யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

குரல்செல்வன்ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் அவளுடைய அம்மாவும் இன்னும் அவர்கள் வீட்டு வாசலுக்கு வரவில்லை. வருகிற நேரம்தான். மாலை வேளைகளில் நான் அவர்களுடன் தினம் ஏதாவது பேசுவேன். எனக்கு இஷ்டம் இல்லா விட்டாலும் இன்றைக்குப் பேசுவதற்கு விஷயம் இருக்கிறது. இன்று முடியாவிட்டால் அடுத்த தடவை, அந்த கேள்வியைக் கேட்டாக வேண்டும். அப்படிப் பட்ட சங்கடத்தில் மாட்டிக் கொண்டுவிட்டேன். அவர்கள் இருவரும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்ப்பது வழக்கம். மல்லிகா அவள் வயதுக் குழந்தைகள் விளையாடுவதை எட்டி நின்று பார்ப்பதோடு சரி, சேர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்ததில்லை. இரண்டு பேரும் யாருடனும் பேச்சு வார்த்தை வைத்துக் கொண்டதில்லை. நானும் அப்படித்தான் இருந்தேன் அவர்கள் அந்த வீட்டுக்குக் குடி வந்த ஒரு மாதம் வரைக்கும். மற்ற குலத்தைச் சேர்ந்த குடும்பங்கள் எங்கள் அக்ரஹாரத்தில் அங்கொன்று இங்கொன்றுமாக இருப்பது புதிதல்ல. ஆனால் எதிர் வீட்டிற்குத் தனி ராசி. அதில் நானறிந்து மயிலாசனம் பல வருஷங்கள் இருந்தார். இப்போது இவர்கள்.
ஒரு நாள் மத்தியானம் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் போது வாய்க்காலைத் தாண்டியவுடன் தூர ஆரம்பித்தது. வீட்டிற்குள் வந்தவுடன் ஒரு மணி விடாமல் அடித்து விட்டு ஓய்ந்தது. தெருவின் இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் ஓடியது. சின்ன வயது ஞாபகத்தில் பழைய காகிதத்தில் கப்பல் செய்து தண்ணீரில் மிதக்க விட்டேன்.
‘மாமா! ஒரு கப்பல் செஞ்சு தரியா?” எதிர் வீட்டிலிருந்து கீச்சுக் குரல் வந்தது. அம்மாவும் பெண்ணும் நின்றிருந்தார்கள்.
‘மல்லிகா! மாமா தரீங்களான்னு கேக்கணும்.”
எங்கள் வீட்டை விட எதிர் வீட்டின் முன்புறம் நீளம் அதிகம். சாக்கடைக் குழி வாய்க்காலாட்டம் ஓடிக் கொண்டிருந்தது. எனக்குக் கூட அங்கே கப்பல் விட்டால் வெகு தூரம் போகும் போல் தோன்றியது. குழிக்கு மேல் கல்லில் கால் வைத்துத் தாண்டிக் கொண்டு போனேன்.
‘அண்ணான்னே கூப்பிடட்டும். நான் அடுத்த வருஷம் வரைக்கும் அரை டிக்கட்டுதான்.” எனக்குப் பதினோரு வயதிலேயே மாமாவாக இஷ்டமில்லை. அதிலும் கல்யாணம் ஆகாமல் மைனர் மாதிரி திரிந்த மாமாக்கள் நிறைய பேர் இருந்தார்கள்.
மல்லிகாவின் அம்மா சதுரமாக வெட்டிய காகிதத்தைக் கையில் கொடுத்தாள்.
‘கத்திக் கப்பல் வேணுமா, சாதா கப்பல் வேணுமா?”
‘கத்திக் கப்பல்.”
நான் செய்த கப்பலைத் தண்ணியில் போட்டு விட்டு எட்டி நின்று அது போவதைப் பார்த்து மல்லிகா கை தட்டினாள்.
‘எங்க படிக்கறே?”
‘பசுபதீஸ்வரா பள்ளிக்கூடத்திலே.”
‘எந்த கிளாஸ்?”
‘எட்டாவது.”
‘சிறப்புத் தமிழ் படிக்கிறையா?”
“ஆமாம்! தாத்தா சமஸ்க்ருதம் படின்னு சொன்னார். எனக்குத்தான் மண்டையிலே ஏறல.”
“சிறப்புத் தமிழுக்கு என்ன புத்தகம்?”
“மூவேந்தர் வாசகம்.”
“முதல் பாடம் உதயணன் கதை, சரியா?”
‘ஒங்களுக்கு மறக்காம இருக்கே.”
‘பள்ளிக்கூடத்திலே ஆசையா படிச்சது எப்பிடி மறக்கும்?”
அவள் பெயர் இது வரை எனக்குத் தெரியாது. அவளுக்கும் என் பெயர் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எதற்குத் தெரிய வேண்டும்? ஒருவரை ஒருவர் பேர் சொல்லி அழைத்ததில்லை. மூன்றாவது மனிதர்களிடம் பேரைச் சொல்லி வம்பளக்கப் போவதில்லை. வயது இருபதிலேந்து இருபத்தி ஐந்துக்குள் இருக்கலாம். எனக்கு அக்கா என்று சொல்லத் தோன்றவில்லை. ஆனால் மறியாதையோடு பன்மையில்தான் பேசினேன். என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகியிருக்கிறது, குழந்தை பிறந்திருக்;கிறது, குடும்ப அந்தஸ்த்தில் இரண்டு படி என்னை விட உயரம். அவளை மாமி என்று அழைப்பதும் பொருத்தமாகப் படவில்லை. மாமி என்றால் எங்கள் ஊரில் ஒன்பது கஜம் புடவை கட்டிக் கொள்ள வேண்டும். ஆத்துக்குள்ளயே இருக்க வேண்டும். சமைக்கா விட்டால் குழந்தையைத் தூளியிலே வைத்து ஆட்ட வேண்டும். இல்லை என்றால் கிழிசல் புடவையைத் தைக்க வேண்டும். அதெல்லாம் அவள் செய்ததாகத் தெரியவில்லை.
அவள் வயதில் எனக்குச் சொந்தத்திலே இருக்கிற எந்தப் பெண்ணுடனும் பத்து வார்த்தைக்கு மேல் பேசியதில்லை. மூன்றாவது வீட்டிலேயே என் மாமா பெண் கல்யாணத்துக்குக் காத்துக் கொண்டிருந்தாள். அவளோடு கடைசியாக எப்போது பேசினேன் என்பது கூட மறந்துவிட்டது.
“நான் அ எளுதுவேனே” என்று மல்லிகா குறுக்கிட்டாள்.
“எழுது பாக்கலாம்.”
வீட்டுக்குள் போய் ஒரு காகிமும், இரண்டு பென்சில்களும் எடுத்துக் கொண்டு வந்து, சீவாத பென்சிலை மல்லிகா கையில் கொடுத்தாள். ‘இதை அண்ணா கிட்ட குடு, பாப்பா!”
சிவப்புப் பென்சிலை வாங்கிக் கொண்டேன். அதிலே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்று வெள்ளை எழுத்துகளில் போட்டிருந்தது.
‘படம் பாத்தியா?”
‘அப்பா ஊரிலேருந்து வந்தப்ப எங்க எல்லாரையும் அழைச்சுண்டு போனா. மாடியிலே உக்காந்து பாத்தோம்” என்று பெருமை அடித்துக் கொண்டேன்.
இப்படி ஆரம்பித்தது எங்கள் பழக்கம்.
அந்த வருஷம் பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்கு முன்னால் சொல்லி வைத்த மாதிரி என் வயதுப் பையன்களெல்லாம் ஊரை விட்டுப் போய் விட்டார்கள். கிரிக்கெட், ஜாண்டர், கில்லி என்று விளையாட யாரும் இல்லை. ஒரு காலத்தில் என்னுடன் பல்லாங்குழி, தாயக்கட்டம் ஆடிய பெண்கள் சிற்றாடை போர்த்திக் கொண்டு வீட்டிற்குள் அடைந்து கிடந்தார்கள். என்னோடு படிக்கிற வீரவேல் என்கிற பையன் ஒரு மைல் தள்ளி குடியானத் தெருவிலே இருந்தான். சனி ஞாயிறு என்றால்தான் பாடம் படிக்க வருவான்;. என்னோடு வீட்டில் இருப்பது என் தாத்தாவும், பாட்டியும்தான். தாத்தா எப்போதும் எதாவது மந்திரம் சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கும் சொல்லிக் கொடுக்க முயன்று முடியாமல் கடைசியில் விட்டு விட்டார். பாட்டிக்கு வீட்டு வேலையே சரியாக இருக்கும். சாயந்தர வேளையில் வேறு என்ன செய்வது?
எங்கள் வீட்டின் முன் புறத்தில் ஒரு சிறிய அறை. அந்த சிறிய அறைக்கு ஒரு சின்ன ஜன்னல். அது வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். நான் அன்றையப் பாடம் படித்து முடிப்பதற்கும் அவர்கள் வெளியிலே வருவதற்கும் சரியா இருக்கும். மல்லிகாதான் கதாநாயகி. அவளைச் சுற்றிதான் எங்கள் பேச்சு படரும். அவளுக்கு மூட் இருந்தால் அரை மணி கூட என்னுடன் விளையாடுவாள். ‘இன்னிக்கி நாங்க டிரயாயிங்லே பொம்மை படம் போட்டோம். மல்லிகா! உன்னை வரையட்டுமா? நீ அசையாம நிக்கணும்.” பென்சிலும், வரை பட நோட்டிலிருந்து கிழித்த காகிதமும் கையோடு கொண்டு வந்திருந்தேன்
‘அண்ணா சொல்றாங்க இல்ல, அங்க போய் நில்லு பாப்பம்.”
மல்லிகாவே ஒரு பொம்மையாட்டம்தான் இருந்தாள். வட்ட முகம், அதில் அளவெடுத்த மாதிரி கண் மூக்கு வாய். ரிப்பனுடன் இரட்டைப் பின்னல். முழங்கால் வரை வந்த பறவைகள் படம் போட்ட கௌன். பழுத்த தாமிர நிறம்.
‘முடிஞ்சிரிச்சா?”
அவள் அம்மாவை படம் வரைந்தால் எப்படி இருக்கும் என்று ஓரக் கண்ணாலே ஒரு தடவை பார்த்தேன். குண்டு முகம், கொஞ்சம் அடர்த்தியான புருவம். சிரிக்காமலேயே சந்தோஷத்தைப் பரப்பும் கண்கள். நெற்றி மேட்டிற்கு மேல் கோண வகிடு எடுத்த பின்னல். அதுவே எங்கள் ஊரில் அவளை மற்ற பெண்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும்.
படத்தை மல்லிகா கையில் கொடுத்தேன். ‘எப்படி இருக்கு?”
‘அம்மாயி கிட்ட காட்டட்டா?”
‘போய் காமி பாப்பம்.”
‘அம்மாயி! என் படத்தைப் பாரு” என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள்.
பிறையில் செறுகி இருந்த குமுதமும், விகடனும் எடுத்து என்னிடம் நீட்டினாள். வாங்கிக் கொண்டேன். சாப்பிட்ட பின் படிக்கலாம். கண்ணன், கல்கண்டு, கலைமகளோடு அடங்கி இருந்த என் ரசனையை அவள்தான் விரிவு படுத்தினாள்.
‘உனக்கு ‘மணிமொமி என்னை மறந்து விடு’ பிடிச்சிருக்குதா?”
‘நான் சங்கர்லால் கதை யெல்லாம் கல்கண்டுலே விடாம படிச்சிருக்கேன். அதனால தமிழ்வாணன் கதைன்னா விட மாட்டேன்.”
‘மணிமொமி கிட்ட குழந்தையைக் குடுத்துட்டு ஒரு பெண் விமானத்திலேருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிடறதுதான் சரியாப் படல.”
‘எனக்குக் கூட பாலத்துக்கு மேல ரயில் போறப்ப தண்ணிலே குதிச்சிட்டான்னு எழுதி இருக்கலாம்னு தோணித்து.”
மல்லிகா திரும்பி வந்தாள். ‘அம்மாயி அண்ணாக்குக் குடுத்திச்சி.” அவள் கையில் வேர்க்கடலை உருண்டைகள் இருந்தன. மறுக்காமல் வாங்கிண்டேன். நேராக ஆத்துக்கு வராமல் வாய்க்கால் வரைக்கும் ஒரு நடை போட்டு அவற்றைச் சாப்பிட்டேன்;.
அவர்கள் வீட்டின் முன் ஒரு பெரிய திண்ணை. சுவரை ஒட்டிக் கொஞ்சம் உயர்த்தி இருப்பார்கள். அதில் தலை வைத்து பத்து பேராவது படுக்கலாம். கோவில் சமாராதனைக்கு வெளியூரிலிருந்து வருபவர்கள் உண்ட களைப்பை அந்தத் திண்ணையில் தீர்த்துக் கொள்வதுண்டு. எங்களுடைய சிநேகமெல்லாம் அந்த திண்ணை வரைக்கும்தான். கதவைத் தாண்டி உள்ளே சென்றதில்லை. இன்று போக வேண்டி நேருமோ என்னவோ. எல்லாம் அவர்கள் வீட்டு மாமாவால் வந்தது.
மல்லிகாவையும் அவள் அம்மாவையும் பற்றி இவ்வளவு சொன்ன எனக்கு அவரைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை. சொல்லப் போனால் அவரை விட அவர் வேலைக்குப் போகும் சைக்கிளைத்தான் எனக்கு அதிகம் தெரியும். அது அலங்காரத்தோடு சர்க்கஸ் குதிரையாட்டம் இருக்கும். முன்னாடி விளக்குக்குக் குளிரிலே கம்பிளியால் தலையைச் சுற்றியது போல ஒரு மஞ்சள் உறை இருக்கும். ஒவ்வொரு கைப்பிடியிலிருந்தும் ஒரு கொத்து ரிப்பன் தொங்கும். பின்னாடி கேர்ரியரிலிருந்து கொடி பறக்கும். இரண்டு சக்கரத்துக்கு நடுவிலேயும் சிவப்பு பச்சை நீலம் போட்ட வளையங்கள் சுத்தும். அவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு காலை வைத்து ஏறமாட்டார். வீட்டுக்கு முன்னால் இருக்கும் கல்லிலே காலை வைத்து ஏறுவார். அப்புறம் மெதுவாகச் சைக்கிள் நகரும் போது காலை எடுத்துவிட்டுப் பெடல் பண்ணுவார். போகும்போதும் சரி திரும்பி வரும் போதும் சரி யாரையும் நேராகப் பார்த்து ஒரு வார்த்தை சொன்னதில்ல, என்னையும் சேர்த்து. அவர் வேலைக்குப் போவதற்கும் ஒழுங்கான நேரம் கிடையாது. சில நாள் எட்டு மணிக்கே வெளியே போய் விடுவார். சில நாள் நான் பள்ளிக்கூடத்திற்கு ஒன்பது மணிக்கு மேல் கிளம்பும் போது எதிர் வீட்டு ரேழியில் சைக்கிளின் ரிஃப்லெக்டர் தெரியும். மல்லிகாவுக்கும், அவள் அம்மாவுக்கும் எப்படி இவர் வந்து வாய்த்தார் என்று எப்போதாவது தோன்றும். பொதுவாக எனக்கு அவரைப் பற்றி எந்த விதமான அக்கறையும் கிடையாது. ஆனால் எங்கள் கிராமத்தில் சிலருக்கு இருந்ததுதான் எனக்கு இடைஞ்சலாகப் போய் விட்டது.
இன்று மத்தியானம் பரீட்சை மூன்றரை மணிக்கே முடிந்து விட்டது. திரும்பி வரும் வழியில் சூரியநாத அய்யர் வீட்டில் ஒரே சத்தம். ‘மூணு துருப்பு வச்சிண்டு கம்முனு இருக்கீறே, ஓய்!” கம்பி போட்ட திண்ணையில் தடுப்புக்குப் பின்னால்; சீட்டுக் கச்சேரி நடக்கிறது. ‘சாமிநாதா!” திரும்பிப் பார்த்தேன். சூரியநாத அய்யரின் வழுக்கைத் தலை மட்டும் ஆமையின் தலையைப் போல வெளியே நீட்டியது. புகையிலையால் உப்பிய வாயால் எதற்கு அழைக்கிறார் என்று தெரியவில்லை. சில்லரை வேலைகளுக்குப் பொடிப் பையன்களை ஏவுவதுண்டு. புகையிலை, வெத்தலை, பொடி மட்டை வாங்கி வர கோடிக் கடை வரைக்கும் போய் வர இருபத்தி ஐந்து நயா பைசா தருவார்கள். வயிறு சங்கடம் பண்ணினால் கோலி சோடாவுக்கு ஐம்பது பைசா – ஒரு முறை வாங்கி வந்து இன்னொரு தடவை காலி பாட்டிலைத் திருப்பிக் கொடுக்க. எனக்கு அந்தக் காசு தேவைப் படாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
கதவைத் திறந்து படியிலேயே நின்றேன். ‘உள்ளே வா!” எப்போதும் இருக்கிற கும்பல்தான், சின்னவன் சாம்புவிலிருந்து வயதான மணித் தாத்தா வரை.
‘அம்பி! படிப்பெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?”
‘நன்னாத்தான் படிக்கிறேன்.”
‘அப்பா அம்மா கிட்டேருந்து லெட்டர் வந்திண்டிருக்கா?”
‘வாரத்துக்கு ஒண்ணு வந்துடும்.”
‘அப்பா எப்படி இருக்கார்? பெரிய உத்தியோகம்.” மௌனமாக என்னைத் தயார் செய்து விட்டு விஷயத்திற்கு வந்தார்.
‘உன்னால ஒரு முக்கியமான காரியம் ஆகணுமே. செய்யறியா?”
‘சொல்லுங்கோ! முடிஞ்சா கட்டாயம் செய்யறேன்.”
‘பிரமாதமா ஒண்ணுமில்ல. ஒங்காத்துக்கு எதிர புதுசா குடி வந்திருக்காளே.”
‘தெரியும். முன்ன மயிலாசனம் இருந்த வீடுதானே?”
‘அதேதான். அந்த வீட்டுக்காரன் எங்க போறான், என்ன வேலை பண்றான்னு ஒரே மர்மமா இருக்கு. சாம்பு ஒரு நாள் சைக்கிளிலே அவன் பின்னாடியே போயிருக்கான். பாலத்தைத் தாண்டினப்புறம் ஆளைக் காணும். சரின்னு மறுநா பாலத்துக்கு அந்தப் பக்கமா காத்துண்டிருந்தா, இவன் பாலத்துக்கு முன்னாடியே தாந்தோணி மலைப் பக்கம் சவாரி விட்டுட்டான்.”
சாம்பு தன்னுடைய தோல்வியை மறைக்க, ‘பெரிய ஆஃபீசராட்டம் தலையைத் தூக்கிண்டுன்னா போறான்” என்றான்.
‘இருக்கட்டுமே அதுக்காக நம்ம கிட்ட ஒரு வார்த்தை பேசப்படாதோ! சாமிநாதனோட அப்பா கூடத்தான் பெரிய ஆபீசர். அவர் நம்மளோட இந்தத் திண்ணையிலே உக்காந்துண்டு சீட்டு ஆடினதில்லையா?”
மணித்தாத்தா குறுக்கிட்டார், ‘இது ஒண்ணும் பட்டணமில்லை. அங்கதான் அடுத்தாத்தில யார் இருக்கான்னு பேர் கூட தெரியாது.” அவர்கள் எதற்கு அடி போடுகிறார்கள் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது.
‘நீதான் அவாத்து மாமியோட இழி..” இழிஞ்சிண்டிருக்கியேன்னு சூரியநாத அய்யர் சொல்ல வந்தார்னு நெனைக்கிறேன். அப்புறம் திருத்திக் கொண்டார். ‘அந்த மாமியோட தினம் ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசறே. இன்னிக்கு அவாளைப் பாத்தா அந்த மாமா என்ன வேலை பண்ணறார்னு கேட்டுச் சொல்றயா?”
பூனைக் குட்டி மாதிரி மூலையிலே போய் மாட்டிக் கொண்டுவிட்டேன். எப்படி மறுப்பது? மௌனமாகச் சம்மதம் தெரிவித்தேன்.
‘மறக்காம கேக்கணும், என்ன?”
“கேக்கறேன்.”
படி இறங்கி வீட்டுப் பக்கம் கால் வைத்தேன். சூரியநாத அய்யருக்குப் பூர்விக நிலம் நிறைய இருந்தது. அவரைப் போல நிலத்தை நம்பி கொஞ்சம் பேர். என் தாத்தா மாதிரி அத்யயனம் செய்து புரோகிதராக ஒரு பத்து பேர். அரை குறையா மந்திரம் தெரிந்தவர்கள் அவர்கள் பின்னாடியே போய் சாப்பிட்டுட்டு வருவார்கள். கொஞ்சம் கணக்கு தெரிந்தவர்களாக இருந்தால் துணிக்கடையிலேயோ, அரிசி மண்டியிலேயோ ரோக்கா எழுதுவார்கள். படிப்பு வரா விட்டால் இருக்கவே இருக்கிறது ஓட்டல் சரக்கு மாஸ்டர் வேலை. பள்ளிக்கூட வாத்தியார்கள் இரண்டு பேரை எனக்குத் தெரியும். பங்காரு நாயக்கர் பாலத்தைத் தாண்டி ஒரு பொட்டிக் கடை வைத்திருந்தார். நொடித்துப் போன கிருஷ்ணமூர்த்தி வீட்டைப் பாகம் போட்டு வாடகைக்கு விட்டிருந்தார். அப்படி வாடகைக்கு இருந்தவர்களும் இரண்டு குமாஸ்தாக்கள். இதற்கு மேல் எந்த வேலையை எதிர் வீட்டுக்காரன் செய்கிறான் என்று இவர்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.
எனக்கு ஏமாற்றம் தராமல் மல்லிகாவும் அவள் அம்மாவும் வாசலுக்கு வந்தார்கள். நான் அவர்கள் வீட்டுப் பக்கம் வருவதைப் பார்த்தால் மல்லிகா சிரித்துக் கொண்டே கை ஆட்டுவாள். இன்று அப்படிச் செய்யவில்லை. நானே குழியைத் தாண்டி அவர்கள் வீட்டு வாசலுக்குச் சென்றேன்.
மல்லிகா கீழ் உதட்டை மடக்கி நெற்றியைச் சுருக்கி வீங்கிய கன்னத்துடன் இருந்தாள். ‘அவளுக்கு எங்க மேல கோவம். மதியம் பாதி தூக்கத்திலே எழுந்திருச்சிது. அப்பாலே கண்ணாடிக் குவளைலேதான் பால் குடிப்பேன்னு அடம் புடிச்சுது. அதைக் கீளார போட்டு ஒடைச்சுது. அம்மா ரெண்டு குடுத்தாங்க.”
மல்லிகாவின் பக்கம் தலையைக் கொஞ்சமாகத் திருப்பிப் புன் சிரிப்பால் என் பக்கம் இழுக்கப் பார்த்தேன், முடியவில்லை. அவள் கோபம் என் மேலும் ஒட்டிக் கொண்டிருந்தது.
“மரகதம் படம் பாக்கலையா? அதுலே சந்திரபாபு காமெடி நல்லா இருக்குன்னு சொல்றாங்க” என்று பேச்சு ஆரம்பித்தது.
“அடுத்த வாரம் கால் பரீட்சை முடிஞ்சப்புறம் வீரவேலும் நானும் போலாம்னு இருக்கோம்.”
“நேத்து கூட உன்னைப் பாக்க வந்தானே அவன்தான் வீரவேலுவா?”
‘அவன்தான். அவனோட அப்பா நூல் மில்லிலே வேலை பண்ணறார்” என்று சொல்லி விட்டு நிறுத்தினேன். ‘எங்க ஊட்டுக்காரரும்…” என்ற பதிலை எதிர் பாத்தேன். அவள் ஒன்றும் சொல்லக் காணோம்.
வாசல் ஜன்னல் எப்போதும் சாத்தியே இருக்கும். இன்று ஒரு கதவு மட்டும் கொஞ்சம் திறந்திருந்தது. அது வழியாக மாமாவின் முகம் தெரிந்தது. எதிரில் இருக்கும் சுவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
எவ்வளவு நேரம்தான் தள்ளிப் போடுவது. கேட்டுக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டேன். கேட்டுத்தான் ஆக வேண்டும். ரொம்ப சாதாரணமா முகத்தை வைத்துக் கொண்டேன். ‘மல்லிகாவோட அப்பா என்ன வேலை பாக்கறார்?”
என்னிடமிருந்து அந்தக் கேள்வியை அவள் எதிர் பார்க்கவில்லை என்று வெளிப் படையாகத் தெரிந்தது. அவளை அதிர வைத்து விட்டேனோ? ஆனால் உடனே சமாளித்துக் கொண்டாள். ‘அவரு பட்டாளத்தில இருக்காரு” என்று எல்லோருக்கும் சொல்வது போல் சொல்லிவிட்டு நான் விஷயம் தெரிந்தவன் என்கிற மறியாதையில், ‘ஏர்Nஃபார்ஸ்லே வேலை பண்றாரு” என்று சேர்த்துக் கொண்டாள்.
ஆகா! நல்ல வேளை, என் அதிருஷ்டம்தான்.
‘எங்கப்பா கூட ஏர்Nஃபார்ஸ்தான்.”
‘அப்படியா! எங்கே இருக்காரு?” என்று முகம் மலரக் கேட்டாள்.
‘இப்ப அம்பாலாவிலே இருக்கார். எங்கம்மாவும் கூட இருக்கா.”
முன் பின் தெரியாதவர்கள் இரண்டு பேர் பேசிக் கொண்டிருக்கும் போது பேச்சு வாக்கில் தூரத்து சொந்தம் என்று தெரிந்த பிறகு உறவு கொண்டாடுகிற மாதிரி நாங்கள் பேசிக் கொண்டோம்.
‘எங்க ஊட்டுக்காரரு கான்பூர்லே இருக்காரு. மல்லிகா பொறக்கறச்சே ஆவடிலே இருந்தோம். மே மாசத்திலே கான்பூர் போக வேண்டி வந்திரிச்சி. அங்க ஒரு வருசம்தான் இருக்கணும். அப்புறம் ஆவடிக்கே திருப்பி அனுப்பிச்சிருவாங்களாம். கான்பூர்லே குடித்தனம் வக்கல.”
‘மல்லிகா வயசிலே நான் கான்பூர்லேதான் இருந்தேன்.”
‘அம்மாவுக்கு குளிர் ஒத்துக்காதுன்னுதான் நாங்க போவலை.”
நான் கேக்காமலேயே இவ்வளவும் சொல்லி விட்டாள். ஒரு கேள்வி பாக்கி நிற்கிறது.
‘அப்ப, தினம் சைக்கிள் எடுத்துண்டு போறாரே அவர் யாரு?”
‘அது அண்ணாத்தை. அதுக்கு சின்ன வயசிலே படிப்பு ஏறல. வயசானா சரியாப் பூடும்னாங்க. ஆனா வயசாக வயசாக பிடிவாதம்தான் ஏறிக்கிட்டே போயிடிச்சு. அதைப் பத்திய கவலையிலேயே ஐயா இறந்துட்டாரு. போறதுக்கு முன்ன சொத்துலே அவனுக்கு மாசா மாசம் பணம் வர்ரபடி எழுதி வச்சிட்டாரு.”
‘யாரோடையும் பேசறதில்லையே.”
‘மனசு இல்லாட்டா என்னோடவும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாரு. தினம் காத்தாலே அம்மாவுக்கும் புள்ளைக்கும் சண்டைதான்.”
‘நீங்க சமாதானம் படுத்த மாட்டீங்களா?”
‘நான் கண்டுக்;கிட மாட்டேன். கோவம் வந்திரிச்சுதுன்னா சைக்கிளை எடுத்துக்கிட்டுக் கிளம்பிடுவாரு. பார்க், போஸ்ட் ஆபீஸ் இப்படி எங்கையாவது போவாரு. ஓட்டல்ல நல்லா மூக்கைப் பிடிக்கச் சாப்பிட்டுட்டு வந்திருவாரு.”
இனிமேலும் குடும்ப விவகாரத்தைத் துருவிக் கேட்பது நன்றாக இருக்காது. ‘தெரு விளக்கு வந்துடுத்து. நான் போகணும்.”
மல்லிகாவிற்குக் கோபம் தணிந்து அவளை விட்டு விட்டு நாங்கள் பேசுவது பொறுக்கவில்லை. ‘நா அப்பாரு பேரு சொல்வேனே.”
‘சொல்லு பாப்பம்!”
‘பெரிசாமி.”
‘நாளைக்கு மல்லிகா கிட்டத்தான் பேசப் போறேன். உங்க கிட்ட கா.” நான் வீட்டிற்குப் போவது போல் போக்குக் காட்டிவிட்டு அவர்கள் உள்ளே மறைந்தவுடன் சூரியநாத அய்யர் வீட்டுத் திண்ணைக்கு சென்றேன்.
இந்நேரம் கும்பல் கலைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று எனக்காக அவர்கள் காத்திருந்தார்கள். தந்திச் சேவகனைப் பார்ப்பது போல என்னைப் பார்த்தார்கள்.
‘நீங்க நெனைக்கிற மாதிரி அவன் எந்த வேலைலேயும் இல்ல. அவன் கொஞ்சம் ஸ்க்ரூ லூஸ், அவ்வளவுதான்.”
எல்லோரும் என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தார்கள். சாம்புதான் முதலில் வாயைத் திறந்தான். ‘அதுதான் ஒரு மாதிரி பாக்கறான். நேக்கு அப்பவே தெரியும் சுப்பன் கேசுன்னு.” எங்கள் ஊருக்கென்று கடவுள் சிறப்பாகப் படைத்து அனுப்பி வைத்த அரைப் பைத்தியம் சுப்பன்.
‘சும்மா இஷ்டத்துக்கு எங்கேயாவது போய் சுத்திட்டு ஆத்துக்குத் திரும்பி வரான். அவ்வளவுதான்” என்று விளக்கம் தந்தேன்.
ஓரத்திலே சிவப்பு சாயம் போட்டக் கையகல துப்பறியும் நாவலைப் படித்து முடிக்கும்போது ‘பூ! முடிவு இவ்வளவுதானா, இதுக்குப் போயா இவ்வளவு நேரம் செலவழிச்சோம்’ என்று அதைத் தூக்கி எறிகிற மாதிரி இந்த விஷயத்தையும் தூக்கிப் போட்டுப் போய் விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் சூரியநாத அய்யர் விடுவதாக இல்லை.
‘சாமிநாதா! அந்த ஆள் போகட்டும். அவாளோட ஆத்துக்காரர் என்ன பண்ணறார், எங்க இருக்கார்னு கேட்டியோ? இன்னிக்கி கேக்கலைன்னா அடுத்த தடவை பாத்தா ஞாபகமா கேளு, மறந்துடாதே!”


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation