குழந்தைகளுக்கான கல்வி

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)


மொழிக்கல்வியைப் பொருத்தமட்டிலே பள்ளிக்கு வரும்போதே குழந்தை பேசத்தெரிந்த குழந்தையாகத்தான் வருகின்றது. அதனுடைய மூளைஸ்ரீகுள்ளே சொல் தொகுதிகள் இருக்கின்றன. பள்ளிக்கு வருகிறபோது பிள்ளைகள் அறிந்திருக்கிற சொற்களின் அளவு, நகர்ப்புறத்தைவிட கிராமப்புறங்களில் கூடவாகவும், கிராமப்புறங்களிலும் கூட வசதியான வீட்டுப் பிள்ளைகளைவிட வசதி குறைவான வீட்டுப் பிள்ளைகளின் சொல்தொகுதி அதிகமாகவும் இருக்கிறது என்பது நடைமுறை உண்மை.

ஆனால், இந்தச் சொல்தொகுதி எல்லாம் இப்போதுள்ள பாடத்திட்டத்திற்குள்ளே வந்துள்ளதா ? மொழிபைப் பொருத்தமட்டிலே, பள்ளிக்கு வருவதற்கு முன்பே பிள்ளை கதைகேட்க ஆரம்பித்துவிடுகிறது, பாட்டுப்பாட ஆரம்பித்துவிடுகிறது. இசையினுடைய பங்கு அதிகமாக உள்ளது. இதுபோன்று குழந்தைகளுக்குச் செய்யத்தெரிந்த விசயங்களை வள˜த்தெடுக்கிற முறையிலே நாம் போதித்திருக்கிறோமா ?

எனக்கு ‘அ ‘னா கற்றுக்கொடுத்தபோது ராகம் போட்டுத்தான் சொல்லித்தந்தார்கள். 12 உயிர் எழுத்துக்களையும் அவர்கள் பாடலாக கற்றுத்தருகிறபோது அதிலே வரிசை மாறாது. ஒரு திரைப்படப்பாடலை கற்கிற குழந்தை, கிட்டத்தட்ட 60 – 70 சொற்கள் அடங்கிய 10 வரிகளை அப்படியே சொல்கிறது. ஆனால் அனா, ஆவன்னாவைச் சொல்லச்சொன்னால் குழம்புகிறது. ஏன் ?.

இசையோடு அந்த விசயத்தைக் கற்பிக்கவேண்டும். நம்முடைய மொழிக்கும் இசைக்கும் உரிய முக்கியமான விசயம் என்னவென்று கேட்டால், இந்த மொழியுடைய ஒலித்திரள்கள் இசையோடு கட்டமைக்கப்பட்டவை. மூன்று மாத்திரையிலே தமிழிலே ஒரு எழுத்தும் கிடையாது என்பது இந்த இசைத்தமிழினுடைய அடிப்படை. ‘அ ‘ ஒரு மாத்திரை, ‘ஆ ‘வன்னா இரண்டு மாத்திரை. ‘ஆ… ‘ என்று நீட்டிச் சொல்லிலிட்டால் அங்கே மொழி இசைபடுகிறது என்று சொல்கிறார்கள் தமிழ் இலக்கணிகள். ‘ம்ம்ம்… ‘ என்று சொன்னால் அது இயல்தமிழ் அல்ல, இசைத்தமிழின் கூறு சேர்ந்துவிடுகிறது என்கிறார்கள்.

மனித உடம்பும் மனித நரம்பும் மனித உயிர்ப்பும் இசையோடு பின்னப்பட்டதினாலேயே, இசையில்லாமல் ‘அ, ஆ, இ, ஈ ‘ என்று கற்றுக்கொடுக்கிறபோது ஒலித்திரள்களை கற்றுக்கொள்ள இயலாத நிலைக்குக் குழந்தை போகிறது. அதுமட்டுமல்ல, பாரம்பரியமான, மனித உடம்போடும் உயிரோடும் பின்னப்பட்ட இசை உணர்வையும் அது இழந்துபோய்விடுகிறது. இந்த நுட்பமான வேர்களை குழந்தைகளின் மனதிலிருந்து நாம் அறுத்துவிடுகிறோம்.

நான் தொடக்கப் பள்ளியில் படித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் பாடங்களை என்னால் சொல்லமுடியும். அதேபோல, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, ஐந்தாம் வகுப்பிலே யகோவா என்றொரு ஆசிரியர் இருந்தார். முக்சுடற்பள்ளிலே உள்ள பாட்டைச் சொல்லித்தருவார்.

ஆற்றுவெளிளஹ் நாளைவரத் தோன்றுதே குறி

மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே

கேணி நீர்ப்படு சொறித்தவளை…

இந்த பாட்டுக்குள்ளே என்ன இருக்கிறது ? உங்கள் மண்சார்ந்த, குறிப்பாக நெல்லை மண் சார்ந்த (அந்த இலக்கியம் இங்கே பிறந்தது) சூழலமைவு (ஈகோசிஸ்டம்) என்ன என்பதை அந்தப் பாட்டு கற்றுத்தருகிறது.

நம்மையறியாமலேயே, உணவு சாப்பிடுகிறபோது எப்படி நாம் உயிருக்குத் தேவையான ஒன்றைச் சாப்பிடுகிறோம் என்ற தன்னுணர்வு இல்லாமலே சாப்பிடுகிறோமோ, அதுபோல இந்தப் பாட்டைக் கற்கிறபோது இந்த மண்ணினுடைய சூழலமைவு என்ன ? இந்த மண்ணின் பருவகாலம் எப்படி அமையும் ? நாளை மழைவரும் என்றால் இன்றைக்கு சூழலமைவு என்னவாக இருக்கும் ? என்பனவெல்லாம் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

‘சேற்றில் நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே- மழை

தேடி ஒரு கோடிவானம் பாடி ஆடுதே! ‘ன்னு வரும்.

இன்றைக்கும் அதுதான்.

இங்கே பாரம்பரியமான தொழில்நுட்ப அறிவு புதைந்துகிடக்கிறது. அதாவது, செய்துசெய்து பழக்கப்பட்டு, மண்ணிலிருந்தும் பிற உயிர்களிலிருந்தும் தாவரங்களிலிருந்தும் நாம் பெறச்கூடிய இந்த அறிவுத்தொகுதி சின்னக் குழந்தைக்கு ஏதேனும் ஒரு வகையில் தரப்படவேண்டும் – பாட்டாகவோ, விளையாட்டாகவோ. களிமண்ணில் பொம்மை செய்த நினைவெல்லாம் எனக்கு இருக்கிறது. கப்பல் செய்யவும் கத்திக்கப்பல் செய்யவும் சொல்லித்தருவார்கள். முடிச்சுப்போடக் கற்றுக்கொடுத்தார்கள் முடிச்சுப்போடக் கற்றுக்கொண்டதால் மனித இனத்தினுடைய வாழ்க்கையில் எற்பட்ட மாறுதல்கள் என்னவென்பது . மானிடவியல் படித்தவர்களுக்குத் தெரியும். செய்து செய்து பழக்கப்பட்ட – இந்த செய்முறைப் பயிற்சி சார்ந்த ஐந்தாம் வகுப்பிற்குக் கீழான நூல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு எதுவரைக்கும் போனதென்றால், ஒரு கட்டத்தில் அ, ஆ விற்குப் பதிலாக படம், பட்டம் என்று ‘ட ‘னா எழுத்து முறைகளைக் கற்றுக்கொடுத்தார்கள். வளைவுகள்தான் குழந்தைகளின் விரல்களுக்குப் பழக்கப்படவேண்டுமே தவிர கோடுகள் அல்ல. ஆனா, ஆவன்னாதான் குழந்தைகளுக்கு முதலில் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் விரல்களுக்குத் தகுந்த பென்சிலோ பேனாவோ இன்னும் நம்மிடையே இல்லை. சிலேட்டு, குச்சி குழந்தைகளின் விரல்களுக்குத் தகுந்தது. நாம் பயன்படுத்துகிற பால்பாயின்ட் பேனாவைத்தான் ஒன்றாம் வகுப்பு குழந்தையும் பயன்படுத்துகிறது. அவை குழந்தைகளின் விரல்களுக்கு ஏற்றவையல்ல. குழந்தைகளுக்குத் தகுந்தாற்போன்று மேலைநாடுகளிலிருக்கிற பேனாக்கள் கனம் குறைந்தவையாக இருக்கின்றன. பிடித்து எழுதுவதற்கு கருவியின் வள˜ச்சியும் அவசியம் என்பதால் சொல்ல வருகிறேன். நாங்கள் படிக்கிறபோதெல்லாம் குச்சிதான். நான்காம் வகுப்பு வரும்போதுதான் பென்சில் தருவார்கள். மூன்றாம் வகுப்புவரை எழுதுகருவி குச்சியாகத்தான் இருந்திருக்கிறது. அதாவது, விரல்களின் கனத்திற்குத் தகுந்தாற்போன்ற எழுது கருவி. வயசானால்தான் கனமான பேனாக்கள் தேவைப்படுகின்றன. குழந்தைகளின் சின்னக்கைகளுக்கு ஏற்ற எழுது கருவிகள் தேவை.

அதேபோல, வட்டார வேறுபாடுகளோடு சேர்ந்த ஒரு மொழிக்கல்வி வேண்டும். என்னுடைய பாடப்புத்தகத்திலே நான் ‘கிணறு ‘தான் பார்த்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இதே சொல்தான். கேணியே கிடையாது. நூலைப் பார்த்து வடமாவட்டக் குழந்தைகள் திணறியிருக்கும் என்பது இப்போது எனக்குத் தெரிகிறது. ஏனென்றால், அங்கே கேணி என்ற சொல்தான் உண்டு. கிணறு என்ற சொல் கிடையாது. மதுரை தாண்டி திண்டுக்கல் பக்கம போகும்போதுதான் கிணறு, கேணி என்ற இரு சொற்களும் இருக்கின்றன. இரண்டிற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. பொருள் வேறுபாடு இல்லாமல் ஒரு சொல் தோன்றாது. இந்த இரண்டு சொற்களும் கலப்பது திண்டுக்கல் பகுதியில்தான்.

என்னுடைய வீட்டிலே ஒரு திண்டுக்கல்காரர் குடிவந்தார். அவர் கேணி என்று சொன்னபோது என் அம்மாவுக்கு விளஜகவில்லை. வட்டார வேறுபாடுகளை உள்ளடக்கிய ஒரு மொழி அவசியம். ஏனென்றால் அந்த வட்டாரம் இல்லாமல் அந்த மனிதன் இல்லை. வட்டார வேறுபாடுகளை முற்றாக நிராகரிக்கும் ஒரு பொதுமொழியைக் கற்கும் நிலைமை பள்ளிப் குழந்தைகளுக்கு வரக்கூடாது. எடுத்துக்காட்டாக, கோவை மாவட்டம் என்றால் பருத்தி, ஈரப்பதம் உள்ள காற்று போன்ற அறிமுகத்திற்குப் பிறகுதான் அந்தக் குழந்தைக்கு மதுரையைப் பற்றிய அறிமுகம் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

நேற்று இருந்த ஆசிரியர்களை விட இன்றைக்கு இருக்கிற ஆசிரியர்கள் எதிர்கொள்ளுகிற சவால்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு மொழியைக் கற்பிப்பவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களில் மிக முக்கியமான ஒன்று காட்சி ஊடகங்களின் வலிமை. நாம் சொல்லிக்கொடுக்கின்ற ஒன்றை தொலைக்காட்சியிலே பிழையாக எழுதிப்போடுகிறார்கள். குழந்தை அதை நம்புமா ? நம்மை நம்புமா ?. குழந்தைகளுக்கு நாம் சொல்வதைக்காட்டிலும் வலிமையாகச் சொல்லக்கூடிய சாதனமாக தொலைக்காட்சி உள்ளது. இம்மாதிரியான சவால்கள் எனக்கு மொழி கற்பித்த அசிரியர்களுக்கு இல்லை. இப்போதுள்ள ஆசிரியர்க்கு இந்த சவால் உள்ளது. இவ்வகையான சவால்களை எதிர்கொள்கிற முறை தெரியவேண்டும்.

வட்டாரம் சார்ந்த வழக்குகள் இருப்பதுபோன்று சாதி சார்ந்த வழக்குகளும் உள்ளன. அந்த சாதி சார்ந்த வழக்குகளில் உள்ள சிறந்த கூறுகள் எவை ? அவற்றிலும் குழந்தையின் சொல்தொகுதி சார்ந்த விசயங்கள் இருக்கின்றன.

ஒரு தச்சர் வீட்டுக் குழந்தை படிக்க வரும்போது அந்தக் குழந்தைக்கு தச்சு வேலை செய்கிற கருவிகளுடைய வகைப்பாடும் அவற்றினுடைய பெயர்களும் தெரிந்திருக்கும். இது சுத்தியல், இது ஆப்பு, இது ஆப்புக்கு வைக்கிற உளி- ஆப்புளி, இது கொட்டாப்புளி, இது இழைப்பு என்று இந்த மாதிரியான கருவி அறிமுகம், அவற்றினுடைய பெயர் அறிமுகம், அவற்றினுடைய பயன்பாடும் அக்குழந்தைக்குத் தெரிந்திருக்கும். உழவர் வீட்டுக் குழந்தைக்கு உழவு சார்ந்த சொற்களும் அந்தக்கருவிகளின் பெயர்களும் தெரிந்திருக்கும். இவ்வாறாக, இரண்டையும் கலக்க வைக்கக்கூடிய பாடத்திட்டம் தேவைப்படுகிறது.

குழந்தைகளுக்குச் சொல் ஒலியோடு அந்தப் பொருளும் காட்டப்படவேண்டுவது மிகவும் அவசியம், எனக்கே மிகவும் வியப்பாக இருந்தது. என்னவென்றால், என் மகளோடு பணியாற்றுகின்ற ஒரு பெண், ‘என்னால் ஒரு நெற்பயிரையோ தக்காளிச் செடியையோ அடையாளஹ் காட்ட முடியாது ‘ என்று சொன்னாளாம். எவ்வளவு பெரிய கொடுமையான விசயம் இது.

இங்கே, கண் தெரியாதோர் பள்ளியில், ஒன்றாம், இரண்டாம் வகுப்புகளுக்கு வெளிளைஜ் துணியில் முடிஞ்சு ஒரு பொருளைஸ்ரீ கொடுப்பார்கள். அந்த மாணவர்கள் தடவிப்பார்த்து வெங்காயம் என்றோ சீரகம், கடுகு என்றோ நுட்பமாகப் பார்த்துச்சொல்வார்கள். கண் தெரியாத பிள்ளைகள் இந்த மாதிரிப் படிப்பால் பேறு பெற்றவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

குழந்தைகளிடையே வழக்கில் உள்ள சொற்கள் பொதுமொழியில் இல்லை. எடுத்துக்காட்டாக, பாண்டி விளையாட்டில் ‘அவுட் ‘ என்பதற்கு ‘சப்பை ‘ என்பார்கள். விளையாடும் கருவியின் பெயர் வட்டக்கு. இந்த இரண்டு சொற்களும் பாடநூலில் இல்லை என்பது மட்டுமல்ல, அகராதிகளிலும் கிடையாது. எனவே, பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான நிகண்டுகள் அதாவது, குழந்தை மொழி அகராதி என்றே வெளுயிட்டாகவேண்டும். வட்டார வேறுபாட்டையும் சாதி வேறுபாட்டையும் உள்ளடக்கிய மொழி பதிவு செய்யப்படவேண்டும். குழந்தைகள் வாசிக்க வாசிக்க பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்குமான இடைவெளு குறைந்துவிடும்.

(தொடக்கப் பள்ளியில் தமிழ் பயிற்றுவித்தல் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரையிலிருந்து…)

தட்டச்சு: அசுரன் (asuran98@rediffmail.com)

….

Series Navigation

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)

பேராசிரியர் தொ.பரமசிவன்(தமிழ்த்துறை தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)