வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

This entry is part [part not set] of 44 in the series 20110403_Issue

க. நாகராசன்


சமீபத்தில் பாவண்ணனின் அருகில் ஒளிரும் சுடர் கட்டுரைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இருபத்திரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான கட்டுரைகள் தீராநதி இதழிலும் மற்றவை யுகமாயினி, வடக்குவாசல் போன்ற இதழ்களிலும் வெளிவந்தவை. புத்தகத்தை எடுத்தவுடன் பதிப்பகத்தைப் பாராட்டத் தோன்றுகிறது. வழக்கத்துக்கு மாறான வகையில் அமைந்துள்ள பெரிய எழுத்துரு கண்களை உறுத்தாமல் படிப்பதற்குத் தோதாக உள்ளது. நன்றாக இடம்விட்டுத் தரப்பட்டுள்ள தலைப்புகள் மற்றும் பத்திகள் கவனத்தைக் கவர்கின்றன.
இது மற்றுமொரு கட்டுரைத்தொகுப்புதானே என்கிற எண்ணத்தைத் தகர்க்கிறது நூலின் முன்னுரை. அலுவலகப் புல்வெளி வளாகத்தை வாழ்க்கையாக உருவகித்து மரங்களை மனிதர்களாக அது முன்வைக்கிறது. கற்பனைக்குத் துணையாக சிறுவயதிலிருந்தே பழகிய புன்னைமரத்தைத் தங்கையாக நினைத்த சங்க்காலத் தலைவியை நினைவுபடுத்திக்கொள்கிறது.
கட்டுரைகள் ஒவ்வொன்றாக விரிகின்றன. மெதுவாக கிளம்பும் ரயில்வண்டி சற்று நேரத்துக்கெல்லாம முழுவேகத்தை எட்டிவிடுவதைப்போல இரண்டு மூன்று கட்டுரைகளுக்குள்ளாகவே தொகுப்பு வாசகனை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது. சராசரி கட்டுரைகள் அல்ல இவை என உணர முடிகிறது. மிக எளிதான உருவத்தையும் மொழிநடையையும் கைக்கொண்டிருந்தாலும் வாழ்வின் ஆதார எண்ணங்களையே அசைத்துப் பார்க்கிறது தொகுப்பு. படித்து முடிக்கும்போது, நம் உணர்ச்சிகள் பீரிட்டெழுகின்றன. மகத்தான கண்டடைதல்களை அடைந்த களிப்பில் தள்ளாடுகிறது மனம். சந்தேகமே இலை. இது ஓர் அசாதாரணமான கட்டுரைத்தொகுப்புதான்.
ஒவ்வொரு கட்டுரையும் நன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. சொல்லப்படும் விஷயத்துக்கு மிகவும் பொருத்தமான புள்ளியிலிருந்து இயல்பாகக் கட்டுரை தொடங்குகிறது. முதலிரண்டு பக்கங்களில் பின்புலங்கள் விவரிக்கப்படுகின்றன. பிறகு வாழ்வனுபவத்துக்குள் நுழைகிறது கட்டுரை. சிக்கலான புள்ளிகளை வைத்து கோலங்களை அது புனைகிறது. கட்டுரை முடியும்போது வாசலெங்கும் நிறந்துள்ள அழகான கோலமொன்று மனப்பரப்பில் வரையப்படுகிறது. எடுத்துக்காட்டாக ’தாய்மையின் குரல்’ கட்டுரையைச் சொல்லலாம. பிச்சைக்காரத் தாயைப் புறக்கணிக்கும், கீழ்மைப்படுத்தும் குடிகார மகனின் கொடுங்குணத்தை முன்வைக்கும் கட்டுரை இது. மிக இயல்பாக, கருணை பெருக்கெடுப்பதுபோல நீர் ஊற்றெடுக்கும் தலைக்காவிரியில் இருந்து தொடங்குகிறது கட்டுரை. ஜீவா என்னும் வசீகர வார்த்தையை உள்ளடக்கிய தாலாட்டுப்பாடலைத் தென்றலாக தவழவைக்கும் ஓர் இளந்தாயை அடுத்து விவரிக்கிறது. பாசமுள்ள பிச்சைக்காரத் தாய் அடுத்து வருகிறார். இந்த இரு புள்ளிகளும் இணையும் தளத்தில் நெஞ்சை உருக்கும் காவியமாக உருவெடுக்கிறது கட்டுரை.
படிப்போரின் ஆர்வத்தை அதிகப்படுத்த செயற்கையான எந்த உத்திகளும் விவரிப்பும் எந்தக் கட்டுரையிலும் இடம்பெறவில்லை. உதாரணமாக ’பேகம் மஹால்’ மற்றும் ’விளையாட்டும் வேடிக்கையும்’ கட்டுரைகளைச் சொல்லலாம். ஆர்வக்கோளாறால் எழுத்தாளர் செய்யும் சிறுபிழை ஒன்றும், அவருடைய இயலாமையும் இரு கட்டுரைகளிலும் முறையே விவரிக்கப்படுகின்றன. வாசகன்முன் தன்னை மகத்தான கதைநாயகனாக முன்னெடுக்கும் பெரும்பாலான தமிழ் எழுத்துகளுக்கு நடுவே இது வித்தியாசமாக இருக்கிறது.
‘வேடிக்கையும் விளையாட்டும்’ மிகமுக்கியமான ஒரு கட்டுரை. உடன் கிரிக்கெட் விளையாடும் மற்ற நண்பர்களை தன் ஆணவத்தாலும் வஞ்சகத்தாலும் ஏமாற்றும் அந்தப் பொல்லாத சிறுவன் நம் சமூகத்தின் மிக முக்கியமான ஒரு கதாபத்திரம். அவனைப் போன்றவர்கள்தான் அரசியலாலும் அதிகாரத்தாலும் நிறைந்துள்ளனர். ’வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்னும் அவர்களின் கோட்பாடு இன்றுவரை வெற்றி அடைவதுதான் வாழ்க்கை விளையாட்டில் ஓர் வேடிக்கையான ஆனால் வேதனையான முடிவு.
’ஒருவேளை உணவு’, ’ஒரு ரயில் பயணம்’, ’பெரிய வீடு’ மற்றும் ’பழங்களைத் தேடி’ போன்ற கட்டுரைகளை சிறுகதைகளாக எழுதியிருந்தால் வெற்றிகரமான சிறுகதைகளாக அவை வெளிவந்திருக்கும் என்பதில் ஐயம இல்லை. ஆனால் கட்டுரைகளாக அவை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை கதைகள் ஏற்படுத்தியிருக்காது என்றே தோன்றுகிறது. ரத்தமும் சதையும் நிறைந்த வாழ்வின் அருகாமை அவற்றுக்கு ஒரு நம்பகத்தன்மையைத் தருகிறது. படிப்பவரின் உணர்ச்சிகளில் நேரடியான தாக்கத்தை அவை ஏற்படுத்துகின்றன. சாலையிலோ, பேருந்து நிறுத்தத்திலோ இனிமேல் எந்த ஏழைப் பெண் தொழிலாளியைப் பார்த்தாலும் சாவித்திரியின் நினைவு தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. சாவித்திரியின் பிரச்சனை தீரும்போது படிப்பவரின் மனமும் அமைதி அடைகிறது. ’பெரிய வீடு’ நெஞ்சை நெகிழ்த்தும் ஒரு கட்டுரை. காலமெல்லாம் அவர் ஆசைப்பட்ட்து வசதியான ஒரு வீட்டுக்கு. ஆனால் அவருடைய மரணம்வரைக்கும் அது கைகூடவில்லை. இறுதியில் நெட்டப்பாக்கத்தில் உள்ள சொந்த வீட்டுக்கு அவருடைய உடலை ஏற்றியபடி வேன் வரும் காட்சி படிப்பவரின் கண்களைக் கலங்கச்செய்கிறது. வாழ்க்கையிபன் விசித்திர விளையாட்டு என்றுமே நமக்குப் புலப்படுவதில்லை.
தனிப்பட்ட வாழ்வியல் அனுபவங்களாக விரிகின்றன ’ஒற்றைமரம்’, ’ஆனந்தத்தின் நிறம்’, ’இடைவிடாமல் பொழிகின்ற மழை’ மற்றும் ’அபூர்வமலர்’. முதல் மூன்று கட்டுரைகளிலும் இடம்பெறும் இயற்கைக்காட்சிகளும் வர்ணனைகளும் உள்ளத்தை அள்ளுகின்றன. அருவியின் ஈரத்தையும் காட்டின் பசுமையையும் பனிமலையின் குளிரையும் நம்மாலும் உணர்முடிகிறது.
’ஆன்ந்தத்தின் நிறம்’ அற்புதமான ஓர் அனுபவம். மயிலம் மலை சைக்கிள் பயணத்தில் தொடங்கும் கட்டுரை, மகாபாரத பாணடவருடன் தருமர் இமயமலைக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுபடடுத்தி வாசகனைப் பரவசமாக்குகிறது. நாமே பனிமலைகளில் பயணிக்கிறோம். ’இடைவிடாமல் பொழிகின்ற மழை’ ஒரு வித்தியாசமான கட்டுரை. நவீன ஓவியங்களை உள்வாங்கும் ஆற்ற்லை அது வாசகர்களிடம் விதைக்கிறது. மரணத்தின் நிழல் படியும் ஓவியங்கள் ஓர் அரிதான பகிர்வு. ’நீ பாடித்தான் ஆகவேண்டும் என்றால் இடைவிடாமல் பொழிகின்ற மழையைப் போல பாடு…’ என்கிற பேந்த்ரே வின் கவிதை வரிகள் காதுகளில் ஒலித்தப்டியே இருக்கின்றன.
’முகவீணை’ என்கிற வாத்தியத்தை முன்னிறுத்தும் கட்டுரை மிக வித்தியாசமானது. இடைவிடாது பொழியும் மழையில் கவிதை அனுபவத்தைத் தந்த ஆசிரியர் முகவீணையில் இசை அனுபவத்தை எழுத்தில் வடிக்கிறார். வீணையின் இசைக்கேற்ப நாமும் ஆடுகிறோம். பாடுகிறோம். புராண காலத்து நல்ல தங்களாக மாறுகிறோம். இறுதியில் வரும் காட்சி மிகமுக்கியமானது. பேருந்தில் சந்திக்கும் டிக்கெட் எடுக்க காசில்லாத பெண். தன் குழந்தைகளுடன் நட்த்துனரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் காட்சிதான் அது. பரந்து கெடுக இவ்வுலகியற்றியான். என்னும் வள்ளூவரின் அறச்சீற்றம் நம்மிடத்திலும் அப்போது வெளிப்படுகிறது.
கலப்புத் திருமணம் சமுதாயத்திலும் தனிமனிதர்களிடமும் ஏற்படுத்தும் தாக்கத்தை வெவ்வேறு கோணங்களில் அலசுகின்றன. ’உண்மையைக் கண்டடைதல்’ மற்றும் ’ஆற்றின் விழிகள்’ அகிய முக்கியமான ஒரு படைப்பு. சாவின் அருகாமை மனித மனத்தை எவ்வளவு பக்குவப்படுத்துகிறது என்பதை மிகச்சிறப்பாக அது எடுத்துக் காட்டுகிறது.
பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளை நோக்கி சுட்டுவிரலை நீட்டுகின்றன ’ஒரு கேள்வியும் பல பதில்களும்’ மற்றும் ’தாய்மையின் குரல்’ ஆகிய் கட்டுரைகள். வாழ்வில் நாம் சந்திக்கும் சுயநலமுள்ள பிள்ளைகளின் அரிதாரங்களைக் கலைக்கிறது. ஒரு நிமிடம் நம் மனசாட்சியை உலுக்குகுறது. ஒரு கேள்வியும் பல பதில்களும் கட்டுரையின் முடிவு எளிமையும் அழகும் நிறைந்த்த்த ஒன்று. சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக எந்த செயற்கையும் சேர்க்காத கட்டுரையாளரின் நேர்மையைப் பாரட்டவேண்டும்.
திரையரங்குகள் நமது தமிழ்வாழ்வின் முக்கிய கலாசார அடையாளங்களாகத் திகழ்ந்தவை. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மனங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவை. மாறிவரும் சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்கமுடியாமல் சிற்றூர்களிலும் சிறு நகரங்களிலும் திரையரங்குகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டுவரும் அவலத்தை விவரிக்கிறது ’அழிவென்னும் உண்மை’. கட்டுரை. ஆசிரியரின் அனுபவம் இங்கு படிப்பவரின் அனுபவமாக மடைமாற்றம் அடைகிறது.
நட்பு என்னும் உன்னத உண்ர்வை வெளிப்படுத்துகின்றன, ’துக்கமும் கசப்பும்’ மற்றும் ’பழங்களைத் தேடி’ ஆகிய கட்டுரைகள். இரண்டுமே சிறப்பான கட்டுரைகள். நந்ததவனத்தில் ஓர் ஆண்டியாக, தோண்டியை போட்டுடைத்த பசவராஜும் நாற்பது ஆண்டுகளாகியும் பேனாவை மறக்காத ராஜண்ணாவும் நம் நினைவில் நெடுநாட்கள் இருப்பார்கள். ராஜண்ணா தன் நண்பருக்கு பேனா தரும் காட்சி மானுட வாழ்க்கையின் மகத்துவத்தை வெளிச்சப்படுத்தும் ஓர் முக்கியத் தருணம். ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ காட்சிகள் துக்கமும் கசப்பும் படைப்புக்கு புதிய பரிமாணத்தைத் தருகிறது.
மனித மனத்தின் ஆதாரப் பிரசனையைத் தொடும் வன்மத்தின் ஊற்று நம்மைத் திடுக்கிடச் செய்கிறது. துரோகமும் வன்மமும்தான் மனித மனத்தின் அடிப்படைக்குணங்களா என்ற வினா எழுகிறது. விலங்கிலிருந்து பிறந்த மனம் இன்னும் மாறவே இல்லை என்று தோன்றுகிறது. அன்பை இட்டு அதை நிரப்பும் பணியே வாழ்க்கையை நாம் கற்றுக்கொள்ளும் பேருண்மையாக இருக்க்க்கூடும்.
தொகுப்பின் ஆகச்சிறந்த கட்டுரைகளாக ’அற்புதக் கனவ” ”மூன்று பசிகள்” ஆகிய கட்டுரைகளைச் சொல்ல்லாம. காந்தி என்கிற மாமனிதரின் எண்ணங்கள், செய்லபாடுகள், கனவுகள் எல்லாவற்றையும் தத்துவப்பூர்வமாக மட்டும் பார்க்காமல் நடைமுறை சாதனைகளை நிகழ்த்திய சாத்தியப்பாடாக விவரிப்பதே கட்டுரையின் மிகப்பெரிய வெற்றி.
மூன்று பசிகள் மிக முக்கியமான கட்டுரை. மனிதனின் அடிப்படையான வயிற்றுப்பசி, அதைவிட நூறு மடங்கு வீரியமான உடற்பசி. அதைவிட ஆயிரம் மடங்கு வீரியம் கொண்ட அகங்காரப்பசி என தேர்ந்த சிற்பி செதுக்கும் சிலைகளாக கட்டுரை உருவெடுக்கிறது, வாழ்க்கையினெசத்தை வர்த்தைகளால் வடிக்கும் அம்மன் கோயில் பூசாரி அரிதான ஓர் பாத்திரம். அவரைப்பற்றி இறுதியாக விவரிக்கும்போது ஆசிரியர் இப்படி கூறுகிறார்.
”அவர் பேசியது கன்னங்கரேலென்று அடர்த்தியாக இருந்த இருளுக்குள் சட்டென்று விளக்கைப் போட்டதுபோல இருந்தது.”
இந்த வரிகள் பூசாரிக்கு மட்டுமல்ல. இந்தத் தொகுப்பைப் படிப்பவர்களுக்கும் பொருந்தும்.

Series Navigation