புகளிலிருந்து மிகவும் விலகிய நூல் இது என்பதில் எந்தவிதச் சந்தே கமுமில்லை. நுட்பமான விவரிப்புகளும், கடலுக்குள் செல்லும் வயோதிகத் தனியனின் உளப்போக்கும் நேர்த்தியாகப் பதிவு பெற்ற நூல் இது.

கிட்டத்தட்ட மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் பரிச்சயம் உள்ளவர் திரு. எம். எஸ். நான்காம் தலைமுறை எழுத்தாளர்களு டனும் இணைந்து உற்சாகமாகச் செயல்படுகிற அவரது செயல்திறனையும் உற்சாகத்தையும் விசேஷமாகக் குறிப்பிடத் தோன்றுகிறது.

சென்னை

யுவன் சந்திரசேகர்

(கிழவனும் கடலும் நூலின் முன்னுரை)

கிழவனும் கடலும்

ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில்: எம்.எஸ்

பக்கம் 104, விலை ரூ.50

காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை

நாகர்கோவில் 629 001

தொலைபேசி : 91-4652-278525

தொலைநகல் : 91-4652-231160

e-mail : kalachuvadu@sancharnet.in

Series Navigation

யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர்