வஹி பற்றிய வாசிப்பின் அரசியல்

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

ஹெச்.ஜி.ரசூல்வஹி என்ற சொல்லுக்கு இறைச் செய்தி என்று பொருள். இறையின் புறத்திலிருந்து நபிமார்களுக்கு இறைச் செய்தி அருளப்பட்டவிதம் குறித்து குரன் விளக்குகிறது.

சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஹஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள புனிதகுரான் ஆங்கில மொழிபெயர்ப்பின் அர்த்தமும் விளக்க உரையும்(The Holy Quran English Translation of the Meanings and Commentary)இவ்வாறு சொல்கிறது

அத்தியாயம் 42 அஷ்ஷூரா வசனம் 51

…For a man Allah should speak to him except by inspiration or from behind a veil or by the sending of a messenger to reveal with Allahs permission what Allah wills…

அல்லாஎந்த மனிதருடனும் உள்ளத்து உதிப்பின்மூலமோ திரைக்கு அப்பாலிருந்தோ அல்லது தான் விரும்பியதை தன் அனுமதி பெற்று அறிவிக்கும் (வானவர்களாகிய) தூதரை அனுப்பியோ தவிர (நேரிடையாக )பேசுவதில்லை.

2) வஹி என்பதன் கருத்து போடுதல்,உதிக்கச் செய்தல்,உள்ளத்தில் ஒரு விஷயத்தை விதைத்தல் அல்லது கனவில் ஒன்றைக் காட்டுதல் என இமாம் மெளதூதி விளக்குவார்.(திருக்குரான் – மூலம் -தமிழாக்கம் -விளக்கவுரை, ஐஎப்டி வெளியீடு)

3) அத்தியாயம் 2 அல்பகரா வசனம் 97

(நபியே) நீர் கூறும் யாரேனும் ஜிப்ரீலுக்குப் பகைவராக இருந்தால் அவர் அறிந்து கொள்ளட்டும்.அல்லாவின் ஆணைப்படியே ஜிப்ரயீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.

அல்லா – ஜிப்ரயீல் அலைகிஸ்லாம் – இறைத்தூதர் உள்ளத்தில் எழுப்பப்பட்ட உதிப்பு என்கிற குரானிய கருத்தின் நிலையில் வஹி வெளிப்பட்டிருப்பதன் நீட்சியாகவே நவீனத்துவ இஸ்லாமிய அறிஞர்களான சர் சையத் அகமதுகான், குலாம் அகமது பர்வேஷ்,ஷெய்கு அப்தூ,அனஸ் உள்ளிட்ட சிந்தனையாளர்களும் விளக்கங்களை முன் வைத்திருந்தனர்

இந்த குரானிய வசனங்களின் பின்னணியில் வஹியை இவ்வறாக புரிந்து கொள்ளலாம்

1) வஹி என்பது அல்லா இறைத்தூதரின் உள்ளத்தில் ஏற்படுத்தும் உதிப்பு. உள்மனத்தில் ஏற்படுத்தும் உணர்வுத்தூண்டல். இது கனவின் மூலமாகவும் நிகழ்ந்துள்ளது.

2)அல்லா திரை மறைவிலிருந்து (ஒளித்திரை) இறைத்தூதருடன் ஒலி வடிவில் பேசிய பேச்சு.

3)அல்லா ஜிப்ரயில் அலைகிஸ்லாம் வழியாக இறைத்தூதருக்கு விழிப்பு நிலையிலும் அனுப்பப்பட்ட இறைச் செய்தி

1)சர் சையத் அகமத்கானின் வஹி பற்றிய விளக்கம்சர் சையது அகமதுகான் தமது அல்குரான் விளக்க உரையில் வஹியின் உட்பொருளை விளக்குகையில் இறைவன் தன் படைப்புகள் அனைத்திற்கும் ஒரு இய்ற்கை ஆற்றலைத் தந்துள்ளான். இது பிற அறிஞர்களால் இயற்கை உள்ளொளி(Natural Inspiration) எனக் கூறப்படுகின்றது.அல்குரானின் அந்நஹல்(தேனீ) உமது இறைவன் தேனீக்கு உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்(16:68) வ அவூஹா றப்புக்க என இந்தக் குரான் வாக்கியம் ஆரம்பமாகிறது. அவூஹா : வஹிய்யூன் என்பதன் சாதாரண பொருள் உள்ளுணர்வு(Inspiration )ஆகும்.ஆனால் இதை தேனீக்களின் இயல்பூக்கமாக (Instinct)கொள்ளவேண்டும். என மெளலானா யூசுப் அலி தமது குரான் விளக்க உரையிற் கூறியுள்ளவற்றையும் இங்கு கருத்திற் கொள்ளலாம். தேனீக்கு வழங்கியுள்ளதைப் போல இவ்வாற்றலை இறைவன் மனிதனுக்கும் அவனது தரத்திற்கு ஏற்றவாறு அக்லிய் இன்சானியாவாக மனிதப் பகுத்தறிவாக வழங்கியுள்ளான் என்று செய்யிதின் வஹி கோட்பாடு கூறுகிறது. இவ்வறிவு உள்ளொளியின் பண்புகள் சில எல்லா மனிதரிடமும் காணப்பட்டாலும் அது அதி உயர்நிலையில் ஆன்மீக வழிகாட்டுதலாக தேர்விடப்பட்ட மிகச் சில மனிதர்களில் செயற்படுகிறது.வஹி அதன் படித்தர உயர்வுகளினால் நபிமார்களிடத்தில் மிக உயர்ந்த எல்லைக்கு செல்வதாக செய்யித் கூறுகிறார்.(Troli,w.c.,Syyid Ahmed Khan, A Re interpretation of Muslim Theology,Vikas,NewDelhi – 1968 )2)சர் சையத் அகமத்கானின் மிஹ்ராஜ் பற்றிய விளக்கம்சர் சையத் அகமதுகான் வஹி பற்றிமட்டுமல்ல குரானில் இடம் பெற்றிருக்கும் அற்புதங்கள், ஜின்கள், மிஹ்ராஜ் பயணம் எல்லாவற்றிற்கும் தனது பகுத்தறிவு சார்ந்த விளக்கத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக மிஹ்ராஜ் பற்றி இவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளார்

யூசுப் அலியின் விளக்கத்தின் துணை கொண்டு நபிமுகமதுவின் மிஹ்ராஜ் பயணம் உடல்ரீதியாக நிகழ்த்தப்பட்டதல்ல எனினும் உடல் ஆன்மீகரீதியாக நுணுக்கப்பட்டதுஎன்பதை கோடிட்டு காட்டுகிறார்.மரபுரீதியாக புராக்வாகனத்தில் நபிகள் நாயகத்தின் வின்ணுலகப்பயணம் நிகழ்ந்ததாக குறிப்பிடுவதிலிருந்து இது மாறுபட்டதொரு அணுகுமுறை. அவர் இதனை சாதாரண உலகிலிருந்து ஆன்மீக உலகுக்கு பறத்தல்,உயர்த்தப்படுதல் இது ஒரு ஆன்மீக அனுபவம் என்றும் குறிப்பிடுகிறார்.இதன் அடிப்படையிலேயே வஹி என்கிற கருத்தாக்கமும் விளக்கப்பட்டுள்ளது

3)இலங்கைப் பேரறிஞர் அனஸின் வஹி பற்றிய மறு விளக்கம்இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைசார்ந்த அறிஞர் எம்.எஸ்.எம் அனஸ் தனது தற்கால இஸ்லாமிய சிந்தனை – இஸ்லாத்தில் நவீனத்துவவாதமும், புத்துயிர்ப்புவாதமும் நூலில் வஹி கோட்பாட்டை சர் சையத் அகமதுகானின் கருத்தை ஒட்டி தனது நூலில் இவ்வாறாக விளக்குகிறார். வஹி கோட்பாட்டை அதற்கு வழங்கப்பட்ட பழைய சமய விளக்கங்களுக்கு அப்பால் உயிரியல்,இயற்கைப் பரிமாணம்,உளவியல் போன்ற விஞ்ஞான விளக்கத்திற்கு ஏற்புடையதாக நிர்மாணம் செய்ய செய்யித் முன்வந்தார் என்கிறார்

4)இஸ்லாமிய கருத்தாடல்களுக்கு மரபுரீதியான விளக்கங்களுக்கு மாற்றாக நவீனத்துவ விளக்கமளித்த அறிஞர்களில் முக்கியமானவர் குலாம் அகமது பர்வேஷ்.மாறிப் அல் குரான் – குரான் விளக்க உரை;இஸ்லாம்:சமயத்திற்கு ஒரு சவால் என்பது போன்ற நூல்கள் முக்கியமானவை.அவர் தனது நூலில் வஹி பற்றிய சிந்தனைக்கு கீழ்கண்டவாறு புதிய விளக்கம் அளிக்கிறார். 1)வஹியின் மூலாதாரம் இறைவனாகும். அது பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டதாகும்.ஆனால் நடைமுறையில் மனிதனுக்கு நேர்வழி காட்டவும் அறிவூட்டவும் ஆதாரமாக உள்ளது. அதனால் பகுத்தறிவு வஹியின் ஆற்றலுக்குள் உள்ளடங்கியதாகும்.

2)மனிதனுக்கான இறைவழிகாட்டல்(வஹி)தன்னை உணர்தலுக்கும் அறிவு மேம்பாட்டிற்கும் மகிழ்ச்சிக்குமான வழியக் காட்டுகிறது. வஹிகாட்டும் வழியில் செல்பவன் அதன் இறுதி நிலையாக மூமீன் என்ற உயர் மனித நிலையைப் பெறுகிறான்.

3)தனது அகமுரண்பாடுகளையும், புற முரண்பாடுகளையும் வெற்றிகரமாக தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளவனே மூமீன்.ஆகவே வஹி தனிமனித வாழ்விலும்,சமுதாய வாழ்விலும் நல்லிணக்கத்திற்கும் சமாதானத்திற்கும் வழி காட்டும் ஆற்றலாகும்.

4)வஹி என்பதற்கு(ரிவலேஷன்)இறைவெளிப்பா டு என்று தரப்படும் பொருள் போதுமானதல்ல.மனிதனின் சிந்தனை உணர்வைத் தூண்டுதல் என்ற பொருளில் நோக்கப்படவேண்டும். இதுபோன்று இஸ்லாமிய நவீனத்துவ சிந்தனையாளர்கள் இறையியல் கருத்தாடல்களுக்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கங்கள் அளித்திருப்பது புனிதப் பிரதிகளை காலம், வெளி சார்ந்து வாசித்து புதிதாய் அர்த்தப்படுத்தும் வாசிப்பின் அரசியல் என்றே கூறலாம்.

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்