This entry is in the series 20030302_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


கழுவெளி கரிசல் கத்தரி வெய்யிலில்
புழுதி படிந்து அழுது வடிந்திட
பழுத்தக் கோரையில் முகத்தைச் சொரியும்
வரிசையுடைந்த ஆடு மாடுகள்
கொழுத்த கழுகு பனைமர உச்சியில்
எச்சிலூற இரையைத் தேடிட
கழுத்தை வளைத்து சுடலையன் மட்டும்
வானைப் பார்த்தான்,
இன்றாவது மழை வருமா ?

குளத்திலிருந்த கொஞ்ச நீரும்
குழம்பிப் போக, தவளைகள் மிதந்திடும்
இளைத்திருந்த மாடுகள் சேற்றில்
இறங்கி நடந்திட மூச்சு முட்டிடும்
களத்துநெல்லை பொறுக்கும் குருவிகள்
கானல் நீரை வீணில் தேடிடும்
களைத்துப் போன சுடலையன் மட்டும்
வானைப் பார்த்தான்
இன்றாவது மழை வருமா ?

வெள்ளை வானில் வேண்டா வெறுப்பில்
வந்து போகும் இரண்டொரு மேகம்
வீசும் காற்றில் தயங்கித் தயங்கி
‘மார்கழி மாச ‘ விடியல் வாசனை
சுள்ளிப் பொறுக்கும் பெண்டுகள் கூட
சுவரெறிப் பந்தாய் வீடு திரும்பிட
சுருங்கிய கண்களால் சுடலையன் மட்டும்
வானைப் பார்த்தான்,
இன்றாவது மழை வருமா ?

Na.Krishna@wanadoo.fr

Series Navigation