மத்தளராயன்
‘கொள்ளைக்குப் போனாலும் கூட்டாய்ப் போகாதே ‘ என்று சின்ன வயதில் கேட்டதுண்டு. ஓர் உறவுக்காரர் சொன்னது. குசேலோபாக்கியானம் கதகளிப் பகுதிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது, குசேலர் வேடத்தில் பிரசித்த நடிகர் நெல்லியோடு வாசுதேவன் நம்பூதிரி அரங்கத்தில் நுழைய, அவர் போலவே மெலிந்த தேகமும் நரைத்த தாடி மீசையுமாக எப்போதோ கண்ட ஆலப்புழைக்கார உறவினர் நினைவுக்கு வந்தார். அவர் சொன்னது தமிழ்ப் பழமொழியா இல்லை மலையாளப் பழஞ்சொல்லா என்று இன்னும் கூட மனசிலாகவில்லை. இதைச் சொல்வதற்காகத்தான் நேந்திரம்பழக் குலையும், வெல்லம் புரட்டிய பலா வறுவலும், வாய் நிறையப் புகையிலையுமாக புள்ளிக்காரன் ரயிலையும் பஸ்ஸையும் பிடித்து மதுரைக்கு வந்து சேர்ந்தார் என்று இன்னும் திடமாக நம்பிக் கொண்டிருந்தாலும், கூட்டுறவே நாட்டுயர்வு என்று சர்க்கார் பாடப்புத்தகத்தில் போட்டு, அடித்தடித்துச் சொல்லிக் கொடுத்ததும் மறக்கும்படியாக இல்லை.
பல நல்ல விஷயத்துக்கும், அரசியலுக்கும், கொள்ளைக்கும் எல்லாம் கூட்டுச் சேர்த்துக் கொண்டு புறப்படும் காலத்தில் கதை எழுதுவதும் கூட்டுறவு முயற்சியாக நடப்பது சகஜம் தான்.
முப்பது வருஷம் முன்னால் ‘நக்னமாக வந்த புதியவன் ‘ என்ற ஆங்கில நாவல் திடார் பிரபலமானது. இந்த ‘நேக்கட் கேம் த ஸ்ற்றேஞ்சர் ‘ நாவலை எழுதியவர்கள் அமெரிக்காவில் பிரசித்தமான ஒரு பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள். நல்ல எழுத்துக்கு அங்கீகாரம் இல்லாமல் சகலவிதமான குப்பையும் செய்தி, இலக்கிய அந்தஸ்து பெறுவது கண்டு நொந்து போய், ‘If you can ‘t beat them, join them ‘ என்று கிட்டத்தட்ட ஒரு டசன் துணையாசிரியர், பொறுப்பாசிரியர்கள் கூட்டுச் சேர்ந்து ஒரே புனைபெயரில் எழுதிய இந்த நாவல் தான் எழுத்தில் முதல் கூட்டு முயற்சி என்று கருதலாம்.
தமிழில் சிறுகதை, பாக்கெட் நாவல் என்று வருடக் கணக்காக வெற்றிகரமாகக் கூட்டணி அமைத்துச் செயல்படுகிறவர்கள் ‘சுபா ‘ என்ற புனைபெயரில் எழுதும் சுரேஷும் பாலகிருஷ்ணனும். சிவசங்கரியும், இந்துமதியும் சேர்ந்து இப்படி ஒரு பத்திரிகைத் தொடர்கதை எழுதினபோது அதற்குக் கலந்துகட்டியாக வரவேற்பு வந்தது. ‘அக்லிபாரி அம்மாஜீ ‘ என்று தொடர்கதை ரசிகர்கள் கேட்டாலும், வாஜ்பேயர் போல, ஒண்ணு மதி என்று இந்தப் பரிசோதனையை இருவரும் அலுப்பும் ஆயாசமுமாக நிறுத்திவிட்டார்கள்.
இந்த இருவர் கூட்டணி போக, ‘கல்கி ‘யில் பத்திரிகையின் ஆசிரியர் சீதா ரவி தொடங்கி வைக்கப் பத்து எழுத்தாளர்கள் ஆளுக்கு ஓர் அத்தியாயம் எழுதி எல்லாத் திசையிலும் உற்சாகமாகப் போன ‘ஜிகினா ‘ தொடர்கதையைக் கடைசி அத்தியாயத்தில் இழுத்துப் பிடித்து இழையை எல்லாம் இணைத்து ‘முற்றும் ‘ போட்டார் பத்திரிகையின் துணையாசிரியராக இருந்த ராகவன்.
மலையாளப் பத்திரிகைகளில் தொடர்கதை என்ற வஸ்து ரொம்ப நாளாகவே ‘மேட் டு ஓர்டர் ‘ சமாச்சாரம் தான். மலையாள மனோரமாவில் தொடர்கதை எழுதவேண்டும் என்றால் எழுத்தாளர் கதையைப் பத்திரிகையின் நிர்வாகக் கமிட்டிக்குச் சொல்லி, அது அங்கீகரிக்கப்பட்டு, நாலு அத்தியாயம் பிரசுரமானதும் வாசகர் வரவேற்பைக் கணக்கெடுத்து மறுபடி கமிட்டி கூடி கதைப் போக்கை நிர்ணயிக்கும் வழக்கம் உண்டு என்று கேள்வி. சானல் தொலைக்காட்சிகள் ரேட்டிங்க் அடிப்படையில் சீரியல் கொழுக்கட்டை பிடித்து இழுத்து நீட்டும் தற்கால வழக்கத்துக்கு முன்னோடி இந்தக் கமிட்டித் தொடர்கதை.
தொடர்கதை இருக்கட்டும். இலக்கியத்தரமான மலையாள நாவலில் ஒரு தடவை இப்படி கூட்டு முயற்சி நடந்த வரலாறு உண்டு. எம்.டி.வாசுதேவன் நாயரும், ‘உருபு ‘ என்ற புனைபெயரில் எழுதிய இன்னொரு நல்ல எழுத்தாளர் குட்டிகிருஷ்ணனும் எழுதிய அந்த நாவலுக்கு அப்புறம் இலக்கிய இடதுசாரி, ஜனநாயக முன்னணி ஏதும் உருவாகவில்லை கொஞ்ச நாள் முன்பு வரை. இப்போது தொடங்கியிருக்கிறதாம்.
பதிமூன்று இளம் படைப்பாளிகள் சேர்ந்து காம்பஸ் நாவல் என்ற கல்லூரி வளாக நாவலாக எழுதியது இந்தப் புதிய படைப்பு. கதை மிக எளிதானது. ராமகிருஷ்ணன் என்பவரைத் தேடிப் போகிறபோது ஏற்படுகிற அனுபவங்கள் தான் கதைக்கரு. ஆளுக்கு ஒன்றாக எழுதிய அத்தியாயத்தில் எல்லோரும் ராமகிருஷ்ணனைத் தேடி வேறு வேறு இடங்களுக்குப் போகிறார்கள். ராமகிருஷ்ணனைச் சந்திக்கவும் செய்கிறார்கள். அவர்கள் சந்தித்த எந்த ராமகிருஷ்ணனும் தேடிப்போன ராமகிருஷ்ணன் இல்லை என்பது சுவாரசியமான விஷயம்.
கதையின் இன்னொரு சுவாரசியம் கதையாடல். ஒவ்வொருவரும் ஓர் எழுத்து நடையைத் தேர்ந்தெடுத்திருப்பதால், ஒரு அத்தியாயம் திரைக்கதை வடிவத்தில், இன்னொன்று கடித ரூபத்தில், மற்றது கவிதையாக என்று பல தினுசான வாசிப்பு அனுபவம். உடைந்து சிதறியதைக் கொண்டாடும் பின் நவீனத்துவத்துக்குள் இப்படி உடைத்து ஒட்டி வழங்குவதும் அடங்குமா என்று தெரியவில்லை.
மத்தளராயனுக்கு ஒரு ஆசை உண்டு. தமிழில் பாதியும் மலையாளத்தில் பாதியுமாக ஒரு நாவலை எழுதிப் பார்த்தால் என்ன ? வேதம் திரை பாடும் வேதபுரியான புதுவைக்காரரான தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனும், புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த அதே பிரஞ்சுக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட மய்யழிப்புழப் பிரதேசமான மாஹேயைச் சேர்ந்த மலையாள எழுத்தாளர் முகுந்தனும் சந்தித்தால் இது நடக்கக்கூடும். தமிழ்ப் பகுதியை மலையாளத்திலும், மலையாளப் பகுதியைத் தமிழிலும் மொழிபெயர்த்தால் இரு மொழி இலக்கியமும் செழிக்க ஒரே நேரத்தில் நல்ல படைப்பொன்று கிட்டலாம்.
****
ஆன்றணி, கருணாகரன் குரூப் மோதல்கள் தவிர மலையாளப் பத்திரிகைகளில் அன்றாட முக்கியத்துவம் பெறும் கன கவுரவம் வாய்க்கப் பெற்றது கேரள பொலீஸ்துறை.
கடந்த ஒரு மாதத்தில் வந்த பத்திரிகை டயரிக்குறிப்பின் சுவாரசியங்கள் இதோ.
திருவனந்தபுரம் பூஜப்புர மத்திய சிறைச்சாலையில் இடத்துக்கா பஞ்சம் ? பணம் காசு போன்ற பெரிய விஷயத்தில் எந்த விதக் குறைவும் இல்லாமல், கள்ளக் கடத்தல், கள்ளச் சாராயம், திருட்டு புரட்டு, கொலை, கொள்ளை போன்ற சின்னச் சின்ன சமாச்சாரங்களுக்காக அங்கே அரசாங்க விருந்தாளியாக நீதிமன்றத்தால் அன்போடு அனுப்பி வைக்கப் படுகிற பிரமுகக் கைதிகளுக்கு சிறிய தோதில் சவுகரியங்கள் செய்து கொடுப்பது தப்பு என்று சொல்ல முடியுமா என்ன ? வி.ஐ.பி கைதிகள் விண்ணப்பித்துக் கொண்டால், கம்பிக் கதவுக்குப் பின்னால் ஜெயில் அறைக்குள் பஞ்சு மெத்தைக் கட்டில், ஏர்கண்டிஷனர், கலர் டெலிவிஷன், ஐந்து நட்சத்திர ஓட்டலிலிருந்து தருவித்த சாப்பாடு என்று தாராளமாக அனுமதிக்கப்படுகிறதாம். இதெல்லாம் அனுபவித்து அலுத்து ஒழிந்த நேரத்தில் கம்பி எண்ணும் விருந்தாளிகள் இப்படி நானாவித சுகங்களுக்காகவும் பணத்தைத் தண்ணீராக வாரியிறைக்கும்போது, அது கண்மறைவான வாய்க்கால் வழியோடி மற்ற இடங்களிலும் பொசிவதால் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் மகிழ்ச்சி. இப்படியான செல்விருந்து ஓம்பி இதே தரத்தில் பட்ட வருவிருந்து பார்த்திருக்க அரசுப் பணியாளர்கள் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் செயல்படுவதாகச் செய்தி.
மத்தியச் சிறைச்சாலையில் சும்மா ஏர்கண்டிஷனில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்காமல் அரசாங்க ஏற்பாட்டின் படி சிறைச்சாலைக்குள் சிறுதொழில், விவசாயம் என்று உருப்படியான காரியங்களில் ஈடுபடவும் வகை செய்திருக்கிறார்கள். தற்போது உள்ளே இருக்கும் சாராயச் சக்கரவர்த்தி மணிச்சனுக்கு விவசாயத்தில் விருப்பமாம். ஜெயில் நிலத்தில் வாழையும், தென்னையும், குறுமிளகும் பயிரிட அரசு அனுமதி உண்டுதான். ஆனால் அதற்கெல்லாம் என்ன உபயோகம் ? வனிலா பயிர் செய்வது தானே காசு கொட்டும் விவசாயம் ? பக்கத்து மாநிலமான கர்னாடகத்தில் கிருஷ்ணாயிசத்தை – இது பதவி போன முதல்மந்திரி கிருஷ்ணா இல்லை. சாட்சாத் ஹரே கிருஷ்ணா – பரப்ப வந்த இஸ்கான் என்ற இண்டர்நேஷனல் சொசைற்றி ஓஃப் கிருஷ்ணா காண்சியஷ்னஸ் கர்னாடக விவசாயிகளை வனிலா பயிரிட ஊக்குவிப்பதோடு கிலோகிராம் இருபதாயிரம் ரூபாய் விலைக்கு அவர்களிடமிருந்து விளைச்சலை மொத்தமாக வாங்கி அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்து, பட்டினி கிடக்காமல் பஞ்சு மெத்தையில் சாய்ந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம் என்று புறப்பட்டிருக்கிறதாம். மணிச்சனுக்குச் செய்தி தெரிந்தோ என்னமோ சிறப்பு அனுமதி வாங்கி சிறைச்சாலைக்குள் வனிலா பயிரிட ஆரம்பித்திருக்கிறாராம். பணப்பயிரைப் பணக்காரர்கள் பயிரிட பணம் கொட்டி வீரிய உரமும், பூச்சி மருந்தும் மற்றதும் எல்லாம் வெளியிலிருந்து வரவழைக்க எல்லா வசதியும் செய்து தரப்படுகிறதென்று தகவல் போன வாரம் பத்திரிகைச் செய்தியானது. விவசாயத்தில் தன்னிறைவு அடைய அரசாங்கமும் ஒத்துழைப்பத்தில் தவறு சொல்ல முடியுமா என்ன ?
பூஜப்புர தவிர தலைநகரான பள்ளிகொண்டபுரத்தில் சிறிதும் பெரிதுமாக இருக்கப்பட்ட பல காவல் நிலையங்களில் ஒன்றிலிருந்து புதுப்படத் திருட்டு, மற்றைய வி.சி.டி ரெய்டுக்குப் போனவர்கள் ஏகப்பட்ட குறுந்தகடுகளைக் கைப்பற்றினார்களாம். இந்த விசிடியை எல்லாம் வாரிப் போட்டுக்கொண்டு வந்து, கேசு எடுத்துவிட்டு டியூட்டி முடிந்து வீட்டுக்குப் போக ஏனோ மனம் வரவில்லை யாருக்கும். பக்கத்து விடியோக் கடையில் கலர் டிவி கடனாக வாங்கினார்கள். ராத்திரி முழுக்கக் கண்விழித்து உட்கார்ந்து கைப்பற்றிய எல்லாவித சி.டிகளையும் விடியவிடியப் பார்த்துத் தீர்த்தார்கள். கோபத்தால் அல்லாமல் களைப்பால் சிவந்த கண்களோடு அவர்களெல்லாரும் காலையில் வீட்டுக்குப் புறப்பட்டுப் போனதாகப் போனவாரத் தகவல்.
கடன் வாங்க வேண்டிய அவசியமே இல்லாமல், இடுக்கி பிரதேச நதிப்புறக் கிராமப் பொலீஸ் நிலையத்தில்
கலர் டெலிவிஷன் உண்டு. நதிக்கரையில் சட்ட விரோதமாக மணல் வாரி விற்கும் காண்ட்ராக்டர்கள் வாங்கிக் கொடுத்தது. தற்போது இடவப்பாதி பெருமழைக் காலமாதலால், மணல் வார முடியாமல் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு இவர்கள் தினசரி காவல்நிலையத்தில் நித்தியப்படிக்கு ஆஜராகி விடுகிறார்கள். தண்ணீர் ஒழுகும் குடைகளை மடக்கி ஓரத்தில் வைத்துவிட்டு அரசாங்க நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டு டிவியில் சீரியல் பார்ப்பதில் மும்முரம் எல்லோரும்.
எல்லாக் காவல் நிலையங்களுக்கும் இப்படி சவுகரியங்கள் கிட்டுவதில்லைதான். வயநாட்டில் ஒரு பொலீஸ் ஸ்டேஷனில் மராமத்துப் பணிக்கே காசில்லை. முக்கியமாக காவல் நிலையத்தில் மின்சார ஒயரிங்கை எல்லாம் மாற்றியாக வேண்டியிருக்கிறது. மின்சாரம் கண்டுபிடித்து பரசுராம பூமிக்கு அது வந்தபோது உருவான அரசுக் கட்டடம் என்பதாலும் மழைக்காலம் என்பதாலும் எங்கே தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. ஈரமான உடுப்பை உலர்த்த மின்விசிறியைப் போட்டால் ஷாக். ராத்திரியாகும்போது விளக்கைப் போடப்போனால் ஷாக்.
நாடாளுமன்றத் தேர்தலில் கேரளத்தில் ஒரு சீட் கூடக் கிட்டாமல் காங்கிரஸ் தோல்வியடைந்தபோது முதலமைச்சர் ஆன்றணி சொன்னார் – இது மக்கள் நமக்குக் கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட். ஆன்றணிபோல் ஷாக் டிரீட்மெண்டை சுபாவமாக எடுத்துக் கொள்ள வயநாட்டுக் காவலர்களுக்கு பிராந்தா என்ன ? காவல் நிலையத்தில் ஃபேன் சுற்ற வேண்டும். விளக்கும் எரிய வேண்டும். லாக் அப் கைதிகள் எதற்கு இருக்கிறார்கள் ? கதவைத் திறந்து அவர்களை வெளியே அன்போடு அழைத்து வந்து சுவிட்சைப் போடச் சொன்னால் தீர்ந்தது பிரச்சனை. இந்த ஷாக் டிரீட்மெண்டுக்குப் பயந்தே இனி வயநாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
எலிவளையானாலும் தனிவளை போல், ஷாக் அடித்தாலும் வயநாட்டு பொலீஸ் ஸ்டேஷனில் தனி மின்சார இணைப்பாவது உண்டு. ஆலப்புழை பிரதேசத்தில் ஒரு காவல் நிலையத்தில் அதுவும் கிடையாது. இவர்களுக்குப் போனவாரம் சோதனை வந்தது. பெட்ரோல், டாசல் விலையேற்றத்தை எதிர்த்து கேரளம் முழுக்க வேலை நிறுத்தம் நடந்த நாள் அது. ‘பந்த் ‘ நேரத்தில் ரோந்து வந்த பொலீசார், ஒரே மோட்டார்சைக்கிளில் மூன்று பேராக உட்கார்ந்து நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் போய்க்கொண்டிருந்தவர்களை விசில் ஊதி நிறுத்தினார்கள்.
‘நாங்க எலக்ட்ரிசிற்றி போர்ட்காரங்க. வேறே வாகன வசதி கிடைக்காம போயிட்டு இருக்கோம். முக்கியமான அரசுப் பணி ‘ என்று பிடிபட்டவர்கள் முறையிட, ‘அரசுப் பணியாவது, வெங்காயமாவது, ஸ்டேஷனுக்கு வாங்கய்யா எல்லோரும் ‘ என்று கெத்தாக அவர்களைக் காவல் நிலையத்தில் படி ஏற்றி வழக்குப் பதிவு செய்தார்கள்.
அந்த மூன்று நபர் மின்சார வாரியக் குற்றவாளிகளில் வண்டியோட்டிய முதல் குற்றவாளி வாரியத்தில் துணைப் பொறியாளர். காவலர்களோடு பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது அவருடைய சர்க்கார் கண்கள் பொலீஸ் ஸ்டேஷனில் மின்சார இணைப்பு ஒயரிங்கைப் பார்த்தபடி இருந்தன. வெளியே எங்கே இருந்தோ வருகிற மின்சாரம் அது என்று கண்டுபிடித்தார் பொறியாளர். ஜன்னல் வழியாகப் பார்க்க, பக்கத்து வீட்டில் இருந்து மின்சாரம் இங்கே வந்து அரசு அலுவலகத்தைப் பிரகாசிக்க வைக்கிற விஷயம் தெரிந்தது.
மோட்டார் சைக்கிளில் மூன்று பேராகப் போன குற்றத்துக்கான அறிக்கையில் கையெழுத்துப் போடுவதற்கு முன்னால் அவர் நெஞ்சு நிமிர்த்தி அறிவித்தார் – ‘அனுமதி இல்லாம எப்படி பொலீஸ் ஸ்டேஷனில் கரண்ட் கனெக்ஷன் கொடுத்தீர்கள் ? இது மின்சாரத் திருட்டாக்கும். சட்டப்படி குற்றம் ‘.
‘அது வந்து ‘ என்று பொலீஸ்காரர்கள் தலையைச் சொறிய, ஷாம்பு போட்டுத் தலை முழுகச் சொல்லிவிட்டு, பியூஸைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார் அந்த உதவிப் பொறியாளர். எஃப்.ஐ.ஆரை எழுதி முடிக்க முடியாமல் காவல் நிலையம் இருட்டில் முழுகி இருக்கிறதாம்.
இப்படி அடிப்படை வசதிகளுக்காகவே தவித்துத் தள்ளாடும் காவல் நிலையங்களில் சாலக்குடி பொலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு சின்ன அதிர்ஷ்டம். மலையாள – தமிழ் திரைப்பட நடிகர் கலாபவன் மணி அந்தக் காவல் நிலையத்தைப் பெரிதாகக் கட்டி, பெண் காவலர்கள் ஓய்வறையை முதல் மாடியில் ஏற்படுத்துவதற்காக ஒண்ணரை லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்திருப்பதாகச் செய்தி.
சினிமாவுக்கு வருவதற்கு முன் தான் செய்த தொழில்களை இரண்டு வாரம் முன்புதான் மணி பட்டியல் இட்டிருந்தார். சிறுகடை வியாபாரம், வண்டியில் பழம் விற்பனை, கூலிப்பணி என்று அவர் செய்த தொழில் லிஸ்டில் அடியாள் என்ற பணியும் உண்டு என்பதற்கும் போன பத்திச் செய்திக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
****
இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் ‘அந்நியன் ‘ படத்துக்கு அரசுத் துறை ஐ.டி.பி.ஐ வங்கி கடனாக நிதியுதவி செய்யப் போகிறதாகப் போன வாரச் செய்தி. பதினேழு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் இந்த ‘பிக் பட்ஜெட் ‘ படத்தின் பாதி தயாரிப்புச் செலவான எட்டரைக் கோடி ரூபாயை வங்கி வழங்கும்.
தனியார் ஃபைனான்சியர்கள் முப்பது, நாற்பது விழுக்காடு வட்டி வசூலித்துப் பெருந் தயாரிப்பாளர்களைக் கஷ்டப்படுத்துவதிலிருந்து அவர்களை ரட்சித்து, குறைந்த வட்டியான பனிரெண்டரை சதவிகிதத்தில் இப்படிக் கோடிகளை வழங்கிப் பொழுதுபோக்குத் திரைப்படம் எடுக்க உதவ ஐடிபிஐ வங்கி நூறு கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறதாம்.
இதுவரை பாலிவுட் இந்தித் தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த இந்த சலுகை இப்போது தமிழுக்கும் வந்திருக்கிறது. மினிமம் பட்ஜெட் நாலு கோடி ரூபாய் வைத்து எடுக்கப்படும் படங்களுக்கு மட்டும் ஐம்பது சதவிகிதம் தயாரிப்புச் செலவாக வங்கி கடன் தரும். கடனில் பெரும் பகுதியும் நடிப்புக் கூலியாக நடிக நடிகைகளுக்குப் போக, மிஞ்சிய கொஞ்சப் பணம் திரைப்படத் துறையின் முகம் தெரியாத எத்தனையோ ஏழைத் தொழிலாளர்களுக்கு ஊதியமாகக் கசியும். அந்த வகையில் மகிழ்ச்சிதான்.
திரைப்படத்தை ஒரு தொழிலாக மட்டும் பார்த்து நூறு கோடி ரூபாயைப் பெருந்தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கக் களத்தில் இறங்கி இருக்கும் அரசு வங்கி, அதில் கொஞ்சத்தையாவது கிள்ளி இணைத் திரைப்படம் தயாரிப்பவர்களுக்கும் கொடுத்தால் திரைப்படக் கலை வளர்ச்சிக்கு உதவிய புண்ணியம் அவர்களுக்கு நிச்சயம் கிட்டும்.
இந்தப் படங்கள் தப்பித் தவறி வெற்றியடைந்தால் கொடுத்த கடன் பைசா பாக்கியில்லாமல் வசூல் ஆகிவிடும். இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் வருடம் முழுக்க நடக்கும் திரைப்பட விழாக்களில் இப்படங்களைத் திரையிட உதவி செய்தால் நம் கலைஞர்கள் கொடுத்த காசைத் திருப்பியடைப்பதோடு ஆத்ம திருப்தியும் அடைவார்கள்.
இப்போதைக்கு இவர்கள் எல்லோரும் அரசு உதவியை மட்டுமே நம்பியிருக்கிறபடியால் இந்த நாட்டில் திரைக் கலை முன்னேற்றம் ஆமை வேகத்தில் தான் இருக்கிறது. தன் கதையை அடிப்படையாக வைத்து இயக்குனர் மகேந்திரன் அரசு உதவியோடு தயாரித்த ‘சாசனம் ‘ படம் வருடக் கணக்காக வெளியிடப்படாமல் இருக்க, அது திரைக்கு வருவதைக் காணக் கொடுத்து வைக்காமலே மறைந்து விட்டார் அன்புக்குரிய நண்பர் கந்தர்வன். ஐடிபிஐ வங்கிக்குக் கந்தர்வனும் மகேந்திரனும் கலைப்படமும் எல்லாம் ஒரு பொருட்டில்லைதான்.
மத்தளராயன்
- சுமை
- பூதளக்கனல் சுனைகளில் மின்சக்தி உற்பத்தி [Energy from Geothermal Springs]
- மெய்மையின் மயக்கம் – 6
- The School of Rock (2003)
- செம்புலப் பெயல் நீர்
- இதோ ஒன்று : ஆபாசமான இணைப்பு
- ஆட்டோகிராஃப் ‘உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை ‘
- தென்கச்சி சுவாமிநாதனின் திருக்குறள் கதைகள் குறுந்தகடு
- கடிதங்கள் ஜூலை 1,2004
- ஆண்டார்குளம் திருநெல்வேலி மருத்துவ மையம் திட்டப்பணி
- அன்புடன் இதயம் – 23 – சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு
- கவிக்கட்டு 13 -திறந்து விடு
- பூச்சிகளின் ஆர்க்கெஸ்ட்ரா
- வேண்டுதல்!!
- ஏழாவது சுவை
- இசை ஒவியம்
- கவிதையாதெனில்….
- இழப்பு
- கவிதைகள்
- மதிய உணவு
- இருப்பிடம்
- வேர்வை
- விலகி
- திரு எஸ் வி ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி : காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து பியூசிஎல் பற்றி சில சிந்தனைகள்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் – 26
- இருள் (நாடகம்)
- தீர்வுகள் கிடைக்குமா… ?
- மஸ்னவி கதை — 11- அல்வாவும் அழுகையும்
- விதியின் சதி
- ஆண்டைச் சாதியின் அரசியல் சட்டம்!
- இன்னொரு ரஜினிகாந்த் ?
- கலைஞருக்குக் கடிதம்:நெஞ்சுக்கு நீதி எங்கே ?
- தீம்தரிகிட தலையங்கங்கள்
- ஞாநியின் டைரி
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 10
- பு லி த் ே த ா ல்
- இஸ்லாத்தின் தோற்றம்
- வாரபலன் – ஜூலை 1 , 2004 – கூட்டுப் படைப்பு , காவல் துறை ஜெகஜோதி மகாத்மியம், திரைப்படத்துக்கு வங்கி உதவி
- கரைதலின் திறவுகள்…
- இரு கவிதைகள் : மரமறு மறுமரம், சொல்ல வந்தது…
- சின்னச் சின்ன..
- வயோதிகக் குழந்தை
- ஒளிருமே
- தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு
- நண்பா! (வெண்பா)
- நறுக்குகள்