“மலர்கொடி”

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

கே.பாலமுருகன்



1

முதல்முறையாக அவளுடைய பெயரைப் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் போது வித்தியாசமாகத்தான் தோன்றியது. அன்று மிகவும் நெருக்கமாக இருந்த பெயர்தான் இன்று ஏதோ வேற்று தேசத்துப் பெண்ணின் பெயரைப் போல விலகியிருந்தது. நான் வீட்டிலில்லாத சமயத்தில் அவள் எப்படியோ என்னுடைய வீட்டைத் தேடி வந்து கொடுத்துவிட்டுப் போனதுதான் இந்தத் திருமணப் பத்திரிக்கை. அவளுடைய பெயர் மலர்கொடி.
அந்தப் பெயரை உச்சரிக்கும் போது, அவளுடைய ஞாபகங்கள் கொடியைப் போல மனதில் ஊர்ந்து சென்று பல திசைகளில் கிளைவிட்டு இறந்தகாலங்களை வெறித்து நிற்கிறது. மலரைப் போலத்தான் இருப்பாள். சாதரணமாக சொல்வதென்றால் அப்படித்தான் உவமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. மலர்கொடியைக் கடைசியாக ஏதோ ஓரு கோயில் திருவிழாவில் தற்செயலாகப் பார்த்தும் பேச முடியாமல் போன சந்தர்ப்பத்தோடுதான் நினைவுப்படுத்திக் கொள்ள முடிகிறது. அவள் அவளாகவே இருந்தால், நான் மட்டும் அவளுடைய ஞாபகங்களைச் சுமந்து திரியும் பத்து டுவா சிறுவனாகவே இருந்து வருகிறேன்.
அப்படியொரு சந்தர்ப்பத்தில் அவளைப் பார்த்தும் பேசுவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடைக்காமல் போனதற்கு, திருவிழாவின் கூட்ட நெரிசலை பொய் சமாதானமாகக் கூறிக் கொள்ளலாம். உண்மையில் கூட்டம் நெருக்கிக் கொண்டுதான் இருந்தது. மஞ்சள் பஞ்சாபி உடையில் அவள் அவளாகவே இருக்கிறாள் என்று நான் நினைத்துக் கொண்டது போன்ற தோற்றத்துடன் 5 நிமிடத்திலேயே என்னைக் கடந்துவிட்டாள்.
“டேய் மலர் மாதிரி இருக்குடா, அங்க பாரு மஞ்ச கலரு”
“பாத்தெண்டா, மலரு என்னெ பாக்கலெ போல, மலர்தானே?”
“நல்லா பாருடா, அதுதான். என்னாடா ஒனக்குப் போயி சரியா தெரிலனு கேக்கறெ?”
நான் அர்த்தப்பட்டுக் கூறியவை அருகாமையில் இருந்த நண்பனுக்கு குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் நான் என் மனதில் சேமித்து வைத்திருந்த மலர் இவளாக இருக்க முடியுமா? அவளுடைய தோள்களில் கையை சாத்திக் கொண்டு கூடவே ஒரு வாலிபன் நடந்து கொண்டிருந்தான். முரட்டுத் தோற்றம் அவனுக்கு. மலரை எடுத்து மாட்டுக் கொம்பில் சூட்டியது போன்ற உவமைச் சிறப்பாக இருக்கும் போல. சிறிது நேரத்தில் கூட்ட நெரிசலில் அவள் அந்த மலர்கொடி, இவ்வளவு காலம் நான் பார்க்க தவறிய என் மலர்கொடி, காணமல் போய் கொண்டிருப்பதைக்கூட உணர முடியாமல் நானும் கூட்டத்துடன் கூட்டமாக எதிலிருந்தோ நழுவிப் போயிருந்தேன். அவளுடைய முகம் முன்பு போல இல்லை. வெளிரிப் போயிருந்ததை மட்டும் வெகு சீக்கிரத்தில் கண்டு கொள்ள முடிந்தது.
“என்னாடா மச்சான், தெரியாத மாதிரி இருந்துட்டெ? ஒனக்குனு சின்ன வயசு கூட்டாளி அவ மட்டும்தானெ? எப்பவும் சொல்லி பெருமைபட்டுக்குவே. யேண்டா நீங்க பேசிக்க மாட்டிங்களா?”
“அவுங்க பத்து டுவாலேந்து போயி பல வருசம் ஆச்சுடா. நாந்தான் ஒங்ககிட்டலாம் சொல்ல மறந்துட்டென் போல, ஒனக்கு என்னா தெரியாதா? எங்கடா அவுங்க குடும்பம் இப்ப அங்க இருக்கு? முன்ன ஒரு தடவெ சுக்குல் போட்டி வெளையாட்டுக்குப் போயிருந்த போது பாத்தென், 16வயசு இருக்கும். வந்து பேசுனுச்சு. எப்படி இருக்கேனு கேட்டுச்சி. அப்பறம் சாதரணமா விலகிப் போச்சுடா”
“அதுக்கப்பறம் நீ பாக்கவெ இல்லையாடா?”
“சந்தர்ப்பம் கிடைக்கலடா. . எங்கயும் தேடாமலே இருந்துட்டேன்.”
உண்மையில் நான் மலர்கொடியைத் தேடாமல் இருந்ததுதான் ஆச்சர்யம். அவள் பத்து டுவா கம்பத்திலிருந்து வெளியேறும் போது எனக்கு 10வயது அவளுக்கு 9 வயது. வயது வித்தியாசம் பார்க்காமல் வாடா போடா என்றுதான் கூப்பிடுவாள். வயது வித்தியாசம் தெரியாமல்தான் நாங்களும் 5வயதிலிருந்து வளர்ந்து வந்தோம். அவளுடைய அப்பாவின் சிவப்பு கார் இன்னமும் என் நினைவுகளில் மலர்கொடியைச் சுமந்து கொண்டு நான் தொட முடியாத தூரத்திற்குப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் காரில்தானே அவள் குடும்பமே இடம் பெயர்ந்து போனார்கள். வீட்டு ஜன்னலில் தலையைக் கவிழ்த்தபடி அந்தக் கார் இருந்தும் இல்லாமல் போகும் தொடக்கத்தையும் பிறகு இல்லாமலே போன சூன்யத்தையும் காட்சி பிசகாமல் பார்த்துக் கொண்டே பல வருடம் கடந்துவிட்டேன்.
இன்னமும் அவள் அந்தக் காரில்தான் சென்று கொண்டிருக்கிறாள். மலர்கொடியை அந்தக் காரிலிருந்து இறங்கவிடாமல் செய்வது, அதே ஜன்னலில் இன்னமும் வயதைக் கடக்க முடியாமல் நின்று கொண்டிருக்கும் அந்த 10 வயது சிறுவனான ‘நான்தான்’. காலங்கள்தான் சில விஷயங்களுக்கு மருந்து என்பார்கள், ஆனால் எனக்கென்னவோ காலங்கள் மறுத்துப் போனவையாகத்தான் தெரிகிறது. மலர்கொடியும் நானும் சேர்ந்து சுற்றி விளையாடிய பத்து டுவா கம்பம் இன்றும்கூட அப்படியேதான் இருக்கிறதாக மனதில் படுகிறது. மலர்கொடியைப் பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டே இருக்கலாம். அவள் என்றுமே சுவார்ஷயம் குறையாமல்தான் எனக்குள் குவிந்து கிடக்கிறாள்.
2
பத்து டுவா கம்பத்தில் இருக்கும்போது என் பக்கத்து வீட்டிற்கு ஒர் இரவு பொழுதில்தான் மலர்கொடியும் அவளின் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள். இரவு நெடுக பக்கத்து வீட்டில் பொருள்களை அடுக்கும் ஓசையும் மேசையின் கால்கள் தரையில் நகரும் ஓசையும் மாறி மாறி கேட்டுக் கொண்டே இருந்தது. என் வீட்டு குசுனி பக்கமாக நின்று பார்த்தால் தகறத்தின் சந்திலிருந்து மலர்கொடியின் வீட்டின் அடுப்பு வைக்கும் சிமெண்டு கல் சின்னதாய் தெரியும். அந்தச் சந்திலிருந்துதான் மலர்கொடி அவளுடைய அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டு தலையைச் சோர்வாகத் தோளில் சாய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அன்றிலிருந்துதான் மலர்கொடியை எனக்குத் தெரியும். ஓரிரு நாட்கள் அவள் குசுனியில் அழுது அரற்றிக் கொண்டிருப்பதையும் பிறகு அம்மாவின் முதுகில் ஏறிக் கொண்டு கால்கள் இரண்டையும் உதறிக் கொண்டு இருப்பதையும் அதே சந்தின் வழிதான் பார்த்தேன். ஒரு நாள் சந்தின் அளவு விரிந்து அவளை வீட்டின் பின்புறக் கதவின் விளிம்பில் முதன் முதலாக நேருக்கு நேர் பார்த்துக் கொண்டேன். முதலில் குருகுருவென்று பார்த்துவிட்டு பிறகு சடாரென்று உள்ளே நுழைந்து கதவை அடைத்துவிட்டாள்.பெருத்த ஏமாற்றத்துடன் வயலை நோக்கி சாவகாசமாக நின்றுகொண்டிருக்கும் அந்தக் கதவின் அருகில் பரிதாபமாகச் சம்மனமிட்டு அமர்ந்திருந்தேன். எப்பொழுதும் அப்படி அமர்வது வழக்கம்தான்.
மறுநாள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, என் வீட்டு எதிரிலுள்ள புளியமரம் ஓரம் சரிந்து கிடக்கும் பழைய ஊஞ்சலில் ஏறி குந்திகாலிட்டு அமர்ந்து கொண்டு எங்கள் வீட்டின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள். நான் வெளியே வந்து நின்றதும் முதலில் வழக்கம் போல குருகுருவென்று பார்த்துவிட்டு, சிறிது நேரத்தில் மென்மையான சிரிப்பும் அவளிடமிருந்து வெளிப்பட்டது. நானும் பதிலுக்குச் சிரித்து வைத்தேன். மலர்கொடி என்னிடம் பேசிய முதல் வார்த்தை, அந்தப் புளிய மரத்தின் அடிவாரத்தில்தான் நிகழ்ந்தது.
“இது ஒங்களோட ஊஞ்சளா?”
அன்றிலிருந்து மதிய நேரம் தொடங்கி அவ்வப்போது சாய்ங்காலமும் நாங்கள் சந்தித்துக் கொள்ளும் தடமாக அந்தப் பழைய ஊஞ்சள் மாறிப் போனது. புளிய மரத்தின் நிழல் தரும் குளிர்ச்சி முதல் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய பழைய சைக்கிள் வரை எங்களுடைய உரையாடல் வார்த்தைகளுக்குப் பஞ்சமின்றி நீளும். என் அம்மாவோ அல்லது மலர்கொடியின் அம்மாவோ அழைத்தால்தான் ஊஞ்சளிலிருந்து இறங்கி வீட்டை நோக்கி ஓடுவோம். அவள் அவளாகவே இருந்தாள், நான் மட்டும்தான் அவளுக்காகவே என் இருப்பைத் தயார்படுத்திக் கொண்டே போகிறேன் என்பதெல்லாம் அப்பொழுது என்னால் உணர முடியாத விஷயங்கள்.
என் வீட்டுப் பின்புறத்தில் தலை கவிழ்ந்து கிடக்கும் சைக்கிளை அவளுக்காகத்தான் முதன்முறையாக வெளியில் எடுத்துச் சுத்தப்படுத்தினேன். நான் அவளுக்காக எடுத்து வந்த முதல் பொருள் ஒரு சாதரண பழைய சைக்கிள்தான். இருவரும் அதில் ஏறிக் கொண்டு தோ தாத்தா வீட்டுப் பக்கமாக சென்று விளையாடுவோம். ஊஞ்சளுக்கு சிறகு முளைத்திருந்தால் அது முதலில் தோ தாத்தா வீட்டுப் பக்கம்தான் போயிருக்கும் அல்லது சைக்கிளாகத்தான் மாறியிருக்கும். எங்களுடைய தடம் ஊஞ்சளிலிருந்து விலகி சைக்கிளுக்கு மாறியது.
அவள் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு, அவளுடைய இங்கிலிஸ் கவுனை கொஞ்சம் மேலே தூக்கி சொருகிக் கொள்வாள். நான் பெரிய யூ.டி.சி (எங்கள் இடத்தின் பழைய பேருந்தின் பெயர்) ஓட்டுனர் போல கம்பீரமாகச் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பேன். எங்களுடைய பயணம் வெகு சமீபத்தில் தொடங்கி முடிவடைந்து கொள்ளும் தூரம்தான் செல்லும் ஆனால் எங்களின் அந்த நேரமானது பட்டாம் பூச்சியாய் பல திசைகளில் எங்களைச் சுற்றி சிறகடித்துக் கொண்டிருக்கும்.
“எங்க போனம்?”
“என்னயெ கோலாலம்பூர்ல எறக்கி உடு”
அப்பொழுதெல்லாம் என் கம்பத்து வீட்டின் பின் புறத்தில்தான் கோலாலம்பூர் இருந்தது. அதாவது என்னுடைய மலர்கொடியின் கோலாலம்பூர். அவளைக் கோலாலம்பூரில் இறக்கிவிட்டு இல்லாத பயணிகளைப் பாசாங்குதனமாக ஏதேதோ ஊர்களில் இறக்கிவிட்டுக் கொண்டே போவேன். பிறகு பேருந்து(என்னுடைய பழைய சைக்கிள்) மீண்டும் கோலாலம்பூருக்குப் போய் சொல்லி வைத்தாற் போல மலர்கொடியை ஏற்றிக் கொண்டு 3 நிமிடத்திலேயே சுங்கைப்பட்டாணியை வந்தடைந்துவிடும். இது கோமாளித்தனமான விளையாட்டாக அப்பொழுது எங்களுக்குத் தெரிந்ததில்லை. இன்றும்கூட அது கோமாளித்தனமான விளையாட்டாக எனக்குத் தோன்றவில்லை. நான் இன்னமும் அந்தப் பழைய சைக்கிளில் மலர்கொடிக்காகக் காத்திருக்கிறேன். அவள் என்னுடைய கம்பத்து வீட்டின் பின்புறக் கோலாலம்பூரில் இருக்கிறாள். என்றாவது என் பேருந்து அவளுக்காக அந்தக் கோலாலம்பூர் போகும் என்று கறபனையில் கொஞ்சம் நம்பிக்கைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன்.
அங்கிருந்த சமயங்களில் நானும் மலர்கொடியும் எங்கள் வீட்டையும் வீட்டின் பின்புறத்திலுள்ள வயலையும் சுற்றித் திரியத் தொடங்கிய காலக்கட்டம்தான் மறக்க முடியாததாக இருந்தது. வயல்பரப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும், மேலும் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் மத்தியில் நடப்பதற்கான பாதையும் இருக்கும். எப்படியோ அந்தப் பாதையில் நடந்து போய் வீட்டிலிருந்து பல மீட்டர் தூரம் விலகி வந்து வீட்டை நோக்கி பார்த்துக் கொள்வோம். வீடு மிக தொலைவில் சிறு புள்ளியாய் தெரியும் போது மலர்கொடி துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்துக் கொள்வாள்.
“டேய் அங்க பாருடா. . நம்ப வீடு கண்ணுக்கெ தெரியுல. ஐஐஐஐ ய்ய்ய்யா. . நம்ப வீட்டுக்குப் போக வேணாம். எங்கம்மா நல்லா தேடட்டும்”
“ஏய் மலரு, ஒங்கம்மா ஒன்ன போட்டு அடிப்பாங்க. வா போயிறலாம்”
“யேன் ஒங்கப்பா ஒன்ன அடிக்க மாட்டாறா? ஒனக்கும்தான் அடி உழும். ரெண்டு பேரும் சேந்து வாங்கலாம்டா, இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்”
“மலரு நீ யேன் சொன்னா கேக்கவே மாட்டறெ?”
“பொம்பளை பிள்ளிங்கனா அப்படிதான், நீ சும்மா இரு”
மலர்கொடிக்கு அப்பொழுது 8வயதுதான் ஆனால் அவள் பேசிய சில வார்த்தைகள் இன்னமும் முதிர்ச்சி குன்றாமல் அப்படியேதான் என் காதுகளின் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
“இன்னும் கொஞ்ச தூரம் போயிட்டு வரலாம்டா” என்று கூறியவள் என்னைப் பாதியிலே இந்த நினைவுகளுக்குப் பறிகொடுத்துவிட்டுப் போனதுதான் எஞ்சியது. அந்த வயல், நாங்கள் பார்த்து ஏங்கிய தூரம், சிறு புள்ளியாய் தெரிந்த வீடு, வயல் பாதைகள் எல்லாமும் அந்த சின்ன வயசு மலர்கொடிக்காக சுவார்ஷயம் குறையாமல் எனக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தனை வயதாகியும் இன்னமும் குசுனி பக்கமாக வந்து நிற்கும் பொழுது, சந்தின் வழியாகப் பார்ப்பேன். வெறும் இருள் மட்டும்தான் சுருங்கிக் கிடந்த போதும் மீண்டும் மீண்டும் அந்த இருளுக்குள்ளிருந்து தெரியும் மலர்கொடியின் சின்ன வயசு இங்கிலிஸ் கவுனுக்காக இருளைப் பார்த்தே ஏமாந்து போவேன்.

3
`“யேண்டா, அந்த மலரு பிள்ள கல்யாணத்துக்குப் போயிட்டு வரனும், மறந்துறாத. வீட்டுக்கு வந்து கொடுத்துட்டுப் போனுச்சு”
நாற்காலியில் அமர்ந்து கொண்டு அம்மா கூறிவிட்டுப் போனதை மெல்ல சுவீகரிக்கத் தொடங்கினேன். நிச்சயம் மலர்கொடி கல்யாணத்திற்க்குப் போய்தான் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பத்திரிக்கையில் அவளுடைய பெயர் அழகாகத் தெரிந்தது. அவள் பெயர் மட்டும்தான்.
“மலரு நான் ஒன்னுக்குப் போவ போறேன், பாத்துக்க யாராச்சம் வராங்களானு”
“டேய் அசிங்க பிடிச்சவனே, அங்கயா நீ ஒன்னுக்குப் போவ?”
எங்கள் வீட்டின் ஜன்னலிலிருந்து கொஞ்சம் எக்கிப் பார்த்தால் வயலை ஒட்டி நிற்கும் வாழை மரங்கள் ஒழுங்கற்ற நிலையில் தெரியும். அந்த மறைவில்தான் மலர்கொடியைக் காவலுக்கு நிற்க வைத்துவிட்டு நான் சிறுநீர் கழிப்பேன். அவள் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டு, எனக்குக் கேட்கும்படி கத்துவாள்.
“டேய் வெக்கம் இல்லாத பையன்டா நீ”
அவளும் வீட்டின் பின்புறச் சாக்கடையில் சில சமயங்களின் கால்கள் இரண்டையும் பரப்பிக் கொண்டு சிறுநீர் கழிப்பதற்காக அமர்ந்து கொண்டிருக்கும் போது நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்று கொண்டு மீண்டும் வழக்கப்படி கத்தித் தீர்த்துவிடுவாள். இன்றும் நான்சுவர் மறைவில் சிறுநீர் கழிப்பதற்காக உடையைக் கலைக்கும் போது, அதே மலர்கொடி, எனக்குப் பின்புறத்தில் நின்று கொண்டு அதே தோரணையில் கத்துவது போலத்தான் இருக்கிறது.
“டேய் வெக்கம் கெட்டவனே. . இப்படியா ஒன்னுக்குப் போவாங்க?”
0 0 0 0 0 0
“டேய், வந்து சாப்டுடா. . டேய். .”
அம்மா மீண்டும் அழைத்துக் கொண்டிருந்தார். எழுந்து நிமிரும் போது, தலைக்கு மேலிருந்து ஏதோ ஒன்று கழன்று கொண்டு வீழ்ந்தது போல இருந்தது. இலேசான தடுமாற்றம். பத்திரிக்கையைச் சரிப்படுத்தி என் அறை மேசையில் வைத்துக் கொண்டேன். அவளுடைய கல்யாணத்திற்கு இன்னமும் 5 நாட்கள் இருந்தன. என் மலர்கொடியை அல்லது நான் இன்னமும் சேகரித்து வைத்திருக்கும் அந்த பத்து டுவா மலர்கொடியைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருப்பது சுகமாக இருந்தது. எனக்கென்று இருக்கும் ஒரேயொரு சின்ன வயசு கூட்டாளி அவள் மட்டும்தானே. அவள் அவளாகவே இருக்கட்டும் எனக்குள் மட்டும். அவளுக்கு இப்பொழுதுதான் 5 வயது, கால்களை உதறிக் கொண்டு அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருக்கிறாள்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation