கணினி மேகம் 2

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

சித்ரா சிவகுமார், ஹாங்காங்


2

வெளிநாட்டிலிருந்து கணவன் மனைவியுடன் பேசும் தொலைபேசி உரையாடல்:

மனைவி பயந்து கொண்டு இருப்பாளே என்று சேகர் அனைத்து தணிக்கைகளும் முடிந்த பிறகு, மனைவிக்குப் பேசினான்.

“ரமா.. நான் இன்னும் அரை மணி நேரத்தில வீட்டில இருப்பேன்..”

“என்னங்க ஆச்சு.. ராத்திரி பத்து மணிக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டு, இப்ப பன்னிரண்டு மணி ஆகுதே..”

“நான் பிளைட் ஏறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி என்னுடைய கைப்பையை எங்கேயோ தவற விட்டுட்டேன். இரண்டு மணி நேரமா தேடியும் கிடைக்கல. செக்கின் செய்துட்டதால நான் சென்னைக்கு வர ஏறிட்டேன். இங்க வந்த பின்னால பாஸ்போர்ட் இல்லாம வெளியில விடல. அதனால தான் லேட்”

“அப்புறமா என்ன செஞ்சி வெளியே வந்தீங்க?”

“என்னுடைய ஐ-போனிலிருந்து வை-பை மூலமாக சேவ் செஞ்சிருந்த பாஸ்போர்ட நகல அதிகாரிக்குக் காட்டினேன். அதை அச்சிலிட அவர்களுடைய கணினிக்கு அனுப்பியும் வைத்தேன். இப்போதைக்கு பிரச்சினையில்லை”

“அப்ப பாஸ்போர்ட்?”

“பை கிடைக்குதான்னு பார்க்கணும். இல்லைன்னா இனி நாளைக்கே போய் புது பாஸ்போர்ட்க்கு அப்ளை செய்யணும்.”

வெளிநாட்டில் வேலை நிமித்தமாக வந்த சேகர், இன்னொரு நாட்டு விமானநிலையத்தில் தன்னுடைய அனைத்து அவணங்களும் பணமும் இருந்த கைப்பையை தவற விட்டதன் காரணமாக, நாடு திரும்ப அதிகாரியிடம் ஆவண நகலைக் காட்ட வேண்டி வந்தது.

இன்றைய விஞ்ஞான யுகத்தில் அதனை உடனுக்குடன் செய்யும் வாய்ப்பு பல வகைகளில் இருந்த போதும், இணையம் மூலம் அதை மிகவும் எளிதாகவும் வேகமாகவும் செய்து விட முடியும். இதுவும் கிளவுட் கம்பியூட்டிங்கின் – மேகக் கணி;ப்பின் ஒரு பயன்.

இன்றைய மேகக் கணிப்பு எப்படி உருவானது என்பதை இன்று தெரிந்து கொள்ளலாமா?

கணினி கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், அவை தனித்தே செயல்பட்டு வந்தன. அதன் பயன்பாடுகள் பற்றிய ஆய்வு அதிகமாக அதிகமாக, கணினிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் தன்மை கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணினிகள் பல்வேறு விதங்களில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தன.

முதன்முதலில் பயனர்-சேவையர் முறை உருவானது. இதில் பயன்பாடும், சேமிப்புக்கலன், நினைவகம் முக்கிய அங்கம் வகித்தன.

அனைத்து மென்பொருளும், தரவுகளும், கட்டுப்பாடுகளும் பெரிய கணினி சேவையகத்தில் இருந்தன. பயனர்கள் வேண்டியத் தரவுகளைப் பெறவும் மென்பொருட்களைச் செயல்படுத்தவும் முக்கியக் கணினியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். அதற்கு நுகர்வி (கிளையன்ட்) கணினிகள் பயன்படுத்தப்பட்டன. இது முக்கிய கணினியுடன் தொடர்பு கொள்ளும் ஒரே பணியை மட்டுமே செய்தன. தனித்து இயங்காது. பயனர்கள் எப்போதும் முக்கிய கணினியை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. இவை பயனர்களை முன்னிறுத்திச் செயல்படாதவை. ஆனால் மேகக் கணிப்பு, பயனர்களை மையமாகக் கொண்டது.

சேவையகம் எப்படி இருந்தாலும், நுகர்வி அதன் மூலமாகவே செயல்பட்டாக வேண்டிய நிர்பந்தம் பயனர்-நுகர்வியில் இருந்தது. இரண்டு சக்தி வாய்ந்த கணினிகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு செயல்படுவது அடுத்த நிலை. ஒரு கணினி பயனராகவும் மற்றொன்று நுகர்வியாகவும் செயல்படும் வாய்ப்பு இருந்தது. இதில் மையப்படுத்துதல் மாற்றம் பெற்றது. கட்டு;ப்பாடு பகிர்ந்தளிக்கப்பட்டது. எத்தனை கணினிகள் இருந்தாலும் அனைத்துமே தனித்தும் பயன்படுத்தலாம். ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு வளங்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் வண்ணம் அமைந்தன. இது நேரடித் தொடர்பு (பியர் டு பியர் – பி2பி)அமைப்பு என்று அழைக்கப்பட்டது.

1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யூஸ்நெட் இந்த வகையில் அமைக்கப்பட்ட ஆரம்ப கால இணையம். இதில் ஒவ்வொரு கணினியும் வலையாக இணைக்கப்பட்டன. அனைத்து கணினிகளும் இணையத்தின் அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டன. தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்த யூஸ்நெட் சேவையர் இணையத்தில் புதிதாகச் சேர்க்கப்படும் கணினி, உடனே இந்த இணையத்தின் அனைத்துத் தகவல்களையும் பெறும் தன்மை பெற்றது. பயனர் சேவையர் முறையில் கணினி இணைக்கப்பட்டாலும், இது நேரடித் தொடர்பு ஏற்படுத்தி, இன்றைய மேகக் கணிப்பிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது.

அடுத்து விநியோகக் கணிப்பு (டிஸ்டிரிபியூட்டட் கம்பியூட்டிங்) முறை வந்தது. இது அதிக கணிப்பு சக்தி கொண்டது. இதுவும் பி2பி முறையின் ஒரு வகை. ஆனால் இதில் இணைக்கப்படும் கணினிகள் தொடர்பு கொள்வதோடு நின்றுவிடாமல், செயலற்ற கணினி மற்ற கணினிகளுக்குத் தேவையான சக்தியைத் தரும் வகையில் இருந்தது. அதற்குத் தேவையான செயல்களைச் செய்து தந்தது. அதனால் விநியோகக் கணிப்பு முறையில் இணைக்கப்பட்ட 100 கணினிகள், உலகில் பெரிய கணினிகளையும், மகாகணினிகளையும் விட கூடுதல் சக்தி படைத்ததாக ஆயின.

1973ஆம் ஆண்டு ஜெராக்ஸ்; பார்க் கண்ட இந்த முறை, இணையகத்தில் செயலற்ற கணினிகளுக்கும் வேலை தந்தன. 1988இல் டெக் கண்ட விநியோகக் கணிப்பு பெரிய எண்களுக்குக் காரணிகளைக் (பேக்டர்) கணித்தது. 1990இல் 100 பயனர்களை கொண்ட கணினிக் குழு 100 இலக்க எண்களுக்குக் காரணிகளைக் கணித்தது. 1995இல் வலையாக அமைக்கப்பட்ட கணினிக் குழு 130 இலக்க எண்ணுக்கு காரணிகளைக் கணித்தது. அத்தனை சக்தியை வலையகக் கணினிகள் தந்தன.

ஆரம்ப காலத்திலிருந்தே, பல பயனர்கள் ஒரே செயலை, பல கூறுகளாகப் பிரித்துக் கொண்டு, செயல்பட்ட போதும், இணைந்து செயல்படும் திறன் தேவைப்பட்டது. குழுவாக இணைந்து செயல்படும் இதுவே மேகக் கணிப்பிற்கு முன்னோடியானது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று கூற்றுக்கு பல்வேறு கதைகளை பலரும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதற்கான மிகப் பெரிய உதாரணம் மேகக் கணிப்பு என்று சொன்னால், இன்று யாராலும் மறுக்க முடியாது.

பல வகையான பி2பி இணைந்து இத்தகைய குழு வேலைகள் செயல்பட்டு வந்தன. இம்முறையில் செயல்பட ஒருவர் மற்றொருவருக்கு உடனுக்குடன் தொடர்பு கொள்ளும் வசதி தேவைப்பட்டது. அதுவே மின்னஞ்சல், ஆடியோ வீடியோ தொலைபேசி எல்லாம். பின்னர் அதே போன்று கோப்புகளையும் தரவுகளையும் அனுப்பும் முறைகள் தேவைப்பட்டன. இவையும் கணினி தொடர்பால் சாத்தியமானது. லோட்டஸ் நோட்ஸ், மைக்ரோசாப்ட் நெட்வொர்க் இதைச் சாத்தியமாக்கியது.

ஒரே நிறுவனத்தினர் தொடர்பு கொள்வது பின்னர், பல நிறுவனத்தினருடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு முன்னேறியது. ஒரு நிறுவனத்தைச் சார்ந்த பல இடங்களில் இருக்கும் பயனர்கள் பயன்படுத்துவதற்கு மேலாக, பல நிறுவனத்தினரும் இணைந்து செயலாற்றும் திறம் இணையத்தால் சாத்தியமானது. இதற்கு எடுத்துக்கொண்ட திட்டத்தைச் (பிராஜெக்ட்) சார்ந்த அனைத்துக் கோப்புகளும், ஆவணங்களும், தரவுகளும் மேகத்தில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவற்றை இணையத் தொடர்பு இருக்கும் எந்த இடத்திலிருந்தும் அணுகும் திறன் கிடைத்தது.

இத்தகைய மேகம் சார்ந்த ஆவணஙகள் முதன்முதலில் கூகுள் நிறுவனத்தார் உருவாக்கிய பெரிய சேவையத்தின் மூலம் கருவானது. இன்று அது வளர்ந்து மற்ற பெரிய நிறுவனத்தினரும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பயன்பாட்டு நிரல்கள் மூலமாக சிறகை விரித்து உலகமெங்கும் பறந்து கொண்டு இருக்கிறது.

இன்று மேகச் சேவையை பயனர்கள் பலரும் தங்கள் கோப்புளை உருவாக்கவும், பகிர்ந்து கொள்ளவும், தேடி எடுத்து பயன்படுத்தவும் உசிதமான தளமாக மேகக் கணிப்பு உருவாகி இருக்கிறது.

மேகத்தின் கட்டமைப்பு என்ன?

மேகம் என்பது எப்போதும் கூறி வருவது போல பல கணினிகளும் சேவையகங்களும் இணையத்தால் இணைக்கப்பட்ட கணினி கூட்டம். அதற்கு வன்பொருளை தனி நபரோ நிறுவனமோ அமைத்து, பல தரவு மையங்களைக் கொண்டதாக அமைப்பர். கணினிகள் எந்த இயக்கு தளத்தையும் பெற்றிருக்கலாம்.

படம் 2-1

தனி நபர்கள் மேகத்தை தங்கள் மேசை கணினி மூலமாகவோ அல்லது மடிக்கணினி மூலமாகவோ எந்தவொரு போர்ட்டபில் சாதனம் மூலமாகவோ இணையத்துடன் தொடர்பு தொடர்பு கொள்ளலாம். பயனர்களால் மேகம் ஒரேயொரு தனி பயன்பாடாகவும் சாதனமாகவும் ஆவணமாகவும் கருதப்படும். வன்பொருள் பயனர்கள் கண்களுக்கு புலப்படாது.

இந்தக் கட்டமைப்பு மிகவும் எளிதாகத் தோன்றிய போதும், இதன் பணிகளை நிர்வாகம் செய்வதில் தான் அதன் முக்கியம்சம் அடக்கியுள்ளது. கணினியில் இட்டப் பணியினை ஏற்று, அதை கணக்கற்ற பல கணினிகளின் துணை கொண்டு செயலாற்றி, இறுதியில் முடிவுகளைத் தருவதில் தான் மேகத்தின் சாதுர்யம் இருக்கிறது.

படம் 2-2

படத்தில் காட்டப்பட்டுள்ளது போல், முதலில் தனி நபர் ஒருவர் கணினி மூலம் இணைய முகப்பைக் கொண்டு மேகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும். இங்கு தான் பயனர் தனக்கு வேண்டிய பயன்பாட்டையோ ஆவணத்தையோ திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டும். பயனரின் பணி பிறகு அமைப்பு நிர்வாக (சிஸ்டம் மேனேஜ்மென்ட்) நிரலுக்கு மாற்றப்படும். அது சரியான வளத்தைக் கண்டுபிடித்து பிறகு ஒதுக்கீட்டுச் சேவையை (பிரொவிசனிங் சர்விசஸ்) செயல்படுத்தும். இந்தச் சேவை தான் மேகத்திலுள்ள தேவையான வளத்தைக் கண்டுபிடித்து, இணையப் பயன்பாட்டைச் செயலாற்றச் செய்து, வேண்டிய ஆவணங்களை உருவாக்கவோ திறக்கவோ உதவும். இணைய பயன்பாடு செயவாற்றத் துவங்கியதும், அமைப்பு கண்காணிப்பும் (சிஸ்டம் மானிடரிங்) அளத்தலும் (மீட்டரிங்) ஆரம்பமாகிவிடும். சரியான வளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதையறியவும் இவை உதவும்.

மேகத்தின் இந்த முக்கியமான நிர்வாகப் பணி, மனித கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல், முழுக்க முழுக்க சேவையகங்களால் செய்யப்பட வேண்டியது என்பதைப் புரிந்து கொள்ளுதல் இங்கு அவசியம்.

அப்படியென்றால் மேகச் சேமிப்புக்கலன் எப்படி இருக்கும்?

மேகக் கணிப்பின் மற்றொரு அம்சம் மேகச் சேமிப்புக்கலன் தான். இதில் தரசுகள் தரவு மையங்களிலும் தனி நபர் கணினிகளிலும் சேமிக்கப்படாமல், மாற்றார் (தேர்ட் பார்ட்டி) அமைத்திருக்கும் சேவையகக் கூட்டத்தின் பற்பல கணினிகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.

தரவு சேமிக்கப்படும் போது, பயனருக்கு மறைமுகமான சேவையகம் தென்படும். தரவு ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட பெயரில் சேமிக்கப்படுவது போல் தோன்றும். ஆனால் உண்மையான இடமாக இருக்காது. அது எங்கு சேமிக்கப்படுகிறது என்பதைப் பயனரால் அறிந்து கொள்ள முடியாது. பயனரின் தரவு மேகக் கூட்டத்தின் எந்தக் கணினியில் வேண்டுமானாலும் இருக்கலாம். நாளுக்கு நாள், நொடிக்கு நொடி அது மாறவும் கூடும். மேகம் அதை கிடைக்கும் வளத்திற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டே இருக்கும் வல்லமை கொண்டது.

இடம் மறைமுகமாக இருந்த போதும், மேகம் கணினியில் பயனருக்கு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட ஆவணம் இருக்கும் வகையில் காட்சி தரும்.

இன்று இருக்கும் மேகச் சேவைகள் என்னென்ன?

இணையம் மூலமாக பயன்பாடுகளும் சேவைகளும் மேகம் மூலமாகத் தரப்படுவதே மேகச் சேவை. இவை கால அட்டவணை, எழுத்துச் செயல்பாட்டுகள், ஸ்பிரெட் ஷீட் ஆக இருக்கலாம். கூகுள் முதற்கொண்டு அமேசான், மைக்ரோசாப்ட் என்று பல நிறுவனங்கள் பல மேகப் பயன்பாடுகளை (அப்பிளிகேஷன்ஸ்) உருவாக்கி வருகின்றனர்.

பயன்பாடு மேகத்திலேயே நிறுவப்படுகிறது. தனி நபர் அதை மேகத்திலேயே செயல்படுத்தியும் கொள்ளலாம். இந்தப் பயன்பாடுகளில் சில இலவசமாகத் தரப்படுகின்றன. சில பயன்பாடுகளுக்கு பயன்பாட்டிற்கு ஏற்ப தொகை கட்ட வேண்டி வரும். அதையும் இணையத்தின் மூலமாக கட்டி விடலாம். பயன்பாடும் பயன்படுத்தப்படும் ஆவணங்களும் மேகச் சேவையகத்திலேயே வைக்கப்படும்.

இதனால் பல பயன்கள் உண்டு. ஆவணங்களை நகல் எடுக்க வேண்டிய அவசியமில்லை. எந்தக் கணினி மூலமாகவும் இணைய வழி ஆவணங்களைப் பெறலாம். கணினி செயலிழந்து போனால், மற்றொரு கணினி கொண்டு இதே வேலையைத் தொடரலாம். ஒரே ஆவணத்தை அனுமதி பெற்ற பல பயனர்கள் ஒரே நேரத்தில் காணலாம்.

மேகக் கணிப்பு உருவான விதத்தையும், அது செயல்படும் விதத்தையும் மேலோட்டமாக அறிந்து கொண்டோம்.

இன்னும் சில விவரங்களை அடுத்துப் பார்க்கலாம்.


Best Wishes
Chitra Sivakumar
Tung Chung

Series Navigation

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்

சித்ரா சிவகுமார் - ஹாங்காங்