வேத வனம்- விருட்சம் 99

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

எஸ்ஸார்சி


இந்திரனைக் காதலன் போலே எழுப்பு
செல்வப்பேழையைக்காப்பதுபோலே
செவ்வமளிக்கும் வீரனைக் காத்திடுக
பசுவும் தானியமும்
பலமும் பல்பொருளும் புத்தியும் தருக அவன்
வலிமை மிகு வீர்யம் நிறை
சோமம் பருகும் இந்திரன்
எப்போதும் அளித்தலே செய்கிறான்
சூதாடி ஆடுகாய்களை நேரம் பார்த்து நகர்த்தி
வெற்றி இலக்கை எய்துவதுபோலே
மேலான செயலால்
ஆதாரம் பற்றுகிறான் இந்திரன்
அரக்கன் அற்புதன் சிரம் பிளந்து
அஹியைக்கொன்று
இந்திரன் ஏழு நதிகளை விடுவித்தான்
இந்திரனே பிரம்மம் பழிப்போரை கொன்றுவிடு
தானம் தராதோரை கால்களால் மிதி
பொழிந்த பொழியப்படெ வுள்ள
சோமம் நினது
மக்கள் தலைவன் நீ
அசையும் மலைகளையும் நிலத்தையும்
நிலைப்படுத்தியோன் நீ
வானம் திரமாக்கியோன் நீ
பசியும் சிறுமையும் பேதமையும்
போயொழிந்து பசுவும் தானியங்களும்
எம்மிடம் சேரட்டும்
அக்கினி பிரம்மத்தோடு சேர்ந்து
கரு காப்பாற்றப்படுக
குழந்தைகள் காக்கப்படுக
சகோதரன் போலே காதலன் போலே
கணவன் போலே
உன்ளேயேயிருந்து வாரிசழிக்கும் தீமைகள் தொலைக
தூக்கத்தில் இருளில் அருகே சயனித்து
வாரிசழிப்போர் தொலைக
அற்புதன் வச்சிரக்கையோன்
வல்லானே இந்திரனே
பசு குதிரை செல்வம் தேர் எனச்செல்வங்களத்தனையும்
வீரமாய்ப்பொழிக எமக்கு.
அக்கினியை அழைக்கிறோம்
அனேகர் விரும்பும் அக்கினி கிரகபதியாவான்
அவிகொண்டு அழைக்கிறார்கள் அவனை
தருப்பைகள் விரிக்கப்பட அக்கினி தோன்றுகிறான்
சுந்தரன் அக்கினி
துதிக்கருகன் அக்கினி
காளைபோல் குதிரைபோல் அக்கினி எழுப்பப்பட்டுள்ளான்
அவிகொண்டு போற்றுவோம் அக்கினியை
காளைகள் போலே யாமும் ஆகி
அக்கினியை எழுப்புவோம் யாம்
இந்திரா உன் சக்தியை
வானும் விண்ணும் பெருக்கிட
மலைகளும் நீரும் நின்னை
எழுச்சி கொள வைக்கின்றன
பெரியோன் விஷ்ணுவோடு வையம் மித்திர வருணர்
போற்றுகின்றனர் நின்னை
மருத்துக்களின் பலம் நின்னொடு சேர்கிறது
மானிடன் யுவதியின் பின்னே
சூரியன் உஷையின் பின்னே தொடர்கின்றனர்
உயர் மங்கலம் வேண்டி புனிதம் தரிக்க
மக்கட்பேற்றுக்கு விழைகிறான் மானுடன்
ஒளியொடு ஆண்மை தந்து வீரப்புதல்வர்களையும் தா
அன்னையும் பிதாவும் எமக்கு நீயே இந்திரனே
வல்லமை தருவாய் சதக்கிருதுவே
செல்வமுடையோனை நண்பனாய் ஏற்பதில்லை யாம்
சுராபானம் அருந்துமவர்
நின்னை நிந்தனையே செய்கின்றனர். ( அதர்வ வேதம் காண்டம் 20 சுலோகம் 713
வரை)
——————————————————-

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி