பகைவன்
Published March 10, 2002 • By
பசுபதி
பசுபதி

பிள்ளைப் பிராயத்திலே –என்மனப்
. . பீடத்தில் ஏறிவிட்டான்.
பள்ளிப் படிப்பினிலே — கோணல்
. . பாதையைக் காட்டிவிட்டான்.
அண்டை மனைகளிலே — அவனால்
. . அவச்சொல் பெற்றுவிட்டேன்
நண்பனவன் அல்லவே — எனக்கு
. . நச்சுப் பகைவனவன்.
தீய குணம்மனதில் –தேங்கத்
. . தித்திப்புச் சேர்த்துவிட்டான்
ஆயுள் முழுதுமவன் — எனக்(கு)
. . ஆண்டானாய் ஆகிவிட்டான்.
வாழ்வினில் தோல்விகளை– எனக்கு
. . வாரி வழங்கிவிட்டான்
தாழ்வில் மனமயர்ந்தேன் — அவனைச்
. . சந்திக்க ஆசைகொண்டேன்.
காலம் சுழன்றதடா — அவனோ
. . கண்ணில் தெரியவில்லை
மூலப் பகைவனவன் –ஒருநாள்
. . முகத்தைக் காட்டிவிட்டான்.
கண்ணாடி முன்னிலையில் — அன்று
. . கண்டேன் விரோதிமுகம்
விண்டேன்; விழிதிறந்தேன் — எனக்கு
. . வெம்பகை நானேதான்.
***