கள்வர்க்கு இரவழகு

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

எஸ். சங்கரநாராயணன்


விருந்தாளி ஊரெல்லையில் நுழையும்போதே பாய்ந்தோடிக் கிட்டவந்து குழந்தையைப்போலத் தழுவிக்கொள்ளும் சீதளக்காற்று இறந்துபோனது. காலம் ஆலமரத்தில் வெளவால்போலத் தலைகீழாகத் தொங்கியது. வெயில் சுட்டெரித்தது. உழைப்பாளியின் கால் பித்தவெடிப்பு போல பூமி பிளந்து ஏரி உடைத்துக் கிடந்தது. ஜடாமுனி கோவில் ஊரின் தொன்மைச் சிறப்பு. அதன் உச்சிவிளக்கு ஊர்முழுக்கத் தெரியும். தீபம் ஏற்றிவிட்டால் கொடுக்கல்வாங்கல் செய்வதில்லை. நெல்லடி களத்தில் இரவில் ஏடுபிரித்துக் கதை நடக்கும். பெரிய எழுத்து நல்லதங்காள், பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை. எதிரே குளிரிருளில் ஜனமொத்தமும் தலை வரை போர்த்தி விக்கிரமாதித்த பொம்மையாய் அசையாமல் உட்கார்ந்திருப்பார்கள். திடீரென அந்தத் துணிப்பொதிவில் இருந்து புகை கிளம்பி அடங்கும். பீடிக்கங்கு ஒளிரும். பூனைக்கண் போல. திரும்ப இருண்டுவிடும் சூழல்.

அடேடே பங்குனிக் கொடையின்போது நாற்திசையும் கூடும். எட்டூரும் ஒன்று சேரும். களத்தில் ஒத்தையடி ரெட்டையடிப்பாதை விட்டு நிறையக் கடைகள். சந்தை போலாகிவிடும். எதையெடுத்தாலும் ஒர்ருவா. பீமபுஷ்டிஅல்வா. பாம்பு உடலும் மனிதத் தலையும் கொண்ட நாககன்னிகை. அவள் அடிக்கடி நாக்கை நாக்கை வெளியே நீட்டி மூடிக் கொள்வாள். அவளைப் பார்க்க அழைக்கும் விசித்திர உருமல் மேளம். அடிவயிற்றைப் புரட்டும் சத்தம் அது. நல்லா வழுவழுவென்று எண்ணெய் தேய்த்த வழுக்குமர உச்சியில் பரிசுப்பொதிவு. ஏலேம் ஒருதரேம் ரெண்டுதரேம் மூணுதரேம்! – அய்ஸ்! ஆ அய்ஸ்! – என மொட்டைகளை வசீகரிக்கும் உரத்த குரல்கள். திடீர் திடீரென்று மயில் அகவல் போல யாராவது வியாபாரி குரல் எடுப்பான். கிரிக்கெட் விளையாடும் பிளாஸ்டிக் பேட், பிளாஸ்டிக் பால்! பாடி ஜெட்டி பனியன் என்று மலைபோல் குவித்து கடைகள். பனியனில் சமீபத்திய சினிமாப் படத்தின் பெயர். உன்னைவிட மாட்டேன்! – பிராவை, புடவைகளை நடிகை போட்டது என்று சும்மாவச்சும் பிரபலப்படுத்தி விற்பனை. எம்ஜியார் சிவாஜி கட்அவ்ட். கூட நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம். ஐஸ்கட்டியைத் தேங்காய்ப்பூவாய்த் து¡வி ஒரு சர்பத்! பாம்பு கீரி விளையாட்டுக் காட்ட கூட்டம் கூட்டுவான் ஒருத்தன். வந்தாளுகளில் ஒராளைப் படுக்க வெச்சி அவனைத் துண்டால் மூடி எதிராளி பையில் எத்தனை ரூவா இருக்கு என்று கரெக்டாகச் சொல்லும் லோக்கல் மந்திரவாதி. நிற்கிறவனும் அவன்ஆள்த்தான் என்று தெரியாமல் வாயைப் பிளக்கும் ஜனம்.

ஊரே கலகலத்துக் கிடக்கும். பக்கத்து¡ர் எதிர்ஊர் எல்லாத்திலிருந்தும் ஆட்கள் வருவார்கள். உன்வீடு என்வீடு என்றெல்லாம் பேதங்கூடக் கிடையாது. திண்ணையில் உள்க்கூடத்தில் சுவாதீனமாகத் தங்கிக் கொள்வார்கள். தண்ணிக் கஷ்டங் கிடையாது. சோத்துப் பிரச்சனையும் இல்லை. பரோட்டாக் கொத்துகிற தோசைக்கல் சத்தம் அழைத்துக் கொண்டே யிருந்தது… ஊர்பெயரே ஜடாமுனிகோவில். அங்கே எல்லாரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். ஜடாமுனியின் பிள்ளைகள்.

ஊரணி மேடேற செம்மண் ரஸ்தா. குடும்பக்கட்டுப்பாட்டு மாலா டி விளம்பரம். ஜடாமுனி கோவில். பிறகு ஆலமரம். ஒருபார்வைக்கு அதுவே ஜடாமுனிதான். விருட்சம் பெருமூச்சு விட்டது. வசந்தகாலங்கள் விடைபெற்றுக் கொண்டன. இலைகள் தொலைத்த வெறும் பெளதிக மிச்சம் அது இப்போது. நினைவுச் சின்னம். ஜனங்களும் மாறியிருந்தார்கள். ஜடாமுனி காலத்துக்குப் பின் நரஸ்துதி காலம். அழிவுக் கோலம். கோவில் இருண்டு கிடந்தது. கோபுரவிளக்கு இப்போது ஏற்றப்படுவதேயில்லை. நெல்லடிகளத்தில் புதிய வண்ணக்கொடிகள் இப்போது உயரமாய்ப் பறந்தன. ஆல் தலையுயத்திப் பார்த்தது. கோபுரம் பார்க்கவொண்ணாமல் கொடிகள் உயரே உயரே எழுந்தன. நரஸ்துதிகாலம்.

ஊரில் புதிய தலைகள் நடமாடின. அழுக்கறியா அவர்களின் உடைகள். கட்சிக்கரை துண்டு. உள்ளத்தில் களங்கமற்று உடையில் அழுக்கு சுமந்து திரிந்த ஜனங்கள், அவர்களை, அவர்கள் பகட்டை, அவர்கள் கையில் புரண்ட அச்சடித்த காகிதங்களை, விநோதமாய்ப் பார்த்தார்கள். விருட்சம் பதறியது – ஐயோ பிள்ளைகளே! அவர்களை நம்பாதீர்கள். உலகிலேயே அழகான அருமையான விஷயம், அவர்கள் அல்லர். நீங்களேதான்! உங்கள் சரீர உழைப்புதான். அவர்களோ வெறும் காகிதங்களை வீசி உங்களை வேட்டையாடுகிறார்கள். உழைப்பை நம்பாத அவர்கள், உழைப்பை நம்பும் உங்களிடம், அவர்களை நம்பச் சொல்கிறார்கள். அருமை மகாஜனங்களே அவர்களுக்கு இடங்கொடுத்து, தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு, திருப்தியற்ற அடிமைவாழ்க்கை வாழாதீர்கள்.

ஆனால் யார் அதன்பேச்சைக் கேட்டார்கள்? கிழவன் என்ற அலட்சியம் அவர்களுக்கு. கிழவர்களுக்கு என்ன வேலை? பயப்படுவது. வேண்டாம், என மறிப்பது. அந்தக் காலத்தில், என பழம்பெருமை பேசுவது. ஆல் சுற்றிலும் பார்த்தது. கோவில் குளம் ஆளின்றிக் கிடந்தது.

பஞ்சம். எரி வறண்டு விட்டது. கிணறுகளுக்கு தாகம் எடுத்து தொண்டை விக்கியது. உழைப்பில் நம்பிக்கை இழந்த ஜனங்கள் உணவுதேடி நாய்கள்போல பன்றிகள்போல அலைந்தார்கள். பசி அவர்களை மண்டியிட வைத்தது. ஐயோ யார் யாரோ புதுமனிதர்கள் முன்னால் அவர்கள் தன்மானம் இழந்து இறைஞ்சினார்கள். தங்கள் வாழ்வின் மகிழ்ச்சியும் சுபிட்சமும் புதுமனிதன் கையில், அதுவரை அவர்களுக்கு அறிமுகம் இல்லாதவன் கையில், இருப்பதாக நம்பினார்கள். அவர்கள் சிந்திப்பதை மறந்துவிட்டார்கள். மெர்க்குரி வெளிச்சத்தில் சூரியனையே அல்லவா மறந்து விட்டார்கள்?

பாவிகளே, கோவில்களைப் புறக்கணித்துவிட்டு எங்களைப் பின்தொடருங்கள்! – பின்னால் பின்னால் என்று எத்தகைய பரிவாரம். ஜடாமுனிகோவில் கொடைபோலத் திரள். ஆல் பதறியது. வார்த்தைப் பந்தலில் நிழல்தேடிச் சென்றது பெருங்கூட்டம்.

தலைவா, ஒலிகள்.

வாழ்க, ஒலிகள்.

தலைவன், அல்லன் தலைவர்கள். நானே தலைவன் என்றவன் பின்னால் சிலர் போனார்கள். அவன் தலைவன் அல்லன், என்றவன் பின்னால் வேறு சிலர் போனார்கள். விருட்சம் கலவரத்துடன் பார்த்தது. ஊர் துண்டுபட்டது. நண்பர்கள் பிரிந்து விலகி து¡ரமாய்… ஐயோ விரோதிகளாகி வருகிறார்கள். யோசிக்காதே! அவன் என் எதிரி, ஆகவே… என்றார்கள் தலைவர்கள்.

இன்னும் என்னென்ன நடக்குமோ? ஆல் கண்ணீருடன் ஜடாமுனி கோவிலைப் பார்த்தது. அரசியல்கொடிகள் காற்றில் எக்காளமிட்டன. எதிரிகளோடு சேர்ந்து, நண்பர்களைப் பகைத்துக்கொண்டது கூட அல்ல, நண்பர்களை அழிக்கவே அவர்கள் எதிரிகளால் இயக்கப்பட்டார்கள், தலைவனின் ஆயுதம் போல. கத்தி சிந்திப்பதில்லை அல்லவா?

திரும்பிப் பார்க்குமுன் நண்பர்கள் என்ற முகாமில் அவர்கள் எதிரிகளால் சூழப்பட்டிருந்தார்கள். விரோதிகளால் அயோக்கியர்களால் திருடர்களால் துரோகிகளால் சூழப்பட்டிருந்தார்கள். இரவுகளில் பின்கட்டுக் கிணற்றுக் கயிறும் வாளியும் களவாண்டு போனவன், கற்பழித்தவன், இருளில் தாலியைப் பறித்தோடியவன், விருட்சத்தில் கட்டப்பட்டு உதைவாங்கியவன்… என சுற்றிலும் நின்றன ஓநாய்கள். தலைவனின் உள்ளூர் ஓநாய்கள். ஆனால் காலம் கடந்திருந்தது. ஆல் பட்ட துயரம் சொல்லிமாளாது. சிந்திக்காதே, என்றான் தலைவன் உரத்த குரலில். இதோ சோமபானம். தீராத கவலையும் தீர்த்துவைக்கும் மருந்து. உனக்கு இது பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். எங்களுக்கு வழிவிடு, வீட்டுக்கு வீடு சோமபானம் தருவோம், என்றான் தலைவன். ஆம், என்றன ஓநாய்கள்.

இனியென்ன என்ற பெருங்கேள்வி, மூளையில் பாம்பாய்க் கொத்தியது. யோசிக்க முடியாத அளவு அவர்கள் கலவரப்பட்டிருந்தார்கள். பயம். பயம்ம்ம்ம். அவர்கள் தலைவனை நம்பினார்கள். நம்பாமல் வேறு வழியும் இல்லை. நம்மால் கூடுவது எதுவும் இல்லை, தலைவனால் கூடும், என வேறு வழியில்லாமல் நம்பினார்கள். தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் இவர்களுக்காகச் சண்டைபோட்டுக் கொள்வதாக அவர்கள் பெருமை கொண்டாடினார்கள். தலைவர் நமக்காக உயிரையும கொடுப்பார்! – என்ற கற்பனை லகரியில் தலைவருக்காகத் தம் உயிரையும் தர அவர்கள் சித்தமானார்கள். தலைவரின் வதனம் அழகானது. நடை அதைவிட அழகானது. பேச்சு, ஆகா அந்தப் புன்னகை. இதுவரை அவரை அறியாததற்காக அவர்கள் வருத்தப்பட்டார்கள்.

ஆனால் தலைவரைச் சுற்றிலும் கயவர் கூட்டம். கள்வர்க்கு இரவழகு. வரவர அவர்களோ பகலிலேயே லஜ்ஜையின்றித் திரிய ஆரம்பித்துவிட்டார்கள். கொள்கைக்குன்றுகளாய் மாவீரர்களாய் அரிமாக்காளாய் அடலேறுகளாய் வளைய வந்தார்கள். ஜனங்களே, யோசிக்கிறீர்கள் போலிருக்கிறதே, என்று தலைவர், ஆகா என்ன அழகாய்ச் சிரிக்கிறார். இல்லை, என அவர்கள் வெட்கத்துடன் தலையாட்டினார்கள்.

ஜனங்களே தேர்தல் வருகிறது, என்றார் தலைவர். தேர்தலா, என்றார்கள் ஜனங்கள். உங்கள்மீது நான்கொண்ட நம்பிக்கை வீண்போகாமல், என்மீது நீங்கள்கொண்ட நம்பிக்கைக்குச் சான்றளிக்கிறீர்கள்!… தலைவரை நம்பாமல் எப்படி? நான் பெறும் வெற்றி, நீங்கள் பெறும் வெற்றி – அல்லவா? ஜனங்கள் ஓநாய்களை மறந்து ஆம், என்று கூச்சலிட்டார்கள்.

கயவர் கூட்டம் சுறுசுறுப்பானது. வெள்ளாடைகள் மேலும் து¡ய வெள்ளாடைகள் ஆயின. அரிமாக்களிடம் ஒரு பணிவு வந்தது. ஜனங்களிடம் அவர்கள் பிரியமுகம் காட்டினார்கள். (அதெப்படி? – என யார் யோசித்தார்கள்.) தலைவர் சொல்படி எல்லாம் எப்படி மாறி புதுசாய்த் தோற்றம் கொள்கின்றன. எல்லாம் தலைவர் செயல்! தலைவர் வாழ்க! – என அவர்கள் கோஷமிட்டார்கள். அடலேறுகளே, அஞ்சாநெஞ்சங்களே, தயவுசெய்து வருக. தலைமையேற்க வருக. வருக வருக… நன்றி நன்றி… சோமபான விநியோகம். ஆனந்தம். களிபேருவகை. கிறுகிறுப்பு.
திடீரென்று ஊரில் அமைதி நிலவியது. ஆழ்கிணறறுகளின் நிரில்லா இருளில் நிழல்கள் பதுங்கிக் காத்திருந்தன. மெளனத்தின் பலு¡ன்வீக்கம். அப்புறந்தான் ஜனங்களைத் திகைக்க வைக்கிற அந்த நிகழ்ச்சி நடந்தது. எதிர் எதிர் அணித் தலைவர்கள் சிரித்த முகத்துடன் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்வதை, ஜனங்கள் ஓர் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். விருட்சம் திக்குமுக்காடிப் போனது. இலட்சிய உறவு என்றார் தலைவர் சிரித்த முகத்துடன். அவர் சிரிப்பே கோடிபெறும்! என்றாலும் ஜனங்கள் நம்பமுடியாதிருந்தது அந்த நடப்பு. கனவல்லவே இது. என்றாலும் அப்படித்தான் நடந்தது. ஆகவே பழைய நண்பனும் பழைய நண்பனும் வேறு வழியின்றி ஒரு வெட்கத்துடன் கைகுலுக்கிக் கொள்வதை ஆல் பார்த்தது. பழைய அந்த நட்புத்தீவிரம் மீண்டும் அவர்களுக்குள் துளிர்க்கவில்லை, என ஆல் ஒரு வருத்தத்துடன் உணர்ந்தது. இலட்சிய உறவு உனக்கும் எனக்கும், என்றார் தலைவர். உங்களுக்காகவே இந்த உறவு, என்றார். தலைவர் வாழ்க! நண்பன் நண்பனைப் பார்த்து நண்பனே, என்று போலியாய் அழைக்கவேண்டி நேர்ந்ததே.

பிறிதொரு சமயம் தலைவர்கள் இலட்சியஉறவு முறித்து ‘இலட்சிய மோதல்’ செய்தார்கள், ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு பழைய நண்பன் பழைய நண்பனுடன் மீண்டும் பொருத நேர்ந்தது. யோசனை மறிக்கும்போதெல்லாம் அவர்கள் தலைவர் வாழ்க, என்று கண்மூடிக் கிறீச்சிட்டுக் கத்தினார்கள்.

பஞ்சகாலம். பாழ்கிணற்றுக்குள் இருட்டு திணறியது. சட்டெரிக்கும் வெயில். நாய்கள் மூளைகலங்கித் திரிந்தன. என் பிரிய, அரிய, செல்ல ஜனங்களே, ஐயோ, ஜடாமுனியின் பிள்ளைகளே… ஆல் அழுது பெருக்கியது. கண்ணிலும் வறண்டிருந்தது கண்ணீர். எப்படி இருந்தீர்கள் எல்லாரும். ஐயோ, எலும்பும் தோலுமாய் இப்படியாகிப் போனீர். இனி சாவு மாத்திரமே மிச்சம் இருக்கிற, கண்ணில் ஆவிபறக்கிறதாக ஆகிப் போனீரே… அழுது பெருக்கியது ஆல்.

ஜடாமுனி கோவில் தாண்டி நெல்லடி களத்தில், விருட்சத்தின் கீழே, அந்த உடல் மூன்றுநாளாய்க் கிடந்தது. யாரும் கிட்டே நெருங்கவில்லை அதை. ஒரு திகிலுடன் து¡ரத்தில் இருந்தே எல்லாரும் பார்த்தார்கள். மரணம்! அவர்கள் ஒருவரை யொருவர் பீதியுடன் பார்த்துக் கொண்டார்கள். குப்புறக் கிடந்தது உடல். கைகள் விரிந்து பூமியை நோக்கி சரணம் என்று கிடந்தது. அடைக்கலம் கோரினாப் போலக் கிடந்தது. மூன்று நாட்கள். ஐயோ, என் அரும மகராசனே, யாரப்பா நீ, எங்கிருந்து வந்தவன், ஏனிப்படி ஆயிற்று உனக்கு? – ஆல் சருகுக்கண்ணீர் உகுத்தது.

தேர்தல் வந்தது மீண்டும். ஜனங்கள் இப்போது நண்பர்களிடம் ஒரளவு நம்பிக்கை இழந்திருந்தார்கள். அவர்கள் தேர்தல் மேலேயே நம்பிக்கை இழக்க ஆரம்பித்திருந்தார்கள். ஆகவே தலைவர்கள் கவலைப் பட்டார்கள். மக்களுக்காக அல்ல, தேர்தல் வருகிறது – கவலைப் பட்டார்கள். மாவீர்கள் இந்நாட்களில் மாபெரும் வீரர்களாய் ஆகியிருந்தார்கள். ஆள். அம்பு. பரிவாரம். மாபெரும் வீரர்களும் கவலைப்பட்டார்கள். மக்களுக்காக அல்ல, தேர்தல் வருகிறது – கவலைப் பட்டார்கள்.

இடுப்பில் அவிழ்ந்த வஸ்திரத்துடன் அவன் குப்புறக் கிடந்தான். உடலெங்கும் சிதறிக்கிடந்தன ஆலிலைச் சருகுகள். ஆல் உகுத்த கண்ணீர். யாரும் அவனை நெருங்கவில்லை. மூணுநாளாய் நெருங்கவில்லை. நல்லவேளை அவன் கண்கள் மூடியிருந்தன. அவனை நெருங்க அவர்கள் பயப்பட்டார்கள். தங்கள் சாவையே நெருங்குவதாக அவர்கள் பயப்பட்டார்களோ என்னவோ?

ஜனங்களிடம் நம்பிக்கையை மீண்டும் எப்படியாவது பெற்றாக வேண்டியிருந்தது. வருகிறது தேர்தல். எதாவது செய்தாக வேண்டியிருந்தது. கயவர்கள் கவலைப்பட்டார்கள். மக்களுக்காக அல்ல. இம்முறை இலட்சிய உறவா, லட்சிய மோதலா தெரியவில்லை. ஆகவே மெளனமாய் இருந்தார்கள். பொறுமையாய்க் கயவர்கள் இருந்தார்கள். காத்திருந்தார்கள். எது எப்படியாயினும் வெற்றி பெற்றாக வேண்டியிருந்தது. ஜனங்களிடம் நம்பிக்கையைத் திரும்பப்பெற வேண்டியிருந்தது. ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது.

கண்மூடி கைவிரித்து அப்படியே கிடந்தது உடல். அவன் யாரென்று தெரிந்துகொள்ள ஜனங்கள் அக்கறை காட்டினார்கள். அவசரம் காட்டினார்கள். யாரும் அவனை நெருங்கி, கிட்டே, அருகேபோய்ப் பார்க்கவில்லை. ஆனாலும் அவன் ஒருவேளை தங்களில் ஒருவனோ என அவர்கள் கவலைப்பட்டார்கள். ஆகவே தாங்கள் எல்லாரும் பத்திரமாக இருக்கிறோமோ, என அவர்கள் தங்களுக்குள் சரிபார்த்துக் கொண்டார்கள். எல்லாரும் இருந்ததுகண்டு ஆறுதலும், ஓரளவு நிம்மதியும் அடைந்தார்கள்.

இலட்சிய உறவு இல்லை, என்றாகி விட்டது. அதிகாரபூர்வ அறிவிப்புக்குப் பின் இப்போது அவர்கள், ஒருவரை ஒருவர், எதிரிகளாய் அறிவித்துக்கொள்ள நேர்ந்தது. ஆல் எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. ஜனங்களை அது இப்போது உன்னிப்பாகப் பார்த்தது. தேர்தலில், தலைவர்களில், மாபெரும் வீரர்களில், ஜனங்கள் அதிருப்தி அடைய ஆரம்பித்திருந்தார்கள். ஆகவே கள்வர்கள் யோசித்தார்கள். ஜனங்களை மீண்டும் ஆகர்ஷிக்க வேண்டும். மற்ற வீரன் அறியாமல், அவன் செய்யுமுன்னால், நாம் எதாவது செய்தாகவண்டும்.

… இவன் யாரோ புதுமனிதன். வேற்று¡ர்க்காரன். இங்கென்ன காரியமாய் வந்தான்… தன்னு¡ரில் பஞ்சம் தாங்காமல் ஓடிவந்திருக்கலாம், என ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். எதுவும் வேலைதேடி, பிழைப்புதேடி அவன் வந்திருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும். அவன் கிடந்த கிடக்கையும் அப்படியே இருந்தது. மேடேறி, செம்மண் ரதஸ்தா ஏறி, பாம்புப் புத்து தாண்டி, ஜடாமுனி கோவில் தாண்டி தள்ளாடி வந்தவன், ஆலமர நிழல்மடியில் குப்புற விழுந்தான். கால்களைக் கோவில்பக்கம் நீட்டி அவன் கிடந்தான். இறைஸ்துதி மறந்து, நரஸ்துதி பாடவந்த ஜனசமுத்திரத்தின் சரியான அடையாளம்போல அவன் கிடந்தான். மூன்று நாட்கள்.

ஒரு கயவன் முடிவெடுத்தான் இரகசியமாய். இந்த உடலை நான் – நல்லடக்கம் செய்வேன். அடக்கம் அமரருள் இவனை உய்க்கும்… நெல்லடி களத்துக்கு விரைந்தோடி அவன் வருவதை ஆல் பார்த்தது. கூடவே ஆள், அம்பு, பரிவாரம். அவன் ஆணையிட்டான் – தையல்காரனிடம் உடனே போங்கள். அவசரம். இந்த மனிதனின் உடலைப் போர்த்த, நீண்ட அளவில் நம் கட்சிக்கொடியை தைத்துத்தரச் சொல்லுங்கள். இப்போதே தைத்து, உடனே வாங்கிவாருங்கள். அவசரம்… பல்லக்குத் து¡க்கிகள் ஒடினார்கள். அவர்கள் போனபோது தையல்காரன் வேறொரு கட்டிச்கொடி தைத்துக்கொண்டிருந்தான், அவசரமாக.

ஆல் பார்க்க ஜனங்கள் கூடியிருந்தார்கள். நெல்லடி களம், கல்லடி களமாகும் போலிருந்தது. கள்வர்க்கு இரவழகு. வெளிர்நிலா வானில் உயரே விழித்திருந்தது. ஆலும், நிலவும், ஜனங்களும். அந்த மனிதனின் கிட்டே யாரும் நெருங்கவில்லை. கட்சிக்கொடிகளுடன் இப்பக்கமிருந்து சிலர் வருவதை ஜனங்கள் பார்த்தார்கள். திடீரென்று மறுபக்கத்தில் இருந்து வேறொரு கூட்டம், வேறொரு கட்சிக்கொடியுடன் வருவதையும் பார்த்தார்கள். நேற்றுவரை, மூன்றுநாள்வரை யாருமே நெருங்காத அந்த உடலுக்குச் சொந்தம் கொண்டாடி, இப்போதோ ‘இருவர்’ வந்தார்கள். வந்த இருவரும் நேற்றுவரை இலட்சிய உறவு காத்து, காலத்தின் கட்டளையால் எதிரணிக்குப் பிரிந்தவர்கள்… என்பதை ஜனங்கள் ஓர் ஆச்சர்யத்துடன் நிலா வெளிச்சத்தில் பார்த்தார்கள்.

இவனை நாங்கள் நல்லடக்கம் செய்யப் போகிறோம், என்றான் ஒருவன். இல்லை, நாங்கள்தான், என்றான் மற்றவன். இருவரும் சேர்ந்து செய்யுங்கள், என்றார்கள் ஜனங்கள். அவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உன்னை நானறிவேன், என ஒருவன் சொன்னான். ஆனால் மக்கள் உன்னை அறிவார்கள், என்றான் மற்றவன். ஜனங்கள் இருவரையும் அறிந்திருந்தார்கள்.

அந்த வேற்று¡ர் மனிதன் அப்படியே கிடந்தான். யாரும் அவனை நெருங்கவில்லை, என ஆல் பார்த்தது. ஜனங்களையும் அது பார்த்தது. ஜனங்கள் கயவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சச்சரவு, தேவை சிறிதும் அற்றது, என அவர்கள் நினைத்தார்கள். இந்த மனிதனை அடக்கம் செய்யும் முகமாக அவர்கள் பூசலிடவில்லை, என ஜனங்கள் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அரையிருளில், நிலவொளியில் எல்லாம் அவர்களுக்குப் புரிந்தது. தங்கள் தங்கள் பரிவாரங்களுடன், இருதரப்பினரும், மோதலுக்குத் தயாராவதை ஜனங்கள் கவனித்தார்கள். அந்தப் பரிவாரங்களில், எதிர் எதிர் அணிகளில், நண்பர்கள் மோதலாம், என அவர்கள் கவலைப் பட்டார்கள்.

அந்த மனிதன் து¡ரத்தில், சருகுகள் மூடிய நிலையில் கிடந்தான். மானம் காக்கும் சருகுகள். நிலா, ஆல், மகா ஜனங்கள் பார்த்தார்கள். கயவர்கள் சண்டையினைத் துவக்கி வைத்தார்கள். அவர்கள் முன்னிலையில் பரிவாரங்கள் மோதிக் கொண்டன. ணிக் ணிக் என்று ஆயுத ஒலிகள். நெற்போர்க்களம், மற்போர்க்களம் ஆயிற்று. ஜனங்கள் பார்த்தார்கள். வன்மம். வன்முறை. உதிரப்பெருக்கு. உயிர்வாழ வழிவகுக்கும் நெல்லடிகளம் கல்லடிகளமாகிப் போனது. அழிவுக்களம். இப்பக்கம் சிலர் இறந்து போனார்கள். மறுபக்கமும் சிலர் இறந்துபோனார்கள். இரத்தக்களரி. ஜனங்கள் எல்லாவற்றையும் ஒரு பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்… நிலா வெளிறிப்போனது. ஒளி மேலும் நீர்த்துப் போனது. அப்போதுதான் யாரும் எதிர்பாராக ஒரு நிகழ்வு நடந்தது. அந்த மனிதன், வேற்று¡ர் மனிதன், மூணுநாளாய் அசைவின்றிக் குப்புறக் கிடந்தவன், எல்லாராலும் இறந்துவிட்டதாய்க் கருதப்படுபவன், சருகுகளை உதிர்த்து, ஆம் – எழுந்து நின்றான். எழுந்து தள்ளாடி அவன் நின்றதை ஆல், ஆகா என ஓர் ஆச்சரியத்தோடு, மகிழ்ச்சியோடு பார்த்தது. ஜனங்கள் திரும்பிப் பார்த்தார்கள். கயவர்கள் போரை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தார்கள்.

நீ இன்னும் சாகவில்லையா? – அவன் பதிலுக்குக் கேட்டான் – நான் இறந்துவிட்டதாக எப்படி முடிவெடுத்தீர்கள், என்றான். என்னருகில் வந்து பார்த்தீர்களா? தொட்டு உசுப்பி, எழுப்பி, ஏதேனும் முயற்சிசெய்து பார்த்தீர்களா? நான் உயிர்பிழைத்து எழுவதில் அக்கறை காட்டினீர்களா? – என்று அவன் கேட்டான். தொடர்ந்து அவனால் பேச முடியவில்லை. திணறினான். அவனால் நிற்கவே முடியவில்லை. தடுமாறினான். தாகம்…. என்றான் அவன். யாராவது தண்ணீர் தருவீர்களா?… ஜனங்கள் அவனை, அவன் தாக ஆவேசத்துடன் தண்ணீர் அருந்துவதைப் பார்த்தார்கள். அவன் கயவர்களைப் பார்த்தான். ஏன் நீங்கள் போராடுகிறீர்கள்? கையில் ஏன் ஆயுதம்? ஐயோ இவர்கள் எப்படி இறந்துபட்டார்கள்?… என்று கேட்டான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அதிருக்கட்டும், நீ எந்தக்கட்சி, என்று கேட்டான், ஒரு கயவன். அந்த மனிதன் சிரித்தபடியே, இறக்குமுன்னா, இறந்தபின்னா, என்று கேட்டான். ஜனங்கள் கூடவே சிரித்தார்கள். ஆலும் நிலவும் சிரித்தன. பிறகு அவன் தானே சொன்னான். இறக்குமுன்னும், இறக்க நேரிடும் போதிலும், என்மீது இரக்கம் செலுத்த எந்தக் கட்சியுமே இல்லை. போதும் உங்கள் பித்தலாட்டம். கயவர்களே, என்றான் அவன். உங்களை நம்பி, உங்களுக்காக உயிர்த்தியாகம் செய்த இவர்களையாவது நல்லடக்கம் செய்யுங்கள்….

அவன் கூட்டத்தை விலகி, ஜனங்களை விலகிப் போனான். எங்கே போகிறான் அவன்?… அவன் கோவிலைநோக்கிப் போவான், என ஜனங்கள் எதிர்பார்த்தார்கள். ஐயோ அவன் தங்களில் ஒருவனோ என முன்பு பயந்த ஜனங்கள், இப்போது அவனைத் தங்களில் ஒருவனாக மகிழ்ச்சியுடன் அடையாளம் கண்டார்கள். அவன் கோவிலையும் புறக்கணித்து, ஊருணியின் மேடேறிப் போனான். ஹோவென்ற பேரிரைச்சலுடன் ஜனங்கள் பின்தொடர்ந்தார்கள். ஆலும் நிலவும் பார்த்துக் கொண்டிருந்தன.

Series Navigation

எஸ் சங்கரநாராயணன்

எஸ் சங்கரநாராயணன்