‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

திரு.விஸ்வநாத கக்கன் அவர்களின் பேட்டி


டாக்டர்.அம்பேத்கர் வழக்குரைஞர்கள் சங்க நிறுவனரும், பல தலித் அமைப்புகளின் சட்ட ஆலோசகரும், பொது வாழ்வில் தூய்மைக்கு இலக்கணமாக திகழ்பவருமான திரு.விஸ்வநாத கக்கன் அவர்களுடன் நிகழ்ந்த ஒரு நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:

பேட்டியாளர்:மதமாற்றத் தடைச்சட்டம் தலித் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது என கிருஷ்ணசாமி, திருமாவளவன் போன்றோர் கூறுகிறார்களே.

திரு.கக்கன் அவர்கள்: கிருஷ்ணசாமி, திருமாவளவன் போன்றோர் அரசியலுக்காக இப்படிப்பட்ட கருத்தைப் பரப்பி வருகின்றனர். தலித் மக்களின் வறுமைகளைப் பற்றியோ, தலித் இளைஞர்களின் முன்னேற்றத்தைப் பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. மதமாற்றத் தடைச்சட்டத்தில் அடிப்படை உரிமை எப்படி பறிபோகிறது ? முதலில் டாக்டர் அம்பேத்கர் சொன்ன கருத்துக்களை இவர்கள் பின்பற்றுகிறார்களா ?

1936 இல் அம்பேத்கர் மதமாற முடிவு செய்த போது கிறிஸ்தவ மிஷினரிகள் அவருக்கு ஆசை காட்டினர். ஆனால் அம்பேத்கர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதைப்போலவே ஹைதராபாத் நிஜாம் ரூ. 5 கோடி தருவதாக கூறி இஸ்லாமுக்கு அழைத்தார். அதையும் அம்பேத்கர் நிராகரித்தார். அம்பேத்கரின் கொள்கைகளை கூறி மக்களை அணுகுகிறவர்கள் ஏன் அம்பேத்கரின் இக்கொள்கைகளிலிருந்து நழுவி விழுகிறார்கள் ? இதன் மூலம் தலித் மக்களின் நலன்களைப்பற்றி யோசிக்காமல் தங்களின் சுயநலனுக்காகவே இவ்வாறு செயல்படுகின்றனர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அம்பேத்கரைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லுகிற தலைவர்கள் தலித்மக்களை மட்டும் கிறிஸ்தவத்திற்கு ஏன் தள்ளுகிறார்கள் ? தாங்கள் ஏன் கிறிஸ்தவராகவில்லை ?

பேட்டியாளர்: டாக்டர் அம்பேத்கர் ஏன் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில் சேராமல் புத்த மதத்தைத் தழுவினார் ?

திரு.கக்கன் அவர்கள்: டாக்டர் அம்பேத்கர் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்ததற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார். முதலில் தான் பாரதக் கலாச்சாரத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. இரண்டாவதாக கிறிஸ்தவ மதத்தில் சாதி புகுந்துவிட்டது. மூன்றாவதாக மதங்கள் குறித்து டாக்டர் அம்பேத்கர் கொண்டிருந்த தேவைகளை கிறிஸ்தவ மதம் பூர்த்தி செய்யவில்லை. அதைப்போலவே முஸ்லிமாக விரும்பாததற்கு அவர் மூன்று காரணங்களை கூறுகிறார், முதலில் தான் பாரதக் கலாச்சாரத்தை விட்டு வெளியே செல்ல விரும்பவில்லை. இரண்டாவதாக இஸ்லாமிலும் ஏற்றதாழ்வுகள் உள்ளன, மூன்றாவதாக இந்ததேசத்தின் தேசிய நீரோட்டத்திலிருந்து தலித்கள் விலகிச்செல்வது போல ஆகிவிடும். இந்த விவரங்கள் ‘மகாத்மா காந்தியும் பாபா சாகேப் அம்பேத்கரும் ‘ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலின் ஆசிரியர் ஒரு தலித்.

பேட்டியாளர்: தலித்துக்களை ஆசைகாட்டி மதம் மாற்றுகின்றனர் என்று சொல்வது அவர்களை அவமானப்படுத்துவதாகும் என்று திருமாவளவன் கூறியுள்ளாரே ?

திரு.கக்கன் அவர்கள்: அரசியல் வியாபாரத்திற்காக இது போன்று கூறியிருக்கிறார். தனக்கு பலவழிகளிலும் உதவி செய்த கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு தனது நன்றிக்கடனை திருப்பிச்செலுத்தவே இப்படிப்பட்ட அவதூறான கருத்துக்களைப் பரப்பி வருகிறார்.ஒருவனுக்கு பிரதிபலன் பார்க்காமல் உதவி செய்தால் அதைப் பாராட்டலாம். மாறாகத் தாங்கள் செய்த உதவிக்கு பிரதிபலனாக மதம்மாற்றுவதால்தான் பிரச்சினையே ஏற்படுகிறது.ஹிந்துமதத்தில் உதவிப்பணிகள் தூய மனத்துடன் செய்யப்படுகின்றன. கிறிஸ்தவத்திலும் இஸ்லாமிலும் அவ்வாறு அல்ல.தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொளவதற்காக மட்டுமே உதவி எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறார்கள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களால் தலித் சமுதாயம் கடந்த பல ஆண்டுகளாகத் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக திருநெல்வேலியில் 15 தலித்துகளை பலிகடாவாக்கியவர் கிருஷ்ணசாமி. மேலவளவு கிராமத்தில் 7 தலித் மக்களை பலிகடாவாக்கியவர் திருமாவளவன். இவர்களால் தலித் மக்கள் பெற்ற முன்னேற்றங்கள் என்ன ? இவர்கள் மக்களை தூண்டி சண்டையிட வைத்து தங்கள் பதவிகளை தக்கவைத்துக்கொள்ள செய்யும் சூழ்ச்சிதான் இத்தகையப்பிரச்சாரம்.

பேட்டியாளர்: மதமாற்றங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என கூற முடியுமா ?

திரு.கக்கன் அவர்கள்: வறுமையின் காரணமாக, வேலையின்மையின் காரணமாக. இவற்றால் ஏற்படுத்தப்படும் கட்டாயங்களின் காரணமாக.

பேட்டியாளர்: காஞ்சி சங்கராச்சாரியார் உங்கள் சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு விஜயம் செய்தது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளதே ?

திரு.கக்கன் அவர்கள்:எங்கள் சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள தும்பைப்பட்டி. அங்குள்ள வீரகாளி அம்மன் கோவிலுக்கு காஞ்சி சுவாமிகள் வருகை புரியவேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன். அதன்படி காஞ்சி சுவாமிகள் கோயிலுக்கு வந்து எங்கள் குடும்பத்தார்களுக்கு சால்வை அணிவித்தார். இதைக்கண்டு பொறுக்காமல் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் கக்கன்ஜி நினைவுமண்டபம் செல்லாமல் போய்விட்டார் என பேசி வருகின்றனர். எங்கள் பயணத்திட்டத்தின்படி சுவாமிகளை கோவிலுக்கே அழைத்தோம். மணிமண்டபத்திற்கு அழைக்கவில்லை.

பேட்டியாளர்: ஆர்.எஸ்.எஸ் பற்றித் தங்களது கருத்து ?

திரு.கக்கன் அவர்கள்:ஆர்.எஸ்.எஸ்ஸின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. … குறிக்கோள் இல்லாமலும் வழிகாட்டுதல் இல்லாமலும் இருக்கும் தலித் இளைஞர்களுக்கு முன்னேற வேண்டும் என கூறுகின்ற ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.தலித் மக்களிடையே ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சென்றால் அவர்கள் விரைவாக முன்னேற்றமடைவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது.

பேட்டியாளர்கள்: சிங்கப்பெருமாள், கா.ஸ்ரீனிவாசன்.

தட்டச்சு: மண்ணாந்தை நன்றி: சென்னை மீடியா சென்டர் நியூஸ் (1:19-5-12-2002)

Series Navigation

திரு.விஸ்வநாத கக்கன் அவர்களின் பேட்டி

திரு.விஸ்வநாத கக்கன் அவர்களின் பேட்டி