சபலம்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொன்னவரின் வாயில் சீனி அள்ளிப் போட வேண்டும். வெறும் கேள்வி ஞானத்தினாலோ அல்லது ஏட்டுக் கல்வியினாலோ வரக் கூடிய வார்த்தைகளா இவைகள்! பட்டுப் பழுத்து உணர்ந்தவர் ஒருவரால்தான் இத்தனை அச்சொட்டாய் சொல்லமுடியும்.

என்னிடமுள்ள பழக்கங்களை அறிக்கையிட்டு இப் பழமொழி எனக்கு எப்படிப் பொருந்துகிறது என்று ஆராய்வதல்ல என் நோக்கம். அது பெரிய வேலையாகி விடும். ஏனெனில் என்னிடமுள்ளவை ஏராளம்!

அதோ அந்த பஸ் ஸ்டாப் இரும்புக் கம்பியில் ஒரு கைக்கு முட்டுக் கொடுத்தபடி நிற்கிறானே அவனைப் பற்றியது தான் இது. லீவில் ஊருக்குப் போயிருந்ததால் ஒரு வாரமாக ஆளைச் சந்திக்கவில்லை. இப்போது தெரிந்துவிடும் இந்தப் பழமொழி நூற்றுக்கு நூறு சரியா அல்லது திருத்தப்பட வேண்டியதா என்று.

அருந்தவநாதனும் நானும் போடா வாடா பழக்கம். அப்படியொரு பிசின் நட்பு. அவன் வடக்கு நான் கிழக்கு. ஒன்றைத் தொட்டு ஒன்றாக நேர்ந்த சந்திப்புகள் நெருக்கி விட்ட பிணைப்பு. ஒளpவு மறைவு அவன் டிக்சனரியில் இல்லை. உணர்வுகளைப் ப+சி மெழுகாமல் அப்படியே புட்டு வைக்கும் பண்பு. நிறைந்த குணசாலி. இறை நாட்டமும் இனிய குரலும் போனசாகப் பெற்றவன். நான் அவன்பால் ஈர்க்கப்பட என்னிடமில்லாத பல அவனிடமிருந்தது ஒரு காரணமாயிருந்திருக்கலாம்.

ஒரேயொரு கெட்ட பழக்கம். எப்போது பார்த்தாலும் சிகரட்டும் கையுமாக இருப்பான். எப்படி அடிமையானான் என்று கேட்டதும் நினைவு படுத்திப்பார்த்து வரலாறு சொன்னான்.

பத்து வயதிருக்கும். சாப்பாடு இல்லாட்டிலும் பரவாயில்லை நேவிகட் சிகரட் இருந்தால் போதும். என்று பெருமை பேசும் அப்பா. அவர் எது செய்தாலும் அதில் நியாயமிருக்கும் என்று நம்பிய அந்தக்கால அம்மா. அப்பாவே பிடிக்கும் போது நமக்கென்ன வந்தது என்று நினைத்த மகன். சிகரட் அளிக்கும் சிக்கல்கள் தெரியாத வயசு.

அப்பா சிகரட் பிடிக்கும் ஸ்டைல் எனக்குப் பிடிக்கும். ஒளpவெளடிளத்தில் நெளpந்து கலைந்து உருவிழந்து பிரயாணம் செய்யும் புகையோடு என் மனமும் இழுபட்டுப் போகும். அதன் மணத்தில் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு.

ஒருநாள் அம்மா அசதியாய் சரிந்த நேரம் பார்த்து கோடிவளவின் வாழைத் தோட்டத்துள் மறைந்து கொண்டு அரங்கேற்றம் செய்தேன். முதல் நாளே மனதைத் தொட்டு விட்டது எனச் சொல்ல முடியாது. ஆனால் அடுத்த நாள் அதே நேரத்தில் ஒரு காந்த இழுப்பு. ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பிறகும் வாழைத் தோட்டத்துள் மறையத் தொடங்கினேன். சும்மா சொல்லக் கூடாது தனிமையில் இருக்கும் போது நண்பனோடு இருக்கும் உணர்வு வரும்.

மணக்காமலிருக்க கொய்யா இலையைச் சப்பிச் சமாளித்துக் கொள்வேன். கடைசிவரை அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் மறைத்ததுதான் இந்த அளவிற்கு நான் கெட்டுப் போனதற்குக் காரணம். தெரிந்து கண்டித்திருந்தால் விட்டிருப்பேன். சேட் பொக்கற்றில் நனைந்து ஊறிப் போன சிகரட் பற்றி அம்மா ஒருநாள் கேட்க அப்பாவிற்கு வாங்கியது கொடுக்க மறந்துவிட்டேன் என நாடகம் ஆடிச் சமாளித்தேன்.

ஒருமுறை சுகவீனம் கடுமையாக்கி ஆஸ்பத்திரியில் வைத்திருந்தபோது டாக்டரின் கண்டிப்பான உத்தரவில் சிகரட் பழக்கத்தைக் கை கழுவி விட்டார் அப்பா. பெரிதாக வருத்தம் வந்தால்தான் நானும் விடுவேன் போலிருக்கு என்று பழக்கத்தை விடமுடியாத விரக்தியில் சொன்னான் அருந்தவம்.

நாளுக்கு முப்பதிற்குக் குறைவில்லாமல் பிடிப்பான். அவனது வலது கை விரல்களில் சிகரட் கறை காவியடித்திருந்தது. சுவாசப்பையில் எவ்வளவு காவி பிடித்திருக்குமோ! பக்கத்தில் நின்றாலே புகையிலைப் பொச்சம் அடிக்கும்.

மச்சான் இந்தச் சனியனை விட்டுவிடு. அமெரிக்காவில் மட்டும் வருசத்திற்கு நாலு லட்சம் பேர் இதனால் இறக்கிறார்கள். உனக்குத் தெரியாதா ?

தெரிந்து என்ன செய்வது. நான் விட்டாலும் என்னை அது விடாது. சிகரட் குடிக்கிற தவனத்தில் அடிக்கடி தேநீர் குடிக்கிற அளவுக்கு பழக்கம் முத்திப் போச்சு. விருப்பமில்லாத நேரத்திலும் பழக்கதோத்தில பத்த வைக்கிறது வழக்கமாயிட்டுது. இதனால் நான் படுகிற பாடு. நெஞ்சு எரியும். சளி கரகரக்கும். குரல் சரியாக வராது. எவ்வளவு சாப்பிட்டாலும் ஒரு விருத்தியில்லை. பெலமாக நடந்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது.

கெதியில் வருத்தக்காரனாய் போய் விடுவேனோ என்று பயம் வரும். இன்றோடு உதறி விடும் உறுதி வரும். இதுதான் கடைசி சிகரட் என்று எனக்குள்ளே சபதம் எடுத்துக் கொள்வேன். மிகுதிச் சிகரட்டுகளை துண்டு துண்டாய் உடைத்து குப்பைக் கூடையில் போட்டதும் மனதுள் ப+வாய் விரியும் சபதம் வாசம் பரப்புகிற மாதிரியிருக்கும். எச்சில் கூட இனிக்கும். பலமெல்லாம் ஒரே நாளில் திரும்பி வந்தது போல ஆனந்தம் பரவும். சிகரட் பிடிக்கும் அலுவலக நண்பனிடம் வலியப் போய் இதை விட்டுவிடு என்று ஆலோசனை கூடச் சொல்வேன். சாப்பாட்டுக்குப் பிறகு வாய் புளிக்கும். ஒரு மிட்டாயை வாயில்போட்டுக் கொள்வேன்.

இரவாகும். இவ்வளவு பேர் குடிக்கிறார்கள் ஒன்றும் ஆகவில்லையே என்று மனம் மயங்கி மயங்கி விழும். உடைத்துப் போட்ட சிகரட் துண்டுகளில் பெரிதாக இருப்பதை கண்கள் தேட, கைகள் தானாகப் பொறுக்கும். ஒரு முறையா இரண்டு முறையா ஆயிரம் முறைகள் இப்படி நடந்திருக்கு. நான் தோற்றுப் போய்விட்டேன் மச்சான், நடக்கிறது நடக்கட்டும்.

இறை நாட்டம் மிகுந்த அருந்தவத்தை அந்த வழியில் போய் மடக்கினால் என்ன என்று என் மனம் சொன்னது. கோயில் ஓய்ந்து போயிருந்த ஒரு மாலை வேளை பார்த்து மகிழ மரத்து புல் தரையிலிருந்து கச்சான் கொட்டை கொறிக்கும் போது அவனிடம் கேட்டேன்.

உன் அம்மாவில் சத்தியம் பண்ணினால் சத்தியத்தைக் காப்பாற்றுவாயா ?

ஓம் என்று சொன்னவன் பிறகு நம்பிக்கை குறைந்தவனாய் என்னைப் பார்த்தான்.

ஆண்டவனில சத்தியம் பண்ணினால் ?

என்னடா கதை விடுகிறாய்

எழும்பு இண்றைக்கு உன்னை விட மாட்டேன். புனிதமான ஆலயத்தில இருந்து சொல்கிறேன். இந்தப் பிரபஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிற இறைவன் உனக்குள்ளேயும் உயிர் மூச்சாக இருக்கிறார் என்று நம்புகிறாயல்லவா. அவருக்கு மேலே நச்சுக் காற்றை பாய்ச்சலாமா ? அவரை மாசு படுத்தலாமா ? ஆண்டவன் சத்தியமாக இனி சிகரட்டை கையால் தொட மாடNடிடன் என்று சொல்லு. இப்பவே வா .எழும்பு

சொல்லி முடிப்பதற்குள் என் கண்கள் கலங்கிற்று.

டேய் ஐஞ்சு சதம் பெறாத இந்தச் சின்னச் சிகரட்டுக்காக கடவுளில் சத்தியம் பண்ணுவதா ?

சின்னச் சிகரட்டா.. இப்படியே விட்டால் இதுதான் உனக்கு எமன். இப்ப பண்ணப் போகிறாயா இல்லையா ?

அவன் உணர்ச்சிவசப்பட்டுப் போனான். என் தலையில் அடித்தான்.

என்னில் இவ்வளவு பரிவு காட்டுகிற உன் மேல் ஆணையாக என்னுள் உறைந்திருக்கிற இறைவன் மேல் ஆணையாக இனி சிகரட் குடிக்க மாட்டேன்.

அவனும் என்னோடு சேர்ந்து கண்ணீர் விட்டான். நான் ஆறுதலாகச் சொன்னேன்.

சிகரட் ஆசை வந்தால் இந்த சத்தியம் உன் நினைவில் வரட்டும். அதையும் மீறி வந்தால் அந்த ஆசையை கொஞ்ச நேரம் தள்ளிப் போடு. யாரோடாவது போய் நின்று அன்றைய நாட்டு நிலவரம் கதை. வெண்காயம் என்ன விலை என்று கேள். வீட்டில் எல்லாரும் சுகந்தானே என்று விசாரி. அதற்குப் பிறகும் வந்தால் குட்டிநாயை அடிக்கிற மாதிரி அடிச்சு விரட்டு. செல்லம் கொடுத்தாயோ காலில் பாய்ஞ்சு கையில் விறாண்டி முகத்தை நக்க வரும். பாவம் பார்க்காதே. அடிச்சுத் துரத்து. விளங்குதா மச்சான்

அதற்குப் பின் இன்று தான் அவனைக் காண்கிறேன். பக்கத்து சைவக் கடையிலிருந்து மாலைத் தேநீர் முடித்த ஒருவர் சணல்திரி நெருப்பில் சிகரட் பற்றி இழுத்து எதிரே வந்த என் பக்கம் ஊதினார். நண்பனை நெருங்க நெருங்க நெஞ்சு அடித்துக் கொண்டது.

அருந்தவத்தின் பக்கமாக அது என்ன சிகரட் புகையா!

நாசமாப் போச்சு. திருந்தவே மாட்டான்! இவனும் ஒரு மனுசனா ?

மச்சான் வந்திற்றியா.

அவ்வளவு சனத்திற்குள்ளும் வெட்கப்படாமல் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் நண்பன்.

சிகரட்டை விட்டுட்டன்டா. ஒரு கிழமையாகத் தொடவில்லை. கடவுள் காப்பாற்றி விட்டார்.

அப்ப உன் பக்கமாக புகை வந்ததே!

பக்கத்தில் நின்றவர் சிகரட்டை மறைத்துப் பிடித்துக் கொண்டு ஆனந்தமாக ஊதிக் கொண்டிருந்தார்.

***

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்