வண்டுகள் மொய்க்கும் பூ

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

ராம்ப்ரசாத்


‘அப்பா வர நேரம் ஆச்சு. பக்கத்து நாடார் கடைல டீத்தூள் வாங்கிட்டு வா டீ. எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்ருக்கேன்’

‘தோ போறேன்மா, தொணதொணங்காத’

வசந்தி நிலைக்கண்ணாடி முன் நின்று அழகாய் ஸ்ட்ரெய்டன் செய்யப்பட்ட கூந்தலில் சில கற்றைகளை முகத்தில் வழிய விட்டுவிட்டு க்ளிப் போட்டு இறுக்கி, முகத்தை சற்றே சாய்த்து இதழோரம் ஒரு விஷமப்புன்னகையை வடித்துத் தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டாள். மெரூன் நிற சல்வார் அவளின் ஐந்தடி ஆறங்குல‌ உயர ஐம்பது கிலோ உடலை சிக்கென்று பிடித்திருந்தது. பெண்களே பார்த்தால் பொறாமை கொள்ளும் உடல்வாகை தன்னிடமே பார்த்து பார்த்து அவள் மனம் அந்தரத்தில் உயர உயர பறந்துகொண்டிருந்தது. கற்பனைகளின் வானில் ஓங்கிய கழுகென அவளைப் பறக்கச்செய்தது. மனம் குதூகளித்தது. உடல் சிலிர்த்தது.
வசந்தி வாசலுக்கு விரைந்தாள். ஏற்கனவே கண்ணாடி முன் நின்று அதிக நேரம் செலவிடுவதாய் போவோர் வருவோரிடமெல்லாம் கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறாள் அம்மா. இன்னும் சற்று நேரம் தாமதித்தாலும் அம்மா பெரிதாகக் கத்தக்கூடும். வாசலுக்கு விரைந்தவளை வாசல் சற்று நேரம் தாமதிக்கவே செய்தது. அவளின் உயரத்திற்கும், உடைக்கும், மெருகேற்றிய அழகிற்கும் பொருத்தமான காலனி இல்லாதிருப்பது இம்முறை வெளியில் செல்ல எத்தனிக்கும் போதும் உறுத்தியது. உயரே பறந்து கொண்டிருக்கையில் சட்டேன தரையில் சுருண்டு விழுந்தது போலான உணர்வைத் தந்தது. குதூகளித்த மனம் சட்டென வாடிப்போனது. சிலிர்த்த உடல் சற்றே வியர்த்தது..
சற்றும் பொருத்தமில்லாமல், கல்லூரி லேப்பிற்கு செல்கையில் அணியும் கருப்பு நிற லெதர் கட் ஷூவை அணிந்து தெருவில் இறங்கினாள். வேறுவழியில்லை. அது ஒன்றுதான் இப்போதைக்கு உறுப்படி. வைத்திருந்த இன்னொன்று கிழிந்துவிட்டது. பேசாமல் ரூமிற்கு திரும்பப் போய் சாதாரண உடை அணிந்துகொண்டு கடைக்குப் போகலாமா என்று கூட எண்ணம் வந்தது. ஆனால், இப்போது மீண்டும் ரூமிற்குள் அடைந்தால் அம்மா மீண்டும் கத்தக்கூடும். தெருவே இவள் நடந்து செல்வதை ரசித்தது. பலர் பால்கனி வழியே எட்டிப்பார்த்தனர். சிலர் பின்னால் நடந்தனர். ஆனாலும் வழியெங்கும் இருப்பு கொள்ளவில்லை.

கடந்து செல்லும் எல்லோரும் தன்னை விட பொருத்தமில்லாத தன் ஷூவையே கவனிப்பதாய் தோன்றியது. கடைக்கார பையன் இவள் வந்ததும் இவளுக்கே முன்னுரிமை கொடுத்தான். இன்முகத்தோடு உடனே டீத்தூள் எடுத்துக்கொடுத்தான். எடுத்துத் தருகையில் அவன் நடவடிக்கை சற்றே பதட்டப்படுவதை அவள் கவனித்தாலும் கவனிக்காதது போலிருந்தாள். இவனேதான் ஒரு முறை வீட்டிற்கு அரிசி சிப்பம் கொண்டு வந்த போது அவளை தாவணியில் பார்த்துவிட்டு அழகாக இருப்பதாக சொல்லிச் சென்றான். அந்த நிமிடம் அவனை அவளுக்குப் பிடித்திருந்தது. அவன் ஒவ்வொருமுறை வரும்போதும் அவனைக் கடந்து போகத் தூண்டியது. அப்படிப் போகையில் அவன் அவளின் அழகைப்பற்றி ஏதேனும் சொல்கிறானா என்று கவனிக்கத் தோன்றியது. ஆனால் இப்போது டீத்தூள் வாங்கிவிட்டு வீடு வரும் வரை பொருத்தமில்லாத ஷூ நினைப்புதான்.

வேறு யார் பார்ப்பதைப்பற்றியும் கூட வசந்தி அதிக‌ கவலைப்பட்டிருக்கமாட்டாள்.. ஆனால் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ரஞ்சித்தும் பார்த்துவிட்டதுதான் அவளை பாடாய்ப்படுத்தியது. ரஞ்சித் அழகானவன். இவளைப்போலவே பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு முடித்திருக்கிறான். வேலைக்கு முயற்சிக்கிறான். திறமைசாலி. இப்போதிருக்கும் வீட்டிற்கு வசந்தியின் குடும்பம் புதியதாய்க் குடிவந்தபோது, ஒரு நாள் அவள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது, ரஞ்சித் தான் முதன் முதலில் அவளிடம் வந்து பேசினான். அவள் அழகாய் இருப்பதாய் கூறினான். அவன் இயல்பாய் அவள் அழகைப் பற்றி புகழ்ந்ததாகத் தோன்றியது. அவன் பேச்சு அவளுக்கு வெகுவாய்ப் பிடித்திருந்தது. அவனை அடுத்தடுத்த முறை கடக்க நேர்ந்தபோதும் அதையே அவள் மனம் எதிர்பார்த்தது. நாளடைவில் நட்பாய் உருவானது. இவளுக்கு அவனை பிடிக்கும் தான். ஆனால் அவன் கண்ணில் இன்றைக்குப் பார்த்து பட்டுவிட்டோமே என்று தோன்றியது. வீட்டுக்கு வந்ததும் ஷூவைக் கழட்டிவிட்டு, டீத்தூள் பொட்டலத்தை மேஜைமீது எறிந்துவிட்டு, சோபாவில் பொத்தென்று விழுந்தாள். என்ன நினைத்திருப்பானோ? ச்சே.
ஏமாற்றமோ, அவமானமோ யாரோ ஒருவரிடத்தில் நேர்ந்தால், அந்த நிகழ்வு நாளடைவில் மறந்தாலும், அது சொல்லித்தரும் படிப்பினை மனதில் நின்றுவிடும். ஆனால், நாம் விரும்பும் மனிதர்களிடம் அது நிகழ்ந்துவிட்டால், அது ஒரு ஆலகால விஷம். நினைவில் நின்றே கொல்லும். சில அனுபவங்கள் உறவுகளின் முகத்தில் விழிக்கக்கூட லாயக்கற்றதாக்கிவிடும்.
அப்பா மாத‌ச்ச‌ம்ப‌ள‌க்கார‌ர். அதுவும் பாங்க் உத்யோக‌ம். ச‌ம்ப‌ள‌ம் ஏழாயிர‌ம் தான். இப்போது அவ‌ள் அணிந்திருக்கும் மெரூன் ச‌ல்வார் கூட‌ போன‌ தீபாவ‌ளிக்கு எடுத்த‌துதான். அதுவும் ஆறு மாத‌ங்க‌ள் போல‌ காசு சேர்த்து, அந்த‌ தொகையில் எடுத்த‌து. போன‌ வார‌ம், ஸ்பென்ச‌ரில் விண்டோ ஷாப்பிங் செய்த‌போது பார்த்த‌ கால‌ணி பொருத்த‌மாக‌ இருக்கும்தான். ஆனால் விலை இர‌ண்டாயிர‌ம். அப்பாவிடம் கேட்டால் அடி கிடைக்கும். வ‌ச‌ந்தி நீண்ட‌தொரு பெருமூச்சுவிட்டாள். அப்பாவை எதிர்பார்த்து ப‌ல‌னில்லை.

புத‌ன்கிழ‌மை ஹின்டூவின் ஆப்ப‌ர்ச்சுனிட்டீஸ் பேப்ப‌ர் காற்றில் ஆடிக்கொண்டிருந்த‌து. வ‌ச‌ந்தி பேப்ப‌ரை எடுத்து பார்க்க‌த்தொட‌ங்கினாள். சில மெயில் ஐடிக்களை குறித்துக்கொண்டாள். ரெசியூம் கவனமாக அனுப்பினாள் மின்னஞ்சலில். அவளின் வேலைக்கான தேடல், ஒரு கட்டாயத்துடனே தொடங்கியது. பகல் பொழுதுகள் அவளின் வேலை தேடலுக்கான முயற்சிகளுடன் கழியத்துவங்கியது.

ஒரு நாள் அப்படி இன்டர் நெட் சென்டரில் மெயில் அனுப்பிவிட்டு வரும் வழியில் உள்ள பார்க்கில் ஒரு புதர் மறைவில் எதிர்வீட்டு ரம்யாவுடன் ரஞ்சித் பேசிக்கொண்டிருந்ததைப் பார்க்க நேர்ந்தது. ரம்யாவும் வசந்தியும் ஒரே வகுப்பில் தான் பொறியியல் படித்தனர். ரம்யாதான் வசந்திக்கு எப்போதும் போட்டி. அந்தப் போட்டி மனப்பான்மை இப்போது ரஞ்சித் விஷயத்திலும் தொடர்ந்தது. பொருளாதார நிலையைத் தவிர ரம்யாவுக்கும் வசந்திக்கும் பெரியதாக வேறு வித்தியாசமில்லை. ரம்யாவும் வசந்தி அளவுக்கு அழகுதான்.

பெரும்பாலான சந்தர்பங்களில் ரம்யா, வசந்தியை, அழகை வெளிப்படுத்தும் வகையில் தான் முந்துவாள். ரம்யாவின் குடும்பம் வசதியானது. பணத்திற்கு பஞ்சமில்லை. விதம்விதமான உடைகள், உடைக்கேற்ற காலணி, தோடு, உதட்டுச்சாயம் என ரம்யா ஒரு செட்டாகத்தான் வளைய வருவாள்.

என்றேனும் இது தனக்கு ஒரு பிரச்சனையாக வரும் என்பதை உணர்ந்தே இருந்தாள் வசந்தி. ஏனெனில், என்னதான் ரம்யாவும் வசந்தியும் போட்டியாளராக இருந்தாலும், அத்தனை பணம், வசதி, செல்வச்செழிப்பு கொண்டு ரம்யா செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும், வசந்திக்கு இயற்கை ஈடுகட்டி போட்டிக்கு நிறுத்தியது. ரம்யா, ஜிம்மிற்கு போய், உடலை கட்டுக்கோப்பாக வைத்தால், வீட்டு வேலைகள் வசந்தி உடலை பராமரித்தது. ரம்யா உயர் ரக உணவு சாப்பிட்டால், வசந்திக்கு பழைய சோறும், காய்கறிகளும், சில நேரங்களில் வறுமை தரும் பட்டினியும் ஆரோக்யம் தந்தது. வெளி நாட்டு அழகு சாதனங்கள் ரம்யாவின் அழகைக் கூட்டினால், சுற்றுப்புறம் தந்த அன்பாலும், அரவணைப்பாலும் வசந்தி முகத்தில் எப்போதும் பூத்தே இருக்கும் புன்னகை அவள் அழகைக் கூட்டியது.

ஆனால், இயற்கை அவளுக்குச் செய்யும் இம்மாதிரியான உதவிகள் அவளுக்குப் புரிந்ததே இல்லை. என்னதான் வசந்திக்கு ரம்யா போட்டியாக நின்றாலும், மேலோட்டமாக பார்த்தால் ரம்யாவின் வசதிதானே எல்லோருக்கும் கண்களுக்கு தெரியும். அழகு பெண்களின் அடையாளம். அறிவும் திறமையும் ஆண்களின் அடையாளம்.
சந்தித்துக்கொள்ளும் நொடிகளில், தன்னை அழகாய் வெளிப்படுத்திக்கொள்ளும் தன்னம்பிக்கை வாய்ந்தவளாய் ரம்யா இருந்துவிட, வறுமை தந்தவைகளை குறைகளாகக் காண நேர்ந்ததால் வெளிப்படுத்த சங்கோஜப்பட்டு வசந்தி ஓடி ஒளிய, ரஞ்சித்துக்கு ரம்யா வெகு சீக்கிரம் நட்பையும் தாண்டிய உறவாகிப்போனதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். வசந்தியின் நிறைகள் ரஞ்சித்தின் முதிராத அறிவின் கண்களுக்குத் புலப்பட்டிருக்கவில்லை. ரஞ்சித் அதை உணர்ந்திருக்கவில்லை.
பார்க்கில் அவர்களைப் பார்த்தபோது இப்படியும் நேரலாம் என்பது வசந்தி அனுமானித்தது தான். அது அவளை ரஞ்சித்தை கடந்து போகும் தைரியம் தந்தது. அது விளக்கிய உண்மைகள் ஏனோ வசந்திக்கு புரியவேயில்லை. தேவைகளைப் பூர்த்திசெய்யவே திராணியற்று, கிடைத்ததில் சுருங்கி ஒட்டிக்கொள்வது போலான வாழ்க்கை, இது போன்ற தருணங்களில் இப்படித்தான் தைரியம் கொள்ள வைக்கும். கடந்து போக வைக்கும். கடந்து போகப் பழக்கப்படுத்தும். அவள் மட்டுமென்ன விதிவிலக்கா? கடந்து போவதும் ஒரு நிர்பந்தம், அது பழக்கப்படுவதும் ஒரு நிர்பந்தம் தான். பொருளாதார சுதந்திரமும், மேல்தட்டு மக்கள் நிறைந்த சுற்றுப்புறமும் இல்லாததுதான் தான் நிராகரிக்கப்பட்டதறகுக் காரணம் என்று கொண்டாள்.
இரவும் பகலும் நேர்முகத்தேர்வுக்கு தயார் செய்தாள். மனத்தில் வலியுடன் தயார் செய்தாள். இயலாமை பரிசளித்த கோபம் தயார் செய்வதில் திரும்பியது. இல்லாததிலிருந்து புதிதாய் ஒன்றை உருவாக்கியது. இரண்டு மாத கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. ஒரு அமேரிக்க மென்பொருள் நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் வேலை கிடைத்தது. அவள் எதிர்பார்த்த சுதந்திரம், பொருளாதார மேன்மை கிடைத்தது. வீடு, ஒரு பணக்கார அபார்ட்மென்டிற்கு இடம் பெயர்ந்தது. வாங்கிக் குவிக்க ஏங்கிய அத்தனை பொருட்களும் வீட்டில் நிறைந்தது.

ஆனால், வசந்தியின் தாகம் அடங்கவில்லை. அவள் அன்பு வெறுமனே நிராகரிப்பட்டதில் உள்ளத்தில் தேங்கிய கோபம், நிராகரிக்கப்படுதலின் வன்மம் தீயாய் கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தீ ரஞ்சித்தை விட சிறந்த ஒருவனால்தான் அணையும் என்று தோன்றியது. அவனைத் தேடத் தூண்டியது. தான் ரஞ்சித்தை விட திறமையான ஆணுக்கும் தகுதியானவள் என்று நம்பினாள். அது நாள்வரை விட்டதை மீண்டும் எட்டிப்பிடித்திட அவளை முனையச்செய்தது. அழகு நிலையங்களின் நவீனங்களை தன்னுடலில் உடனுக்குடன் கிரகித்தாள். அழகு, அறிவு, திறமை முதலான அனைத்திலும் தானே தலைசிறந்து விளங்க வேண்டுமென விரைந்தாள். தனக்கான ஆண் தன்னையும்விட சிறந்தவனாக, ரஞ்சித்தைவிட பல கோணங்களிலும் சிறந்தவனாக இருக்கவேண்டுமென்று கனவு கண்டாள்.
அந்த கம்பெனியில் ஆண்கள் பலர் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒவ்வொருவரையும் தெரிந்துகொண்டாள். ரஞ்சித்தோடு ஒப்பீடு செய்தாள். ரஞ்சித்தை மிஞ்சும் திறன் யாரிடம் இருக்குமென்று தேடினாள். மென்மேலும் தெரிந்து கொள்ள அதிகம் பழக அனுமதித்தாள். சிலருடன் வெறுமனே நட்புக்காய்ப் பழகினாள். ஒவ்வொருவரும் விதம்விதமாய் அவளைப் புகழ்ந்தார்கள். அதைத் தனது திறமைகளின் வெளிப்பாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரமெனக் அர்த்தம் கொண்டாள். நலன் விரும்பிகள் என்று வகைப்படுத்தினாள்.

அவர்களுள் இருவர் அவளுக்கு நெருக்கமானார்கள். ஒருவன் ரமேஷ், அழகானவன் ஆனால் மணமானவன். மற்றொருவன் தியாகு, பார்க்க சுமார்தான் என்றாலும் பெண்களைப் பேசியே மயக்கத்தெரிந்தவன், மணமாகாதவன். இருவருமே அவள் அழகைப் புகழ்ந்தார்கள். தாங்கள் புகழ்ந்த பெண்களில் இவளாவது தங்களுக்கு வழிவிடுவாளா என்று அனுமானித்தார்கள். அவர்களின் புகழ்ச்சியில் அவள் தன்னை மறந்தாள். அந்தரத்தில் பறந்தாள். சாதித்துவிட்டதான உணர்வைக் கொண்டாள். தனக்கு தகுதியான ஆணைத் தேடித் தன் தேடலைத் தொடர்ந்தாள். அவள் மிச்சம் வைத்த கொஞ்ச நஞ்ச நேரத்தில் தங்களை நிறைத்துக்கொள்ள எத்தனித்தார்கள். அப்படித் தொடங்கி, நாளடைவில், அவளையே அவர்களுக்கு நேரமொதுக்க செய்தார்கள். அலுவலகம் அமைத்துக்கொடுத்த மெயில் நெட்வொர்க், இம்மூவரையும் இணைத்தது.

‘ தியாகு, போன வாரத்துக்கு இந்த வாரம் நான் கொஞ்சம் அதிகமா வெயிட் போட்டுட்டேன் தானே?’. இது வசந்தி.

‘ எனக்கெப்படி தெரியும்? வேணும்னா ஒரு தடவை தூக்கி பாத்துட்டு வேணா சொல்றேன். ஒரு சான்ஸ் குடேன்’ இது தியாகு.

‘ ஓ, குடுக்கலாம். ஆனா நீ என்னை கீழ போட்டுட்டனா?’ இது வசந்தி.

இப்படியே கழிந்தது அவர்களின் உரையாடல்கள். வசந்தியின் மனம் இரண்டு பிரதியெடுக்கப்பட்டு இருவருக்கும் அளிக்கப்பட்டது அவளின் மூலமாகவே. உறவுகளுக்கு ஒரு பெயரிட்டுவிட்டுத் தொடர முடிகிறது சில சந்தர்ப்பங்களில். உறவுகளுக்கு சரியான பெயரிட எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசத்திலேயே அவ்வுறவுகள் வளர்ந்து வேறு உருவங்கள் பெறுவதை கவனித்தும் கவனியாதது போலிருந்தாள் வசந்தி.

இயந்திரத்தனமாகிவிட்ட உலகம், இப்படித்தான் உறவுகளுக்கு பெயரிடக்கூட நேரம் தருவதில்லை. சில சந்தர்ப்பங்களில், சில உறவுகள் கட்டாயமாக்கப்படுகின்றன, திணிக்கப்படுகின்றன‌. கார்ப்போரேட் உலகில் இதெல்லாம் நவீனங்களென்று கொள்ளப்படுவது வேதனைக்குரியது.

எனதென்று நினைக்கும்வரையில்தான் சில உணர்வுகள் இயல்பாய் வெளிப்படுகின்றன. எனது மட்டுமல்ல எனும்போது அவ்வுணர்வுகள் இயல்பாய் வெளிப்படுவது இயல்பாகவே தடைபடுகிறது. அந்தத் தடைபடுதலில் அவளுக்கு உடன்பாடில்லை. எனதென்னும் நிலையில் எதிர் பாலினம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவள் விரும்பினாள். அது தந்த மயக்கம் போதவில்லை. இன்னும் இன்னும் வேண்டுமெனக் கேட்டது. ரஞ்சித்துடனான காதல் நிராகரிக்கப்பட்டதற்கு ஒட்டுமொத்த ஆண்களின் காதல் நெஞ்சங்களை பலியாக்கினாள். எல்லோராலும் விரும்பப்படுதலில் கூட அது அடங்கவில்லை. ரமேஷுடன் பேசுவதை தியாகுவிடம் வெளிக்காட்டிக்கொள்வதை தவிர்த்தாள் வசந்தி. தியாகுவுடனான தன் உரையாடல்களை ரமேஷூடன் பகிர்ந்துகொள்வதில்லை. மூடிய கைகளில் ஒளிந்துள்ளவைகள் பதிலளிக்காத கேள்விகள் அவளைத் தொடரத் தொடங்கின.

ரமேஷ் மற்றும் தியாகுவுடனான உறவு ஒரு முக்கோணமாய்க் காட்சியளிப்பதை அவ்வப்போது அவள் உள்மனம் அவளுக்கு எடுத்துரைக்கும் நொடிகளில் முகம் மாறினாள். கவனத்தை வேறு விஷயங்களில் திசைதிருப்பினாள். அம்மாதிரி திசைதிருப்புவது தனக்கான வாழ்க்கையென்று அர்த்தப்படுத்தினாள். எஞ்சியது அவர்களின் பாடு என்று விட்டுவிடுதல் ஒரு வகையில் புத்திசாலித்தனமென்றும் அது அவர்களின் விருப்பமென்றும் நினைத்துக்கொண்டாள். ஆனாலும் தியாகு வசந்தியை அறிந்தே இருந்தான். புத்திசாலித்தனமாய், அவளால் வகுக்கப்பட்ட அவனின் எல்லைக்குள் நின்றுகொண்டான்.

தியாகு அளவிற்கு ரமேஷ் பெண்களைக் கையாள அறிந்திருக்கவில்லை. வசந்தியைப் பற்றியும், அவளுடனான தன் அந்தரங்க உரையாடல்கள் பற்றியும் ரமேஷ் தன் நண்பர்களிடன் பெருமையாய் பீற்றிக்கொண்டான்.அவனது நண்பர்களின் காதுகளுக்கு புதியதாய் வாய் முளைத்தது. அது போவோர் வருவோரிடமெல்லாம் சன்னமாய் முனுமுனுத்தது.

ரமேஷும் தியாகுவும் ஒருவர் மாற்றி ஒருவர் அவளின் தேனீர் நேரங்களையும், மொபைல் பேச்சுக்களையும் பகிர்ந்துகொண்டனர். நிறைய பேசினர். ஆனால் அந்த பேச்சின் நோக்கம் அவளிடமிருந்து சிரிப்பை வரவழைப்பதாய் மட்டுமே இருந்தது. சிரிக்க வைக்கவே அவள் அழகை அதிகம் புகழ்ந்தனர். புகழ்ந்து புகழ்ந்தே அவளை உயரப் பறக்க வைத்தனர். அதன்மூலம் உண்மைகளை மறைத்தனர். வசந்தி கானல் நீரால் நிறைந்தாள். தனது திறமைகளின் வெளிப்பாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரமென தவறாக உருவகப்படுத்தினாள்.

பேச்சினூடே அவ்வப்போது உணர்வுகளின் எல்லைகளைக் கடந்தனர் அந்த ஆண்கள். அந்தரங்கங்களைப் பற்றிப் பேசி மெல்ல அவளை ஆழம்பார்த்தனர். ஆண் வேட்டையாடுவதற்கு தேவையான திறன்களால் மட்டுமே அடையாளம் கொள்ளப்பட்ட விலங்கின சாரங்களின் உருவாக்கம். உணர்வுகளை விட்டு தள்ளி இருக்கப் பழகியவன். அப்படியிருந்தால் மட்டுமே வேட்டையாடமுடியும். பொருள் சேர்க்க முடியும். சண்டையை சமாளிக்கமுடியும். பெண் அப்படியல்ல. உணர்வுகளால் உருவானவள். காதலுக்காகவே படைக்கப்பட்டவள். அன்பால் மட்டுமே உயிர் வாழக் கற்றவள். ஆணுடன் சேர அன்பு வேண்டும் அவளுக்கு. காதல் வேண்டுமவளுக்கு. புரிதல் வேண்டுமவளுக்கு. ஆனால் ஆண் அப்படியல்ல. உணர்வுகளைத் தள்ளி வைத்துவிட்டு வெறுமனே மிருகமாக முயங்கவும் இயலும் அவனால். இயற்கை உந்திவிட்டால் தேடல் தொடங்கிவிடும் அவனுக்கு. தேடலைத் தீர்க்கும்வரை புத்தி மூர்க்கமாக இருக்கும் அவனுக்கு. தேடல் தீர்வது ஒன்றே குறி. வேறெதுவும் கண்ணுக்கு தெரியாது. இது அறிவியல் ஆணைப்பற்றி அளந்துவிட்டு சொன்ன கதை.

அவள் எல்லாவற்றிற்கும் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் நிறைந்திருக்கும் மெளனம் அவர்களின் எண்ணங்களை ஊனமாக்குமென்று தனக்குத் தானே அர்த்தப்படுத்திக்கொண்டாள். அவர்கள் அதை அவளின் அனுமதிக்கடிதமென்று கொண்டார்கள். அவர்களுக்கு தன் அதிகபட்ச நேரங்களைத் தந்து ஊக்குவித்தாள். அவர்கள் மூவரும் ஆரோக்யமான பேச்சுக்களை விட்டகன்று தொலைதூரத்தில் நின்றனர். ரகசியங்களால் நிறைந்தனர். அவளின் ரகசியங்கள் அந்த ஆண்களிடம் ஒரு கானல் நீர் போலத் தெளிவில்லாமல் தங்க, அந்த ஆண்கள் இருவரின் ரகசியங்களும் அவளிடம் தெளிவாய்ப் புதைந்தன.

மெல்ல மெல்ல வசந்தியைச் சுற்றி ஒரு கூட்டம் உருவானது. அந்தக்கூட்டம் அவளை புகழ மட்டுமே செய்தது. அவளின் குறைகளை அவளிடமிருந்து அவர்கள் அனைவரும் மறைத்தார்கள். அது தங்களுக்கு பாதகம் என்பதால். வசந்தி தன் சொந்த உழைப்பால் முன்னேறினாள். வெளி நாடுகள் சென்று பணியாற்றினாள். அந்தப் பயணங்கள் அவளுக்கான சுற்றுப்புறத்தை அவளிடமிருந்து பிரிப்பதை உணராதவளாய் வளர்ச்சி என்கிற பெயரில் ஒரு வரையறுக்கப்படாத கூண்டுக்குள் அடைந்தாள்.
அவளின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்திசெய்ய முடியாத அளவுகோள்களைக் கடந்து போய்க்கொண்டே இருந்தது. நடுத்தர வர்க்கத்தின் தகுதிகளை அவள் தாண்டியிருந்தாள். பணக்கார வர்க்கத்தின் பார்வையில் அவளின் வாலிப்பான உடலும், அழகான பேச்சும் , மோப்பம் பிடித்த ரகசியங்களும் அவளுக்கு பின் வாசற்கதவுகளை மட்டுமே திறந்தது. யாரும் முன்வாசற்கதவுகளை அவளுக்காகத் திறப்பது அவள் தகுதிக்கு மீறியதென்று நினைக்கச்செய்தது.

நாளடைவில் ரமேஷும் தியாகுவும் தத்தம் வாழ்க்கைப்பாதையில் பிரிய நேரிட, அவள் தனியானாள். பிற்பாடு ஒரு நடனக்கலைஞனும் கவிதைகளில் ஆர்வமுள்ளவனும் வசந்தியுடன் இணைந்தார்கள். அவர்களுக்கு ரமேஷையும் தியாகுவையும் பற்றி தெரிந்திருக்கவில்லை. வசந்தி சொல்லவுமில்லை. ஆனால் வசந்திக்கு இவர்களையும் தெரிந்தது. மீண்டும் அதே இனிப்பான பேச்சுக்கள். ரகசியங்கள். ஆனால், யாரும் அவளைத் திருமணம் செய்ய மட்டும் முன்வரவில்லை. அப்படியே முன்வந்தாலும் அது அவளிடம் இருந்த பணத்துக்காக மட்டுமே என்று இருந்தது. அழகு, அறிவு, திறமை என எல்லாமும் இருந்தும் வசந்திக்கு அது ஏனென்று கடைசிவரை புரியவில்லை.
சில நேரங்களில் எண்ணிப்பார்த்து மிகவும் குழம்பிப்போவாள். ஏன் தன்னை வாழ்க்கைத்துணையாக யாரும் தேர்ந்தெடுக்கவில்லையென்று. அது போன்ற நேரங்களில் அவள் வீட்டு சன்னல் தான் அவளுக்குத் துணை. அந்த சன்னலினூடே வீட்டு மதில்களைத் தாண்டி சாலையோரத்தில் பூத்திருக்கும் ரோஜாச் செடிதான் அவளின் பார்வையில் நிறையும். வண்டுகளால் எப்போதும் மொய்த்தே இருக்கும் அந்த ரோஜாச்செடி. மதில் சுவருக்கு அப்பால், கூண்டுகள் அளிக்கும் பாதுகாப்பில் நிறையாமல், தெருவில் போவோர் வருவோர் யார் விரல்களிலும் சுலபமாய் எட்டும் தூரத்தில் இருக்கும்.

அவள் அந்த அழகான ரோஜாவையே பார்த்துக்கொண்டிருப்பாள். விடியல்களில் அழகாக பூக்கும் இந்த ரோஜா மாலையானால், வாடி வதங்கி, தூசி படிந்து, சின்னாபின்னமாகிக் கிடக்கும். அதை ஒவ்வொரு நாளும் பார்க்கையில் கூட அவளுக்கு புரிவதில்லை, அனைவராலும் விரும்பப்படும் தூரத்தில் இருப்பதான சுதந்திரத்தின் எல்லை, தனக்கான, தன் வகையான வாழ்க்கையை தன்னிடமிருந்தே பிரிக்கும் வரை இருத்தல் கூடாதென்பதும், மரியாதையுடன் கூடிய அழகு நிலைக்கவேண்டுமெனில், பாதுகாப்பு அவசியமென்பதும், இயற்கை எந்நிலையிலும் ஒரு சமன்பாட்டை கொண்டுவரும், அந்த சமன்பாட்டின் எல்லைக்குள் வசித்துவிடுவது அமைதியான, நிம்மதியான, ஆரோக்யமான வாழ்விற்கு வழி என்பதும்.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation

ராம்ப்ரசாத்

ராம்ப்ரசாத்