காதலும் கனிவும் (எனக்குப் பிடித்த கதைகள்- 12 அலெக்ஸாண்டர் குப்ரினின் ‘அதிசயக்காதல் ‘)

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

பாவண்ணன்


தொலைபேசி இயக்குநர் பயிற்சிக்காக இரண்டரை மாதகாலம் சென்னையில் தங்கியிருந்தேன். மாநிலத்தின் பற்பல மாவட்டங்களிலிருந்தும் ஆண்களும் பெண்களுமாக 32 பேர் வந்திருந்தார்கள். எல்லாருமே இளைஞர்கள். 21-24 வயதுக்குட்பட்டவர்கள். பயிற்சி எங்களுக்கு ஒரு வியைாட்டைப் போலக் கழிந்தது. பயிற்சி முடிவதற்கு நான்கு நாட்களே மீதமிருந்த நிலையில் நானும் நண்பனொருவனும் கடற்கரைக்குச் சென்றிருந்தோம்.

முழுநிலா உதயம். ஆழ்கடலின் அணைப்பிலிருந்து விடுபட்டு மெல்ல மெல்ல வானை நோக்கித் தவழத் தொடங்கிய கோலம் நெஞ்சை என்னமோ செய்தது. ஒருகணம் கடற்பரப்பே நிலவொளியில் கரைந்து மின்னியது. நண்பன் அந்த நிலவைப் பார்த்து அடிக்கடி பெ முச்சு விட்டான். அவன் கண்களில் ஏதோ பைத்தியம் மின்னியது. ‘என்ன ? ‘ என்றேன். ‘இந்த நிலவைப் போல நாம் அனைவரும் பிரியப் போகிறோம் ‘ என்றான். அவனுடைய தழுதழுத்த குரல் வேதனை மூட்டுவதாக இருந்தது. சட்டென வந்து விழுந்த அந்த வார்த்தைகளால் தடுமாறினேன்.

நான் பதில் சொல்லும் முன்னால் தன் பையிலிருந்து ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்தான். ஒரு கைக்குட்டை, பேனா, வளையல் துண்டு, கிழிந்த தாள் ஒன்று என நிறையப் பொருட்கள் இருந்தன. மெதுவாக அந்தக் கிழிந்த தாளைப் பிரித்துப் படித்தேன். அதன் சாய்வான கையெழுத்தைப் பார்த்ததுமே ஏதோ புரிந்ததும் புரியாததுமான ஓர் உணர்வு ஏற்பட்டது. ‘இது அவள் கையெழுத்தல்லவா ? ‘ என்று அவள் பெயரைச் சொன்னேன். ஏதோ ஒரு பதில் சரியாக எழுதப்படவில்லை என்று அரைகுறையாக எழுதப்பட்ட கோலத்தில் கிழித்தெறியப் பட்ட தாள் அது. அவன் தலையசைத்தான். ‘அப்படியென்றால் இந்தப் பொருட்கள் ? ‘ என்று மேலும் இழுத்த போது ‘எல்லாம் அவளுடையதுதான். இந்தக் கைக்குட்டை கேண்டானில் மறந்து அவள் விட்டுப் போனது. டெஸ்கில் கைபட்டு இடித்துக் கொண்டபோது உடைந்த வளையல் இது.. ‘ என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை சொன்னான். சொல்லச் சொல்ல அவன் கண்களில் பிரகாசம் கூடியது. என்னால் எதையும் பேச முடியவில்லை. சிறிது நேரம் கழித்தபிறகு ‘அவள்தான் என் உயிர். அவள்தான் என் உலகம். அவள்தான் என் வாழ்வு. சகலமும் எனக்கு அவளே ‘ என்றான் உணர்ச்சிவசப் பட்ட நிலையில். மெல்ல குழைவான குரலில் வானிலேறிய நிலாவைப் பார்த்தபடி ‘நான் அவளை மனமாரக் காதலிக்கிறேன் ‘ என்றான்.

ஏதோ ஒரு அச்சம் எனக்குள் ஊறியது. இருவருடைய பின்னணியும் எனக்கு நன்றாகத் தெரியும். பிரதான நகரில் பெரிய துணிக்கடை வைத்திருக்கும் முதலாளியின் மருமகள் அவள். சிறிய நகரொன்றில் அப்பளம் போட்டு விற்கும் அம்மாவுக்கும் ஓட்டலில் இனிப்பு போடும் அப்பாவுக்கும் பிறந்த நான்கு பிள்ளைகளில் மூத்தவன் அவன். அவள் ‘ஏற்கனவே மணமானவள் என்பது உனக்குத் தெரியாதா ? ‘ என்று கேட்டேன். ‘நன்றாகத் தெரியுமே ‘ என்றான். ‘பிறகு எதற்காக மணமானவளைக் காதலிக்கிறாய் ? ‘ என்றேன் சலிப்புடன். ‘காதல் அப்படித்தானே தோன்றுகிறது நண்பா ‘ என்றான் சிரிப்புடன். எனக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. ‘அவளிடம் சொல்லி விட்டாயா ? ‘ என்று கேட்டேன் பதற்றத்துடன். ‘இல்லை ‘ என்று உதட்டைப் பிதுக்கினான். அடுத்த கணமே ‘சொல்லவும் போவதில்லை ‘

என்றான். ‘பைத்தியமா நீ ? இன்னும் நாலுநாள்தான் பாக்கி, இப்போதும் சொல்லப் போவதில்லை என்றால் எப்போதுதான் சொல்லப் போகிறாய் ? ‘ என்றான். ‘இது எனக்கு மட்டுமே வந்த காதல். அவளுக்குத் தெரியப்படுத்துவதற்காக அல்ல. ஒரு வேளை தெரியப்படுத்திய பிறகு, அந்தக் காதல் அவளுக்கு இல்லை என்று தெரியவந்தால் என்னால் தாங்க இயலாது. அதைவிட அவள் மீது கொண்ட காதலோடு இப்படியே காலத்தை ஓட்டி விடுவேன் ‘. அன்று இரவு வெகுநேரம் தன் காதலைப் பற்றியே விடாமல் பேசிக் கொண்டிருந்தான்.

அவனுடைய ஒருதலைக்காதல் காதல் எவ்வளவு உறுதியானது என்பதைக் கால ஓட்டத்தில் புரிந்து கொண்டேன். பயிற்சிக் காலத்தில் நாங்கள் எல்லாரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்திலிருந்த அவளுடைய உருவத்தைக் கண்கொட்டாமல் பார்ப்பான். அவளுடன் பேசுவான். சிரிப்பான். கொஞ்சுவான். அவளுக்குச் சொல்ல இருப்பதையெல்லாம் நாட்குறிப்பில் எழுதி வைப்பான்.

அவனுடைய ஒருதலைக் காதல் நினைவுக்கு வரும்போதெல்லாம் அலெக்ஸாண்டர் குப்ரினுடைய கதையொன்றும் நினைவில் இடறும். அக்கதையின் பெயர் ‘அதிசயக்காதல் ‘. அக்கதையிலும் ஓர் இளம்பெண் வருகிறாள். வீரா நிக்கோலயேவ்னா. பெரிய பணக்கார வீட்டுப் பெண். வாஸ்லி பிரபுவின் மனைவி. ஏழு ஆண்டுகளாக அவளை ஒருதலையாகக் காதலித்துக் கொண்டிருக்கிறான் தந்தி அலவலகக் குமாஸ்தா இளைஞன் ஒருவன். அவன்மட்டுமே அவளைப் பார்த்திருக்கிறான். அவளோ அவனையே பார்த்ததில்லை. ஆனால் ஈஸ்டர், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் வாழ்த்து அனுப்புகிறான். ஜி.எஸ்.ஜெ. என்ற அவன் கையெழுத்து மட்டுமே அவளுக்கு அறிமுகம். அப்பாவியான அந்த இளம்பெண் அந்த விஷயத்தைத் தன் கணவனிடமும் சொல்லி வைக்கிறாள். இந்த நிலையில் அள் பிறந்தநாள் வருகிறது. யார் கண்ணிலும் படாமல் வந்து போகும் குமாஸ்தா ஒரு தங்கச் சங்கிலியையும் கடிதத்தையும் சமையல்காரியிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறான்.

பிறந்தாநாளுக்காக வந்திருந்த சகோதரன் இதைக் கேள்விப்பிட்டு கோபமுறுகிறான். அவனைக் கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான். பெயரை வைத்து தொலைபேசி எண்ணையும் வீட்டு முகவரியையும் கண்டறிந்து வீட்டுக்குச் செல்கிறவார்கள். நேருக்கு நேர் ஜெல்ட்காவைப் பார்த்துக் கண்டிக்கிறான் சகோதரன். ‘என்னை மன்னித்து விடுங்கள். எனது தவறு எனக்குத் தெரிகிறது ‘ என்று முணுமுணுக்கிறான் ஜெல்ட்காவ். தேநீர் அருந்துமாறு உபசரிக்கிறான். பிறகு மெல்ல வாஸிலியிடம், ‘அவளைக் காதலிக்காமல் இருப்பது எனது சக்திக்கு அப்பாற்பட்டது. சிறையில் தள்ளினாலும் சிந்தை மாறாது. உயிருடன் உள்ளவரை நேசிக்கவே செய்வேன். இதற்கு ஒரே வழிதான் உண்டு. மரணம்தான் அது. நீங்கள் விரும்பினால் மரணத்தையும் ஏற்கத்தயார் ‘ என்று சொல்கிறான். பிறகு அவர் அனுமதியுடன் வீராவிடம் தொலைபேசியில் பேசச் செல்கிறான். பத்து நிமிஷத்துக்குப் பிறகு திரும்பி வந்து வீரா தன்னிடம் பேசவே மறுத்து விட்டாள் என்றும் எப்போதாவது அவளைப் பார்த்தபடி ஊருக்குள்ளேயே இருக்கலாமா என்று கேட்டதற்கும் மறுத்து விட்டாள் என்றும் சொல்லி விட்டு மறுநாள் முதல் தன்னைப் பற்றிய பிரஸ்தாபமே இருக்காது என்கிறான். இறுதியாக வீராவுக்கு ஒரு கடிதம் எழுத கணவனிடமிருந்து அனுமதி பெறுகிறான் அவன். வீடு திரும்பிய கணவன் நடந்ததையெல்லாம் மனைவியிடம் சொல்கிறான். அவள் அச்சம் கொள்கிறாள். அந்த மனிதன் தற்கொலை செய்து கொள்வானோ என்று அச்சப்படுகிறாள். துரதிருஷ்டவசமாக அப்படியே நேர்கிறது. அலுவலகத்தில் பணத்தைக் கையாடிவிட்டதற்காக அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி வருகிறது. அன்றும் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. அவனுடைய கடிதம். தன் காதல் தவிர்க்கமுடியாதது என்றும் அவளுக்குத் தொல்லையாக இருக்கக் கூடாதென்பதற்காகத் தான் எடுக்கிற முடிவுக்கும் அவள் மீதுள்ள காதலே காரணமென்றும் எழுதப்பட்டிருக்கிறது. தனக்காக முடிந்தால் பீதோவனுடைய இரண்டாவது ஸொனாடா பாடுமாறு குறிப்பிட்டிருக்கிறான். வீரா குழம்புகிறாள். ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவளை வாட்டுகிறது. கணவனின் அனுமதியுடன் அவனைப் பார்க்கச் செல்கிறாள். அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அவன் உடலைப் பார்க்கச் சென்று வருகிறாள். அந்த ஸொனாடாவைப் பாடுமாறு அங்கும் அவளுக்குக் கோரிக்கை காத்திருக்கிறது. மனம் கசந்த நிலையில் வீடு திரும்புகிறாள். பியானோ வாசிப்பவனிடம் அமைதிக்காக ஏதாவது இசைக்குமாறு கேட்கிறாள். அதிர்ஷ்டவசமாகவோ துரதிருஷ்டவசமாகவோ அவன் பீத்தோவனின் இரண்டாவது சொனாடாவையே இசைக்கிறான். ‘உன்னுடைய காலடிச் சத்தமும் புன்னகையும் பார்வையும் என் நினைவிலே நிற்கிறது. என் கடைசி நினைவுகள் மகிழ்வும் துக்கமும் கலந்தவை. ஆயினும் அதற்காக நீ தயக்கப்படும்படி செய்ய மாட்டேன். என் வழியே தனித்து நான் செல்வேன். அதுதான் என் விதி. கடவுள் எனக்கிட்டுள்ள கட்டளை. உன் பெயர் வாழ்க ‘ என்று நீளும் அப்பாட்டைக் கேட்க வீராவின் மனம் பதறுகிறது. இந்தப் பாட்டை இசைத்ததன் வழியாக அந்த இளைஞன் தன்னை மன்னிக்கக் கூடும் என்று எண்ணுகிறாள் வீரா.

ஒருதலைக் காதலின் துன்பம் சொல்லில் வடிக்க இயலாதது. ஒருவகையில் பார்ப்பதற்குத்தான் அது துன்பமோ என்றும் தோன்றுகிறது. காதல்வயப்பட்டவர்கள் எப்படியோ லாவகமாக அதைக் கனிவாகவும் அக்கறையாகவும் மாற்றிக் கொள்கிறார்கள். அந்தக் கனிவே ஈடேறாத ஒருதலைக் காதலையும் நிறைவேறிய காதலுக்கு இணையான இடத்துக்கு உயர்த்தி விடுகிறது. ஒருதலைக் காதல் ஒருவகையான அதிசயக் காதல்.

*

மக்சீம் கோர்க்கியின் சமகாலத்தவரான குப்ரின் ருஷ்ய இலக்கிய மேதைகளுள் ஒருவர். வளமான கற்பனை நயத்துடன் உயிரோட்டம் நிறைந்த சிறுகதைகளைப் படைப்பதில் முக்கிமானவர். ‘அதிசயக் காதல் ‘ சிறுகதை எஸ்.சங்கரன் என்பவரின் மொழிபெயர்ப்பில் 1958ல் தேனருவிப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்த அதிசயக்காதல் என்னும் நுாலில் இடம்பெற்ற ஒன்றாகும்

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்