ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

ராம் ஜேத்மலானி தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்.


(
அடுத்த பிரதம மந்திரியாக வரக் காத்திருக்கும் கவர்ச்சியுள்ள ‘இளவரசர்’ (Prince Charming), ராகுல் காந்திக்காக திகைப்பூட்டிச்
(Based on ETHICS AND POWER – By Ram Jethmalani – மூத்த அரசியல் வாதியும் மிகப் பிரபல வழக்கறிஞர், ராம் ஜேத்மலானி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையின் தமிழாக்கம். (05-December-2010இல் வெளிவந்தது) http://www.sunday-guardian.com/a/1109
தமிழாக்கம் செய்தவர்: சேஷாத்ரி ராஜகோபாலன்.
)
26ம் தேதி நவம்பர் 2008இல், மும்பாயில் நடந்த வன்முறையால் பெருத்த அவமானம், தலைக்குனிவு, ஏமாற்றம் ஆகியவைகள் ஒருங்கே எனக்கு ஏற்பட்டன. இயல்பாக, நம் நாட்டு எல்லையின் எதிரிலிருக்கும் மிகக் கொடூர வன்முறை பயங்கரவாதிகளிடமும், இந்திய நாட்டில் உள்ள இவர்கள் பிரதிநிதிகளிடமும், ஆதரவாளர்களிடமும் எனக்குக் கோபம் பொங்கி வந்தது. ஏனெனில், இக் கொடூரத்தை திட்டமிட்டு, அதில் அதிக கவனம் செலுத்தி, மிக பயங்கர வன்முறையை அவர்கள் நினைத்தவாறே ஒரு சிலரைக் கொண்டே நடத்திக் காட்டியுள்ளனர். எல்லோரைக் காட்டிலும் நம் அரசாங்கத்தின் மீது அதன் கீழ் கைகட்டி சேவகம் செய்யும் நிறுவனங்கள் (CBI, RAW, Central Intelligence) மீதும் எனக்கு மிக எரிச்சல் தான் உண்டானது. எல்லாவற்கும் சிகரமாக, நம் ஏலாத தன்மை அம்மணமாக்கப் பட்டு விட்டதே எனவும் சினம் தான் மேலெழுந்தது. என் ஆழ்மனத்தை வாட்டும் எண்ணங்களை, கொஞ்சம் அடக்கமாகவோ அல்லது பண்பு, மரியாதை தொனிக்கும் நடையில் எழுதாது, மனதில் உள்ளதை அப்படியே கொட்டி, அன்றே, எழுத்து வடிவில் தந்திருக்கிறேன். இந்த இடைக்கால வருடங்களில், நம் நாட்டில் உள்ள சூழ்நிலையையும், இதில் அரசாங்கத்தின் நிருவாக முறைகளையும் நுண்ணாய்வு செய்தேன். இதில் நான் கண்டறிந்த பேருண்மை, மிக முக்கிய அரசாங்க அமைப்புகள், அமைச்சரகங்கள், முன்பேயே புடைத்துக் கொண்டிருக்கும், கட்டுக்கடங்காத பணப்பையை இன்னும் நிரப்புவதிலேயே தங்கள் தங்கள் முழு நேரத்தையும் வெட்கமில்லாது செலவழிக்கும் செயல்களைக் கண்டேன். இதில் துரதிருஷ்டம் பிடித்த இந்திய நாடு எக்கேடு கெட்டு ஒழிந்தால் என்ன-என்ற எண்ணமே இந்த சுய நல அரசியல்வாதிகளுக்கு இருப்பதையும் கண்டு மிக வெகுண்டேன். இதில் காங்கிரஸ் கட்சியை மட்டுமே தாக்கிப் பேசுவதில் மாத்திரம் அர்த்தமில்லை. ஏனெனெல், காங்கிரஸ் தலைமை பீடத்தில் உள்ளவர் போல எல்லோரும் அங்கு அம்மாதிரி மட்டமான பேர்வழிகள் கிடையாது. இன்னும் இந்திய நாட்டு நலனில் அக்கறையும், ஏதோ சில நேர்மையாளர்களும் அங்கு இருக்கத் தான் செய்கிறார்கள்.
இந்திய நாட்டின் வருங்காலத்தை உத்தேசித்து, இதில் என் குற்றச்சாட்டு, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி, மேலும் அடுத்த பிரதமந்திரி என தன்னைத் தயார் படுத்திக்கொண்டு, காத்திருக்கும், அழகிய கவர்ச்சியுள்ள ‘இளவரசர்’ (Prince Charming), கோமான், இளங்கோ-ராகுல் காந்தி, ஆகிய இவர்களை நோக்கித் தான் எழுகிறது.
அந்த துன்பம் நிறைந்த தினத்தன்றே, என் கோபத்தை காங்கிரஸ் தலை பீடத்தில் வீற்றுக் கோலோச்சும், இத்தாலிய பிறப்பிடம் கொண்ட “அந்தோனியோ மைனோ சோனியா காந்தி”க்கு உடனுக்குடன் ஒரு கோபக்கனல் தகிக்கும் ஒரு கடிதத்தை எவ்வித தயக்கம் இன்றி எழுதி இருக்கிறேன். அதில், நான் அன்றெழுதி இருந்த முடங்கலில் இருக்கும் அதன் தொடர்புடைய முக்கிய பகுதி இது தான்.
“இந்நாளில், என்னில் எழும் மன வேதனை மிக கடுமையாக உள்ளது; இதில் என் மனசாட்சி என்னை வாளா இருக்க முடியாமல் செய்து விட்டது. நான் நினைத்தை குறைந்தது ஒரு ஆவணமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்கள் உளவு நிறுவனங்கள் மிகக் அருவருக்கும் வகையில் மிக மட்டமானது, இதிலும்கூட, படு தோல்வியடைந்து விட்டது. எல்லாவற்றிகும் மேலாக, இந்நிறுவனங்களே, வரிப்பணம் செலுத்தும் மக்கள் மீது திணிக்கப்பட்ட மோசடி என சற்றும் தயங்காமல் பழி சுமற்றுவேன். இதில் மிகக் கொடுமை ஏதெனில், இந்திய வெளி உளவுத் துறையான RAW (Research & Analysis Wing) வுக்குள்ளும், அண்டை நாட்டு பாகிஸ்தான் உளவு நிறுவனம் (ISI) கூட, வழிவகுத்துக் கொடுக்கப் பட்ட நுண் துளைகள் வழியே ஊடுருவி உள்ளே வந்துவிட்டதென எனக்குத் தெரிந்த நம்பத்தகுந்த வட்டாரங்களின் வழியாகக் கசிந்த தகவல் காதில் நாராசமாக ஒலித்துக் கொண்டே இருக்கிது. பங்களாதேஷ் கூட இந்தியாவுக் கெதிரான நடவடிக்கைகளில் அதிகத் தீமை விளைவிக்கும் இடமாகத் திகழ்கிறது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, இயல்பாக சில பெரிய அரசியல் தலைவர்கள் தலைகளும் தன்னியக்கமாக உருளுமென மிக எதிர்பார்த்தேன், ஆனால் அவ்வாறு ஒன்று கூட நிகழவில்லை, காரணம் இவர்களுக்கு ஆதரவளிக்கும் சுமை தாங்கியாக நீங்களே இருக்கக் கண்டேன். நேற்று மும்பாயில் நடந்த நிகழ்ச்சிகள் உங்கள் அரசாங்கத்தின் செயல் திறமைஇன்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதில் உங்கள் மந்திரி சபையிலுள்ளவர்களின் லஞ்சலாவண்யத்தைப் பார்த்து, நாடு முழுதும் பட்டி தொட்டிகளிலிலும், சந்தி சந்தியாக, சிரிப்பாய் சிரிக்கிறது. இப்பட்டியலில், உங்கள் பெயர் இல்லையென நினைத்து விடாதீர்கள். உங்கள் லஞ்ச ஊழல் எனும் காட்டுத் தீயில் இந்திய நாடே, வெந்து கொண்டிருக்கிறது. இதற்கு பாதுகாப்பும், துயராற்றுதலும் இன்று மிகத் தேவையாக உள்ளது.
இதில் நீங்களோ அல்லது அடுத்த பிரதம மந்திரியாக வரக் காத்திருக்கும் கவர்ச்சியுள்ள இளவரசர் ராகுல் காந்தி அவர்களோ, இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் முறைக்கேற்றவராக வருங்காலத்திற்கு ஏற்றவராகவோ அல்லது அதற்கான சாத்திக் கூறுபடைத்தோ அல்லது சிறிதளவாவது நம்பிக்கை தருவதாகவோ இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.
உண்மையை சொல்லப் போனால், இப்படி எழுதி எழுதி ஓயாது தொல்லை கொடுக்கும் ஆள் என என்மீது நீங்கள் கோபப்பட்டாலும், இதைப்பற்றி சற்றும் எனக்குக் கிஞ்சித்தும் கவலையே கிடையாது. ஏனெனில், நீங்கள் என் இந்திய நாட்டின் மீது கொஞ்சமேனும் அக்கறை வைத்திருப்பதாக நடு நிலையில் இருப்பவர்கள் கூட சொல்ல மாட்டார்கள். இதில் நம் பிரதம மந்திரியின் நேர்மையை பாராட்டுகிறேன். இதில் இவருக்குள்ள குறைபாடுகளுக்கு, நீங்களே, நீங்கள் தான் முக்கிய ஒரே மூலாதாரமென எனவும் நான் நன்கறிவேன்.
இந்திய நாட்டிலுள்ள உள்ள பயங்கரமான, மகிழ்ச்சியற்ற இச் சூழ் நிலையிலும் கூட, நான் எழுதிய சில இச்சொற்களே இந்திய நாட்டு மக்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பாகக் கொண்டு, இதற்கான பதிலாக, இனியாவது உங்களிடம் எழுப்பலாமெனவும், இதற்கான விடையளிப்பை நீங்கள் ஏற்கத் தகுதியுள்ளவர் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
இருப்பினும், நிகழும் நிகழ்ச்சிகளை நோக்குங்கால், வெளிப்படையாக உண்மையில் புலப்படும்வகையில், உங்களிடம் எந்த உணர்ச்சியும் மாறி விட்டதாகத் தோன்றவில்லை. முன்னொரு காலத்தில், இந்திய நாட்டு விடுதலை போராட்டத்தின் போது, முன் நின்று, இந்திய நாட்டுக்காக எவ்விதத் தியாகமும் செய்யத் தயாராக இருந்த மேதகைமையுள்ள அரசியல் மேதைகள் நிறைந்த காங்கிஸ் கட்சியில் இருந்தவர்கள் இடத்தில், நீங்கள் தலைமை ஏற்றபின்னர் தான், இன்று, திடீரென வாயடைத்துப்போன, இழுத்த இழுப்புக்கு இசையும் மூக்கணாங்கயிறு பூட்டப்பட்ட மாட்டு மந்தையென கொஞ்சமும் துணிவற்றவர்களால் நிரப்பப்பட்டு, நடைமுறையில் எவ்வகையிலும், ஏற்றுக் கொள்ளத் தகுதியற்றவர்கள்-தலைவர்களாக நிறைந்திருப்பதையும்தான் காண்கிறேன்.
இந்நாட்களில், பெரும்பாலான பத்திரிக்கை செய்தியாளர்களிடம் எனக்கு ஏளனம், கிண்டல், வெறுப்பு தான் மிகவும் நிரம்பிக் கிடக்கிறது. இவர்களிடம் ஒரு நிலைப்பாடாக, இருக்க வேண்டிய நடு நிலை மதிப்பீட்டாற்றலில் உள்ள திறனாய்வு வற்றிப் போய் இருப்பதைக் காண்கிறேன். தவிர்க்க இயலாத கடமைப் பொறுப்பு நிறைந்த பத்திரிக்கை செய்தியாளர்களின் திருப்பணியை, அதாவது அரசியலில் உண்மை எவ்வளவு கசப்பானாலும், அவைகளை மக்கள் மத்தியில் செய்திகளாக உடனுக்குடன் மனதில் அவைகளைப் பதியவைக்குமாறு எங்கும் பரவச் செய்யும் புனித சமூகக் கடனை, ஒட்டுமொத்தமாக மனத்திலிருந்துத் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டதாக கண்முன்னே காண்கிறேன். இதை கூறும் போது, இதே பத்திரிக்கை செய்தியாளர்கள், கவர்ச்சியுள்ள இளவரசர், ராகுல் காந்தியைப் பற்றி விரிவான விளம்பரத்தை மட்டற்ற களிப்புடன் இடத்தை நிரப்பி, “இடமாற்று ஓட்டப் பந்தயத்தில் (Relay race) குறுங்கட்டையை (Baton) ராகுலிடம் வெற்றியுடன் சமர்ப்பிக்கப்பட்டது” என பெரும் செய்தி-அறிக்கையாக அளித்திருப்பதைப் கவனித்திராமல், எவரும் இருக்க இயலாது. “மன்மோகன் (அரசர்) இறந்தார், இளவரசர் நீடூழி வாழ்க” (Manmohan is dead and long live Rahul) என காங்கிரஸின் பிறப்பிற்குரிய குண்டலியை (ஜாதகக் குறிப்பை) பரிசோதனை செய்யாது, இத்தாலிய அன்னை, தனயன் என இருவர் ஜாதகக் குறிப்பை மட்டுமே கண்டு, ஊர்பேரில்லாத ஏதோ ஒரு சின்னஞ்சிறு சோதிடன் சொன்னதாகவும், இளவரசரை ஏதோ ஒரு தெய்வீக படி நிலைக்கு இச்சோதிடன் உயர்த்திக் காட்டியுள்ளான்.
முதுகெலும்புள்ள பத்திரிக்கை செய்தியாளர்களில் ஏதோ ஒரு சிலராவது, துடுக்குடன் கவர்ச்சியுள்ள இளவரசர் முன், நேராக பயப்படாமல், எழுந்து நின்று, சில எளிய ஒளிவு மறைவில்லாமல் கேள்விகளைக் கேட்டிருந்தால், வருங்காலத்தில் இந்திய மக்களை ஆட்சி புரிய வர இருப்பவரின் தகுதி, சிறப்புப் பண்பு, வரையறை ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாக ராகுல் காந்தியின் பதில்கள் அமைந்திருக்குமென நான் எதிர்பார்த்தேன். [ஆனால் அப்படி ஏதும் நல்லது நடந்து விட வில்லை]. கீழ்க் காணும் சில கேள்விகள் மிகத் தெளிவானது; ஐயமற்றது; எளிதில் புரிந்துகொள்ளத் தக்கது. சில உதாரணங்கள் இதோ:
1. இந்திய துணைக்கண்டத்தின் பிரதம மந்திரியாக உங்களை பதவியில் அமர்த்த உங்கள் அன்னையின் பேராவலுக்கு எங்கள் எதிர்ப்பையோ, அல்லது ஆட்சேபத்தையோ தெரிவிக்க வரவில்லை. இந்த பெருவிருப்பக் குறிக்கோளை அடைய, 1991இல் அவர் தனக்கோ, அல்லது இவர் குழந்தைகளுக்கோ மனதில் கொள்ளவில்லை என்பது போலத் தெரிகிறது.
இந்த வறுமை பீடித்த அதிக ஜனத்தொகையிள்ள இந்திய ஜன நாயக நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கத் தங்களையே ஒப்படைக்கக் காத்திருக்கும் உங்கள் வருங்காலப் பிரஜைகளுக்கு உங்கள் மீது, உறுதியான நம்பிக்கையளிக்க, இம் மக்களிடம் உங்கள் திறமையாலும் அனுபவத்தாலும் பெற்ற தகுதி, சிறப்புப் பண்பு, வரையறை ஆகியவற்றைப் பற்றிக் கூறத் தயாராக இருக்கிறீரா? அப்படியானால், அதை ஒளிவு மறைவில்லாமல் அப்படியே உள்ளது உள்ளபடி கூறவும்.
2. இந்நாட்டின் பிரதமராக ஆக, ஒரு தகுதிபெற்ற அரசியல் மேதை அல்லது வல்லுனர் தான் அப்பதவியில் அமரவேண்டுமென நினைக்கிறீரா, இல்லையா? அப்படி ஆம் என – வல்லுனர் தான் அப்பதவியில் அமரவேண்டுமென – நினைக்கிறீர் என்றால், நீங்கள் தான் அந்த ஒருவர் என உறுதிப்பாட்டுடன் மன நிறைவு செய்து கொண்டு உங்களையே, ஏற்றுக்கொள்ள உங்களால் முடியுமா? இதற்கு உங்களால் பதிலளிக்க முடியாவிட்டால், உங்கள் சார்பாக உங்கள் அன்னையே இக்கேள்விக்கு தக்க பதில்களை அளித்தால் கூட எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இக்கேள்விக்கு பதிலுக்காக, உங்கள் அருமை பெருமை வாய்ந்த நண்பர்களான, ஸ்ரீமான் மணிசங்கர ஐயரோ, அல்லது அபிஷேக சிங்க்வி போன்றோரை உங்கள் சார்பாக கூலி எழுத்தாளராக ஆக்கி பதிலளிக்க விடாமல் இருந்தால் சரி.
3. மக்களுக்குப் பிரதிநிதியாக விரும்பும், வேட்பு மனு சமர்ப்பிப்பவரிடம், தேர்தல் கமிஷன், இடும் கட்டளையாக வற்புறுத்திக் கேட்கும் ஸ்திரமான, ஜங்கம, (material assets) சொத்து விவரங்களைக் கேட்பது பற்றி மக்களாகிய எங்களுக்கு மிகவும் திருப்தி அளிக்கக் கூடியதாக உள்ளது. அஃதே போல, வேட்பு மனு சமர்ப்பிப்பவர்களின் அறிவாற்றல் (intellectual assets) சார்ந்த சொத்துக்களின் விவரங்களையும் அரசாங்க உத்தரவாகக் கேட்டால் நல்லதென எண்ணுகிறோம். ஜன நாயகத்தில் ஒளிவு மறைவின்மை என்பது ஒரு கொள்கையானால், உங்களுக்குக் கிடைத்த கல்விக்கழக, பல்கல்கலைக் கழகத்தில் கிடைத்த பட்டங்கள் எப்பொது, எவ்வாறு, எந்தெந்த பாடங்களில் எந்தெந்த நிறுவனங்களிலிருந்து கிடைத்தவை என்ற பட்டியலை இந்திய நாட்டு மக்களுக்கு சூதுவாதில்லாமல் தெரிவிக்கவும். இத்துடன் தாங்கள் கடந்த ஐந்து வருடங்களில் படித்த நல்ல நல்ல புத்தகங்கள், அரசியல், பொருளாதாரம், பயங்கர வன்முறை, போர், சமாதானம் ஆகியவற்றின் பெயர், நூலாசிரியர்கள் பட்டியலோடு தரவும். நீங்கள் மக்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஆற்றல் மிக்க சிறந்த சொற்பொழிவு, அல்லது ஏதாவது ‘ரோட்டரி கிளப்’பிலோ தாங்கள் ஆற்றிய உரையாடல், அல்லது மிகச் சின்னஞ்சிறு சிறார்களுக்கு, மிகவும் பொருள்விளக்கம் கொடுத்ததோடு, அதனால் சிறுவர்களுக்கு ஊக்கமளிக்கும் மேற்கோள்கள் (quotable quotes), ஆகியவற்றை மக்களுக்களித்தால், இதனால் நீங்கள் அடைந்துள்ள மூளைத் திறம், ஆய்வுணர்வுத் திறமையைப்பற்றி தக்க அபிப்பிராயத்துக்கு வர முடியுமல்லவா? உங்கள் காங்கிரஸ் கட்சியில் கூட இன்னும் சில திறமைமிக்க இளம் வயதினர்கள் இருப்பதை மக்கள் காண்கிறார்கள். நீங்கள் அவர்களை விட ஒருபடி மேலாக இருப்பதையே அறிய மக்கள் மிக எதிர்பார்க்கிறார்கள். உங்கள் தாய் சோனியாஜி, தகப்பனார் ராஜீவ்ஜி, பாட்டி இந்திராஜி, கொள்ளுத் தாத்தா ஜவாஹர்லால்ஜி என நேரு வம்சாவளிப் பட்டியலை அவிழ்த்து விட்டால் மட்டுமே, போதாது; இது ஒரு பொருட்டாகவோ அல்லது சாட்சியமாகவோ நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப் படவே மாட்டாது.
4. ஜனதா கட்சித் தலைவர், ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி உங்கள் குடும்பத்தின் மீது அடிக்கடிக் குற்றம் சாட்டும் நிதி சம்பந்தமான ஒழுங்கீனம், அதிலும் மிக மோசமான தகுதியில்லா வருவாய்கள், முக்கியமாக ஸ்விசர்லாந்து சஞ்சிகைகள், ரஷ்ய உளவுத்துறை (KGB) வெளியிட்ட தகவல்கள் எங்களுக்குக் கவலையளிக்கிறது. அது சரி, நீங்கள் ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி குற்றச்சாட்டுக்கு ஏன் இன்னும் பதிலளிக்க வில்லை.
அப்படி மேலே எழுப்பிய கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்கத் தெரியாதெனவோ அல்லது முடியாது என உங்கள் அறிவின்மையை ஒப்புக்கொண்டால் உங்களுக்கு எங்கள் இந்திய பிரதம மந்திரியாகும் தகுதி எவ்விதத்திலும், லவலேசமும் கிடையாது. இது மட்டும் நிச்சயம்.
சுதந்திரப் பத்திரிக்கை செய்தியாளர்களுக்கு ஒரு ஆலோசனை:

உள்ளார்வம் மிக்க இந்த மிக முக்கிய அலுவலைப்பற்றி கட்டாயம் எழுதவும். இதைப்பற்றி மக்களுக்கு அறிந்து கொள்ள உரிமை என்றும் உண்டென மனதில் கொள்ளவும்; கடமைப் பொறுப்பு நிறைந்த பத்திரிக்கை செய்தியாளர்களின் திருப்பணியை, உடனுக்குடன் மனதில் பதியவைக்குமாறு மக்கள் மத்தியில் செய்திகளாக எங்கும் பரவச் செய்ய இதல்லவா தக்கதருணம். நழுவ விடலாமா?

[[ராகுல் காந்தியைப் பற்றி கூடுதலாக பந்தோபாத்யாய் அரிந்தம் 11-டிசம்பர்-2010 எழுதியதிலிருந்து சில கவனிக்க வேண்டியவைகள் அடுத்த பகுதியில் வரும்.]]

Series Navigation