அடிமை நாச்சியார்

This entry is part of 44 in the series 20110109_Issue

பிச்சுமணி வே


அம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு
செல்லும் போது எல்லாம் உடனே
எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன்
வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள்
கட்டப்பட்ட கழுதைகளை
தாண்டி செல்ல தயங்கும் போது
அய்யம்மாவின் குரல்
வாங்க நாய்னா நாச்சியார் வந்திருக்காங்களா எனும்
அம்மா வந்திருக்கா என பதில் அளிக்கும் என் குரல்
வேலு கழுதையை பொதியுடன் ஆற்றுக்கு பத்தி செல்ல
அவனுடனும் கால்கட்டு எடுத்து கழுதையுடனும்
நடந்து செல்கையில் வழியில் உள்ள வயலில்
சோளகதிர் உடைத்து கஞ்சிக்கு அவன் கொண்டு வந்த
உப்பை போட்டு சோளம் அவித்து
சாப்பிட்ட காலம் நெஞ்சில்
இப்பொழுது செல்லும் போது வேலு இல்லை
அய்யம்மா நய்னா எப்பவந்தீங்க என தளர்நத குரலில் கேட்க
நய்னா நாச்சியார் அர்த்தம் புரிந்து தெளிந்து
அடிமைப்படுத்தும் அந்த வார்த்தைகளை
நான் முழுங்கி நாளாகிவிட்டதால்
நீங்க நல்லாயிருக்கீங்களா
வேலு என்ன செய்கிறார் என கேட்க
வித்தியாசம் ஏதும் தெரியாது காட்டாது
நய்னாவுக்கு எத்தனை பிள்ளைங்க
என குசலம் விசாரித்தார் அந்த அம்மா

Series Navigation