மறுபக்கம்

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

ஜெயந்தி சங்கர்


ஒரு பயனீட்டாளர் தன் வர்த்தகரோடு பேசும் தொனியில், பெரிய ஒரு ஒட்டுதலின்றி தான் சந்திரா ரகுவிடம் பேசினாள் ஒவ்வொரு முறையும். ஆனாலும், அவள் அவருடன் பேசும்போதெல்லாம் என்னுள் ஏதோ ஒரு நிலையற்ற தன்மையும், பதட்டமும் டக்கென்று வந்து உட்கார்ந்து கொண்டன. பட்டுப்போன உறவு துளிர்த்துவிடுமோ என்று என் மனம் அலாதியாய் பயந்தது. சந்திரா அவரிடமிருந்து பிரியும் முன்பும், பிரியும்போதும் உடனிருந்து பார்த்த என் மூளை அவள் தன் மகளுக்காகத் தான் பேசுகிறாள் என்று நம்பியது. மனம் மட்டும் ரகுவில் மேல் அவளுக்கு நட்பு ஏற்பட்டுவிட்டாலோ என்று மீண்டும் மீண்டும் பயந்தது. ரகுவுக்கும் இப்போது குடும்பம் உண்டு, இனிமேல் சந்திராவை அவர் நினைப்பதோ, இல்லை சந்திரா அவரை நினைப்பதோ நடக்காது என்று மூளை கணக்கிட்டுக் கொண்டாலும் பாழும் மனம் பயந்து தவித்தது. மனதுக்கும் மூளைக்கும் நடந்த சச்சரவில் நான் ஒவ்வொருமுறையும் மிகவும் களைத்தேன். வேலையில் ஈடுபடவே முடியவில்லை.

சந்திராவுக்கு நான் புகைபிடிப்பது மட்டும் தான் என்னில் பிடிக்காத வி ?யம். புகைப்பதை நிறுத்தினால், அவளுக்கு அந்த அதிருப்தியும் இருக்காது. ஆகவே, விட்டு விடலாம். தவிர, சம்பளத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டு ‘ஆண்டிக் ? ‘ எனப்படும் பழம் கலைப்பொருள்களை வாங்கிக் குவிக்கும் பழக்கத்தையும் நிறுத்திவிட்டால், மிகவும் மகிழ்வாள் என்றெல்லாம் பலவாறாய் ஏதேதோ யோசித்தேன். இனிமேல், வீட்டுவேலைகளிலும் சந்திராவுக்கு உதவவேண்டும். வேறு என்னென்ன செய்தால் அவளுக்குப் பிடிக்கும் என்று முதல் முறையாகத் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்ட என் மனதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். மறுகணமே ஏன் அப்படியெல்லாம் தோன்றுகிறது என்றும் ஆராயத் தலைப்பட்டேன்.

அவள் இல்லாத ஒரு வாழ்க்கை ! அது எப்படியிருக்கும் என்று யோசிக்கும்போது எழுந்த கவலைகளோ ? இலக்கின்றித் திரிந்த பழைய வாழ்க்கை தான் ஞாபகம் வந்தது. சந்திரா என் வாழ்க்கையில் வந்த பிறகுதான் நான் அவளுடன் சேர்ந்து பத்தானேன். அவள் இல்லாவிட்டால், ஒன்றில்லாமல் மீண்டும் பழையபடி பூஜ்யமாகிவிடுவேன் என்று நினைத்துக்கொண்டேன். தனியே சமாளிக்கக்கூடிய அனைத்துத் திறமைகளும் சந்திராவுக்கு உண்டு. அவளின் வாழ்க்கையில் பிரிவு, மணவிலக்கு, நீதிமன்றம் என்று அடித்த புயலின் போது அவள் பிடித்துக்கொண்டு நின்ற ஒரு தூண் நான் அவளைப் பொருத்தவரை. அந்த நன்றிக்கடனை அடைப்பதாய் நினைத்தே நான் கேட்டதும் என்னை மணந்திருந்தாள் என்பதை மணமான ஒரே வருடத்திற்குள் புரிந்துகொண்டேன். நான் இல்லாதிருந்தாலும் அவள் செவ்வனே சமாளித்திருப்பாள் என்பது மட்டும் அவள் உணராதது. யானைக்குத் தன் பலம் தெரியாதே !

ஒரு வருடம் முன்புதான் ரம்யாவின் மேற்படிப்புச்செலவையும் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ள ஆசைப்பட்டு சந்திராவின் ஆபீஸ்ுக்கு ‘தூது ‘ அனுப்பியிருந்தார் ரகு. பதிநான்கு வருடங்களாக இல்லாத பாசமும் கரிசனமும் திடாரென்று பொத்துக் கொண்டதோ என்று ரகுவை விமரிசித்தாள் சந்திரா. பிடிகொடுக்கவேயில்லை பலநாட்களுக்கு. ரம்யாவிடம் ரகு பேசிவிடுவாரோ என்று பயந்து மிகக் கவனமாக மகள் பெற்ற தகப்பனைச் சந்திக்காமல் பார்த்துக்கொண்டாள். ரகு விடாமல் முயன்று கொண்டேயிருந்தார். ‘எம்பொண்ணப் படிக்கவைக்க எனக்குத்தெரியாதோ ? ‘, என்றெல்லாம் முதலில் பயங்கரமாகக் கோபத்தில் பொறிந்து தள்ளிய சந்திரா கொஞ்சநாட்களிலேயே மாறிப்போனாள்.

சரியான வாய்ப்பு வீட்டுக்குக்கதவைத் தட்டிக்கொண்டு நின்றிருந்தது. ரகு ஏழு வருடமாக சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி நல்லநிலையில் இருந்தார். அங்கேயே உள்ளூர் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு ஐந்து வயதில் ஒரு மகனும் இருந்தான். அவர் ஏதோ உபசாரத்துக்குச் சொன்ன வார்த்தைகள் என்றிருந்த எனக்கு, அவர் சந்திராவின் ஆபீஸுக்கு நேரில் போய் பேசிவிட்டு, அதன் பிறகு வீட்டிற்கும் போன் செய்து பேசியபோது அவருடைய நோக்கத்தில் இருந்த நேர்மை முதன்முதலில் எனக்குப் புரிந்தது. முதல் முதலாக அசெளகரியமாக நான் உணரத்தொடங்கியதும் அப்போதுதான். ஏனென்று அப்போது விளங்கவில்லை. ஏதோ இனம் புரியாத மனக்கலக்கம்.

ரம்யாவுக்குப் பன்னிரண்டு வயதிருக்கும்போது ஒரு கோடை விடுமுறையின் போது மாலையில் அவளிடம் என்னைப்பற்றி சொல்லலாமென்று அவளைக்கூட்டிக்கொண்டு எலியட்ஸ் பீச்சுக்குப் போயிருந்தேன். அவளுடைய நெருங்கிய தோழியைப் பற்றி கேட்க ஆரம்பித்து மெதுவாக, ‘என்னைப் பத்தி உனக்குச் சொல்லத்தான் இங்க கூட்டிகிட்டு வந்தேன். நா,. ‘, என்று ஆரம்பித்ததுமே, ‘தெரியும் ‘, என்று சொல்லிக் கையைப் பெரிய மனுஷியைப்போலக் காட்டி என்னை மேலே பேசவிடாது தடுத்துவிட்டாள். சில கணங்கள் என் முகத்தைப்பார்த்துவிட்டுப் பார்வையை தூரத்தே கடலின் நடுவே நிறுத்திக்கொண்டாள். யோசித்தாள் போல.

என்ன தெரிந்தது, எப்படித்தெரிந்தது, யார் சொன்னார்கள் என்றெல்லாம் கேட்டு அவளுக்கு என்பால் இருந்த அன்பின் ஆழத்தையும் அழுத்தத்தையும் கொச்சைப்படுத்தப் பிடிக்காமல் பேசாதிருந்தேன். எல்லாம் தெரிந்திருந்தும் என்னிடமிருந்து விலகிவிடாமல் இருந்திருக்கிறாள் என்றெண்ணும் போது பெருமிதத்தில் என் தொண்டை அடைத்தது.

உட்கார்ந்திருந்த அதே நிலையில், ஏதோ தூக்கத்தில் பேசுவதைப்போல, ஆனால் மிகத் தெளிவாக, ‘ ஆனா,..என்னால வேற யாரையும் என்னோட அப்பாவா நெனக்கைவே முடியாதுப்பா ‘, என்றாள். டக்கென்று பின்புறம் ஒட்டியிருந்த மணலைத் தட்டிக் கொண்டே எழுந்துகொண்டாள். பீடிகையின் ஆரம்பத்திலேயே புரிந்து கொண்டுவிட்டாளே என்று வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

என் இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்த அவளைத் தொடர்ந்து நானும் நடக்க ஆரம்பித்தேன் பேசாமல். பின்பக்கம் திரும்பி, ‘பாட்டி எல்லாத்தையும் சொல்லிட்டாங்க நான் சிக்ஸ்த் படிக்கும்போதே. எனக்குத் தெரியும்னு அம்மாவுக்குத் தெரியாதுன்னு நெனக்கறேன் ‘, என்றாள். வீட்டுக்கு வந்து சந்திராவிடம் நான் சொன்னபோது, இரண்டு வருடமாக எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு சாமர்த்தியமாகவும் இயல்பாகவும் நடந்துகொண்டிருந்த தன் மகளை நினைத்து சந்திரா வியந்தாள்.

நான்கு வயதிலேயே ரம்யா தன் பிஞ்சு வலக்கை விரல்களை நேராக வைத்துக்கொண்டு வாயில் ஓசை வேறு செய்துகொள்வாள். வானை நோக்கித் தன் கற்பனை விமானத்தைப் பறக்கவிடுவாள். அடிக்கடி அவள் விளையாடிய விளையாட்டே அதுதான்.

‘ஏரோப்ளேன்ல ஏறி எங்க போகப்போற ரம்யாகுட்டி ? ‘, என்று கேட்டால் ‘அமெரிக்கா ‘ என்றோ ‘லண்டன் ‘ என்றோ தனக்குத் தோன்றிய அல்லது தெரிந்த நாட்டுப்பெயரைச் சொல்வாள். தீவிரத்திலும் ஆர்வத்திலும் அவளுடைய விழிகள் விரிந்து பளபளக்கும்.

எப்போது அவ்விளையாட்டை நிறுத்தினாள் என்று நினைவில்லை. அவளின் அந்த விளையாட்டு அவளுடைய உள்மனதின் கனவாக வளர்ந்திருந்ததை நாங்கள் அறியும்போது அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். ஒருநாள் நான் அவளிடம் பேச உட்கார்ந்துகொண்டு மேற்படிப்பைப்பற்றி கேட்டபோதுதான் அவள் வெளிநாடு சென்று பொறியியல் படிக்க ஆசைப்படுவதையும், அந்த ஆசையை ஒரு கனவாகப் பொத்திப்பொத்தி வளர்த்திருந்ததையும் அறிந்து கொண்டேன். அன்றே சந்திராவிடம் சொன்னேன்.

அவள் ஆசைப்பட்டபடியே படிக்கக்கூடிய அரிய வாய்ப்பு கிடைத்ததில், அவள் மகிழ்ச்சியில் பங்குகொள்வதில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், எப்படி ரம்யாவைப் பிரிந்து இருக்கப் போகிறேனோ என்று தான் குழம்பிக்கொண்டேயிருந்தேன். எனக்கே எனக்கு என்று ஒரு குழந்தையில்லையே என்று என்றுமே நான் நினைத்ததில்லை. ஒன்றை பெற்றுக் கொண்டிருக்கலாமோ என்று அப்போதுதான் முதல் முறையாகத் தோன்றியது.

சிங்கப்பூர் போன பிறகும் ரகு அடிக்கடி போன் செய்து சந்திராவிடம் பேசினார். ரம்யாவிடமும் பேச முயன்றார். அதையெல்லாம் கவனித்து வந்த நான் நானாக இல்லை. மனதில் ஒரே குழப்பம். சந்திராவிடமே பலமுறை அர்த்தமில்லாமல் எரிந்துவிழுந்தேன்.

சில மாதங்களுக்கு முன்பு, இரவில் திடாரென்று ஏதோ கனவு கண்டு, வியர்த்து விழித்துக்கொண்டவன் சந்திராவையும் உலுக்கி எழுப்பினேன். ‘சந்திரா, நான் தன்னந்தனியா இருக்கறமாதிரி கனவு கண்டேன். நீ என்ன விட்டுட்டுப் போயிடுவியா ? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு சந்திரா ‘, என்ற என்னைப்பார்த்து குபீரென்று சிரித்துவிட்டாள். பிறகு, சில நிமிடங்கள் என் முகத்தையே பார்த்தாள். ‘உன்னவிட்டுட்டு நான் போறதாவது ? முடியுமா ? இன்னும் பத்து ஜன்மம் எடுத்தும் தீர்க்கமுடியாத கடனில்ல பட்டிருக்கேன் உன்கிட்ட ‘, என்று அவளின் கண்கள் நெகிழ்ச்சியான தருணங்களில் பேசும் வார்த்தைகளைப் பேசின. ஆனால், முதுகில் ஓங்கித் தட்டிக்கொடுத்து, ‘ பயமா ?ம்,..ம் படு நல்லா பயப்படு. ம்,. அந்த பயம் இருக்கறதும் நல்லதுதான் ‘, என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போர்த்திக்கொண்டு படுத்துவிட்டாள். சீக்கிரமே மிக இயல்பாக தூக்கத்தில் அவள் அமிழ்வதைப்பார்த்துக் கொண்டே படுத்திருந்தேன். கலாய்க்கவும் மிரட்டவும் சரியான ஒரு பிடி கிடைத்துவிட்டதே அவளுக்கு என்று நினைத்தபோது சிரிப்புத்தான் வந்தது.

அடுத்தநாள் காலையில், ‘ப்ளஸ் டூ ரிஸல்டும் வரப்போகுது. ஏன் சந்திரா ரம்யாவ அவங்கப்பாகிட்ட படிக்க அனுப்பறதா தான் இருக்கியா ? ‘, என்று நான் கேட்டதுமே ஒன்றும் சொல்லாமல் காபியை ஆற்றிக்கொண்டிருந்தாள். கொஞ்சநேரத்தில், ‘ஒரு பக்கம், அவளப்பிரிஞ்சு இருக்கணுமேன்னு இருக்கு. இன்னொரு பக்கம் அவளோட எதிர்காலத்துக்கு நல்லது, அவ கனவு நனவாகும்னு தோணும்து. ஒண்ணும் புரியல்ல ‘, என்றாள். சொல்லி முடிப்பதற்குள் தொண்டை அடைத்துவிட்டது. ‘சந்திரா, ரம்யா புத்திசாலி. அவளே யோசிக்கட்டும். அதுக்கு முன்னாடி நமக்குத் தோணறத அவளுக்குள்ள திணிக்கவேண்டாம். அவளப்பிரிஞ்சு நீ இருந்துடுவியோ என்னவோ, ஆனா அத நெனச்சாலே எம்மனசே சூன்யமாயிடுது . வேலையே ஓடமாட்டேங்குது ‘, என்ற என்னைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டே தலையாட்டி விட்டுப்போனாள்.

போன மாதம் பழைய பாஸ்போர்ட்டைக் கொண்டுபோய் புதுப்பாஸ்போர்ட் விண்ணப்பிக்கவும் அதற்கு நிழற்படங்கள் எடுக்கவும், வேண்டிய பொருள்கள் வாங்கவும் என்று இரண்டு நாட்கள் லீவெடுத்துக்கொண்டு அவளை வண்டியில் கூட்டிக்கொண்டு அலைந்தேன்.

ரம்யாவின் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்தன. பள்ளியிலேயே இரண்டாமிடம். பொறியியல் கல்லூரி பொதுநுழைவுத் தேர்வில் இன்னும் நல்லபடியாகத் தேர்ச்சிபெற்றிருந்தாள். அதைப்பார்த்ததும் ஏன் இந்தியாவிலேயே படிக்கக்கூடாது என்று உதடு வரை வந்த சிந்தனையை உள்ளுக்குள்ளேயே போட்டு அழுத்திவிட்டேன். ரம்யாவின் கனவான வெளிநாட்டுப் படிப்பை நனவாக்க எனக்கு மட்டும் வெளிநாட்டில் ஒரு வேலைகிடைத்தால், அவளையும் பிரியவேண்டாம் என்றெல்லாம் ஏதேதோ நடக்கமுடியாததையெல்லாம் யோசித்தேன்.

இத்தனைக்குமிடையில் ரம்யாவின் முகம் சதா யோசனையில் இருந்தாற்போலிருந்தது. வழக்கமாக அவள் முகத்தில் இருக்கும் கலகலப்பைக்காணவில்லை. அம்மாவைப் பிரியப்போகும் வருத்தமோ. திரும்பத்திரும்ப சந்திரா சொல்கிற மாதிரி ரம்யாவோட எதிர்காலம்தான் முக்கியம் என்று தோன்றினாலும் ரம்யாவைப்பிரியவேண்டும் என்று நினைத்தாலே தலை முதல் கால்வரை என்னில் ஒரு தொய்வை உணர முடிந்தது.

ரம்யா சிங்கப்பூருக்குப் போய்ப் படிக்க அவளுக்கு ஸ்டூடண்ட்ஸ் பாஸுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. அதற்குச் சில தகவல்கள் மற்றும் விவரங்கள் தேவையாயிருந்ததால், சந்திரா சிங்கப்பூருக்குத் தொலைபேசினாள். அவள் ரகுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, ரம்யா மெதுவாக இடத்தை விட்டு நழுவினாள்.

அடுத்த இரண்டு வாரத்தில் விசாவும் வந்துவிட்டிருந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் கிளம்பவேண்டும். ஒரு நாள் ரம்யா சந்திராவிடம் வந்து, ‘ அம்மா எனக்கு அங்க சரியா வருமா ? அங்கயிருக்கற ஆண்டியோட எனக்கு ஒத்துப்போகாட்டி என்ன செய்ய ? கொஞ்சம் நெர்வஸாத்தான் இருக்கு எனக்கு ‘, என்று பேச்சை மெதுவாக ஆரம்பித்தாள். சந்திரா என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி மகளைநோக்கி, ‘ ரம்யா அதெல்லாம் சரியாயிடும்மா. ஹாஸ்டல்ல இருக்கறதில்லையா அதமாதிரி நெனச்சுக்கவேண்டியதுதான். நீ நல்லாப் படிக்கணும். மிச்சத்தையெல்லாம் லைட்டா எடுத்துக்கோ. உன் கனவு நனவாகப்போகுது ‘, என்று உற்சாகப்படுத்தினாள். நானும் என் பங்கிற்கு, ‘ரம்யா, தைரியமா இரு. எவ்ரி திங்க் வில் பி ஃபைன் ‘, என்று சொன்னேன். தலையை ஆட்டிவிட்டு தன் அறையை நோக்கிப் போய்விட்டாள்.

அடுத்த நாளே ரகு மீண்டும் போன் செய்தபோது, சந்திரா தான் பேசினாள். ஏன் ரம்யா போனில் பேசுவதில்லை என்றும் ஒரு மின்மடல் கூட அனுப்புவதில்லை என்று ஏதேதோ கேட்டுக்கொண்டிருந்தார். சந்திரா ரம்யாவிற்கு நேரமில்லை என்று சொல்லிச் சமாளித்தாள். தன் கையில் போனைத் திணத்துவிடுவாளோ என்று பயந்துகொண்டே ரம்யா ‘வேண்டாம் ‘, என்று கையை ஆட்டி செய்கையால் சொல்லிவிட்டு அறைக்குள் குடுகுடுவென்று ஓடிப்போய்விட்டாள்.

போனை வைத்ததுமே முதல் வேலையாக ரம்யாவின் அறைக்குள் போனாள் சந்திரா. ‘ஏன் ரம்யா அவாய்ட் பண்ற ? ‘, என்று ஆரம்பித்ததுமே, ‘ அம்மா, திடார்னு அவர அப்பான்னு கூப்டணும்னும், ஒடனே ஒட்டிக்கணும்னும் எதிர்பார்த்தா எப்டிம்மா ? ‘, என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்து, ‘ ரெண்டு வயசுல பார்த்த அவர எனக்கு நெனப்பேயில்ல. இட் வில் டேக் சம் டைம் மா. அன்னிக்கிப் பேசும்போது அவருபாட்டுக்கு படபடன்னு ஏதேதோ பேசறாரு. ஐ நீட் டைம் ‘, என்றாள் . உடனே சந்திராவும், ‘சரி, . யூ ரிலாக்ஸ் ரம்யா, நானே ரகுகிட்ட சொல்றேன். புரிஞ்சுப்பாரு. ஹி வில் பிகம் மோர் பேஷண்ட் நெள. ‘ ஒரு முறைகூட ரம்யாவின் வாயில் ‘அப்பா ‘ என்ற சொல் வரவில்லை என்பதை சந்திரா கவனித்தாளோ தெரியவில்லை. நான் அலாதியான திருப்தியுடன் கவனித்தேன்.

அன்றிரவு தனிமையில் நான் சந்திராவிடம் பேசும்போது, ‘ சந்திரா, ரம்யா போய்த்தான் ஆகணுமா ? அவ ரொம்ப ‘அன்னீஸி ‘யா ஃபீல் பண்றாளேம்மா ‘, என்ற போது, ‘ நீ வேற ஆரம்பிக்காத குமார். நானே ரொம்ப கொழம்பியிருக்கேன். பேசாம தூங்கு ‘, என்று சொல்லிவிட்டு தூக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்தாள். மகளின் விருப்பத்துக்காக அவளை அனுப்ப நினைத்தாள். ஆனால், ரம்யா புது மனிதர்களோடு புதிய இடத்தில் எப்படியிருப்பாளோ என்ற கவலை அவளுக்குள் இருக்கத்தான் செய்தது. மகளுக்குக் கிடைத்த வாய்ப்பை ‘பாசம் ‘ என்ற காரணம் காட்டிக் கெடுத்து விடக்கூடாது என்பதில்தான் மிகக் கவனமாக இருந்தாள்.

ஒரு வாரத்திற்கு மேலானது ரகுவின் போன் வந்து. ஏனென்று எல்லோருக்குமே உள்ளூர தோன்றிக்கொண்டிருந்தது. வாங்கி அனுப்பியிருக்க வேண்டிய விமானப் பயணச் சீட்டும் வந்தபாடில்லை.

கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் போன் வந்தது. ‘சந்திரா, ஒரு சின்ன சிக்கல். என் ‘வொய்ஃப் ‘ ரொம்ப ‘அன்னீஸி ‘யா ‘ஃபீல் ‘ பண்றா போலயிருக்கு. ரம்யாவ படிக்க வைக்க இங்க கூப்டுகிட்டா, நா அவளையும் அவளோட மகனையும் விட்டுப் போய்டுவேனோன்னு உள்ளூர கொஞ்சநாளா பயப்பட்டுகிட்டே தான் இருந்திருக்கா. ரெஸ்ட்லெஸா இருந்தா. போன வாரம் கொஞ்சம் அதிக டிப்ரெஸ்டாயிட்டா. டாக்டர் கிட்ட கூட்டிப்போனேன். இப்ப மருந்து சாப்பிடறா. அதான், யோசிச்சேன். சந்திரா, நீ ரம்யாவ அங்கேயே சேர்த்தா, நா வேணா செலவெல்லாம் ஏத்துகிட்டு உதவலாமான்னு பாக்கறேன், ‘ என்று சொன்னதுமே ரம்யா ஸ்பீக்கர் போனில் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு நாட்கணக்கில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தவள் சட்டென்று தளர்ந்தது போலத்தெரிந்தது.

‘அப்பா, கவலையே படாதீங்க. அண்ணா யூனிவெர்ஸிிடில கெடைக்கும். நா இங்கயே படிக்கறேம்மா. இதுவும் நல்லதுக்கே ‘, என்று ரம்யா மகிவுடன் சொன்னதும் சந்திராவுக்கு ஏற்பட்ட நிம்மதி முகத்தில் தெரிந்தது. பழையபடி நான் நானானேன்.

(முற்றும்)

நன்றி : ‘தென்றல் ‘ அமெரிக்க இதழ் அக்டோபர் 2005

jeyanthisankar@gmail.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்

மறுபக்கம்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

ஏலங்குழலி


‘குமரப்பா ‘ அரங்கத்தின் வாயிலில் இராமநாதன் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது, இரவு மணி சரியாக ஒன்பது.

வாசலில் கும்பல் நிரம்பி வழிந்தது. பட்டுப்புடவை சரசரக்க, மழைக்காலத் தூறலையும் பொருட்படுத்தாமல், ஹைஹீல்ஸ் செருப்பணிந்து, ஒயிலாக குடை பிடித்து நிற்கும் பெண்கள். துணையாக வந்த கணவன்மார்கள், குடும்பத்தினர். மொபெட்டும், ஸான்ட்ரோவும் ‘சர்சர் ‘ ரென்று நீரைப் பாய்ச்சியவாறு பறந்தன. சிற்சில சைக்கிள்கள் கிணுகிணுத்துக்கொண்டு இருளில் மறைந்து வெளியேறின.

இராமநாதன் ஆட்டோவை காக்கச் சொல்லிவிட்டு, கும்பலில் அனுபமாவைத் தேடினான். காணவில்லை. வாயிலில் இருக்கமாட்டாள் என்பது தெரியும். இருந்தாலும்…அரங்கத்திற்குள் நுழைந்தான்.

உள்ளே, ஏசியின் மிச்சக் குளிர் ‘ஜிலீ ‘ரென்று தாக்கியது. ‘இந்தக் மழைக்காலத்தில் என்னத்திற்கு ஏசி ? ‘ என்ற நினைப்பை ஓரமாகத் தள்ளிவிட்டு, மேடையைப் பார்த்தான். பிங்க் நிற பட்டுப்புடவையில், அனுபமா ஜொலித்துக்கொண்டிருந்தாள். சாயங்காலம் நடந்த விழாவை நிர்வகிக்கும் பொறுப்பும், இறுதியாகக் கொடுத்த உரையின் அலுப்பும் தெரியாமல், முகத்தில் பளீர் புன்னகையுடன் மேடையில் இருந்த கூட்டத்திடம் பேசிக்கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து அவளது அழகை ஒரு கணம் ரசித்துவிட்டு, இராமநாதன் குஷன் நாற்காலிகளைத் தாண்டிக் கொண்டு அவளை நெருங்கினான்.

“அனு ?”

அவள் புன்னகை மாறாமல் திரும்பினாள். “ ஹாய், ராம்! இதோ வந்திட்டேன்.”

பதினைந்து நிமிடங்கள் கழித்து வெளிவந்த இருவரும், மழைத்தூறலிலிருந்து தப்பிக்க, அரை ஓட்டத்தில் ஆட்டோவில் ஏறினார்கள்.

“நிகழ்ச்சி எப்படி இருந்துச்சுன்னு கேக்கவேயில்லியே, ராம் ?”

“இப்பத்தான் சொல்லேன்.”

“Superb. வத்சலா தணிகாசலத்தோட லொள்ளுதான் தாங்கமுடியலை. மனசுல என்ன நெனைச்சுட்டிருக்கான்னு புரியலை. சரிக்கட்டிட்டோம்னு வெச்சுக்குங்க…வழக்கம் போல என்னைப் பேசச் சொன்னாங்க…”

“என்னன்னு ? ‘இந்தியாவில் பெண்கள் சம உரிமை ‘யா ? இல்லை, ‘பெண்கள் கல்வி” யா ?”

“கிண்டலாப் போச்சில்ல உங்களுக்கு ?” அவளும் புன்னகைத்தாள். “நான் பாட்டுக்கு நிகழ்ச்சியமைப்போட சரின்னு நின்னுகிட்டிருந்தேன். கடைசீல ‘பேசியே ஆகணும் ‘னு – நம்ம ரமணியும் கலாவும் இருக்காங்க இல்ல ? இழுத்துக்கிட்டுப் போயிட்டாங்க-“

“சும்மாவா ? உன் ரெப்புட்டேஷன் அப்படி. நீ கலந்துக்கிற நிகழ்ச்சிலே, உன் ஸ்பீச் இல்லாமலா ?”

“அவங்களும் அதைத்தான் சொன்னாங்க.” அனுபமாவின் குரலில் பெருமிதம் எட்டிப் பார்த்தது. “இன்னிக்குக் கொஞ்சம் மென்மையான டாபிக் எடுத்துக்கிட்டேன். ‘பெண்களுக்கேற்படும் மன உளைச்சலைத் தடுப்பது எப்படி ? ‘ அப்படான்னு. இன்னியத் தேதிக்கு, ஸ்ட்ரெஸ்தானே உலகத்துலே மிகப்பெரிய வியாதி ? காலைலே எழுந்துக்கிறதுலேர்ந்து, இராத்திரி தூங்கப்போகிற வரைக்கும், எத்தனை கவலை ? எத்தனை டென்ஷன் ?

“உண்மைதான்.”

“குடும்பத்துலே இருக்கிறவங்க ஒத்தாசையா இருந்தா, டென்ஷன் கொஞ்சமாவது குறையும். எங்கே ? நம்மூருலேதான் அதுக்குக் கொடுப்பினையே இல்லையே ?”

இராமநாதன் அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

“உங்களைச் சொல்லலை,” என்றாள் சிரித்துக்கொண்டே. “அதை விடுங்க. அப்புறம் என்ன பேசினேன் ‘னு கேக்க மாட்டாங்களா ?”

“சொல்லு, கேட்டுகிட்டுதான் இருக்கேன்.”

“டென்ஷன் எதனாலேயெல்லாம் அதிகமாகுதுன்னு பேசினேன். அதைக் குறைக்க சில வழிகளையும் சொன்னேன். நம்ம பெண்களுக்கு எதையும் பிச்சு பிச்சு சொல்லியாகணும். இல்லேன்னா படிச்சவங்களேகூட சரியாப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க…”

இராமநாதன் கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான். ஆடிட் காரணமாக, காலை ஏழு மணிக்கே ஆஃபீஸ் சென்றதன் விளைவு. இன்றிரவாவது சீக்கிரம் தூங்கப் போகவேண்டும்.

“…ஒரு சுலபமான வழி இருக்கு. மனசுவிட்டு யார்கிட்டயாவது பேசிக்கிட்டா, சரியாக வாய்ப்பிருக்கில்லையா ?”

“கரெக்டுதான்.” ஸேல்ஸ் லெட்ஜரில் எண்ட்ரி விட்டுப்போனால், இவனுடைய தவறா என்ன ? வெங்கட்தானே எண்ட்ரி போட்டவன் ? அவனையல்லவா கேட்க வேண்டும் ? ஆடிட்டர்தான் சொல்லிக் காண்பித்தார் என்றால், சுதர்சனும்…மனிதர்களுக்கு அறிவு என்று ஏதாவது இருக்கிறதா ?

“…ஒரு மூச்சு சொல்லி அழுதிட்டா கூட, மனசு லேசாகிடும்…”

அடையாறு வந்திருந்தது. மழையில் சொட்டிக்கொண்டிருந்த வேப்பமரத்தின் ஓரமாக ஆட்டோ நிற்க, அனுபமா கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே விறுவிறுவென்று நுழைந்தாள். இராமநாதன் பணம் கொடுத்துவிட்டு, நிதானமாக உள்ளே வந்த பொழுது, தூக்கக் கலக்கத்துடன் அம்மா ஹாலில் நிற்பது தெரிந்தது.

“என்னம்மா, தூங்கலையா ? ‘லேட்டாகும் ‘னு நாந்தான் சொன்னேனே ?”

“தூக்கம் வரலை. மழை வேற…” அம்மாவின் தூக்கமின்மைக்குக் காரணம் அவனுக்கு நன்கு தெரியும்.

‘சாப்பாடு வேண்டாம் ‘ என்று அனு சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் சென்றுவிட, அவன் மட்டும் டேபிளில் உட்கார்ந்தான். அம்மா கண்களை அழுந்தத் துடைத்துவிட்டுக்கொண்டு சாதம் பரிமாறினாள். அவளது பார்வையைத் தவிர்த்துவிட்டு, அவன் தட்டில் கவனம் செலுத்தினான்.

“இந்த வாரத்துலே இது எத்தனாவது தடவை, தெரியுமா ?”

இராமநாதன் பதில் சொல்லவில்லை.

“எல்லாத்துக்கும் நீ வாயை மூடிக்கிட்டு ஒப்புக்கிறதுனாலேதான் இத்தனையும். “

“………………………………”

“நீ வாயை மூடிக்கிறது மட்டுமில்லாம, அவளைக் கூட்டிக்கிட்டு, கொண்டுவந்தும் விடுறே. அதான், ஏறிப்போய்க் கிடக்கு.”

“என்னம்மா-“

“என்ன நொள்ளம்மா ? எத்தனை தடவைடா சொல்லுறது, இந்த பேச்சு, புளியங்காயெல்லாம் நமக்கு வேணாம்னிட்டு ? தெருவுலே நின்னுகிட்டு அவ கதையளப்பா, நீ ராத்திரி ஒம்பதுக்கும் பத்துக்கும் அவளைக் கூட்டிக்கிட்டு வருவியா ? அப்புடி என்ன பெரிய பேசிக் கிளிக்கிறா அவ ? இவ்வளவு படிச்ச பொண்ணு வேணாம்னு முட்டிக்கிட்டேன். ஆரு கேட்டாங்க ? எல்லாரும் என்ன பேசிக்கிறாங்க, தெரியுமா ?”

அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இராமநாதன் பெருமூச்சு விட்டான்.

“இந்த சண்டை நாம் நெறைய போட்டாச்சும்மா.”

“எத்தனை போட்டாலும் உனக்கு அறிவு வரலியே ? நா எங்க போயி முட்டிக்க ?”

“எங்கியும் முட்டிக்க வேணாம். போய்ப் படு. காலைலே பாத்துக்கலாம்.”

“மண்ணாங்கட்டி. விடிகாலைலே நீ பரக்கப்பரக்க ஆஃபீசுக்குக் கெளம்பிருவே. அப்புறம் இங்கே என்னத்தை…”

அவன் கவனமில்லாமல் தட்டைக் கழுவிவிட்டு, ஹாலைத் தாண்டிக்கொண்டு சென்றான். இன்னொரு பெட்ரூமில் அப்பா ஓரமாகச் சுருட்டிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்.

“…எக்கேடோ கெட்டுத் தொலைங்க. எனக்கென்ன ?” அம்மா சமையலறையில் முனகுவது மெல்ல மெல்லத் தேய்ந்தது. பெட்ரூமிற்குள் நுழைந்தவுடன் மொத்தமாக மறைந்தது.

அனுபமா படுக்கையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள். “ஹால்ல என்ன ஒரே சத்தம் ?”

“வழக்கமானதுதான்.”

“ப்ச். இதுவே பொழப்பாப் போச்சு. இவங்களுக்கு என்ன வந்துச்சுங்கறேன் ?”

“விட்று அனு. பழையகால டைப். அவங்களுக்குப் புரியாது.”

“யாரு, இவங்களா ? ஹ! உங்க தங்கச்சி தனியா ஃபாரின் போனப்பமட்டும் ஊர் முழுக்க சொல்லிக்கிட்டாங்க ? நான் அரங்கத்துலே பேசினதுதான் தப்பாப் போச்சாமா ?”

அவன் கண்களை நீவிவிட்டுக்கொண்டான். “அனு… ப்ளீஸ். நாளைக்குக் காலைலே சீக்கிரம் போகணும்.”

“என்னத்தை சீக்கிரம் போகணும் ? இதெல்லாம் கேக்க பொறுமை இருக்காதே ? அப்ப மட்டும் அந்தப் பக்கம் அன்பு பொங்கி வழிஞ்சிறும். ‘பெண்கள் முன்னேற்றம் ‘னு எல்லாம் வெறும் பேச்சுதான். நிஜ வாழ்க்கைலே ஒரு புண்ணாக்கும் கெடையாது. ஒரு ஸ்பீச் கொடுத்ததுலேதான் குடி முழுகிப் போச்சாமா ? “

‘சிகப்பு ஃபைலை ட்ராயரில் வைத்தோமா ? ஷெல்ஃபில் வைத்தோமா ? அதில் சில வவுச்சர்கள் இருக்கின்றன. ஜெயந்தியைக் கேட்க வேண்டும். நல்ல நாளிலேயே யாருக்கும் விரலசைக்க மாட்டாள். நைச்சியமாகப் பேசி, காரியத்தைச் சாதித்துக்கொள்ள வேண்டும். நமக்கென்று செய்வார் யாருமில்லை. நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால், நம்மைத்தான் எல்லொரும் கை காட்டுவார்கள்… ‘

“…இப்படி எல்லார் வாய்க்கும் பயந்து பயந்து, ஒருத்தர் கிட்ட கூட மனசைப் பகிர்ந்துக்காம இருக்கிறதுனாலதான் பொம்பளைங்களுக்கு இத்தனை பிரச்சனை…”

அவன் பெருமூச்சுடன் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

—————————————————————————————–

elankhuzhali@yahoo.com

Series Navigation

ஏலங்குழலி

ஏலங்குழலி