உன்னோடு நீ..

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

ராமலக்ஷ்மி



பெருங்கிளையின் சிறுமுனையில்
ஒற்றைக் குயில் மணிக்கணக்காய்

தேன்மலர்களின் நடுவே
ஊஞ்சலாடிக் கரணமடித்துக்
கூவிக் கொண்டிருந்தது கொஞ்சலாய்.

ரசித்தபடி தனித்திருந்த முதியவரின்
இதழ்கடையோரம் பூத்து வழிந்தது
எதற்கோ புன்முறுவல்

‘பார்ப்பவர் பரிகசிப்பார்
பார்த்து பெரியவரே’
ஏளனம் செய்தவனை
இரக்கத்துடன் ஏறிட்டார்

“கருணை வைத்து உன்னோடு நீ
இருந்திருக்கிறாயா என்றைக்கேனும்

அனுசரணையாய் அளவளாவ
ஒதுக்கியதுண்டா உனக்காக ஒரு நேரம்

இருந்து பார் பேசிப் பார்
கொடுத்து வைக்கும் ஆன்மாவின் அறிமுகம்

காட்டித் தரும் அதுவே
ஒவ்வொரு உயிரிலும் ஒளிந்திருக்கும்
உன்னை உனக்கு அடையாளம்

அந்நொடி கசியத் தொடங்கும்
சிறுதுளியன்பு போதும்

பெருவெள்ளப் பிரவாகமாகி
பூமிப் பந்தை ஈரத்துடன் காக்க

என்னை நீயும் உன்னை நானும்
பார்வையால்.. சொல்லால்.. கூட
தாக்காது இருக்க”

கசிந்து வழிந்தது
பிறப்பின் அர்த்தம்
பிசிறற்றப் பிரியங்களின் சங்கீதமாய்

அண்டம் நிறைத்தது
வாழ்வின் அனுபவம்
புல்லாங்குழல் துளைவழிக் காற்றாய்.

சிறகுகள் விரித்துப் பறந்தது வானில்
உல்லாசமாய் ஒற்றைக்குயில்

அழைத்த அலைபேசியை
அவசரமாய் அணைத்து விட்டு
சிலிர்த்துச் சிறகு விரிக்கிறான்

முதன்முறையாய்
தன்னைத் தான் சந்திக்க..
தன்னோடு தான் இருக்க..
***
-ராமலக்ஷ்மி

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி