விடியும்! – (26)

This entry is part [part not set] of 55 in the series 20031211_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


செல்வத்தை நித்திரை ‘நல்லா அமத்திப் போட்டுது ‘. தேங்காய் துருவும் சத்தம் காதுகளை கறார் புறார் என விறாண்டுவது போலிருக்க, தூக்கம் கலைந்து எழும்ப இஷ்டமில்லாமல் பாயிலிருந்தே தலையைக் கிளப்பி மணிக்கூட்டைப் பார்த்தான். பாய்க்குக் கிட்ட வைத்தால் நித்திரையில் கைகால் தட்டிக்கிட்டி விழுந்து விடுமென்பதால் ஜாக்கிரதையாக எட்டத்தில் வைத்திருந்தான். தூக்கக் கலக்கத்தில் மணி துலக்கமாகத் தெரியவில்லை. இமைகளைச் சுருக்கி உற்றுப் பார்த்தான். ஐஞ்சுக்கு ஐஞ்சு நிமிசம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்தது. ஜன்னலுக்கு வெளியே பொம்பிளை மொக்காடு போட்ட மாதிரி பனி மூடிய தை மாதத்து விடிகாலை இருட்டு. இன்னொரு பாட்டம் உணர்வில்லாமல் அப்படியே படுக்கச் சொல்லி கண்இமைகள் கெஞ்சாத குறை. போர்த்துப் படுக்காததால், பெய்த பனியில் ஒருபக்க மூக்கு அடைத்துக் கொண்டு விட்டது. இரண்டொரு தரம் மூச்சை இழுத்துப் பார்த்தும் அடைப்பு எடுபடவில்லை.

அடய் இன்டைக்குத் தைப்பொங்கல்!

அவன் சறுக்கென்று எழுந்து ஜன்னலால் பார்த்தான். இருட்டு! கலங்கிப் போன கிணற்று நீரைப் போல ஒரு மாதிரி கலைந்த இருட்டு. மரஞ்செடிகொடிகளின் பச்சையும் ஊசாட்டமும் தெரியத் தொடங்கிய மெல்லிருட்டு. அங்கயொரு காக்.. .. .. இங்கயொரு கீக்.. .. .. என காகங்குருவிகளின் ‘சோம்பல் முறிப்பு ‘ கேட்ட இதமான இருட்டு. பக்கத்து வீட்டு ஏணையில் வளர்த்தியிருந்த பச்சைக்குழந்தை தாய்ப்பால் தவனத்தில் கண்விழித்து சரஞ் சரமாக தொடுத்த அழுகைக் கீர்த்தனையை நெஞ்சுக்குள் கேட்கிற மாதிரி துல்லியமாக ஒலிபரப்பிய சாந்தமான இருட்டு. கடமையை ஒளியிடம் கையளித்துவிட்டு காணாமல் போகத் துடிக்கும் களைத்துப் போன இருட்டு!

அந்தி சாயும் வேளையில் இருட்டு தொட்டம் தொட்டமாக வந்து சூழ்கிற போதும், உதயத்தில் கட்டம் கட்டமாக விட்டு விலகுகிற போதும், உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருக்க அவனுக்குப் பிடிக்கும். மாதா கோயில் மணிச்சத்தம் அடங்கி ஒடுங்குவது போல ஒரு விதமான அமைதி சத்தம் காட்டாமல் வந்து மனதிற்குள் புகுந்து கொள்ளும். நிம்மதியான நித்திரைக்கு இருட்டுத்தான் தோது. இருட்டின் இருப்பில் உடல் உபாதைகளை உள்ளத்து நோவுகளை தற்காலிகமாகவேனும் தொலைத்துத் தலை முழுகிவிட்டு தூங்க முடிகிறது. இத்தனை இருந்தாலும் இருட்டென்றால் பலருக்கும் ஒரு இளக்காரம். ஒளியைத் தூக்கித் தலையில் வைத்துக் கூத்தாடுகிற அளவுக்கு இளக்காரம். செல்வத்திற்கு இருட்டு பிடிக்கும்.

‘க்றாக் .. .. .. க்றாக் ‘ என்று மிச்சம் விடாமல் தேங்காய் அடிச்சிரட்டை வரை விறாண்டித் துருவும் சத்தம்! பாவம் சின்னம்மா – வழக்கத்தில் நாலு மணிக்கு எழும்புகிற மனுசிக்கு இன்றைக்கு மூன்று மணிக்கே முழிப்பு வந்திருக்கும். பொங்கல் நினைப்பில் கண்ணோடு கண் மூடியிருக்கமாட்டாள். வெள்ளனையோடு எழுந்து முற்றம் கூட்டி நீர் தெளித்து பொங்கலுக்கான அடுக்குகளைப் பார்க்க சின்னம்மாவுக்குப் பக்கத்தில் உதவிக்கு நிற்கவேனும் என்று சரியும் போது நினைத்துக் கொண்டுதான் படுத்தான். ராத்திரி மாமா வீட்டிற்குப் போய் கதைத்து விட்டுத் திரும்பவே பதினொரு மணிக்கு மேலாயிற்று. நித்திரை வர மணி இரண்டைத் தாண்டி விட்டது. பிறகு எப்படி எழும்புவது!

மாமா சொன்ன விசயம் தலைக்குள் சப்பாணி கொட்டியிருந்து அசைய மாட்டேன் என்று அடம் பிடித்தது. லேசில் எதுக்கும் அசையாத மாமா ஆடிப் போயிருந்தார். அந்த ஆட்டம் அவனுடைய நம்பிக்கையை அலம்பித் துடைத்து வெறுமையாக்கி விட்டது.

“சாம்பல்தீவு பால்காரக் கந்தசாமி காலமை வந்தவர். இன்டு நேத்தில்லை நேவீல சேந்த காலத்திலயிருந்து ஒன்டா வேலை செய்த மனுசன். ஊர் நடப்பு தெரிஞ்ச மனுசன். ஒன்டென்டா ஓடி வந்து உதவுகிற மனுசன். இப்ப கொஞ்ச நாளா வாதம் குத்தி விழுத்திப் போட்டுது. முழங்கால் மூட்டில வீக்கம். இருந்தா எலும்பேலாது. மருந்து சாப்பிடுறார். கடும் பத்தியம். அப்படியிருந்தும் இழுத்துப் பறிச்சு வந்திற்றுது மனுசன்.” என்று மாமா சொல்ல அவன் கேட்க நேரம் ஓடோ ஓடென்று ஓடிற்று. அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.

“அந்தப் பக்கம் பொடியள்ற ஊசாட்டம் இருந்தா மனுசனுக்குத் தெரியாமல் போகாது. டவுனிலயிருந்து பொடியள் வந்ததா சிலமன் இல்லையாம். வருத்த ஈட்டத்தில கவனிக்கேல்லையோ என்டு கேட்டன். தனக்குத் தெரிஞ்சு புதாக்கள் வந்த மாதிரித் தெரியேல்லையாம். தேங்காயைச் சரிபாதியாப் பிளந்த மாதிரி மனுசன் வெட்டொன்டு துண்டு ரெண்டாச் சொல்லுது. இப்ப என்ன செய்யிறது செல்வம். அவர் சொல்றதைப் பாத்தா விசயம் எங்கட கையை விட்டுப் போயிருமோ என்டு பயமாக் கிடக்கு. எனக்கு ஒன்டுமா ஓடேல்லை. அதுதான் உன்னைக் கூப்பிட்டனுப்பினனான். மூதூரோ வன்னிப் பக்கமோ போயிருந்தால் கண்டு பிடிக்கிறது கஷ்டம். லேசில அந்தப் பக்கம் போகவும் ஏலாது. ”

மாமா சொன்னபிறகு தம்பியைக் கண்டு பிடிக்கிறது லேசுப்பட்ட விசயமல்ல என்பது புரிய ஆரம்பித்தது, மூர்த்தியோடு மூதூர்ப் பயணம் போகிற விசயத்தை அவரிடம் சொன்னால் கட்டாயமாக போக வேண்டாம் என்றுதான் சொல்லுவார். அவன் குழம்பிப் போய்த் திரும்பினான். அவர் சொன்னதெல்லாம் தலைக்குள் பம்பரம் சுற்றின. பாயை விசிறி விழுந்தான். தலகணியை நெஞ்சுப் பக்கம் அணைத்துக் கொண்டு கண்ணை மூடிப் பார்த்தான். நித்திரை கண்ணைச் சுழட்டிற்று. சில்வண்டின் சூசூசூ ரீங்காரம் இருட்டின் அமைதியில் தெளிவாக கேட்டது. புரண்டு புரண்டு பார்த்தான். நெற்றியில் கை வைக்க உள்ளங்கை அகலத்துக்கும் சூடு.

விடிந்தால் தைப்பொங்கல். புதுக்கலிசான் சட்டையில் விறகுத்தணலும் வெடிக்கட்டுமாய் அண்ணா அண்ணா என்று ஒட்டிக் கொண்டு திரிவான் தம்பி. அவன் சார்பாக வெடி சுடும் வரை அண்ணனை விட்டு ஓரடி கூட விலகாமல் நிற்பான். வெடிக்கட்டு பட் பட் படார் என சிதம்பலாய்ச் சிதறுவதை பக்கம் நின்று பார்க்க வேண்டும் அவனுக்கு. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடிக்காமல் கிடக்கும் தனிவெடிகளை பொறுக்கி மீண்டும் தருவான்.

அந்தப் பிள்ளை இல்லாத பொங்கலும் ஒரு பொங்கலா!

நவம்பர் மாதக் கடைசியில் வன்னி இரானுவ நிலைகள் விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகளில் துவண்ட கையோடு கணிசமான பொடியன்கள் டவுனிலிருந்து போயிற்றாங்கள், அந்த அலையிலதான் எங்கட பிள்ளைகளும் எடுபட்டதுகள் என்று விசுவநாதன் சொன்னது நேரம் பார்த்து ஞாபகத்தில் வந்தது.

படிச்சு நல்லா வாறதை விட்டுட்டு இதுகளுக்கேன் இந்தச் சம்பளமில்லாத உத்தியோகம் ? இன்னம் ஒரு மாசத்தில ரிசல்ட் வந்திரும். கம்பஸ் போகலாம். அல்லாட்டில் என்னோட கனடாவுக்கு வரலாம். காட்டுக்குள்ள என்ன இருக்கென்டு போனவங்கள் ? முறையான குளிப்பு முழுக்கு இல்லை. டாவி றேடியோ பட முஸ்பாத்தி ஒன்டும் இல்லை. ஆசைப்பட்டதை தின்னுகிற வயசில வயித்தை ஒறுக்க வேனும். அம்மா அப்பா அரவணைப்பில்லை. அக்கா தங்கச்சி ஆறுதலில்லை. ஆசாபாசங்களில்லை. கல்லிலும் முள்ளிலும் படுத்தெழும்ப வேனும். கடுமையான பயிற்சிகளுக்கு ஈடு கொடுக்க வேனும். எந்த நேரம் எந்த இடத்தில குண்டு விழும் என்டு தெரியாது. சாகிறதுக்கு றெடியா கழுத்தில சயனைட் குப்பியோட காட்டிலையும் மேட்டிலையும் அலைய வேனும். அனுபவிக்க வேண்டிய சின்ன வயசில இவ்வளவு கஷ்டமும் தேவையா ? சாகிறதுக்கு நான் நீ என்டு போட்டி போட்டுக் கொண்டு போன மாதிரியல்லோ கிடக்கு. இந்தத் துணிவு இதுகளுக்கு எங்கிருந்து வந்தது ? இவங்கள் என்ன ஆக்களடாப்பா.. .. .. .. முழித்திருந்த மூளை நித்திரை கொள்ள விடவில்லை ஆளை. இறைக்க இறைக்க வற்றாத எண்ணக் குமிழிகளின் ஊற்று!

தேங்காய் துருவும் சத்தம் நிற்க செல்வம் வெளியே வந்தான். சின்னம்மா ஒரு ஆளாக துருவித் தள்ளிய தேங்காய்ச்சிரட்டைகள் அவனைப் பார்த்து ஏளனித்தன. ஒரு வரி எறும்புக்கூட்டம் தேங்காய்ப் பாதிகளின் பக்கம் அதற்குள் படையெடுத்தும் விட்டன.

“தங்கச்சி எழும்பேல்லையாம்மா ? ”

“இப்பதான் எழுப்பி விட்டனான். கிணத்தடிப்பக்கம் போயிருக்கிறாள். ”

“அப்பா ? ”

“தெருமுத்தம் கூட்டுறார்”

“அப்பா நான் கூட்டுறேனே” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான் செல்வம்.

“கூட்டி முடிஞ்சுது”.. .. .. அப்பா கதவைச் சாத்திக் கொண்டு வந்தார்.

“என்னன்டாலும் செய்து தரட்டா சின்னம்மா”

“ஒன்டுமில்லை அந்த முக்காலியை இழுத்துப் போட்டு சும்மா பார்த்துக் கொண்டிரு”

சின்னம்மா தோய்ந்த தலைஈரம் இன்னும் காயவில்லை. கூந்தலை துவாய்த் துண்டோடு சேர்த்துப் பிணைத்து முடிச்சுப் போட்டிருந்தாள். விறாந்தைலைட் வெளிச்சத்தில் முற்றத்துக் கோலம் பளிச்சிட்டது. உலக்கை பிடித்து நேர் பிசகாமல் போட்ட அரிசிமாக்கோலம். பட்டுவேட்டிச் சரிகை மாதிரி போர்டராகப் பிடித்த மஞ்சள் தூள் வரிகள். நாலு மூலைகளிலும் வளையமிட்ட வாடாமல்லிப்பூவின் அலங்காரம். திருநீறு சந்தணம் சாற்றி கழுத்தைச் சுற்றிக் கட்டிய மாவிலைகளின் பொலிவில் பூரணமான பொங்கல் பானை. விறகு அடுக்கிய சீரான அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருந்தது. தொய்வில்லாமல் எரிக்க பக்கத்தில் ஒரு மேலதிக விறகுக்கட்டு. கைப்பிடியில் இறுக்கிய சாணப்பிள்ளையாரில் மீசை விட்டிருந்த அறுகம் புல்லு. வெள்ளித் தாம்பாளத்தில் சூடம், சந்தணக்குச்சு, பன்னீர்ச் செம்பு, நிறைகுடம், வாழைப்பழச்சீப்பு.. .. .. .. .. பிறக்கப் போகும் தைப்பொங்கலுக்கு எல்லாமே ஆயத்தம்.

கோல எல்லைக்குள் குந்திய குந்தில் அரக்கி அரக்கி சின்னம்மா கைச்சுருக்காய் கருமமாற்றிக் கொண்டிருந்ததை அவன் கண்வெட்டாமல் பார்த்தான். ராத்திரி மாமா சொன்ன விசயத்தை சின்னம்மாவிடம் சொல்லவில்லை. வேலைப் பிராக்கில் அவவும் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் எதென்றாலும் சொல்லி மழுப்பியிருப்பான். தைப்பொங்கல் நாத்தில் தாயின் மனசை குலைத்துப் போட அவனால் முடியாது. சொன்னால் பொங்கல் பொங்கலாகவா இருக்கும்! நல்ல முடிவு தெரியும்வரை தம்பியின் கதையை எடுக்கவே அவனுக்கு விருப்பமில்லை.

காகங்கள் கரைந்து கேட்டன. செம்பரத்தை மொட்டுகள் விரிவதற்குத் தயாராகக் காத்திருந்தன போல் தோன்றிற்று. கல்லில் அடிக்க அடிக்க துணியின் அழுக்கு கரைந்து போகிற மாதிரி அடிவானம் வெளுக்கத் தொடங்கிற்று. பாரமேற்றாத மாட்டுவண்டியொன்று தெருவில் தடதடத்துப் போனது. தெருவிற்கு அந்தப் பக்கமிருந்து மெலிதான சத்தத்தில் றேடியோ பாடியது. முன்னரும் கேட்ட வரிகள்தான். அவை இப்போது புத்தம் புதுசு போலவும் அப்பதான் சானை பிடித்த கத்தியின் சூடு போலவும் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு புகுந்தன.

துடிதுடித் தெழுந்திடு மறத்தமிழ் இனமே

விடிவுனக்கெனும் வரை விழித்திரு தினமே

மீண்டும் அதே வரிகள் இன்னும் அழுத்தமாய் தொடர நெஞ்சு விரிந்து கண்கள் பொங்கிற்று. ஆமி ட்றக் ஒன்று தெருப்பள்ளங்களில் விழுந்து விழுந்து பெரிதாக ஓசையெழுப்பிக் கொண்டு போனதில் பாட்டுச் சத்தம் அமிழ்ந்து போயிற்று. பெயர் போன இயற்கைத் துறைமுகம் இருக்கிற இந்த நகரத்தின் தெருக்கள் – அவன் நடக்கப் பழகிய காலத்திலிருந்தே பள்ளமும் குழியுமாகத்தான் இருக்கின்றன. தமிழ்மக்களை கொஞ்சம் கொஞ்சமாய் துரத்திவிட்டு மண்ணைப் பறிக்கும் வரை பள்ளங்கள் நிரம்பப் போவதில்லை.

சிவப்பு மையில் நனைந்த மேகங்கள் துண்டு துண்டாய் மேலே காத்திருக்க, அடிவானம் மெல்ல மெல்லமாக சிவந்து விட்டது. பெரியவர் தலைகாட்டப் போகிறார். அவர் வந்ததும் உலகமே விடியப் போகிறது. இன்னொரு புதுநாளின் ஜனனம். தைமகளுக்கு இன்னொரு வயது கூடப் போகிறது.

“குளிச்சிட்டு டக்கென்டு வாங்கோ”

சின்னம்மா சொன்ன கையோடு அப்பா விடுவிடுவென்று கிணற்றடிப்பக்கம் போனார். நாலுவாளி அள்ளி தலையில் ஊற்றினார். ஈர வேட்டியோடு தலை சொட்டச்சொட்ட அம்மாவுக்கு முன்னால் வந்து தயாராக நின்றார். நாள் முழுக்க சாய்மனக்கதிரையில் அடைந்து கிடக்கிற அப்பாதானா இது! பிறக்கப் போகிற தைப்பொங்கல் நாள் கொடுத்திட்ட புத்துணர்வா! பிறந்த குழந்தையின் முதல் அழுகைச் சத்தம் கேட்டவர் போல் வாய் பேசாது நின்றார். தை பிறந்தால் வழிபிறக்கும் என்று வழிவழியாக வந்த நம்பிக்கையில் ஊறிப்போன கட்டை!

சின்னம்மா கடகப் பெட்டியை அரக்கி உலையருகே கொண்டுவர அப்பா பக்கமாக வந்து கிழக்குவானைப் பார்த்தார். சூரியனின் தலை வானத்துவிளிம்பில் தெரியத்தொடங்க சின்னம்மா பெட்டியை நீட்டினாள். அப்பா இரண்டு கைகளாலும் அரிசியை தளியத் தளிய அள்ளி சூரியனைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டு பக்குவமாக பொங்கல் பானைக்குள் இட்டார்.

இடதுகையில் வெடிக்கட்டும் வலதில் நெருப்புத் தணலையும் தயாராகப் பிடித்து துருதுருவெனக் காத்திருக்கிற நேரம் இது. அப்பா அரிசியை பானையில் இறக்க பட்பட் படார் என பட்டாசுகள் பொழிகிற நேரம் இது. அந்த நேரத்துக்காகவே வெள்ளனையோடு எழும்பி பட்டாசைப் பிரித்து வைத்துக் கொண்டு அப்பாவையும் சூரியனையும் மாறி மாறிப் பார்த்திருப்பான் செல்வம்.

“மூன்டு முறை அள்ளிப் போடுங்கோ”

மூன்றாவது முறை அள்ளிப் போடுவதற்குள் அப்பாவுக்குக் கண்கள் பக்கென்று நிறைந்து விட்டன. இந்த மாதிரி விசேசங்களில் ஆர் பக்கத்தில் இல்லையோ அவர்களின் நினைப்புத்தான் எல்லாத்தையும் முந்திக் கொண்டு முன்னால் வந்து நிற்கும். தம்பியைப் பற்றித்தான் நினைத்திருப்பார். அதைவிட கண்ணீர் விடுவதற்கு அவருக்கு வேறு என்ன இருக்கிறது ? அம்மாவுக்குப் பிறகு வாழ்வே தொலைந்து விட்டதாக பைத்தியம் பிடித்து அலைந்தவருக்கு சூரியனைப் போல சின்னம்மா வந்தாள். அவளோடு ஆறுதலும் அமைதியும் நிம்மதியும் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு கூடவே வந்தன. கனடாவுக்குப் போன பிறகு செல்வமும் வசதியும் வந்தன. இரண்டு பிள்ளைகளை நல்ல இடத்தில பிடிச்சுக் குடுத்தாச்சு. செவ்வந்திக்கும் நான்பிடி நீபிடியென்று முற்றாகி விட்டது. இருக்கிறது இரண்டும் ஆம்பிளைப் பிள்ளைகள். இனி நிம்மதி என்று இருந்திருப்பார். கணக்கு பிசகிவிட்டது.

“ஈரத்தோட நிக்காம வேட்டியை மாத்துங்கோ”

அப்பா கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஏறினார். சிவப்புப் பந்து மேலேறி மஞ்சளில் குளித்து வெள்ளியில் முகம் அலம்பித் தகதகத்து மிளிர, இருட்டு எங்கு ஓடிப் போனதோ தெரியவில்லை.

செவ்வந்தி இரட்டைப் பின்னல் எடுத்து பாவாடை சட்டையில் வந்து நின்றாள். அண்ணா ஹப்பி தைப்பொங்கல் என்றாள். சிரிப்பு பாதி சிந்தனை பாதியாக இருந்தவன், தங்கையின் முகம் மலர வேண்டி நடித்து ஹப்பி தைப்பொங்கல் சொன்னான். செவ்வந்தி அடுப்புக்கு முன்னால் குந்தி விறகைச் சரி செய்தாள். எழும்பி எரியாத பக்கம் தேங்காய் சிரட்டை உடைத்து செருகி விட்டாள். அம்மா நொறுக்கி வைத்த சர்க்கரையில் சுளகு முழுக்க மொய்த்த இலையானை சுய்ய் என்று விரட்டி விட்டாள். சுவர்ப்பக்கமாகப் போய் உரல்வைத்து ஏறி அக்காமாரின் வீட்டுப்பக்கம் எட்டிப் பார்த்து குரல் கொடுத்தாள்.

“அக்கா பொங்கல்பானை வைச்சீற்றீங்களா ? ”

“ஓம் ஓம் இப்பதான் அரிசு போட்டது”

செவ்வந்தி வந்தபின் பொங்கல் களை கட்டிற்று. எல்லாம் அவளது அன்பான ஆளுகைக்குள் வந்துவிட்டது போலத் தோன்றியது. தம்பியும் இருந்திருந்தால்! புதுச்சட்டை போட்டுக் கொண்டு வெடிக்கட்டோடு வலம் வந்திருப்பானே! செல்வம் காலைக்கடனை முடித்து கிணற்றடிக்கு வந்து தலையில் ஊற்றியபோது துறைமுகப்பக்கமிருந்து தொம் தொம் என்று குண்டுச் சத்தம் கேட்டது. ஈரத்தலையோடு முற்றத்திற்கு ஓடிவந்தான்.

“என்னம்மா இந்த நேரத்தில ? ”

“பொங்கல் நாத்தில எங்கட குஞ்சுகுருமான்கள் விடவேண்டிய வெடிகளை இப்ப இவங்கள் விடுறாங்கள். ”

“ஆர் சின்னம்மா ? ”

“நேவிக்காரங்கள். புலி வந்திருமாம். மூதூர் கடல் பக்கமா போடுறாங்கள். மீன்தான் சாகும் பாவம். எங்களுக்குக் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு. நீ போய்த் தலையை உணத்து ஊறாதை”

கடலில் விழுந்த குண்டுகளை அடுக்காக எண்ணினான் செல்வம். ஒரு டசின் குண்டுகள் தீர்த்தபின் அமைதியாயிற்று. செல்வத்தின் அமைதி காணாமல் போயிற்று.

நாளைக்கு மூதூருக்குப் போக முடியுமோ!

karulsubramaniam@yahoo.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்