ரவி ஸ்ரீநிவாசுக்கு பதில்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

சி ஜெயபாரதன்


இந்திய அணுமின் நிலையங்கள் எப்படி வேறுபட்டவை, எப்போது கட்டப் பட்டவை, எவ்விதப் பாதுகாப்பு உடையவை [திண்ணையில் அவற்றை விளக்கும் அணுவியல் கட்டுரைகள் பல உள்ளன] என்று அறியாமல், ரவி ஸ்ரீநிவாஸ் அகிலவலையில் மிதக்கும் தவறான கருத்துகளை மெய்யானவை என்று காட்டி வருகிறார்! ஐம்பது ஆண்டுகளாக செம்மைப்பட்டு வரும் இந்திய அணுமின் உலைகளின் அம்சம், பண்பு, தகுதி, பாதுகாப்பு நெறிகள், முறைகளைப் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியாமல், ‘பாரத அணுத்துறைக் கட்டுப்பாடு ஆணையகம் எப்படி அமைக்கப்பட வேண்டும் ‘ என்னும் பழைய AERB அதிபர், டாக்டர் ஏ. கோபாலகிருஷ்ணன் கூற்றை அப்படியே வெட்டி, ஒட்டிக் கொண்டு ரவி ஸ்ரீநிவாஸ் ஆலோசனை கூறுவது வேடிக்கையாக இருக்கிறது!

1957 ஆம் ஆண்டு முளைத்த பாழடைந்த ‘ஸிப்பிங்போர்ட் ‘ [American Boiling Water Reactor (BWR)] அமெரிக்க அணுமின் உலையைப் பற்றி எழுதும் ரவி ஸ்ரீநிவாஸ், 2003 இல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய அணு உலைகளைப் பற்றி முழு விபரம் எதுவும் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை! ஒட்டு மொத்தமாக பாரதத்தின் 14 அணுமின் உலைகள் அனைத்தும் ‘ஸிப்பிங்போர்ட் ‘ BWR மாடல் என்று கூறி யிருக்கிறார்! தாராப்பூர் முதலிரண்டு அணுமின் உலைகள் மட்டும்தான் General Electric BWR (1963-1965) மாடல்! மற்ற 12 அணுமின் உலைகளும் கனடாவின் சிறந்த கான்டு கனநீர் அணுமின் உலைகள் [CANDU Heavy Water Reactors (1965-1985)]! பாரத அணு உலைகளின் அடிப்படை விளக்கங்களைத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினால், கீழ்க் காணும் அகிலவலைப் பின்னல்கள் உதவி புரியும்.

ரவி ஸ்ரீநிவாஸ் எதை நிரூபிக்க வருகிறார் ? பாரதக் குடியரசையா ? அல்லது அணு உலைகளில் பாதுகாப்புப் போதாமல் உள்ளதையா ? இந்தியாவில் குடியரசு மெய்யாக ஓரளவு இயங்குவதைத்தான் அவர் அழகாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! ஐம்பது ஆண்டுகளாய் வளர்ந்து ஆல விழுதுகளுடன் பரவி வரும் இந்திய அணுத்துறைகளில் பிரச்சனைகள், சிக்கல்கள், தவறுகள் அறிந்தோ, அறியாமலோ விளைகின்றன! அவற்றைக் குறைப்பதற்கு ஆக்க வழிகளை அணு உலை எதிர்ப்பாளிகள் எடுத்துக் காட்டினால், ஆதரவாளிகள் நிச்சயம் வரவேற்பார்கள். அணு ஆயுத நாடாக மாறி, ‘பாதுகாப்புச் சட்டத்தின் ‘ கீழ் இரகசியமாய் இயங்கும் இந்தியாவின், அணுத்துறைத் தவறுகளைத் தனியார் நெறிக்குழுவோ, தனித்தியங்கும் கட்டுப்பாட்டுக் குழுவோ தணிக்கை செய்ய முடியாது!

அகிலவலைப் பின்னல்களின் நிரல்களைக் காட்டி, இவற்றுக்கு எல்லாம் ஏன் பதில் கூறவில்லை என்று ரவி ஸ்ரீநிவாஸ் என்னைக் கேட்கிறார்! வேறு ஆற்றல் சக்திகள் குறித்தும், அணுமின் சக்தி உற்பத்தி ஏன் உலகில் எதிர்க்கப் படுகிறது என்றும் நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் எங்கே பதில் அளித்தார் ? அகிலவலைகளில் வரும் அணுசக்தி எதிர்ப்புத் தகவல்களைத் திரட்டித் திண்ணை வாசகருக்குப் பிரதிபலிப்பது, ரவி ஸ்ரீநிவாஸின் ‘ஆசைத் திட்டம் ‘ [His Pet Project]! அவற்றைத் திரட்டும் போது ஏதாவது வினாக்கள் அவருக்கு எழுந்தால், நான் பதில் தருகிறேன்.

அவர் அனுப்பிய இரண்டு பின்னல்களில் வந்த சில புளுகுத் தகவல்களைப் [1957 Shippingport BWR ?] படித்தபின், அவற்றுக் கெல்லாம் பதில் அளிப்பது வீண் என்று அறிந்தேன். ரவி ஸ்ரீநிவாஸ் கண்டுபிடித்த மற்ற EPW, Outlookindia போன்ற இணையப் பின்னல்களில் வந்துள்ள தகவல்களில் குறிப்பாக, ஏதாவது அணுத்துறை வினாக்களைக் கேட்டால் நான் பதில் அளிக்கிறேன். திண்ணையில் வந்த எனது 36 அணுவியல் கட்டுரைகளில் நான் எழுதத் தவறிய தலைப்புகள் ஏதேனும் சுட்டிக் காட்டப் பட்டால், அவற்றைப் பற்றி எழுத நான் முற்படுவேன்.

‘திசைகளில் ‘ பொருட் செல்வன் டாக்டர் ஹோமி பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய் ஆகியோரது அணுமின் சக்தி ஆக்க வழிகளைப் பாராட்டி யிருக்கிறார். காரணங்களை விளக்காமல், பாரதத்தில் அணு ஆயுதம் படைக்கும் குண்டர்களைத் தாக்கி யிருக்கிறார். புதிதாக எதையும் கூறவில்லை. கல்பாக்கத்தைப் பற்றி ஞாநி எழுதிய இரண்டு கட்டுரைகளுக்கும் எனது பதில் கட்டுரைகள் அடுத்த வாரமே திண்ணையில் வந்தன. இரண்டாவது வந்த எனது பதில் கட்டுரையை [http://www.thinnai.com/pl0925032.html], ரவி ஸ்ரீநிவாஸ் படித்ததாகத் தெரியவில்லை.

மேலும் ‘அணுத்திமிர் ஜனநாயகம் ‘ பற்றி எழுதும் ரவி ஸ்ரீநிவாஸ் அணுவியல் கட்டுரைகளை நான் எப்படி எழுத வேண்டும், எப்படி எழுதக் கூடாது என்று ஆத்திரத்தில் போதிப்பது, என் எழுத்துரிமையைத் தடுக்க முயலும் எதேச்சதிகார மடமையாகும்! கட்டுரைக்கு ஒவ்வாத ‘அணுத்திமிர் ‘ என்ற சொல்லை ஆங்காரத்தில் கக்கி விட்டு, அது ‘கவிஞர் அறிவுமதியின் ‘ வார்த்தை என்று அவரது நிழலில் ஒளிந்து கொள்வது, அவரது அற்பத்தனத்தைக் காட்டுகிறது! கட்டுரையில் ரவி ஸ்ரீநிவாஸைத் தவிர, கவிஞர் அறிவுமதி எங்கே இருக்கிறார் ?

சி. ஜெயபாரதன், கனடா.

இந்திய அணுசக்தித் துறைகளைப் பற்றிய தகவல்கள்:

1. Dept of Atomic Energy /Atomic Energy Commission [Atomic Energy Acts 1962] www.dae.gov.in

2. Atomic Energy Regulatory Board [AERB] Regulations in www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

3. Atomic Power Plants Performance Reports in www.npcil.org [Updated Sep 22, 2003]

4. Atomic Energy Regulatory Board, Bombay. Annual Report [2001-2002]

5. Dr. Anil Kakodkar, Present Chairman, Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Dr. R. Chidambaram, Former Chairman, Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

7. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

8. Kalpakkam, Indra Gandhi Centre for Atomic Research www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

9. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

*******************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா