4 கவிதைகள்.

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

தேனம்மை லஷ்மணன்


வற்றின கேள்விகள்..
*****************************

மீன் சுவாசக் குமிழ் வெடிக்கும்
குளத்தைப் பார்க்கும்போதெல்லாம்
குதிக்கட்டுமா என்பான்..

மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி
கட்டைச் சுவர் எட்டிப் பார்க்கும் போதும்.,
கால் நீட்டி இதே கேள்வி..

உயிரணுக்கள் வற்றின பருவத்தில்
ஒரு அமாவாசை இரவில்
ஓடுகள் நெகிழ்ந்த உத்தரத்தில்

ஓய்ந்த கேள்வியோடும் சுவாசத்தோடும்
ஒற்றைக் கயிற்றில் ஆடிக் கொண்டு
அவன் மனநோயின் வெளிப்பாடாய்..

அறியாமலோ இயலாமலோ
போய்விட்டான் அவன் மனைவிக்கு
மறுமணம் ஆகுமென..

சின்னப் பயல்..
************************

கோடி பெறும் வீட்டில்
லட்சம் பெறும் மார்டர்ன் ஆர்ட்..

சுவர் முழுக்க
செலவில்லாமல்
சின்னப் பயலின் கிறுக்கல்கள்..
வாங்கிய சேட்டை அடி சுமந்து..

அணைப்புக்கு ஏங்கி
விரிந்த கைகளுடன்
மிக்கி மவுசோ.,
டொனால்ட் டக்கோ..
க்ரேயானில்..

அணைக்க விரும்பி
சுவற்று பொம்மைகளை
கை கோர்த்துப் பிடித்தேன்…
வளர்ந்து விட்ட சின்னப் பயலை நினைத்து..

நன்றி நைதல்..:_
***********************

புகை படிந்த கண்களுக்கு
நடனக்காரியின் அசைவை
ஒத்திருந்தது அவளின்
நன்றி நவிலல்..

புரணிக்காரர்களின்
வெறுப்புக்குரியதாயிருந்தது
அந்த ஏற்றமும் நன்றியும்..

அவலற்ற பொழுதுகளில்
பொறாமை நாவுகள்
அவளையும் அதையும்
இடித்துப் பிழிந்து
விரசம் ருசித்தன..

எவ்வளவு நைத்தும்
திரும்பவும் வந்தது
அவளது நன்றி.. எதாலும்
நையாத புன்னகையோடு..

புலிகளோடு ..:-
********************************
வீட்டுப் பிராணி..
புகுந்தது வனம் என்பதறியாமல்
புகுந்த கணம் இருட்டுக்குள்..

மினுமினுங்கும்கூர் கண்களோடு
வரிகளும்., வட்டங்களும்
சிலிர்க்கும் புலிகள்..

வனம் வந்த நாள் தொட்டு
அவை அங்கேயே வளர்ந்து வாழ்ந்து..
கம்பீரப் பாய்ச்சலோடு..

புதுவனம் புகுந்த அது
புலியைப் போல இருந்தாலும்
சீறவோ பாயவோ தெரியாமல்..

கற்றுக் கொள்ளக் கூடும்..
புலிகளோடு புழங்குவதும்
வேட்டையாடுவதும்.,
வனம் அதிரடிப்பதும்..

Series Navigation

தேனம்மை லஷ்மணன்

தேனம்மை லஷ்மணன்