காத்திருத்தல்
எஸ். வைதேஹி.

பாம்பு உதிர்த்த சட்டை
பாறை ஈர்க்கும் முறைப்பான
மத்திய நேரத்தில்
காயும் வெய்யில்.
முந்தைய நாட்களின்
பூக்களும், புறாக்களுமாய்
தோன்றிய நீ எனக்கு.
செங்கல் நிறம் ஏறிய
வெப்பம் நிறைந்த என்
கைகள்.
கண் பார்க்கும் திசைகளில்
தூசியாகவோ, துரும்பாகவோ
நீ வருவாய் என்
நிழல் நோக்கி,
நேரம் உடைந்து கொண்டிருக்கிறது
உனக்கும், எனக்குமான
இடைப்பட்ட
வீதிகளிலும், சாலைகளிலும்.