நாக்குகள்

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

நெப்போலியன்


நாக்குகள்
நெருப்பாலானவை
சொற்களே சிக்கிமுக்கி.

நாக்குகள்
நரம்புகளற்றவை
சொற்களே வரம்புமானி.

நாக்குகள்
சர்ப்ப கொடுக்குகள்
சொற்களே விஷமாட்டி.

நாக்குகள்
துரோக நக்கல்கள்
சொற்களே சுவைநெருஞ்சி.

நாக்குகள்
ரகசியப் பூதங்கள்
சொற்களே கிணறுவெட்டி.

நாக்குகள்
நீள துயரங்கள்
சொற்களே ரணஉலா.

நாக்குகள்
சுயம்பற்றவை
சொற்களே சூத்திரதாரி.

நாக்குகள்
இருளின் வேர்கள்
சொற்களே அந்தகாரவிருட்சம்.

நாக்குகள்
கண்ணியமற்றவை
சொற்களே பலாத்காரப்பேய்.

நாக்குகள்
பொறுப்பற்றவை
சொற்களே காவாச்சனி.

நாக்குகள்
இரக்கமற்றவை
சொற்களே கருணையொழி.

நாக்குகள்
காமத்தொங்கல்கள்
சொற்களே எச்சிலலை.

நாக்குகள்
இலட்சியமற்றவை
சொற்களே நாற்காலி.

நாக்குகள்
குருடானவை
சொற்களே வெளிச்சப்புரை.

நாக்குகள்
நிர்வாணமானவை
சொற்களே சதையுரி.

நாக்குகள்
திக்கற்றவை
சொற்களே ஊதாரித்திரி.

நாக்குகள்
சூல் கொள்பவை
சொற்களே கருகலைப்பி.

நாக்குகள்
ரோமம் மிக்கவை
சொற்களே சவரமுனை.

நாக்குகள்
வர்ணமானவை
சொற்களே சாயமிழக்கி.

நாக்குகள்
இரட்சிப்படையாதவை
சொற்களே வன்தஞ்சன்.

நாக்குகள்
மீறலாலானது
சொற்களே இச்சைநுனி.

நாக்குகள்
கசப்பானவை
சொற்களே சுவையறுத்தி.

நாக்குகளின்
நாக்கால்
நாக்கை சொல்வதென்றால்,
நாக்குகள்
இன்னமும் நீளமானவை….
இந்தக் கவிதையைவிட !
—- நெப்போலியன்,சிங்கப்பூர்—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்