பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

பெஞ்சமின் லெபோ


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்கள் இருவர். ஒருவர் – முறுக்கு மீசைப் புலவர் : பாரதியார். மற்றவர் : நறுக்கு மீசைக் கவிஞர் பாரதிதாசனார். முன்னவர், பண்டிதர்களிடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு பதுங்கி இருந்த தமிழ்க் கவிதையைப் பாமர மக்கள் சொத்தாக்கியவர், சொல் புதிதான, சுவை புதிதான கவிதைகளைப் படைத்து வித்தாக்கியவர். எளிய சொற்களில் இனிய கவிதைகள் பாடித் தமிழ்க் கவிதைக்குப் புதுப்பாதை காட்டியவர், கவிதையிலும் உரைநடையிலும் தமிழுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர். இவர் பிறந்தது வளாந்தது எட்டயபுரமானாலும் வாழ்ந்தது மறைந்தது தருமமிகு சென்னையானாலும் இன்று வரை இவர் புகழ் நின்று நிலைக்கச் செய்யும் கவிதைகளை மலர வைத்தது நம் புதுச்சேரி மண்ணே! அண்டி வந்தோரை அரவணைப்பது மட்டுமல்லாமல் ஒண்ட வந்த அவர்கள் பண்பு நலன்களையே மாற்றி விட்டுப் புகழ் ஏணியில் ஏற்றி வைக்கும் தன்மையும் புதுச்சேரிக்கு உண்டு – தீவிர வாதியாகத் தஞ்சம் புகுந்த அரவிந்தரை ஆன்மீகவாதியாக ஆக்கியதைப் போல! பாரதியாருக்குப் புகழ் சேர்த்த நெடும் பாடல்கள் மூன்றையும் (கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்) அவர் புனைந்தது புகழ் சேர் புதுவையில் தான். மகாபாரதக் கதையின் முக்கிய இடங்களுள் ஒன்;று, பாஞ்சாலி செய்கின்ற சபதம். புதிதாகவே காவியம் ஒன்றைப் புனையக் கூடிய புலமையும் கவிதைத் திறமையும் கற்பனை வளமையும்; கொண்ட பாரதியார், அந்த இடத்தைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தது ஏன்? பாரதியார் வரைந்து காட்டும் பாஞ்சாலி யார்?. பாட்டுக்கொரு புலவன் பாரதியின் 125 -ஆம் ஆண்டு விழாவைப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு கொண்டாட முனையும் இவ்வேளையில் இவை பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் என்ன !

வாழ்ந்த காலத்தில் பாரதியின் சிந்தனையும் சொல்லும் செயலும் சுதந்திர தேவியையே சுற்றி வந்தது. அதனால்தான்,

“இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும்,

பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும்,

விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்,

சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே. ” என்றவர் பாடினார் அன்று!

அடிமைபட்டு மிடிமைபட்டுக் கிடந்த பாரத தேவியின் நிலை, பணயப் பொருளாய்ச் சூதிலே வைத்திழக்கப்பட்ட பாஞ்சாலியின் நிலை போலவே பாரதிக்குத் தோன்றி இருக்கக் கூடும். அதனால்தான் பாஞ்சாலி சபதம் செய்யும் பகுதி பாரதியைக் கவர்ந்திழுத்தது போலும். என்றொரு கருத்து தமிழிலக்கிய வட்டத்தில் உலா வந்தது என்னவோ உண்மைதான். மறைந்திருந்து வாலியை இராமன் கொன்றது முறையா, அறமா, தகுமா என்ற கேள்விகள் எப்படி வாலி வதையின் போதே எழுந்தனவோ அது போலவே, பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்? என்ற கேள்வி பாரதி காலத்திலேயே எழுந்ததுதான். அந்தப் பாஞ்சாலி வேறு யாருமில்லை, பாரதத்தாய்தான் என்ற கருத்தை முன்னிறுத்தியவர் மாபெரும் எழுத்தாளர் பி.ஸ்ரீ அவர்கள்;. “பாரதியார் காலத்தில் இவர் மாணவப் பருவத்தில் இருந்தார். பாரதியைச் சந்தித்திருக்கிறார். பாஞ்சாலி சபதத்தின் உட்பொருளைப் பாரதியிடமே கேட்டிருக்கிறார். அதற்குப் பாரதி விடையேதும் சொல்லவில்லை. ஆகவே, பி.ஸ்ரீயே அதனை விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபடுத்திக் காட்டினார். பாரதியும் மகிழ்ச்சியுடன் தலையை அசைத்ததாகச் சொல்கிறார் பி.ஸ்ரீ. (பாரதி – நான் கண்டதும் கேட்டதும் : பி.ஸ்ரீ எழுதியது.)”
இப்பகுதியைத் திரு அரி கிருட்டிணன் அவர்கள் பாரதியார் கவிதைகள் என்ற மன்ற மையத்தில் பதிவுசெய்திருக்கிறார் (: ர்யசi முசiளாயெn (@ 202.144.64.4) ழn: ஆழn ழுஉவ 9 22:24:21 நுனுவு 2000).

அடுத்து, இக்கருத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் :
– “வியாசர், துரியோதனன் அவையில் நின்று பாஞ்சாலி வாதிடும் கட்டத்திற்கு எழுச்சி தரும் வகையில் பெயர் தரவில்லை. ‘திரௌபதியின் துயரம்” என்றுதான் சொல்கிறார்.
– வில்லிபுத்தூரார், ‘சூது – போர்ச் சருக்கம்’ என்று பெயர் தந்துள்ளார்.
– வைணவப் பௌராணிகர்கள் ‘திரௌபதி மான சம்ரட்சணம்’ என்ற பெயர் தந்துள்ளனர்.
– நாடகக்காரர்கள், ‘சூது – துகிலுரிதல்’ எனப் பெயர் தந்துள்ளனர்.

அவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு நின்று ‘பாஞ்சாலி சபதம்’ என்கிறார் பாரதியார். காரணம், அவர் பாஞ்சாலியைப் பாரத தேவியாகக் கண்டதுதான்” –(செங்கோல் 8-9-1968ஃ’பாரதியின் போர்க்குரல்” – பக்கம் 14).;

தன் ‘பாரதியின் பாஞ்சாலி சபதம் – ஒரு பெண்ணியப் பார்வை’ என்ற கட்டுரையில் இக்கருத்துகளை எடுத்தாளும் திருமதி ரா. ஸ்ரீவித்யா என்பவர், “கதாகாலடசேபம் செய்பவர்கள் ‘திரௌபதி மான சம்ரட்சணம் என்ற பெயரால் குறித்தனர். நாடகக் கலைஞர்கள் ‘திரௌபதி வஸ்திராபஅரணம் என்கின்றனர். ஆனால் பாரதியாரோ அப்பகுதிக்குப் பாஞ்சாலி சபதம் எனப் பெயரிடுகிறார். கொடுங்கோலர் அவையிலே நின்று சபதம் செய்த பாஞ்சாலியின் வீரத்தை, அடிமைப்பட்டு அந்நிய வீரர்களாக அடங்கி வாழும் பாரத மக்களுக்கு நினைவ+ட்டி, அவர்களையெல்லாம் விடுதலைக்குப் போராடும் வீராகளாக மாற்றும் நோக்கத்துடன், தம் குறுங்காப்பியத்திற்குப் பெயர் வைத்தார் என்று ம.பொ.சியும் பாஞ்சாலியைத் தன்னிகரற்ற தலைவியாக முதன்மைப்படுத்தியதாலும் காப்pயத்தின் மையக் கருத்து அவளின் வஞ்சினமாக இருப்பதாலும் பாரதியார் அதற்குப் பாஞ்சாலி சபதம் எனப் பெயரிட்டாரென ப. ஜீவானந்தமும் க.த. திருநாவுக்கரசும் இக் காப்பியத்தின் பெயர்ப் பொருத்தத்தை ஆராய்ந்துள்ளனர்” என எழுதுவதும் நோக்கத் தக்கது.-
( காண்க :hவவி:ஃஃறறற.யஅசரவாயஅயபயணiநெ.உழஅஃழடனஉழவெநவெ.pரி?யnஸ்ரீ212ரூரூனயவந1ஸ்ரீஅயல2007)

மறுபடி, திரு பி.ஸ்ரீ அவர்களின் கூற்றைப் பார்ப்போம். இதிலிருந்து புலனாகும் இரண்டு செய்திகள் :

1 பாஞ்சாலி சபதத்தின் உட்பொருளைப் பாரதியிடமே பி.ஸ்ரீ கேட்க, அதற்குப் பாரதி விடையேதும் சொல்லவில்லை. ‘

2 பி.ஸ்ரீயே அதனை விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபடுத்திக் காட்ட பாரதியும் மகிழ்ச்சியுடன் தலையை அசைத்ததாகச் சொல்கிறார் பி.ஸ்ரீ.

பாரத மாதாவை உருவகப் படுத்திதான் பாஞ்சாலியைப் பாரதி படைத்திருந்தார் என்றால், திரு பி.ஸ்ரீ அவர்களின் கேள்விக்கு ஆமென்று பாரதி விடை சொல்லி இருக்கலாமே! ஆனால் சொல்லவில்லையே ஏன்? அக்கருத்து பாரதிக்கு உடன்பாடில்லை அஃதாவது, பாரத மாதாவை எண்ணிப் பாஞ்சாலியைப் படைக்கவில்லை பாரதி! அதனால்தான், பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார். ‘விடை சொல்லவில்லை’ என்று சொல்லாமல் ‘விடையேதும் சொல்லவில்லை” என்ற காரணத்தால், அதற்குப் பிறகோ வேறு எப்போதோ பாரதி விடை பகரவில்லை, விடைபகர விரும்பவில்லை என்ற தொனிப் பொருள் கிடைக்கிறது.

அடுத்ததாக, பி.ஸ்ரீ. பாஞ்சாலியை, விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புபடுத்திக் காட்ட பாரதியும் ஆமோதிப்பாக அல்ல (இப்படியும் ஒரு கோணமா என்று) மகிழ்ச்சியுடன் (வெறுமனே) தலை அசைத்திருக்கிறார். இங்கும் அக்கருத்தைப் பாரதி ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை! ஆக, பாரதியைப் பொருத்தவரை பாஞ்சாலி பாரத மாதாவின் உருவகம் அன்று என்பது தெளிவாகிறது! அதாவது, பாரதத் தேவியை மனத்தில் வைத்துப் பாஞ்சாலித் தேவியைப் பாரதி வரையவில்லை!

எந்தப் படைப்பாளியும் தன் சொந்தப் படைப்புக்கு விளக்கமோ விமரிசனமோ செய்யாமல் இருப்பதே நல்லது. அந்தப் படைப்பைப் படிப்பவர் மனத்தில் இடம், காலம் நேரத்தைப் பொருத்துப் (படைப்பாளியே நினைக்காத) புதுப் புதுப் பொருள் தோன்றக் கூடும் அல்லவா! படைப்பு நிலைபெற இதுவும் ஒரு காரணம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு ‘திருக்குறள்தான்’. “சீசீ திருக்குறள் எதற்கும் இடம் தரும்! விடுவிடு” என்று சுந்தரம் பிள்ளை தம் மனோன்மணீயத்தில் கூறுவார். இதனை உணர்ந்தோ என்னவோ, பி.ஸ்ரீயின் உசாவலுக்குப் பதில் தராமலேயே பாரதி மவுனம் காத்தார் போலும். படைப்பவனுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அது போலவே, படிப்பவனுக்கும் அப்படைப்பைப் பல கோணங்களில் காணவும் அலசவும் உரிமை உண்டு. ஆகவே, பி.ஸ்ரீ அவர்கள் காட்டிய தொடர்பும் தவறென்று சொல்ல இயலாது! சிலம்புச் செல்வர் ம. பொ.சி அவர்களின் கருத்துக்கும் இது பொருந்தும். தருமன் எப்படித் தனக்கு உரிமையான தம்பியர், மனைவி பாஞ்சாலி, உடைமைகள், நாடு … முதலியவற்றைச் சகுனியின் வஞ்சகத்தால் பறிகொடுத்தானோ அது போலவே இந்திய மன்னர்களும் குறுநிலச் சமீன்தார்களும் தம் நிலப்பகுதிகளையும் உரிமைகளையும் ஆங்கிலேயரிடம் பறி கொடுத்தனர். தமக்குரிய மண்ணை (மொத்தமாகப் பார்த்தால் பாரதத்தை) ஆங்கிலேயருக்கு அடிமைபடுத்தினர். இந்தக் கோணத்தில், இந்தக் குறுகிய வட்டத்தில், உள்ளுறை உவமம் என்ற இந்த அளவில் பார்த்தால், பாரத அன்னையின் உருவகமாகப் பாஞ்சாலி தோன்றக் கூடும். பாஞ்சாலி தனக்குத் தீங்கு செய்தவர்களைப் பழிக்குப் பழி வாங்கச் சபதமிடுகிறாள் – தீவிரவாதிபோல! இச்செயலைப் பாரத அன்னைக்குப் பொருத்த முடியாது! துரியோதன, துச்சாதனர்களின் அழிவோடு பாஞ்சாலி சபதம் நிறைவுபெறுகிறது. இதனையும் பாரத மாதாவின் சுதந்திரத்தோடு முடிச்சிட முடியாது. ஆகவே, பாரதி வரைந்த பாஞ்சாலி பாரத அன்னை அல்லள்!

அப்படி, பாரத அன்னையாக இருந்திருந்தால், சுதந்திரம் பெறுவதோடு பாரத (பாஞ்சாலி) சபதம் முடிவதாக எழுதி இருப்பார் பாரதி! அவர்தான் 1908 இலேயே பாடிவிட்டாரே, “ஆடுவோமே, பள்ளு பாடு வோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று’! பாஞ்சாலி சபதமோ 1924 இல்தானே எழுதினார்! மேலும், பாஞ்சாலியின் சபதம் பாரதப் போரின் இறுதியிலேதான் முடிவுக்கு வருகிறது. ஆனால் பாரதியோ பாஞ்சாலி சபதம் செய்த கையோடு ‘ நாமுங் கதையை முடித்தோம், இந்த நானில முற்றும் நல் லின்பத்தில் வாழ்க எனச் சொல்லி பாஞ்சாலி சபதம் முற்றிற்று” என்று க(வி)தைக்கு மங்களம் பாடிவிடுகிறார். மேலும், தம் முன்னுரையில் பெயர்க் காரணம் பற்றியோ, பாஞ்சாலிக்கும் பாரதத்தாய்க்கும் தொடர்பு உள்ளதென்றோ பாரதியார் உரைக்கவில்லை! ஆகவே, பாரதி வரைந்த பாஞ்சாலி பாரதத்தாயாக, பாரதத் தேவியாக இருக்க முடியாது! பின்னே! ??? பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்? என்பதை அவரவர் கற்பனைக்கும் கொள்கைகளுக்கும் ஏற்றவாறு அவரவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என அவர் விட்டுவிட்டார் போலும்.

அப்படி என்றால், அந்தப் பாஞ்சாலி யாராக இருக்கக்கூடும்?

அவள் யார் என்பதைப் பாரதியே ஓரிடத்தில் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாh.; துச்சாதனன் துகிலுரியத் துகிலுரியக் கண்ணபிரான் திருவருளால் புதிது புதிதாய் வண்ண வண்ண பொற்சேலைகள் வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவாம்! சேலைகளை இழுத்து இழுத்துக் கையும் சோர்ந்தான்;, மெய்யும் சோர்ந்தான் துச்சாதனன். இறுதியில் வீழ்ந்தான்! அப்போது பாரதி,
“தேவர்கள் பூச்சொரிந்தார் – ஓம்
ஜெயஜெய பாரத சக்தி என்றே
ஆவலொடு எழுந்து நின்று – முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.”

என்று பாடுகிறார். தேவர்கள் பூச்சொரிந்தது பாஞ்சாலிக்கு. அனைவருக்கும் மூத்தவரான வீட்டுமரே எழுந்து நின்று அவளைக் கைகூப்பித் தொழுகிறார், (ளவயனெiபெ ழஎயவழைn போல). பஞ்ச பாண்டவர்கள் என்ற ஐம்பூதங்களை இயக்குகின்ற ‘சக்தி’ அவளே! (பாண்டவ மகாராஜாவுக்குச் சந்ததி இராது என்ற சாபம் உண்டு என்பதையும் குந்தி தேவி ஐம்பூதங்களைப் புணர்ந்தே தருமன் முதலானவர்களைப் பெற்றாள் என்பதையும் நினைவு கூர்க!). ஆகவே, பாஞ்சாலியை (ப் பாரத) “சக்தி’ என்று பாரதியார் பாடுவது பொருத்தமானதே! ஆகவே இந்தப் பாரதச் ‘சக்தியை’ மனத்தில் வைத்தே பாஞ்சாலியைப் பாரதியார் படைத்திருக்கக்கூடும். சக்தி என்றால் பெண். பாரத சக்தி ஸ்ரீ பாரதப் பெண். பாரதியின் மனத்தில் உள்ள இந்தப் பாரதப் பெண்ணைப் பல இடங்களில் சுட்டிச் செல்கிறார் பாரதியார்: அவள் ஒளி படைத்த கண்ணினள், உறுதி கொண்ட நெஞ்சினள், களிபடைத்த மொழியினள், கடுமைகொண்ட தோளினள், தெளிவு பெற்ற மதியினள், குறிப்பாக எளிமை கண்டு இரங்கிச் சிறுமை கண்டு பொங்கும் இயல்பினள். நிமிhந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் கொண்டவள். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த வந்த புதுமைப் பெண்ணொளி அவளே! சாதம் படைக்கவும் செய்வாள், தெய்வச் சாதி படைக்கவும் செய்வாள்! வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் அவளால் இயலும். இறைவன் படைப்பிலேயே சிறந்த படைப்பு பெண்தான். கிருத யுகத்தில் பெண் இத்தகைய சிறப்புகளோடு உயர்ந்த இடத்தில் இருந்தாள்.
“ஆணோடு பெண் முற்றும் நிகரெனவே அந்நாளில்
பேணிவந்தார்.” என வீட்டுமர் ஒப்புக் கொள்கிறார். ஆனால் இப்படிப் பட்ட நிலை கலிகாலத்தில் (அதாவது, இற்றைக் காலத்தில்) மாறிவிட்டது. இதனையும் வீட்டுமர் வாயிலாகவே பாரதி பாடுகிறார் :
“………………… பின்னாளில் இஃது பெயர்ந்து போய்
இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால், ஆடவருக்கு
ஒப்பில்லை மாதர். ஒருவன் தன் தாரத்தை
விற்றிடலாம் @ தானமென வேற்றவர்க்குத் தந்திடலாம்…” !

உயர்திணையாக இருந்த பெண் அஃறிணையாக ஆக்கப்பட்டுவிட்டாள். அடிமையிலும் அடிமையாக நடத்தப்பட்டாள். பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஒன்றா இரண்டா! ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றார்கள், மாட்டை அடித்து வசமாக்கித் தொழுவினில் மாட்டுவது போல வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தார்கள், நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ? கொல்லத் துணிவின்றிப் பெண்ணை அந்நிலை கூட்டி வைத்தார்கள், பழி கூட்டி வைத்தார்கள், வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுத்தார்கள்…இவை அனைத்தும் பாரதி அங்கும் இங்குமாகக் காட்டிய பெண்கொடுமைகள். பாஞ்சாலியைக் கொடுமைபடுத்திய துரியோதனனும் துகிலுரித்து அவமானப்படுத்திய துச்சாதனனும் பாரதப் போரோடு முடிந்துவிடவில்லை, மறைந்து விடவில்லை, அழிந்தும் போகவில்லை! கலிகாலம் இப்போதும் தொடர்வது போல அந்தத் துரியோதன துச்சாதனர்கள் பாரதி காலத்திலும் ஏன் இப்போதும் கூடத் தொடர்கிறார்கள்.

ஆணாதிக்கம் குறைந்துவரும் இந்தக் கால கட்டத்தில் கூட, பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையவில்லையே! கண்ணாலே பேசிப் பெண்ணுக்குக் காதல் வலை வீசிக்; காரியம் முடிந்ததும் கைவிடும் காமுகர்கள் உலவிக்கொண்டுதானே இருக்கிறார்கள். கொட்டிக்கொடுத்துப் பெண்ணைக் கட்டிக்கொடுத்த பின்னும் பிணந்தின்னிக் கழுகுகளாய் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தும் ‘உத்தம’க் கணவர்கள் நாளும் பெருகிக்கொண்டுதானே இருக்கிறார்கள். பிறந்தது பெண்ணாக இருந்துவிட்டால் இறந்துதான் தீர வேண்டும் எனக் கள்ளிப் பாலும் கையுமாக அலையும் கயமை நெஞ்சங்கள் தாம் எத்தனை எத்தனை! இப்படி இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், கெடுமதி படைத்த இக்காலத் துரியோதனர்களும் துச்சாதனர்களும் (பாஞ்சாலியாகிய) பாரதப் பெணணுக்;குச் செய்யும் கொடுமைகளை! பாரதியார் தீர்க்கதரிசி கவி. எதிர்காலத்திலும் பாரதப் பெண் எதிர்கொள்ள வேண்டிய கொடுமைகள் உண்டு என உணர்ந்திருக்கிறார். இந்தத் துரியோதனர்களையும் துச்சாதனர்களையும் எதிர்த்துப் போராடத் தன் சொந்தக் கணவனும் உதவமாட்டான் (கல்லு போலக் கணவர்கள் ஐந்து பேர் இருந்தும் பாஞ்சாலிக்கு உதவ ஒருவனும் துணியவில்லையே!), மாறாகத் தெய்வமே துணையாகும் அவளுக்கு. இத்தகைய துரியோதன துச்சாதனர்களை அழித்தொழி;ப்பதாகப் பாரதப் பெண், பாஞ்சாலி சபதம் செய்திட வேண்டும். இத்தகைய கயவர்கள் காலந்தோறும் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆதலால் பாரதப் பெண்ணும் பாஞ்சாலி போலக் காலந்தோறும் சபதம் செய்துகொண்டேதான் இருக்க நேரிடும். எனவே பாஞ்சாலி சபதம், பாரதப் பெண்ணின் சபதம் முடிவடையவே முடிவடையாது, தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஆகவேதான் தான் எழுதிய குறுங்காவியத்துக்குப் பாஞ்சாலியின் கதையைப் பாரதியார் தெரிவுசெய்திருக்கிறார். மேலும், பாஞ்சாலி சபதம் செய்யும் காட்சியோடு நிறுத்திக் கவிதையை நிறைவுகட்டி விடுகிறார்.

ஆக, பாரதியார் வரைந்த பாஞ்சாலி, பாரதத்தேவி அல்லள், சாதாரண பாரதப் பெண்தான் – இன்றும் இத்தகைய பாஞ்சாலிகள், பாரதப் பெண்கள் நம்மிடையே தோன்றித் துரியோதன துச்சாதனர்களின் கொடுமைகளுக்கு ஆளாகிச் சபதம் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். ஆனால், இவர்கள் சபதங்கள் முடிவதில்லை – அவ்வளவுதான்!

– பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு)

நன்றி : மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டுவிழா மலர், முத்தமிழ்ச் சங்கம், பிரான்சு

benjaminlebeau@gmail.com

Series Navigation

பெஞ்சமின் லெபோ

பெஞ்சமின் லெபோ