வினை விதைத்தவர்கள்!

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அந்தச் சின்ன வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக அன்றையப் பொழுது விடிந்தது போலத் தெரிந்தது. காரணம், சிறு விவசாயிகள் அரசிடகிருந்து பெற்ற கடன்களை யெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்கிற செய்தி அதற்கு முதல் நாள் மாலையே அரசல் புரசலாகப் பரவி யிருந்ததுதான் அப்படி ஒரு செய்தியை எல்லாரிடமும் பரப்பியது சட்டமன்ற உறுப்பினரை உறவினராய்க் கொண்ட சின்னச்சாமி சேர்வைதான். அடிக்கடி பட்டண்த்துக்கு வேறு போய் வருகிறவர். பட்டணத்தில் அவருடைய தம்பி ஓர் அங்காடி வைத்து நடத்திக் கொண்டிருந்தார். அந்த அங்காடியில் சின்னசாமி சேர்வைக்கும் சமப்பங்கு இருந்தது. இதனால் அவர் அடிக்கடி பட்டணத்துக்குக் கணக்கு வழக்குகளைக் கவனிப்பதற்கும், அங்காடி நன்றாக நடை பெறுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கும் போய் வந்துகொண்டிருப்பதுண்டு. அப்படிப் போன போதெல்லாம் தம் உறவினரான சட்டமன்ற உறுப்பினரையும் தவறாது சந்தித்துவிட்டு ஊருக்குத் திரும்பி வந்ததும், ‘இப்படிச் செய்யப் போகிறார்கள், அப்படிச் செய்யப் போகிறார்கள்’ என்றெல்லாம் வாய் வீச்சாக ஊர் மனிதர்களைக் கூட்டி வைத்துக்கொண்டு அளப்பார். அப்படி அவர் அளக்கிற அளப்புகளில் சில உண்மையாவதுண்டு. சில பொய்த்துப் போவதுண்டு. எப்படியானாலும், அவர் செல்வாக்குள்ள ஒரு மனிதர் என்கிற பெயரை அவ்வூர் மக்களிடையே பெற்றிருந்தார்.

ஒரு வாரத்துக்கு முன்னால் சென்னைக்குப் போய்த் திரும்பிய அவர் விவசாயக் கடன்களைச் சர்க்கார் ரத்துச் செய்வதை பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்து வருவதாகவும், கிட்டத்தட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன என்றும் விவசாயிகள் பாடு இனிக் கொண்டாட்டந்தான் என்றும் திட்ட வட்டமாக அறிவித்த போது விவசாய மக்கள் மிகப் பெரிய அளவில் இருந்த அவ்வூரே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

மறு நாள் காலை ரேடியோச் செய்தி சின்னச்சாமி சேர்வையின் கூற்றை உறுதிப் படுத்தியது. மகிழ்ச்சியில் விவசாயிகளுக்கெல்லாம் தலைகால் தெரியவில்லை. அதிலும், அந்தச் சின்ன வீட்டில் இருந்த சிறு விவசாயி மாணிக்கம் சேர்வைக்கும் அவர் மனைவி மக்களுக்கும் ஒரே கும்மாளந்தான்.

“என்னங்க! அப்படின்னா நாம வாங்கியிருக்கிற மூவாயிரத்தையும் திருப்பியே குடுக்க வாணாமா ?” என்று மாணிக்கம் சேர்வையின் மனைவி மயிலம்மா குரலில் கரை புரண்ட உற்சாகத்துடன் வினவினாள்.

“ஆமா. திருப்பிக் குடுக்கத் தேவை இல்லே.”

“முழுத் தொகையுமா ? இல்லாட்டி கொஞ்சத்தைத் திருப்பிக் குடுக்கும்படி இருக்குமா ?”

“நீ வேற. முழுக்க முழுக்க வாபஸ் பண்ணிட்டாங்க. ஒரு தம்பிடி கூடத் திருப்பிக்குடுக்கத் தேவை இல்லே, பிள்ளே!”

“அப்ப, நம்ம மரகதத்துக்கு இந்த வருசம் கலியாணத்த முடிச்சிறலாம்னு சொல்லுங்க!” – இப்படிச் சொன்ன மயிலம்மாவின் குரல் மிக இரைந்தும் அளவு கடந்த உற்சாகத்துடனும் ஒலித்தது

தாய் தந்தையரின் பேச்சைக் கேட்டபடி அங்கு ஓர் ஓரமாய்க் குந்திக்கொண்டிருந்த மரகதம் அவர்களது பேச்சுத் தன் திருமணத்தை நோக்கித் திரும்புவதைக் கண்டு வெட்கப்பட்டு முகத்தைக் கவிழ்த்துக்கொண்டாள்.

“இனிமே நீ வேணா பாரு. நம்ம சனங்கல்லாம் முழிச்சுக்கிட்டாங்க. முன்னே சரிவாரம் கேட்டாங்க. இனிமேப்பட்டு நெலத்தையே கேப்பாங்க. கொடுக்காட்டி கலகம் செய்வாங்க. உழைக்கிறவங்க செல்வாக்கு ஒசந்துக்கிட்டே போறதால, சர்க்காரு இனிமே அடி பணிஞ்சுதான் ஆகணும். . . “ என்று அவர் விரலைச் சொடுக்கினார்.

பல் விளக்கிவிட்டுக் கொல்லைப் புறத்திலிருந்து அவர் சொற்களைக் கேட்டபடியே அங்கு வந்து நின்ற அவருடைய மூத்த மகன் ராமு, “அதெல்லாம் சரின்னே வச்சிக்கிறுவம். ஆனா வாங்கின கடனைத் திருப்பிக் குடுக்க மாட்டோம்னு சொல்றதெல்லாம் அடாவடித்தனம். நாளைக்கு மறு கடன் குடுக்க மாட்டாங்க,” என்றான்.

“குடுக்காட்டி போராட்டம் நடத்துவோம்.”

“எந்தப் போராட்டத்துக்கும் ஒரு நியாயம் வேணும்ப்பா. வாங்கின கடனைத் திருப்பிக் குடுக்கக் கூடிய வசதியுள்ள வெவசாயிங்க கூட சர்க்காரை ஏமாத்துறது நாயமில்லே. நம்ம தாய் தகப்பன் கிட்ட நாமே திருடுற மாத்ரிதான்!”

“அட, சர்த்தான், போடா. போக்கத்த பயலே. சொம்மாக் கெடப்பியா ? பள்ளிக் கூடத்துல நாலு எளுத்துப் படிச்சுக் கிட்டிருக்கிறதால எல்லாமே தெரிஞ்சவன் கணக்காப் பெனாத்தாதே! ஒஞ்சோலியப் பாருடா.”

மாணிக்கம் சேர்வையின் குரல் மிகவும் காட்டமாய் ஒலித்தது. மேலும் ஏதோ எதிர்த்துச் சொல்லுவதற்காக ராமு வாயைத் திறந்ததைக் கண்ட மயிலம்மா ஒன்றும் பேச வேண்டாம் என்று சாடையிலேயே மகனுக்கு உணர்த்தினாள். ஏனென்றால், மாணிக்கம் சேர்வை ரொம்பவும் முன்கோபக்காரர். வளர்ந்த மகனாயிற்றே என்று கூடப் பார்க்காமல் கை ஓங்கி அடித்துவிடக் கூடியவர். ராமுவும் குறிப்பறிந்து ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டுவிட்டான். மேலும் அங்கே இருந்தால் தான் ஏதேனும் பேசியே தீரும்படி நேரலாம் என்பதால் அவன் அங்கிருந்து நீங்கிப் பக்கத்து அறைக்குப் போய் உட்கார்ந்துகொண்டான். இருப்பினும் தாயும் தகப்பனும் தொடர்ந்து பேசியவை அவன் செவிகளை எட்டி நியாய உணர்வுள்ள அவனைக் கொதிப்புறச் செய்தன.

“என்னங்க ? உங்க மகன் என்னமோ நியாயம் பேசறானே ?”

“கெடக்குறான் களுத! அதிகப் பிரசங்கிக் களுத! அப்பனுக்கே புத்தி சொல்லக் கெளம்புறவன் உருப்பட்ற தேது ?”

“அப்படி யெல்லாம் பேசாதீங்க. (குரலைத் தணித்துக்கொண்டு) அதுக்குத்தான் பிள்ளைங்களைப் பக்கத்துல வச்சுக்கிட்டு ரகசிய மெல்லாம் பேசக்கூடாதுன்றது!”

“என்னடி ரகசியம் பேசினோம் ?”

“வெவசயத்துக்கு வாங்கின கடன்ல பாதியத் தானே வெவசாயத்துல போட்டோம் ? மீதிய மாடியில ஒரு ரூம்பு கட்டுறதுக்குச் செலவு பண்ணினோம், இல்லியா ? நம்ம கிட்ட ஆயிரம் தில்லு முல்லு இருந்தாலும், நம்ம பிள்ளைங்களுக்கு அதெல்லாம் தெரியும்படியா நாம எதுவுமே செய்யக் கூடாது.”

மாணிக்கம் சேர்வை ஏதும் பதில் சொல்லாதிருந்ததையும் ராமு கவனித்தான். ‘இந்த அம்மாவும் அப்பா பக்கந்தான். செய்யிற தப்பைப் பிள்ளைங்களுக்குத் தெரியாம செய்யணும்னு உபதேசமில்ல செய்யிறாங்க! சாமர்த்தியக்காரங்கதான். . .’

ராமு ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். பள்ளி இறுதித் தேர்வுக்கு இன்னும் இரண்டு வகுப்புகள் படித்து முடிக்கவேண்டும். அந்த ஊரில் நடுநிலைப் பள்ளி கூட இல்லை. தொடக்கப் பள்ளி மட்டுமே இருந்தது. அவனும் அவன் தம்பிகள் இரண்டு பேரும் ஒரு தங்கையும் பக்கத்து ஊருக்கு நாள்தோறும் முறையே மூன்று மைல்கள் போகவும், மூன்று மைல்கள் வரவுமாக, ஆக மொத்தம் ஆறாறு மைல்கள் நடக்க வேண்டியதிருந்தது. மாணிக்கம் சேர்வை படித்தவர் அல்லர். எழுத்துக் கூட்டிப் படிக்கவும், கோணலும் மாணலுமாய்க் கையொப்பம் இடவும் மட்டுமே அறிந்தவர். ‘ ஒருவேளை படிச்சவரா இருந்தாருன்னா இது மாதிரித் தப்புப் பண்ணி சர்க்காரை ஏமாத்த மட்டாரோ ?’ என்று ராமு கணம் போல் நினைத்து, ஆனால் அவ்வாறு நினைத்து முடித்த மறுகணமே அந்த நினைப்பை விரட்டினான். ‘சின்னச்சாமி சேர்வை படிச்சவரு தானே ? அவருதானே இந்த ஊரு வெவசாயிங்களுக் கெல்லாம் கடன் வாங்கிக்குடுக்க ஏற்பாடு செஞ்சாரு ? அவரு தானே ஏமாத்துறதுக்கும் வழி சொல்லிக் குடுத்தாரு ? ஒவ்வொருத்தர் கிட்டேருந்தும் அஞ்சஞ்சு பெர்செண்ட் மேனிக்குக் கடன் தொகையிலேருந்து கையூட்டு வாங்கிக்கிட்டாரே ? . . படிப்பாவது, மண்ணாங்கட்டியாவது! நியாயம்குற உணர்ச்சி ரத்தத்துல இல்ல இருக்கணும் ?’

“வந்து கஞ்சியைக் குடிச்சுட்டுப் போயேண்டா, ராமு ? ஆறிப் போகுதில்ல ?” என்ற அம்மாவின் குரல் அவன் எண்ணங்களைத் தற்காலிகமாய்த் தடுத்தது. அவன் எழுந்து போனான். தம்மைத் தாண்டிக்கொண்டு சமையற்கட்டுக்குப் போன ராமுவை மாணிக்கம் சேர்வை முறைத்துப் பார்த்தார். அதை ராமுவும் கவனித்தான். தலையைக் குனிந்துகொண்டு போனான்.

சில நாள்களுக்குப் பிறகு ஒரு நாள், சில வேளைகளில் நடப்பது போல், சின்னச்சாமி சேர்வையின் தலைமையில் அவர்கள் வீட்டுக்கு எதிரே தெருவில் அவரை ஏழெட்டுப் பேர் சுற்றிக்கொண்டு ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர் முந்திய நாள்தான் சென்னைக்குப் போய்த் திரும்பி வந்திருந்தார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஏதோ தாமே அமைச்சராக இருக்கும் தோரணையுடன் சின்னச்சாமி சேர்வை பதிலகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார். தன் வீட்டுத் திண்ணையில் பாடப் புத்தகமும் கையுமாக உட்கார்ந்து அவர்களின் இரைச்சலான பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்த ராமுவுக்குக் கொஞ்சம் எரிச்சல் வந்தது.

“அது சரி, நம்மூருக்கு அய் ஸ்கூலு எப்பக் கட்டப் போறாங்க ? அதைப் பத்திக் கல்வி மந்திரியைக் கேட்டாங்களா ?” என்று ஒரு கேள்வி புறப்பட்டது. கேள்வியைக் கேட்டவர் அவனுடைய அப்பா மாணிக்கம் சேர்வைதான்.

“நம்ம எம்.எல்.ஏ. கிட்ட அதைப் பத்திச் சொல்லி யிருக்குறேன். அடுத்த வாட்டி மெட்றாசுகுப் போறப்ப கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வாறேன்,” என்று பதில் சொன்ன அவர், “அடுத்தது ?” என்று ஏதோ தாமே ஓர் அமைச்சர் போன்ற பாணியில் தலையைப் பின்னால் சாய்த்துக்கொண்டும், புருவங்களை உயர்த்திக்கொண்டும் இடுப்பில் இரு கைகளையும் பதித்தவாறு பைசா நகரத்துக் கோபுரம் போல் நின்று வினவிய போது எழுந்த ஆத்திரத்தில் ராமு விருட்டென்று வீட்டுக்குள் போய்ப் பல்லைக் கடித்தான், . . .

இதற்குப் பிறகு கொஞ்ச நாள்கள் கழிந்த பின்னர், கல்வி அமைச்சர் அந்த ஊர் வழியாகப் பக்கத்து ஊருக்குச் சென்று ஒரு பொதுத் துறைக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு இருந்த சேதி அவ்வூர் மக்களை வழக்கம் போல் சின்னச்சாமி சேர்வையின் வாயிலாக எட்டியது. வழியில் ஊர் மக்களைச் சந்தித்து ஒரு மகசர் வாங்கிக் கொள்ளுமாறு அவர்களின் சார்பில் சின்னச்சாமி சேர்வை தந்தி யடித்து அதற்கு அமைச்சரின் ஒப்புதலையும் பதில் தந்தி மூலம் பெற்றுச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.

அமைச்சரின் கார் ஊருக்குள் நுழைகிற எல்லையில் இருந்த பயணிகள் பங்களாவில் மாணிக்கம் சேர்வை உட்பட ஊர் மக்கள் பலர் அவரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார்கள்.

அமைச்சர் வந்தார். பல கேள்விகள்-பதில்கள் ஆன பிறகு தம் பங்குக்கு மாணிக்கம் சேர்வையும் வாயைத் திறந்தார்.

“எங்க ஊருக்கு எப்ப அய் ஸ்கூலு கட்டித்தரப் போறீங்க ? பசங்கல்லாம் தெனமும் போக மூணு கல்லு வார மூணு கல்லு, ஆக மொத்தம் ஆறு கல்லு, நடக்க வேண்டி யிருக்குதேய்யா ? சீக்கிரம் கட்டிக் குடுத்தா உபகாரமா யிருக்கும்.”

அமைச்சரின் முகத்தில் இலேசான புன்சிரிப்புத் தோன்றியது. அவர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத் தொடங்கினார்.

“. . . சர்க்காருடைய நிதி நிலைமை சரியா யில்லை. விவசாயக் கடன்கள் எல்லாம் ஒழுங்காய்த் திரும்பி வராததால், ரிசர்வ் வங்கி தமிழக அரசுக்கு மேலும் கடன் கொடுக்க மறுத்துவிட்டது. ‘ அது விவசாயத் துறை; இது கல்வித்துறையாச்சே ?’ என்று நீங்கள் கேட்கக் கூடும். ஆனால், சர்க்காரின் பொதுவான நிதி நிலைமையையும் நாங்கள் கவனிக வேண்டும். ஏராளமான கடன் தொகைகள் பொது மக்களிடமிருந்து திரும்பி வராததால்- விவசாயத் துறை என்று மட்டுமில்லாமல், வேறு சில துறைகளிலும் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்கள் உரிய காலத்தில் திருப்பிக் கொடுக்கப்படாமையால் – சர்க்காரின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலையில் புதிய ஆக்க வேலைகள் பலவற்றை நாங்கள் திட்டமிட்ட முறையில் தொடங்க முடியாத நிலையில் இருக்கிறோம். அதனால் இன்னும் சில ஆண்டுகளுக்கு உங்கள் ஊருக்கு மட்டுமல்லாமல், வேறு பல ஊர்களுக்கும் பள்ளிக்கூடங்கள் கட்டிக் கொடுப்பதாக இருந்த எங்கள் திட்டத்தை நாங்கள் கைவிட நேர்ந்துவிட்டது. மன்னிக்க வேண்டுகிறோம். . .”

அமைச்சரைப் பார்க்கும் சாக்கில் தானும் அங்கே வந்திருந்த ராமு சாடையாக மணிக்கம் சேர்வையின் பக்கம் பார்த்தான். பொருள் பொதிந்த மகனின் பார்வையைக் கண நேரத்துக்கு மேல் சந்திக்க முடியாததாலோ என்னவோ, அவரது பார்வை தாழ்ந்து பின்னர் நிமிர்ந்து வேறு இடத்துக்குத் தாவியது.

“பாட்டாளித் தோழன்” – மே, 1982

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா