என்றென்றும் ஊழியர்கள்

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ஜோதிர்லதா கிரிஜா


கூடத்துத் தொலைபேசி வழக்கத்தை விடவும் அதிக ஓசையுடன் கூப்பிட்டதாகக் கமலத்துக்குத் தோன்றியது. அது பகல் வேளையானாலும், வீட்டிலும் வெளியிலும் நிலவிய அமைதி அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றெண்ணியவளாய் அவள் ஓடோடிச் சென்று ஒலிவாங்கியை எடுத்துக் காதில் பொருத்திக்கொண்டு, “ஹலோ!” என்றாள்.
“நான் வெண்ணிலா பேசறேம்மா. ஏம்மா மூச்சு வாங்குது உங்களுக்கு?” என்று மறுமுனையில் இருந்த மகள் கேட்டதும் கமலத்தின் முகம் கமலம் போன்றே மலர்ந்தது.
“என்னடி, வெண்ணிலா! எப்படி இருக்குறே?”
“நான் நல்லாத்தாம்மா இருக்குறேன். உங்களுக்கு ஏன் மூச்சு வாங்குதுன்னு கேட்டேனே? ரத்த அழுத்தம் எதுனா இருக்குதா?”
“அதெல்லாம் யாருக்குத் தெரியும்? சமையக் கட்டுலேர்ந்து வெரசா ஓடி வந்தேனில்ல? அதான் மூச்சு வாங்குது. மத்தப்படி ரத்த அழுத்தமெல்லாம் இருக்கும்னு தோணலே. அது இருந்தா தலை சுத்துமாமில்ல?”
“ஆமாமா. அப்படி ஒண்ணும் இல்லாத வரையிலெ உனக்கு அப்படி ஒரு நோய் இல்லேன்னுதான் வச்சுக்குறணும்.. . அப்பா நல்லாருக்காராம்மா?”
“உம். நல்லாத்தான் இருக்காரு. கடைக்குப் போயிருக்காரு. அது கெடக்கட்டும். என் பேரன் எப்படி இருக்குறான்? அத்தச் சொல்லு மொதக்கா. பேச்சு வந்திருச்சா? அம்மா-அப்பால்லாம் சொல்றானாடி?”
“சொல்றாம்மா. அவன் விஷயமாப் பேசுறதுக்குத்தாம்மா உன்னயக் கூப்பிட்டேன்.”
“கொழந்தைக்கி மேலுக்குச் சொகமில்லாம ஏதாச்சும் பெரச்சினையா?”
“அதொண்ணுமில்லேம்மா. அவன் நல்லாத்தான் இருக்குறான். என்னோட லீவு முடிய இன்னும் ரெண்டே வாரம் தாம்மா இருக்கு. கொறஞ்ச பட்சம் நீ ஒரு ஆறு மாசம் போல இங்கிட்டு வந்து என்னோட இருந்து ரவியைப் பாத்துக்கிட்டியானா நான் ஆ•பீசுக்குப் போவேம்மா. தொடர்ச்சியா நெறைய நாளு லீவ்லயே இருந்தா வேலைக்கே ஆபத்தாயிறும்மா.”
“உங்கப்பாவை இங்கிட்டுத் தனியா விட்டுட்டு நான் மட்டும் வந்து அம்புட்டு நாளெல்லாம் இருக்க முடியாதேடி?”
மறு முனை சில நொடிகளுக்கு அமைதி காத்தது. ஒரே ஓர் ஆள் வந்தால் போதும் என்கிற செய்தி கமலத்துக்குப் புரிந்துபோயிற்று. மகளைச் சங்கடப்படுத்த விரும்பாத அவள், “நீ உங்க வீட்டுக்காரர் கிட்ட கேட்டுட்டுச் சொல்லு. உங்கப்பாவை இங்கிட்டுத் தனியால்லாம் விட்டுட்டு என்னால வர முடியாதுடி. நீ என்னய மட்டும் கூப்பிட்டேன்றதா நான் உங்கப்பா கிட்ட சொல்லல்லே. நீ சொன்ன விசயத்தையே நான் அவரு கிட்ட சொல்லல்லே. நீ உங்க வீட்டுக்காரர் கிட்ட கேட்டுட்டு எனக்கு வெவரஞ் சொல்லு. அதுக்கு அப்பால நான் அவரு கிட்ட கேக்குறேன்.”
“சரிம்மா. அப்பாவைத் தனியா விட்டுட்டு உன்னால வர முடியாதுன்னு நானே இவருகிட்ட சொல்லி யிருந்திருக்கணுமில்லே? எனக்குத் தோணவே இல்லே, பாரேன். சாரிம்மா.”
“இதுக்கு எதுக்குடி சாரியும் ஜாக்கெட்டும் சொல்லிக்கிட்டு இருக்குறே? தோணல்லே. கேக்கல்லே. அப்பா வரவேணாம்னு நீ நெனப்பியா என்ன? சரி. நீ சும்மா •போன் போட்டுப் பேசினதா உங்கப்பா கிட்ட சொல்லிக்கிறேன். நீ ரவைக்கிப்பேசு. ஒரு எட்டு மணிக்காப் பேசேன்.”
“சரிம்மா.”
. . . இரவு எட்டுமணிக்குத் தொலை பேசி கிணுகிணுத்தது. லட்சுமணசாமி ஒலிவாங்கியை எடுத்துப் பதில் சொன்னார்:
“நான் உங்க மருமகப் பிள்ள பேசுறேன், மாமா. நல்லாருக்கீங்களா? மாமி எப்படி இருக்குறாங்க?”
“எங்களுக்கென்ன மாப்ளே? ரவிப் பய எப்படி இருக்குறான்? அத்தச் சொல்லுங்க மொதக்கா. அம்மா-அப்பால்லாம் சொல்றானாமே? இந்தப் பக்கம் ஒரு நடை வந்து கொஞ்ச நாளு இருந்துட்டுப் போறது!”
“நானே அது விஷயமாப் பேசத்தான் இப்ப •போன் பண்றேன், மாமா. நாங்க வர முடியாது. நீங்க ரெண்டு பேரும் வந்து கொஞ்ச நாள் இங்க இருந்துட்டுப் போங்களேன்.”
“நாங்களா! இப்ப டில்லியில குளிர் தாங்க முடியாதாமே? என் •ப்ரண்ட் ஒருத்தன் சொன்னான். போன வருசம் மகன் வீட்டுக்குப் போய் இருந்துட்டு ஒரே மாசத்துல திரும்பிட்டான்.”
“நல்ல ஆரோக்கியத்தோட இருக்கிறவங்களை டில்லி குளிர் ஒண்ணும் பண்ணாது, மாமா. வாரப்ப, கம்பளிப் போர்வை, ஸ்வெட்டர், ம•ப்ளர் எல்லாம் கொண்டுட்டு வந்துடுங்க. . வந்து ஒரு ஆறு மாசமாச்சும் இருந்தீங்கன்னா எங்களுக்கு உதவியாவும் இருக்கும். தொடர்ச்சியா வெண்ணிலா லீவ்லயே இருக்குது. மேக்கொண்டு லீவ் போட்டா, வேலைக்கே ஆபத்தாயிறும். அதான். லீவ் முடிய இன்னும் பதினஞ்சு நாளுதான் இருக்கு.. ..”
“சரி, மாப்ளே. எதுக்கும் உங்க மாமி கிட்ட கலந்து பேசிட்டு •போன் போட்றேன்.”
“மாமி கிட்ட •போனைக் குடுங்க. .நானே பேசுறேன். அதான் மருவாதி.”
லட்சுமணசாமி, “சரி, மாப்ளே!” என்றவாறு ஒலிவாங்கியைக் கமலாவிடம் நீட்டினார். பொதுவான நலன் விசாரணைக்கு பிறகு ராஜன் விஷயத்துக்கு வந்தான், “அதுக்கென்ன, மாப்ளே! வந்தாப் போச்சு. அத்தவிட எங்க ரெண்டு பேத்துக்கும் வேற என்ன வேலையாம்?. . . என்னங்க! நான் சொல்றது சரிதானே?”
“அதான் சொல்லிட்டியே? பெறகு என்ன?” என்று அவர் சிரிக்க, மாப்பிள்ளையும் மறுமுனையில் சிரித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தான். ராஜன் பேசிய பின்னர், வெண்ணிலாவும் இருவருடனும் பேசி, டில்லி குளிர்பற்றி அஞ்ச வேண்டாமென்றும் தன் கணவன் சொன்னபடி கனத்த கம்பளியில் போர்வைகள், முழுக்கைச் சட்டைகள் ஆகியவற்றுடன் புறப்பட்டு வரும்படியும், கிளம்பும் நாளைத் தெரிவிக்கும்படியும் சொன்னாள்.
மேற்கொண்டு சற்று நேரம் பேசிய பிறகு தொலைபேசியின் இணைப்பை வெண்ணிலா துண்டித்தாள்.
மிகச் சில நொடிகளிலேயே தொலைபேசி மீண்டும் ஒலித்தது. விட்டுப்போன முக்கியமான எதைப் பற்றியோ சொல்லுவதற்காக வெண்ணிலாதான் மறுபடியும் கூப்பிடுகிறாள் என்று இருவருமே நினைத்தார்கள்.
“சொல்லும்மா, வெண்ணிலா.”
“அப்பா! நான் ஜெயகுமார் பேசறேம்ப்பா.”
“ஓ! ஜெயகுமார! எப்படிப்பா இருக்குறே? இப்பதான் நம்ம வெண்ணிலா டில்லியிலேர்ந்து பேசிச்சு. •போனை வெச்சு ஒரு நிமிசங்கூட ஆவலே. அதான் விட்டுப்போன எதையோ சொல்ல மறுபடியும் •போன் பண்ணுதோன்னு நெனச்சேம்ப்பா. எப்படிப்பா இருக்குறே? நீலாம்பரி சவுக்கியமா இருக்குதா?”
“ரெண்டு பேருமே சவுக்கியமா யிருக்கோம்ப்பா. வெண்ணிலாவும் மருமகப் பிள்ளையும் கொழந்தை ரவியும் நல்லாருக்காங்களாபா?”
“நல்லாருக்காங்களாம்ப்பா. ரவிப்பய இப்பதான் பேசத் தொடங்கி யிருக்கானாம். அது சரி. நீ எப்படா எங்களத் தாத்தா-பாட்டி யாக்கப்போறே?”
“அது பத்திச் சொல்றதுக்குத்தாம்ப்பா இப்ப •போன் பண்றேன்.”
“அடி சக்கைன்னானாம்! அப்படியா சங்கதி? நீலாம்பரி முழுவாம இருக்குதா? இது எத்தினி மாசம்?.”
“அட, •போனை ,ஏங்கிட்ட குடுங்க. . .”
“உங்கம்மா கிட்ட பேசுப்பா.. . .”
“என்னடா ஜெயகுமார்! நீலாம்பரி மாசமா யிருக்குதா?”
“ஆமாம்மா. அதுக்கு இது நாலாவது மாசம்மா,”
“ஏண்டா இம்புட்டு சாவகாசமாச் சொல்றே? பம்பாய்லேர்ந்து ஒரு கார்டு கூடவா போட நேரமில்லே உனக்கு? நீலாம்பரி பக்கத்துல இருந்தா அவ கிட்ட •போனைக் குடு.”
“அவ பக்கத்து •ப்ளாட்டுல இருக்குற ஒரு அம்மாவைப் பாக்குறதுக்குப் போயிருக்காம்மா. ஏதோ யோசனை கேக்கணுமாம்.”
“வாந்தி கீந்தி எடுத்து அவஸ்தைப் பட்றாளாடா?”
“ஆமாம்மா. அதான் அவங்க வீட்டுக்குப் போயிருக்கா.”
“அவங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டு வந்து வச்சுக்கிட்றதுதானேடா? கெராமத்துல சொம்மாத்தானே குந்திக்கிட்டு இருக்குது அந்தப் பொம்பளை?”
“•போன் போட்டுப் பேசினோம்மா. ஆனா எம்மச்சானுக்கு – அதாவது அவங்க மகனுக்கு – கொழந்தை பொறந்துருக்குதும்மா. பொறக்குறதுக்கு முந்தியே அவங்களை எம் மச்சான் சிங்கப்பூருக்கு உதவிக்காக இட்டுட்டுப் போயிட்டான்மா. இல்லாட்டி, நீலாம்பரி அவங்களைதான் கூப்பிடிருப்பா. உங்களைத் தொந்தரவு பண்ண வேணாம்னுதான் பாத்தோம்.”
“என்னடா சொல்றே.ராஜா?”
“நீலாம்பரிக்கு இது தலைப் பிரசவம் இல்லியாம்மா? ரொம்பவே பயப்படுது. நீதான் இங்க வந்து கொஞ்ச நாள் எங்க கூட தங்கணும். அப்பாவையும் கூட்டிட்டு வந்துடும்மா.”
“அடேய், ராஜா! உன்னோட தங்கச்சி முந்திக்கிட்டாடா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அவ பேசினா. கொழந்தையைப் பாத்துக்கிட்றதுக்காக டில்லிக்கு வந்து கொஞ்ச நாளு இருக்கச் சொன்னா. நாங்களும் சரின்னுட்டோம். நீ வேற ஏதாச்சும் ஏற்பாடு பண்ணிக்கடா. . . எனக்கு மனசுக்கு ரொம்பவே கஸ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் இப்ப நான் என்ன செய்யிறது?”
“நீ ஒண்ணு செய்யலாமேம்மா? அப்பா டில்லிக்குப் போய் இருக்கட்டும். அவரு கொழந்தையைப் பாத்துக்கிடட்டும். நீ இங்க வந்துடு.”
“ஒரு நிமிசம், ராஜா. . .என்னங்க! நீங்க டில்லிக்குப் போய் இருந்து ரவி¨ப் பாத்துக்கிடுவீங்களாம். நான் பம்பாய்க்குப் போய் நம்ம மருமகளுக்கு ஒத்தாசையா யிருக்குறதாம். நீங்க என்ன சொல்றீங்க?”
லட்சுமணசாமி தம் முகவாயில் தடவிக்கொண்டார். பிறகு, மெதுவான குரலில், “அது சரிவருமா, கமலம்? நான் மட்டும் ஒத்தை ஆளா எப்பிடி ரவிப்பயலைச் சமாளிக்க முடியும்? சின்னப் பசங்க துருதுருன்னு இருக்குமே! நம்ம கொழந்தைங்களை வளக்குறதுக்கே நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேந்து செஞ்சும் முடியலியே! அதெப்படி நான் மட்டும் தனியா. . .”
“. . . ராஜா. உங்கப்பா தனியா எப்பிடிச் சமாளிக்கிறதுன்னு பயப்பட்றாருடா. டில்லி ரொம்பவும் குளிரு உள்ள ஊரு வேறயா? உங்கப்பா அங்கிட்டுப் போயிக் காயலாப் படுத்தாருன்னா அவங்களுக்குக் கூடுதல் தொல்லையாயிடுமில்ல? அதான் யோசிக்கிறாரு. நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காதேடாப்பா. எதுக்கும் நாங்க கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்த பெறகு உனக்கு •போன் போட்டுப் பேசுறோம். என்ன, சரியா?”
“கமலம்! •போனை ஏங்கிட்ட குடு. . . ராஜா! அம்மா சொன்னதைக் கேட்டியில்ல? தப்பா எடுத்துக்கிடாதேப்பா. .”
“சரிப்பா. ஆனா நான் அம்மாவைத்தான் மலை போல நம்பி யிருக்குறேன்.”
“சரிடா. யோசிக்க வேண்டியது இருக்கிறதால, நாளைக்கு வெண்ணிலாவோடவும் பேசிட்டு உன்னோடவும் பேசுறோம். என்ன, சரியா?”
“சரிப்பா. அம்மா கிட்ட குடுங்க…. . . அம்மா! நீ எப்படியாச்சும் வரணும்மா. நீலாம்பரிக்கு ஒண்ணுமே தெரியாது.”
“சரிடா. நீ கவலைப்படாதே. யோசிக்க வேண்டியது நெறைய இருக்கு. கடவுள் நிச்சியமா ஒரு வழி காட்டுவாரு. பாப்போம். நீ எதுக்கும் கவலைப் படாதே. நீலாம்பரியை நாங்க ரொம்பக் கேட்டோம்னு அவ வந்ததும் சொல்லு. •போன் போட்டுப் பேசச்சொல்லு.”
“சரிம்மா.”
ராஜா தொலைபேசி தொடர்பைத் துண்டித்ததும் அந்தக் கூடத்தில் பேரமைதி நிலவியது. கமலமும் லட்சுமணசாமியும் சிந்தனை தேங்கிய விழிகளால் ஒருவரை யொருவர் ஏறிட்டார்கள். இருவரிட மிருந்தும் பெருமூச்சுகள் சீறிப்பாய்ந்தன.
“இந்தப் பெரச்சனையை எப்படிங்க தீர்க்கப் போறோம்? நீங்க டில்லியில போய்த் தனியால்லாம் இருக்கவே கூடாதுங்க. உங்களை அந்தக் குளிர்ல தவிக்க விட்டுட்டு என்னால வேற எங்கிட்டும் நிம்மதியா இருக்க முடியாதுங்க. ஒண்ணு கவனிச்சீங்களா?”
“என்ன?”
“புள்ளையையும் பொண்ணையும் வளத்து ஆளாக்கி, அவங்களுக்குக் கலியாணம் கட்டி வெச்சு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கிற வரைக்கும் கஸ்டப்பட்டாச்சு. இப்பதான் கொஞ்ச நாளா உங்களுக்கு நானும் எனக்கு நீங்களுமா கொஞ்சம் ஓய்வா இருந்துக்கிட்டு இருக்குறோம். பேரக் கொழந்தையைப் பாத்துக்கிறதெல்லாம் சந்தோசமான வெசயந்தான். நான் மறுக்கலே. ஆனாலும் உடம்புல தெம்பு இருக்க வேணாமாங்க? எனக்கு அம்பத்தொம்பது, உங்களுக்கு அறுபத்திரண்டு. ஓடியாடுற கொழந்தைக்குப் பின்னால ஓடுற வயசா நமக்கு? உள்ளூர்ல ஒண்ணா இருந்தாலும் பரவால்லே. பெரிய வேலைக்கி ஆசைப்பட்டுக்கிட்டு உள்ளூர் வேலையை உதறிப்போட்டு ராஜா பம்பாய்க்குப் போனான். நம்ம பொண்ணு மட்டும் என்னவாம்? அதுவும் தான் டில்லியில நல்ல வேலைன்னு சொல்லி, மருமகப் புள்ளையையும் மனுப்போட வச்சு டில்லிக்கு இழுத்துக்கிட்டுப் போயிடிச்சு. இப்ப எல்லாருமாச் சேந்துக்கிட்டு வயசாயிப் போன நம்மள அல்லாட வெக்கிறாங்க. நீலாம்பரியோட அம்மா தன் மருமகளுக்குத் தலைப் பிரசவம்கிறதால் சிங்கப்பூருக்குப் போயிடிச்சு. அதுவும்தான் பாவம்! அதுக்கும் அறுபது வயசு ஆயிடிச்சு. நாமெல்லாம் நம்ம கொழந்தைங்களை எப்பிடி அரும்பாடு பட்டு வளத்து ஆளாக்கினோம்! உஸ்னு உடம்பைச் சாச்சிருக்கமா? இந்தத் தலைமுறைப் பொண்ணு புள்ளைங்களைப் பாருங்க! பெத்துப் போட்டதுக்கு அப்பால எந்தப் பொறுப்புமே இல்லாம மறுபடியும் வயசான அம்மா அப்பாக்களையில்ல அலைக்கழிக்கிறாங்க! ‘ஏதுடா, நம்ம அம்மா அப்பா நம்மளை வளத்தது மாதிரி நம்ம கொழந்தகளை நாம வளக்க வேண்டாமா? நம்ம கொழந்தைங்களை வளக்குற கடமையையும் பொறுப்பையும் நம்மளைப் பெத்தவங்க கிட்டவே மறுபடியும் ஒப்படைக்கிறது நியாயமா’ன்ற யோசனையே அதுங்களுக்கு இல்லே, பாத்தீங்களா? இவங்களுக்கெல்லாம் எதுக்குக் கலியாணம்?”
மனைவியின் அங்கலாய்ப்பில் இருந்த கசப்புப் புரிந்த போதிலும், லட்சுமணசாமியால் பதில் சொல்ல முடியவில்லை. விட்டத்தை வெறித்தபடி உட்கார்ந்தார்.
“என்னங்க? ஒண்ணுமே சொல்லாம உக்காந்ந்துக்கிட்டு இருக்கீங்க?”
“என்னத்தச் சொல்லச் சொல்றே? என்ன யோசிச்சாலும், சொல்றதுக்கு எதுவுமே இல்லே. நீ பம்பாய்க்குப் போ. நான் டில்லிக்குப் போறேன். இப்போதைக்கி இதுதான் வழி. போனதுக்கு அப்பால என்ன நடக்குதோ அதுக்கு ஏத்தபடி நம்ம திட்டத்தை மாத்தலாம்!” என்று விட்டத்தில் பதிந்திருந்த தமது மேற்பார்வையை அகற்றாமலே அவர் மனைவிக்குப் பதிலளித்தார்.
. . . . . . . .

.. . . . . .

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா