வைரமுத்துவே வானம்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

வானவன்


கவலைப்படாதீர்கள்
வைரமுத்து.

உங்கள்
ஏணிகளின் நீளம்
கொசுக்களைக் கொஞ்சம்
குசு குசுக்க வைப்பதும்,

உங்கள்
ஏரிகளின் ஆழம்
நீச்சல் தெரியா நரிகளை
வெல வெலக்க வைப்பதும்
சகஜம் தான்.

உங்கள்
விரல்களில் வழியும்
கவிதைக் கள் குடித்து
யாரும்
செத்துப் போன சரித்திரமில்லை.

உங்கள்
பாதங்களுக்குப் பின்னே
பேனாக்களோடு
புறப்பட்ட பரம்பரையே உள்ளது.

சில
கவர்ச்சிப் பாடல்களால்
நீங்கள்
இகழ்ச்சிப் படுத்தப் படுவீர்களானால்
கவலைப் படாதீர்கள்.

பானையில்
கல்களைப் பொறுக்கிப் பொறுக்கியே
பதம் பார்க்கும்
சமையல் சமுதாயம்
ஓட்டைப் பானையில் கூட
சமைக்கத் துணியலாம்.

உங்கள்
புகழ் முகத்துக்கு நேரால்
புழுதி பூசுவதால் மட்டுமே
தங்கள்
முகங்களை அடையாளம் காட்டுபவர்கள்
முக்கியமில்லை உங்களுக்கு.

உங்கள்
கவிதை நூல்களின் கனத்தின்
கர்ப்பமாகிப் போன
கவிதை ரசிகர்கள் ஏராளம்.

உங்கள்
சமுதாயச் சிந்தனைகளினால்
தங்கள்
தகர சிலேட்களை
தூசு தட்டிக் கொண்டவர்கள்
ஏராளம்.

உங்கள்
அறிவியல் எழுத்துக்களால்
தங்கள்
அறிவுக்குள் கொழுத்தவர்கள்
ஏராளம்.

நீங்கள் தான்
பூச்சிகளில் கூட
கவிதைகளைக் கண்டவர்.
கவிதைகளையே
பூச்சிகளாய் பார்ப்பவர்களை
புறக்கணியுங்கள்.

அவர்களுக்கு
பதில் சொல்வதற்காய்
உங்கள்
கற்பனைக் குதிரையை
விற்பனை செய்யாதீர்கள்.

நீங்கள்
விருது வாங்கினால்
வியர்த்துப் போவார்கள்,
அவர்களின்
கனவு இருக்கைகளில்
உங்கள் நிஜம் இருக்கும்
கவலை அவர்களுக்கு,

உங்களுக்கு
இலக்கிய விருது வரவில்லையே
எனும்
வருத்தம் எனக்கு.
நீங்கள் எழுதுவது
இலக்கியமே இல்லை என்று
ருத்ர தாண்டவமாடுவோர்களை
விட்டு விடுங்கள்.

பாரதிக்கு யாரப்போது
பாராட்டுப் பத்திரம் வாசித்தது.

பாரதிக்குப் பின்
நீங்கள் தான்.

நீங்கள் மட்டும்
இல்லாதிருந்திருந்தால்
என் தமிழை
இவர்கள்
அழுக்குக் கூடைக்குள்
அழுத்தித் திணித்திருப்பார்கள்.

இவர்கள் பேசுவதை
நம்
அங்குசங்களால்
அடக்கி விட முடியாது.

நீங்கள்
காரில் போகும் கவலை தான்
அவர்களுக்கு.

அவர்கள்
நிறுத்த வேண்டுமானால்
உங்கள் வீட்டுக்கு
வறுமை வரவேண்டும்.

உங்கள்
செல்வங்கள் எல்லாம்
ஒரு
ராத்திரி நேரத்தில்
நசித்துப் போகவேண்டும்.

அதைவிடச் சிறப்பு
அவர்களின்
விஷம விமர்சனங்களை
பாதையோரப் பயணியாய்
பார்த்துக் கடப்பதே.

tamil400@yahoo.com

Series Navigation