மேல் நாட்டு மோகம்

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ராஜம்மா குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்ட சிறிதே நேரத்தில் கிணற்றடிப் பக்கம் முழுவதும் கும்மென்று சோப்பின் மணம் கமழத் தொடங்கிற்று. கொல்லைப் புறத்தில் பற்றுப் பாத்திரம் துலக்கிக் கொன்டிருந்த பச்சை தனது மூக்கை நன்றாக விரித்து அந்த வாசனையை உள்ளிழுத்து ரசித்தாள். ‘அது இன்னா சோப்பு ? இப்பிடி கமகமக்குதே! ஏதானும் ஒஸ்தி சோப்பா இருக்குமா ? அம்மாவை வெசாரிக்கணும். அதும் பேரை ஒரு காயிதத்துல எய்தி வாங்கிக்குனு போயி மச்சானண்ட சொல்லி ஒண்ணே ஒண்ணு ஆசைக்கி வாங்கிக்கினு வரச் சொல்லணும். ‘ . . . .

பச்சை பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்துவிட்டு விளக்குமாற்றை எடுத்துக்கொண்டு சற்றுப் பொறுத்து நுழைந்த போது, ராஜம்மா குளித்து முடித்துப் புடைவையைச் சுற்றிக்கொண்டு குளியலறையை விட்டு வெளியே வந்தாள். குளியலறையின் கதவு முழுவதுமாய்த் திறக்கப்பட்ட நிலையில் அதனின்று வீசிய மணம் கிணற்றடியில் பரவியதைக் காட்டிலும் அதிகமாகவும், மூக்கைத் துளைப்பதாகவும் இருந்தது. எசமானி வெளியேறியதும், பச்சை குளியலறைக்குள் புகுந்து அங்கே பரவியிருந்த நெடியை நன்றாக நுகர்ந்தாள். அந்த அபார வாசனையை அவளுக்குத் தெரிந்த எந்தப் பூவின் மணத்துடனும் ஒப்பிட அவளால் முடியவில்லை. ஒருகால் ஏதேனும் இரண்டு மூன்று பூக்களின் கலவையான மணமாக இருக்குமோ என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள்.

வெளியே வந்து, கூடத்தைக் கூட்டித் தள்ளிய வண்ணம், சமையலறை வாசற்படியைக் கடந்த நேரத்தில், “அது இன்னா சோப்பும்மா தேய்க்கிறீங்க ? கெணத்தடி யெல்லாம் வாசம் வீசுதே ?” என்று விசாரித்தாள்.

“அது ஃபாரீன் சோப்பு, பச்சை! இங்கே யெல்லாம் கிடைக்காது,” என்று அடுக்களையி லிருந்து பதில் வந்தது. குரலில் வழிந்த பெருமையைக் கவனிக்கப் பச்சை தவறவில்லை.

“இங்கே கிடைக்காட்டி, உங்களுக்கு எப்டிம்மா கெட்சிது ?” என்று அவள் பெருக்குவதை நிறுத்திவிட்டு வினவ, அடுக்களையிலிருந்து வெளிப்பட்ட ராஜம்மா, “அங்கே எனக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்க, பச்சை. எப்பவாச்சும் நம்ம நாட்டுக்கு வருவாங்க. அப்ப கொண்டு வருவங்க. இல்லேன்னா, இங்கேயே பர்மா பஜார்லே கிடைக்கும். ஆனா சில பேரு போலி சோப்பைக் குடுத்து ஏமாத்திடுவாங்க. பழக்கப்பட்டவங்க பாத்து வாங்கணும்,” என்றாள்.

“என்னம்மா அத்தோட வெல ?”

“முப்பது ரூவா, பச்சை!”

“ஆத்தாடி! முப்பது ரூவாயா!” என்ற பச்சை வாயைப் பிளந்தாள்.

“ஆமா, நாங்க உபயோகிக்கிறது எல்லாமே முடிஞ்ச வரையிலே ஃபாரீன்தான். நம்ம நாட்டுத் துணியைக் கட்றதே கிடையாது நான். இங்கேயெல்லாம் ரெண்டாந்தரச் சரக்கை நம்ம தலையிலே கட்டிட்றாங்க. போன வருஷம் நான் கட்டிப் பழசாக்கின நீலக் கலர் புடவை ஒண்ணு குடுத்தேனே, நெனப்பு இருக்கா ? . . . இன்னும் நீ வெளியே போறச்சே வரச்சே, கட்டுறியே, அது ஃபாரீன் சாரிதான். கொஞ்சங்கூட மெருகே அழியல்லே, பாரு. ஆனா முந்நூறு ரூவா வெலை. . . . காசு போட்டாலும் வீண் போறதில்லே.”

“அய்யா துணிங்க கூட அயல் நாட்டுத் துணிங்கதானாம்மா ?”

“ஆமா. துணிகளைப் பொறுத்த மட்டிலே இங்கேயே கிடைக்குது. என்ன, பாத்து வாங்கணும். அவ்வளவுதான் . . . ஏன் பச்சை ? எதுக்குக் கேக்குறே ?”

“நீங்க உபயோகிக்கிற சோப்பு மேல எனக்கு ஒரு கண்ணும்மா. கெணத்தடியிலே வாசம் வர்றப்ப வெல்லாம் உங்களைக் கேட்டு ஒண்ணு வாங்கித் தரச் சொல்லணும்னு நெனைச்சுப்பேன். ஆனா முப்பது ரூவான்றீங்களேம்மா. நான் எங்க போக ?”

“நீ ஒண்ணும் தப்பா நெனைக்கல்லேன்னா – உனக்குச் சம்மதமா இருந்தா மட்டும் – நாங்க தேச்சுத் துளித் துளியாப் போன பழைய சோப்பு வில்லைகள் நிறைய கிடக்கு – தறேன். நீ தேச்சுப்பியானா சொல்லு. அப்புறம் தேச்சுக்கிட்ட சோப்பைக் குடுத்தாங்கன்னு சொல்லக் கூடாது. என்ன சொல்றே ?”

“பரவால்லே, குடுங்கம்மா. அல்லாத்தையும் உருட்டி மொத்தையாக்கி வெந்நீர்ல போட்டுக் கய்விட்டுத் தேச்சுக்குனாப் போச்சு.”

ராஜம்மா சிரித்தாள்: “ அந்த சோப்பு உருண்டையை இன்னொரு சோப்புப் போட்டுக் கழுவிட்டு வேணும்னாலும் உபயோகப்படுத்து!” என்று கூறி, டப்பாக்களிலிருந்து சில சோப்புத் துண்டுகளை எடுத்து ஒரு பொட்டலமாய்க் கட்டி அவளிடம் கொடுத்தாள். பச்சை ஆவலுடன் அதைப் பெற்றுத் தலைப்பில் முடிந்துகொண்டாள்.

சற்றுப் பொறுத்து, அவள் பெருக்கி முடித்து விளக்குமாற்றை வைத்துவிட்டுத் தரையை மெழுகப் புறப்பட்ட நேரத்தில் அய்யாவின் அறையிலிருந்து இன்னுமோர் இனிய வாசனை கிளம்பி வந்து அவள் நாசியைத் தாக்கியது. அய்யா முகச் சவரம் செய்துகொள்ளுகிற நாளிலெல்லாம் அந்த வாசம் வருவதை அவள் நினைவு கூர்ந்தாள். ‘இதுவும் பாரீன் சவர சோப்பா யிருக்கும் ‘ என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

பச்சை அந்த வீட்டில் கடந்த ஆறு மாதங்களாய்த்தான் வேலை செய்து வருகிறாள். ஆனால், தனது நாணயத்தின் வாயிலாக எசமானியம்மாளின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டாள். அந்த நல்லெண்ணம் சில நேரங்களில் ராஜம்மா அவளிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்து, மிச்சமிருக்கும் சில வேலைகளை முடித்த பிறகு, அதைப் பக்கத்து வீட்டில் கொடுத்துச் செல்லப் பணிக்கும் அளவுக்கு அண்மைக் காலமாக வளர்ந்து விட்டிருந்தது.

. . . மேசை மீது சாப்பாட்டு வகையறாக்களை ராஜம்மா பரப்பி வைத்துக் கணவன், ஒரே மகன் ஆகியோருடன் உணவருந்த உட்கார்ந்த போது, மணி ஒன்பது ஆகிவிட்டது. ராஜம்மா வழக்கமாக ஒன்பதேகாலுக் கெல்லாம் தனது அலுவலகத்துக்குக் கிளம்பிவிடுவாள். இன்று ஏனோ தாமதமாகிவிட்டது. எனவே, எல்லாவற்றையும் போட்டது போட்டபடி விட்டுவிட்டுச் சாவியைத் தன்னிடம் கொடுத்துக் கிளம்புவார்கள் என்று ஊகித்துப் பச்சை காத்திருந்தாள்.

அவசர அவசரமாய்ச் சாப்பிட்டு முடித்த பிறகு மூவரும் தத்தம் வழியில் புறப்பட்டார்கள். பையன் முரளி கல்லூரிக்கு ரொம்பவும் தாமதம் ஆகிவிட்ட முணுமுணுப்புடன் ஆட்டோவுக்குக் காசு வாங்கிக்கொண்டு முதலில் படியிறங்கினான். அதற்குப் பிறகு அய்யா கிளம்பினார். கடைசியாக , அம்மா புறப்பட்டாள்.

“பச்சை! இந்தா, சாவி. பத்திரம். எவனாவது உங்கிட்ட நான் சாவியைக் குடுக்கிற சமாசாரம் தெரிஞ்சு வீட்டுக்குள்ளே பூந்துடப் போறான். கதவை உள் பக்கம் மறக்காம தாப்பாப் போட்டுண்டு வேலை செய்யி. என்ன ? எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட்டு உனக்கு எடுத்து வெச்சிருக்குற சாப்பட்டை எடுத்துண்டு வழக்கம் போல சாவியைப் பக்கத்து வீட்டுல குடுத்துட்டு நட!” என்று கூறிவிட்டு ராஜம்மா விரைவாக நடந்தாள்.

எசமானியம்மா கட்டியிருந்த மேல் நாட்டுப் புடைவையை வைத்த விழி எடுக்காமல் பச்சை பார்த்தபடி நின்றாள். அவள் தலை மறைந்ததும் பச்சை உள்ளே புகுந்து கதவைச் சாத்திக்கொண்டு வேலைகளைச் செய்யலானாள். குளியலறையி லிருந்து இன்னும் அந்தச் சோப்பின் மணம் வந்து கொண்டிருந்தது. வேலைகளைச் செய்துகொண்டே, முதன் முதலாய்ப் பார்ப்பவள் போன்று அந்த வீட்டுப் பொருள்களை ஆராய்ந்தாள்.

பச்சை எட்டாம் வகுப்பு வரையில் படித்திருந்தாள். ஆங்கிலம் அவ்வளவாய்த் தெரியாவிட்டாலும், எழுத்துகளைக் கூட்டிப் படிப்பதில் தேர்ச்சி இருந்தது. கூடத்தில் நிறுத்தியிருந்த பெரிய இரும்பு பீரோவில் யூ.எஸ்.ஏ. என்னும் ஆங்கில எழுத்துகள் இருந்ததைப் பார்த்ததும் அதுவும் மேல்நாட்டு அலமாரி என்பதைத் தெரிந்துகொண்டாள். ‘கப்பல்ல தருவிச்சிருப்பாங்க ‘ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அவர்கள் வீட்டுச் சின்ன ரேடியோ (ட்ரான்சிஸ்டர்) கூடப் புதுமாதிரியானதுதான். ஜப்பானில் செய்தது என்று அம்மா சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது. கண்ணாடி அலமாரிக்குள் தெரிந்த குப்பிகளின் அழகு மனத்தைக் கவர, எடுத்துத் திறந்து வாசனை பார்த்தாள். சோப்பின் வாசனையை அந்தச் ‘செண்டு ‘களின் வாசனை தூக்கி யடித்ததை உணர்ந்து கண்களை மலர்த்தினாள். அவற்றிலும், அவை அயல் நாடுகளில் தயாரானவை என்பதற்கான எழுத்துகளைப் படித்தாள். மார்பளவு மர அலமாரியின் மேல் வைக்கப் பட்டிருந்த பெரிய கெடியாரத்தில் ஜப்பான் என்னும் சொல்லைப் படித்தாள். அதற்குப் பக்கத்தில் இருந்த பேனாவில் ஜெர்மனி என்னும் சொல்லைப் படித்தாள். அவளுள் பெரு வியப்புப் பெருகியது.

‘அடங்கொப்புராண! அல்லாமே பாரீன்! இந்த வீட்டில இருக்கிற ஆளுங்க மட்டுந்தான் இந்த நாட்டைச் சேந்தவங்க போல! . . . இன்னும் கொஞ்ச நாள்லே நான் உபயோகப் படுத்துற துடப்பக்கட்டையைக் கூட அமெரிக்காவிலேர்ந்து வாங்கிக்கினு வருவாங்களோ! ‘ என்றெண்ணித் தனிமையின் வசதியில் வாய்விட்டே சிரித்தாள்.

அயல் நாட்டுப் பொருள்கள் மீது எசமானிக்கும் எசமானருக்கும் இருந்த மோகம் அவளை அயர்த்தியது. அவர்களுடைய மகனும் ஒரு பெண்ணுக்குரிய மினுக்கலும் குலுக்கலுமாய் அப்பழுக்கே இல்லாத ஆடை அணிகளுடன் வளைய வருவதை எண்ணி, ‘இந்தக் குடும்பமே பாரீன் குடும்பம் ‘ என்று சொல்லிக்கொண்டாள். ‘பெத்தவங்க கிட்டேருந்து தானே பிள்ளைங்க அல்லாத்தையும் படிக்குதுங்க ? ‘ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

கல்லூரிக்குப் புறப்படும் முன் ‘பீச்சாங்குழல் ‘ மாதிரி ஒன்றிலிருந்து ஏதோ வாசனையைத் தன் மீது அவன் பீய்ச்சிக் கொள்ளூகிறானே, அது கூட பாரீனாய்த்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

. . . வேலைகளை முடித்துவிட்டுச் சாவியைப் பக்கத்து வீட்டில் கொடுத்து, வீட்டுக்குத் திரும்பிய அவளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கணவன் குமார் வீடு திரும்பி யிருந்தான். அரசு அலுவலகம் ஒன்றில் நான்காம் வகுப்பு ஊழியனாகப் பணி புரிந்துவந்த அவனைத் திடாரென்று சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்களாம். விடுப்பு எடுத்துக்கொண்டு திரும்பி யிருந்தான். பச்சைக்குப் பகீர் என்றது. பழகிய மனிதர்களை விட்டுப் பிரிவது இலேசுப்பட்டதில்லை என்கிற நினைப்பில் உடனே கண் கலங்கினாள்.

“என்ன செய்யிறது, பச்சை ? போய்த்தான் தீரணும். . . இன்னும் ஒரு வாரம் டைம் குடுத்திருக்காங்க, “ என்றான் குமார்.

. . . அன்று மாலை அந்தச் சேதியைச் சொல்லுவதற்கென்றே பச்சை ராஜம்மாவின் வீட்டுக்குப் போனாள். சேதியைக் கேட்டதும் ராஜம்மாவுக்கும் முகம் என்னவோ போலாகிவிட்டது. கண்கள் கலங்கவும் செய்தன.

“அப்படின்னா, நீ போய்டுவியா ? நீ போய்ட்டா நான் என்னடி செய்வேன், பச்சை ?” என்று முதன் முறையாக உரிமை எடுத்துக்கொண்டு “டா” போட்டுப் பேசினாள் ராஜம்மா. தொடர்ந்து, “நாங்க மூணு பேருமே வீட்டைப் பூட்டிண்டு வெளியே போயிட்றோம். சில சமயத்திலே உங்கிட்ட சாவியையே குடுத்துட்டும் போயிட்றோம். உன்ன மாதிரி நம்பகமான ஆள் இந்த மெட்றாஸ்லே எனக்குக் கிடைக்க மாட்டாங்களே ? நான் என்ன செய்யப் போறேனோ தெரியல்லே!” என்று அழ மாட்டாமல் புலம்பினாள்.

“இன்னும் நாலு நாள் வருவேம்மா.”

. . . பச்சை நான்கு நாள்கள் கழித்து இறுதியாக விடை பெற்ற போது, ஒரு புதிய மேல் நாட்டு வாசனைச் சோப்பை ராஜம்மா அவளுக்குக் கொடுத்தாள். தான் கட்டிக் கொஞ்சமே பழசாக்கி யிருந்த இரண்டு ஜப்பான் நாட்டுப் புடைவைகளையும் மனமுவந்து அவள் தந்த போது பச்சைக்கு அழுகையே வந்துவிட்டது.

. . . ஆயிற்று. பச்சையும் குமாரும் சிதம்பரத்துக்கு வந்த பிறகு விளையாட்டுப் போல் மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. வந்த புதிதில் பச்சை ராஜம்மாவுக்கு இரண்டு கடிதங்கள் எழுதினாள். அவ்விரண்டு கடிதங்களுக்கும் ராஜம்மாவிட மிருந்து பதில்கள் வந்தன. ஆனால் அதற்குப் பிறகு அவள் எழுதிய ஒரு கடிதத்துக்குப் பதில் வராத போது திரும்பவும் கடிதம் எழுத முற்பட்ட பச்சையைக் குமார் கோபித்துக் கொண்டான். ‘ என்ன இருந்தாலும் அவங்க பெரிய மனுசங்க. உன்னோட ஒவ்வொரு லெட்டருக்கும் அவங்க பதில் போடுவாங்களா என்ன ? எப்ப மூணாவதுக்குப் பதில் வரல்லையோ, நிப்பாட்டிடு ‘ என்று அவன் சொன்னதிலும் நியாயம் இருந்ததைப் புரிந்துகொண்டு பச்சை அதற்குப் பிறகு கடிதம் எழுதாதிருந்து விட்டாள். . .

ஆயினும் அடிக்கடி அவள் ராஜம்மாவின் குடும்பம் பற்றிக் குமாரிடம் பேசுவாள். அவர்கள் வீட்டில் எல்லாமே வெளிநாட்டுச் சமாசாரங்கள்தான் – விளக்குமாறு ஒன்றைத்தவிர என்று சொல்லிச் சிரிப்பாள்.

மேலும் சில நாள்கள் கழித்துக் குமாரின் உறவுக்காரப் பையன் ஒருவனுக்குச் சென்னையில் திருமனம் நிகழ இருந்தது. பச்சை பரபரப்பானாள். அந்தச் சாக்கில் சென்னைக்குப் போய்த் தன் பழைய எசமானி ராஜம்மாவைப் பார்த்துவரும் ஆவல் அவளுள் கிளர்ந்தது. திருமணம் முடிந்த அன்றே மாலை அவளை அழைத்துப் போவதாய்க் குமாரும் வாக்களித்தான்.

. . . அன்று மாலை ராஜம்மாவின் வீட்டு வாசலில் நின்று கூப்பிடுமணியை அழுத்திய போது, பச்சைக்குப் பிறந்த மண்ணில் கால் வைத்த உணர்ச்சி உண்டாயிற்று.

அய்யாதான் கதவைத்திறந்தார். வேட்டி பனியனில் இருந்தார். பனியனில் தெரிந்த அழுக்கைக் கவனித்து, ‘ யாரு இவங்க வீட்டில் வேலை செய்யிறா, இப்படி அரையுன் குறையுமா ? ‘ என்று பச்சைக்குக் கோபம் வந்தது. அய்யா மிகவும் தளர்ந்து போயிருந்ததைக் கண்டாள். முகத்தில் நிறைய சுருக்கங்கள் விழுந்திருந்தன. கண்களில் ஒரு துயரம் தெளிவாய்ப் புலப்பட்டது.

“வா, பச்சை. . . இது யாரு ? உம் புருஷனா ? வாங்க. . . ‘ என்றபடி அவர் உள்ளே போனார். அடுக்களை யிலிருந்து வெளிப்பட்ட ராஜம்மாவைப் பார்த்துப் பச்சை திடுக்கிட்டே போனாள். ராஜம்மா மிகவும் தளர்ந்து போயிருந்தாள். நாற்பத்தைந்து வயதில் முப்பத்தைந்து வயதுப் பெண்போல் தோற்றமளித்த ராஜம்மா, தனது இப்போதைய நார்பத்தொன்பதாம் வயதில் ஐம்பத்தைந்து வயதுப் பெண்மணி போல் வயோதிகத்துடன் தென்பட்டாள். நிறம் மங்கியிருந்தது. கண்களில் கவலை அப்பட்டமாய்த் தெரிந்தது.

‘இவங்க வூட்ல என்னமோ எசகு பெசகா நடந்திருக்கு ‘ என்று பச்சைக்கு உடனே ஊகமாய்ப் புரிந்து போயிற்று. பச்சையின் ஆராய்ச்சிப் பார்வையின் பொருளைப் புரிந்து கொன்டுவிட்ட ராஜம்மாவின் தலை உடனே தாழ்ந்துகொண்டது. எனினும் , உடனேயே தலை உயர்த்தி, வலிந்த புன்னகை காட்டி, “வா, பச்சை. . . உம் புருஷந்தானே ? வாங்க. உக்காருங்க” என்று இருவரையும் வரவேற்றாள். தரையில் அமர்ந்த இருவரையும் எழச் செய்து வலுக்கட்டாயமாய்ச் சோபாவில் உட்காரச் செய்தாள்.

“ஏம்மா ரெண்டு பேரும் ஒரு மாதிரியா இருக்கீங்க ? உங்க மகன் முரளி எங்கேம்மா ? வெளியே போயிருக்குதா ? இப்ப வேலைக்குப் போயிக்கினு இருக்கில்லே ? அதுங் கலியாணத்துக்குப் பத்திரிகை அனுப்ப மறந்துறாதீங்க,” என்று எடுத்த எடுப்பில் சொல்லி விட்டாள் பச்சை. மகன் முரளியால்தான் அவர்களுக்கு ஏதோ துன்பம் என்பதாய் அவள் உணர்ந்துவிட்டதாலேயே முரளி பற்றய சொற்கள் நழுவி வந்தன.

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த ராஜம்மா அழத் தொடங்கினாள். பச்சை பதறிப் போனாள்.

“அம்மா, அம்மா! ஏம்மா அய்வுறீங்க ? அய்வாதீங்க. முரளித்தம்பிக்கு ஒண்ணும் இல்லியே ? அது நல்லாருக்கில்லே ?. . . அய்யா! இன்னாங்கையா ஆச்சு ?” என்ற பச்சை எழுந்து நின்றாள்.

அய்யாவுக்கும் கண்கள் கலங்கி யிருந்தன.

“வேற ஒண்ணும் விபரீதமா இல்லே, பச்சை. முரளி இப்ப எங்க கூட இல்லே. பிரிஞ்சு ரெண்டு வருஷமாச்சு.”

“அதெப்படிங்கையா ? தம்பி உங்களுக்கு ஒரே மகனாச்சே ?”

“டாக்டருக்குப் படிச்சு முடிச்சுட்டு, மேல் படிப்புக்கு அமெரிக்காவுக்குப் போனான். அங்கேயே ஒரு அமெரிக்கப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு, ‘எனக்குக் கல்யாணம் ஆயிடுத்து ‘ அப்படின்னு கடுதாசி எழுதிப் போட்டுட்டான். . .”

பச்சைக்கும் கண்ணீர் வந்துவிட்டது.

“நடந்தது நடந்து போச்சு. . .நீங்க ரெண்டு பேரும் முரளித் தம்பிகிட்டவே போய் இருந்துடலாம்ல ?”

“கேட்டமே! அதெல்லாம் சரிப்படாதுன்னுட்டான். அந்தப் பொண்ணோட அப்பாவும் அம்மாவும் அவங்களோடவே இருக்காங்களாம். . .”

‘மேல் நாட்டுப் பொஞ்சாதி! மேல் நாட்டுச் சம்பந்திங்க! ‘ – ராஜம்மா கண்களைத் துடைத்துக்கொண்டாள். பச்சையின் பார்வை மேல் நாட்டுச் சூழ்நிலையிலேயே முரளி வளர்ந்த அந்த வீட்டின் பொருள்கள் மீது பதிந்த போது அவற்றில் தான் பார்த்திருந்த மேல் நாடுகளின் முத்திரைகள் பற்றிய ஞாபகம் அவள் மனத்தில் நெருடியது. . . ..

. . . . . . . . .

குங்குமம் / 19.9.1986

jothigirija@hotmail.com

———————————

திண்ணை பக்கங்களில் ஜோதிர்லதாவின் கதைகள் சில

  • இது தாண்டா ஆபிஸ்

  • அம்மாவின் அந்தரங்கம்

  • ஆண் விபசாரிகள்

  • அரியும் சிவனும் ஒண்ணு

  • மீண்டும் பிறவி வேண்டும்

  • உலக நடை மாறும்

  • இராமன் அவதரித்த நாட்டில்

  • அதிர்ச்சி

  • இன்பராஜின் இதயம்

  • நீ ஒரு சரியான முட்டாள்
    Series Navigation

  • ஜோதிர்லதா கிரிஜா

    ஜோதிர்லதா கிரிஜா