தனிமையில் ஒரு பறவை

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


தனிமையில் ஒரு பறவை

“சுஜாதா! நான் ரெடி. சீக்கிரம் ரெடியாகணும். விய் நீட் டு பி தேர் பை 6.30 ஷார்ப்!” டையை சரி செய்து கொண்டே சொன்னான் ஹரி.
சுஜாதாவின் மேக்கப் இன்னும் முடியவில்லை போலும். பதில் வரவில்லை.
ஒருமுறை தான் போட்டுக் கொண்ட சூட்டை கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான்.
தந்தை ராஜாராமன், சொபாவில் உட்கார்ந்திருந்தார்.
“டாடீ! நீங்க ரெடிதானே” என்றவன் சற்று நிறுத்தி “என்ன டாடீ? ப்ளேஜர் போட்டுக் கொள்ளச் சொல்லி சொன்னேன் இல்லையா? இன்னும் நீங்க இப்படி….” எரிச்சலுடன் சொன்னான்.
“அது இல்லை ஹரி! நான் கூட சூட் போட்டுக் கொண்டு வரணுமான்னு…” ராஜாராமன் முணுமுணுத்தார்.
“அப்பா! நாம் போகப் போவது எங்க கம்பெனியின் C.E.O. வின் திருமண ரிசப்ஷனுக்கு. இங்கே எல்லோரும் டிரெஸ் கோட் கடைபிப்பார்கள். நம் இந்தியாவில் கல்யாணத்திற்குப் போவது போல் இல்லை. எல்லோரும் கோட் சூட் போட்டுக் கொண்டு வருவார்கள். எல்லாமே கட்டுக் கோப்பாக இருக்கும். போய் சீக்கிரமாக சூட் போட்டுக் கொண்டு வாங்க. நாம் ஆறரை மணிக்கெல்லாம் அங்கே இருக்கணும் ” என்று தந்தையை அவசரப்படுத்தினான்.
“அது இல்லை ஹரி! இந்த டிரெஸ் கோட் அது இது என்று கோட் சூட் போட்டுக் கொள்ள என்னால் முடியாது. வழக்கமில்லாத காரியம். இருந்தாலும் நாம் கல்யாணத்திற்குப் போகிறோமா அல்லது ஏதாவது இண்டர்வூக்குப் போகிறோமா? போகட்டும் விடு. நான் பப்லூவுடன் வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்.” ராஜாராமனுக்கு சூட் அணிந்துகொள்வதில் விருப்பம் இல்லை.
“இப்போ மாட்டேன் என்று சொன்னால் முடியாது. ஏற்கனவே உங்கள் பெயரை என் சார்பில் விருந்தாளிகளின் லிஸ்டில் எழுதிவிட்டேன். பப்லூவை என் நண்பனின் வீட்டில் பேபி சிட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துவிட்டேன். இப்போ வர மாட்டேன் என்று சொன்னால் நன்றாக இருக்காது. சீக்கிரமாக கிளம்பி வாங்க.” தந்தையை கட்டாயப்படுத்தி மாடிக்கு அனுப்பி வைத்தான்
ராஜாராமன் வேறு வழியில்லதவர் போல் தலையை அசைத்துவிட்டு மாடிக்குச் சென்றார்.
இதற்குள் சுஜாதா அங்கே வந்தாள். எப்படி இருக்கு என்னுடைய டிரெஸ் என்பது போல் ஹரியின் பக்கம் பார்த்தாள். “ப்யூட்டிபுல்!” ஹரியால் வியப்பை அடக்க முடியவில்லை. சுஜாதா அணிந்திருந்த டைமண்ட் நெக்லெஸ் தகதகவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது.
ராஜாராமன் சூட் அணிந்து கொண்டு வந்தார். எல்லோரும் லெக்ஸஸ் காரில் கிளம்பினாளர்கள். போகும் வழியில் பப்லூவை தன்னுடைய நண்பனின் வீட்டில் இறக்கிவிட்டான் ஹரி.
“என்ன திருமண ரிசப்ஷன் இது? குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகக் கூடாது. நேரத்திற்கு போகணும். டிரெஸ் கோட் வேறு. இந்த நிபந்தனைகள் எல்லாமே வேடிக்கையாக இருக்கு.” ராஜாராமனுக்கு புரியவே இல்லை.
“ஆமாம். இங்கே திருமண ரிசப்ஷன் எல்லாமே இப்படித்தான் இருக்கும். இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் போய் அங்கே நமக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் உட்கார்ந்து கொள்ளணும். நம் இஷ்டம் போல் சுற்றி வருவது கூடாது. நம்முடைய முறை வந்த போது எழுந்து போய் மாப்பிள்ளையை, பெண்ணை வாழ்த்திவிட்டு வரணும். பார்க்கத்தான் போறீங்களே எவ்வளவு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருப்பார்களோ.” ஹரி விளக்கினான்.
“பார்க்கத்தானே போகிறேன். கல்யாணம் போல் தொன்ற வில்லை. பெண் எந்த நாட்டை சேர்ந்தவளாம்?” ராஜாராமனுக்கு எல்லாமே புதிதாக இருந்தது.
“அமெரிக்கன்தான். ப்ரூஸ்க்கு இத இரண்டாவது திருமணம். முதல் மனைவிக்கு டைவோர்ஸ் கொடுத்துவிட்டு ஆறேழு வருடங்கள் இருக்கும். மணப்பெண்ணுக்கும் ஒரு மகன் இருக்கிறான். ஒரு விதமாக சொல்லணும் என்றால் இரண்டு பேருக்குமே இது செகண்ட் மேரேஜ். ப்ரூஸ¤க்கு சொத்து நிறைய இருக்கு. இத்தனை ஆர்ப்பாட்டமும் அதற்காகத்தான்.”
“இது இன்னும் வேடிக்கை. நடக்கப் போவது இரண்டாவது கல்யாணம். அதற்காகவா இந்த படாடோபம்?” சிரிப்பு வந்தது ராஜாராமனுக்கு.
“இங்கே எல்லாமே இப்படித்தான் இருக்கும். நம் நாட்டில் நடப்பது போல் இல்லை.” சுஜாதா இடைபுகுந்தபடி சொன்னாள்.
“ஆமாம். ப்ரூஸை எனக்கு ஏறக்குறைய பத்தாண்டுகளாக தெரியும். ரொம்ப நல்லவன். முதல் மனைவிக்கும் அவனுக்கும் ஒத்துப் போகவில்லை. அவள் ஒரு மாதிரி. எவ்வளவுதான் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள பார்த்தாலும் டைவோர்ஸை தவிர்க்க முடியவில்லை. ஐந்தாண்டுகளாக தனியாகத்தான் இருந்து வந்தான். இத்தனை நாட்கள் கழித்து தனக்கு தகுந்த துணை கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. அவனுக்கு சுற்றிலும் மனிதர்கள் இருக்கணும். தனிமையைத் தாங்க முடியாமல் குடித்து விழுந்துக் கிடந்த நாட்களும் உண்டு. தனிமையைத் தாங்க முடியாமல் அவன் திண்டாடிக் கொண்டிருக்கும் போது நான்தான் சொன்னேன். “இப்படி நரகத்தை அனுபவிப்பதை விட யாரையாவது கல்யாணம் செய்து கொள்ளலாம் இல்லையா” என்று. இத்தனை நாட்கள் கழித்து அவனுக்குப் பிடித்த விதமாக பெண் கிடைத்துவிட்டாள். ஐ யாம் ஹேப்பி அபௌட் ஹிம்.”
“நல்லா இருக்கு கதை. இதையெல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. ஒவ்வொரு விஷயத்திலும் ·பார்மாலிடீஸை கடை பிடிப்பது எனக்கு உண்மையிலேயே வியப்பாக இருக்கு. பப்லூ உனக்கேதாவது சின்ன விஷயத்தில் ஹெல்ப் செய்தால் நீ அதற்கு தாங்க்யூ சொல்லும் போது முதல் முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மகனுக்கு தந்தை தாங்க்யூ சொல்வதாவது? குடும்ப நபர்களுக்கு தாங்க்யூ சொல்வது, அம்மாவும் அப்பாவும் குழந்தைகளுக்கு சாரி சொல்வது … இதெல்லாம் எனக்கு செயற்கையாகத் தோன்றுகிறது. இவர்களும் இவர்களுடைய கல்ச்சரும்…” ராஜாராமனுக்கு இதெல்லாம் ஏதோ சடங்கு போல் தோன்றியது.
“தொடக்கத்தில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது, ஆனால் எந்த பழக்கமாக இருந்தாலும் முதலில் தாய் தந்தையிடம்தானே தொடங்கும்? குடும்ப நபர்களிடம் காட்டாத பண்பும், பழக்க வழக்கமும் வெளி மனிதர்களிடம் எப்படி தோன்ற முடியும்? ஒரு விதமாக பார்த்தால் எனக்கு இது நல்ல பழக்கமாகத்தான் தோன்றுகிறது.” ஹரி தன் தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தினான்.
“நல்லாயிருக்குப்பா நீ சொல்வது. அம்மா அப்பாவிடம் இருக்க வெண்டியது அன்பும், ஆதரவும். வெறுமே இப்படி வாயால் சாரி, தாங்க்யூ சொல்லிக் கொண்டால் போதுமா?” ராஜாராமன் வாதம் புரிந்தார்.
“தாங்க்யூ, சாரி சொன்னதால் மட்டும் அன்பு இல்லை என்று உங்களால் எப்படிச் சொல்ல முடியும்? நாங்க பப்லூவை அன்பாக பார்த்துக் கொள்ளவில்லையா? அதெல்லாம் கல்ச்சரல் மித்! ஐ டோன்ட் அக்ரி வித் யூ.” ஹரி மறுப்பு தெரிவித்தான்.
மேற்கொண்டு பேச்சை நீடிக்க விரும்பாமல் ராஜாராமன் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
ரிசப்ஷன் ஹால் நெருங்கிவிட்டது. காரை பார்க் செய்து விட்டு உள்ளே போனார்கள். விருந்தாளிகள் எல்லோரும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டார்கள். ஹால் ரொம்ப அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மின் விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த இடம் ஜொலித்துக் கொண்டிருந்தது.
மணமகன் ப்ரூஸ¤ம், மணமகள் மரீனாவும் கைகளை கோர்த்தபடி நின்றிருந்தார்கள். ஒருவருக்குப் பின்னால் ஒருவராக போய் மணமக்களை வாழத்திவிட்டு வந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுடைய முறையும் வந்தது. “விஷ் யூ ஹேப்பி மேரீட் லை·ப்!” ஹரி ப்ரூஸை விஷ் செய்தான்.
“தாங்க்யூ!” அமெரிக்கன் மணமக்கள் இருவரும் கையைக் குலுக்கினார்கள்.
ஹரி தன் தந்தையை அறிமுகப்படுத்தினான். “திஸ் ஈஸ் ராஜாராமன். மை ·பாதர்!”
“நைஸ் டு மீட்யு. ஹரி டோல்ட் மி அபௌட் யு. ஹி லவ்ஸ் யு ஸோ மச். ஹி டோல்ட் மீ ஹௌ யூ பிராட்டப் யுவர் யங் கிட்ஸ் வென் யுவர் வை·ப் டைட்! யு ஆர் ரியல்லி கிரேட்! ஹரி ஈஸ் எ வெரி குட் பர்ஸன்! வெரி ·பிரண்ட்லீ! அ·ப்கோர்ஸ், இன்டெலிஜெண்ட் டூ!” ப்ரூஸ் ராஜாராமனையும், ஹரியையும் பாராட்டினான்.
“தாங்க்யூ!” ராஜாராமன் முறுவலுடன் சொன்னார்.
“மை டாட் ஈஸ் கிரேட் பர்ஸன்! எனி ஹௌ .. திஸ் ரிசப்ஷன் ஈஸ் ரியல்லீ கிரேட்! வன்டர்·புல் அரேன்ஞ்மெண்ட்ஸ்! ஆஸம் டின்னர்!”
“தாங்க்யு! விய் ஆர் வெரி ஹேப்பி யு லைக்ட் இட். விய் வில் ஹேவ் எ டான்ஸ் டூ!” இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
“யா யா! விய் வில் பி என்ஜாயிங் தட் டூ!” ஹரி மற்றொரு முறை அவர்களை வாழ்த்திவிட்டு தங்களுடைய மேஜை அருகில் வந்தான்.
அன்றிரவு பார்ட்டீ முடியும் போது நள்ளிரவு ஆகிவிட்டது. ராஜாராமனுக்கு எப்பொழுதுடா வீட்டுக்குப் போவோம் என்றிருந்தது. தன் கண் முன்னாலேயே மகனும், மருமகளும் மது அருந்துவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
வேண்டாம் என்று தடுப்பதற்கு அவர்கள் ஒன்றும் சின்னக் குழந்தைகள் இல்லையே. சின்ன வயதில் சிகரெட் புகையை, மதுவின் நெடியை தாங்க முடியாத ஹரி இன்று தந்தையின் கண் முன்னாடியே அதையெல்லாம் செய்து கொண்டிருந்தான். காலமும், இடமாற்றமும் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றன! இன்னும் எத்தனை நாட்கள்? இன்னும் இரண்டு மாதங்களில் தன்னுடைய வீசா முடிந்துவிடும். இந்த நாட்டை விட்டு சொந்த நாட்டுக்கு போய் விடப் போகிறோம். தன்னுடைய நண்பர்கள், சொந்த ஊர் , அந்த குளத்தங்கரை, அந்த காற்று … நினைக்கும் போதே மனதில் ஏதோ பரவசம்!
அந்தத் திருமண விருந்து ராஜாராமனுக்கு புது அனுபவம்! யாரோ கவிஞர் சொன்னது போல் அனுபவங்களால் நிறைந்ததுதானே வாழ்க்கை! தன்னுடைய குழந்கைளின் சுபாவத்தின் ஏற்பட்ட மாற்றங்கள் மெள்ள மெள்ளமாக அனுபத்திற்கு வந்து கொண்டிருந்தன. எந்த அனுபவத்தின் விளிம்பில் எப்பொழுது நழுவி விழுந்து விடுவோமோ யாருக்கும் தெரியாது.
ஒன்பது மாதங்கள் கழிந்து விட்டன.
“ஷி ஈஸ் ஆல் ரைட்! எவ்ரி திங் லுக்ஸ் வெரி குட். தி பேபி ஈஸ் டூயிங் வெரி வெல். எவ்ரிதிங் கோஸ் வெல்! யு வில் பி ஹேவிங் யுவர் பேபி இன் டென் டேஸ்.” டாக்டர் எரிகா முறுவலுடன் சொன்னாள்.
“தாங்க்யூ டாக்டர்! விய் வில் பி லுக்கிங் ·பார்வார்ட்!” சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தார்கள் ஹரியும், சுஜாதாவும். சுஜாதாவுக்கு இன்னொரு வாரத்தில் பெண் குழந்தை பிறக்கப் போகிறது. ஜெனரல் செக்கப்புக்காக வந்திருந்தார்கள்.
“எனக்கு ஏனோ டென்ஷனாக இருக்கு ஹரீ!” பயம் கலந்த குரலில் சொன்னாள் சுஜாதா.
“டென்ஷன் எதுக்கு? உங்க அம்மா, அப்பா நாளைக்கு வரப் போகிறார்கள். நானும்தான் கூட இருக்கப் போகிறேனே? எல்லாம் நல்லபடியாக நடக்கும்.” சுஜாதாவுக்கு தைரியம் சொன்னான் ஹரி.
மறுநாள் சுஜாதாவின் பெற்றோர்கள் வந்துவிட்டார்கள். ஏர்போர்ட்லிருந்து ஹரி அவர்களை அழைத்துக் கொண்டு வந்தான். ஆபீஸில் வேலை அதிகமாக இருந்தது. சுஜாதாவுக்கு டெலிவரி ஆகும் முன் தான் விடுமுறை எடுத்துக் கொள்ளப் போவதாக முன் கூட்டியே ப்ரூஸிடம் சொல்லியிருந்தான். ப்ரூஸ¤ம் சரி என்று சொல்லிவிட்டான். பிரசவத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள்தான் இருந்தன. எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். இனி குழந்தை பிறக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி.
அன்று நள்ளிரவு தாண்டிய பிறகு இந்தியாவிலிருந்து போன் வந்தது. தந்தை ராஜாராமன் செய்திருப்பார் என்று நினைத்தான். ஆனால் அவர் இல்லை. “ஹலோ!” தூக்கம் கலையாத கண்களுடனேயே சொன்னான். பக்கத்தில் சுஜாதா ஆழந்த உறக்கத்தில் இருந்தாள்.
“ஹலோ! நான்தான் டாக்டர் அங்கிள் பேசுகிறேன்.” மறுமுனையிலிருந்து குரல் கேட்டது.
“ஹலோ அங்கிள்! என்ன விஷயம்? சுஜாதாவைப் பற்றியா.. அவள் நன்றாகத்தான் இருக்கிறாள்.” ஹரி சொன்னான்.
“சுஜாதாவைப் பற்றியில்லை. உங்க அப்பாவுக்கு இன்று காலையில் ஹார்ட் அட்டாக் வந்து விட்டது. தற்சமயம் ஐ.சி.யு.வில் இருக்கிறார்.”
“என்ன? அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்கா? இப்போ எப்படி இருக்கிறார்?” துக்கம் கலைந்துவிட்டது ஹரிக்கு. தலையைச் சுற்றுவது போல் இருந்தது.
“நீ பதற்றப் படவேண்டியது இல்லை. மைல்ட் ஸ்ட்ரோக்தான். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஹி ஈஸ் அவுட் ஆ·ப் டேஞ்சர்!”
“தாங்க்ஸ் அங்கள்! நீங்க இருப்பதால் கொஞ்சம் தைரியமாக இருக்கு. அப்பாவுடன் நான் பேச முடியுமா?”
“இப்போ மயக்க மருந்து கொடுத்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் நினைவு திரும்பும். நீ உன் தங்கை திவ்யாவுக்கு போன் செய்து விஷயத்தை தெரிவித்து விடு.”
“அப்படியே செய்கிறேன் அங்கிள்! இப்போ நள்ளிரவு இரண்டு மணி. கா¡லயில் போன் செய்து சொல்கிறேன். இப்போ இந்த நெரத்தில் எழுப்பினால் பதற்றமடைந்து விடுவாள். காலையில் சொல்கிறேன்.”
“ஆகட்டும். சற்று முன்னால்தான் உங்க சித்தி, சித்தப்பா வந்தார்கள். நானும் என் மனைவியும் கூட இருக்கிறோம். நீ கவலைப்பட வேண்டியது இல்லை. உன்னால் இப்போ கிளம்பி வர முடியுமா?”
யோசனையில் ஆழ்ந்தான் ஹரி. “இப்பொழுதா? இப்போ எப்படி முடியும் அங்கிள்? சுஜாதாவுக்கு இன்னும் இரண்டு நாட்களில் டெலிவரி. பக்கத்தில் நான் இல்லை என்றால் ரொம்ப பயந்து போய் விடுவாள். முயற்சி செய்கிறேன்.” என்ன செய்வதென்று ஹரிக்கு புரியவில்லை. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்ற விஷயம் அவன் மனதை கலவரப்படுத்தியது. தான் போய் அப்பாவை பார்க்க வேண்டும். ஆனால் சுஜாதாவால் தனியாக இருக்க முடியுமா? ஏற்கனவே ரொம்ப பயந்துகொண்டிருக்கிறாள். இப்போ என்ன செய்வது?
“அது இல்லை ஹரீ! நீ வந்தால் நன்றாக இருக்கும். உங்க அப்பாவுக்குக் கொஞ்சம் தைரியமாக இருக்கும்.”
“முயற்சி செய்கிறேன் அங்கிள்! உடனே முடியவில்லை என்றாலும் சுஜாதாவுக்கு டெலிவரி ஆன ஒரு வாரம் கழித்து கிளம்பி வருகிறேன். இல்லையென்றால் திவ்யாவை அனுப்பி வைக்கிறேன்.” ஹரிக்குக் குழப்பமாக இருந்தது.
“சரி. உன் சௌகரியத்தை பார்த்துக் கொண்டு வா. இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து கூப்பிடு. உங்க அப்பாவிடம் பேச முடியும். கவலைப்படாதே. நாங்க எல்லோரும் இருக்கிறோம்.”
“அதுதான் என் தைரியமும் அங்கள்! காலையில் கூப்பிடுகிறேன்.” போனை வைத்து விட்டான்.
அவன் பேசியது எதுவும் சுஜாதாவின் காதுகளில் விழவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். காலையில் எழுந்து கொண்ட பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தான். இப்பொழுது அவளை விட்டு விட்டு போவதற்கு சம்மதிக்கவே மாட்டாள். முதல் பிரசவத்தின் போதே ரொம்ப அரண்டு போய்விட்டாள். பிரசவ வலியைத் தாங்க முடியாமல் இன்னொரு குழந்தை வேண்டாம் என்றே நினைத்திருந்தாள்.
டாடிக்கு ஹார்ட் அட்டாக் வருவதாவது? தெம்பாகவே நடமாடிக் கொண்டிருந்தார். ரெகுலர் ஆக மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் செய்துகொள்வார். எல்லாம் சரியாக இருப்பதாக சமீபத்தில் டாக்டர் அங்கிள் சொன்னதாக நினைவு. யாரையும் சார்ந்திருக்காமல் தன் வேலைகளை கவனித்துக் கொள்ளும் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்கா! ஹரியால் நம்பவே முடியவில்லை. அப்பாவுக்கு எப்படி இருக்கிறதோ?
எல்லாமே ஒரே நேரத்தில் தான் வந்து சேரும்.
விடிந்ததும் இந்தியாவுக்கு போன் செய்து அப்பாவிடம் பேசினான். ராஜாராமனின் குரல் கிணற்றுக்குள்ளிலிருந்து வருவது போல் பலவீனமாக ஒலித்தது. கவலைப்பட வேண்டாம் என்றும், தைரியமாக இருக்கச் சொல்லியும் அப்பாவிடம் சொன்னான். சமயம் கிடைத்ததும் தான் கிளம்பி வருவதாக தெரிவித்தான். அதிகமாக பேச வேண்டாம் என்று டாக்டர் எச்சரித்ததால் ஹரி நிறுத்திக் கொண்டான். பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அப்பா நலமாக இருப்பதுதான் முக்கியம் என்று டாக்டரிடம் சொன்னான். உண்மையில் அப்பாவுக்கு தன்னுடைய பணம் தேவையில்லை என்று ஹரிக்குத் தெரியும். ராஜாராமன் தொலை நோக்குடன் பணம் சேமித்து வைத்திருப்பது அவனுக்குத் தெரியும். சித்திக்கு போன் செய்து பேசினான். கவலைப்பட வேண்டாம் என்றும், துணைக்கு தாங்கள் இருப்பதாகவும் அவர்கள் ஹரிக்கு தைரியம் சொன்னார்கள்.
அந்த போன் முடிந்ததும் திவ்யாவுக்கு போன் செய்தான். திவ்யா லாஸ் ஏன்ஜல்ஸில் இருக்கிறாள். அவளுடைய கணவன் ரவிதான் போனை எடுத்தான்.
“ரவீ! திவ்யா இருக்கிறாளா? எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கு. திவ்யாவிடம் சொல்லத்தான் …”
“அடடா! ஹார்ட் அட்டாக்கா? எப்போ வந்தது? இப்போ எப்படி இருக்கிறார்? நீ அவரிடம் பேசினாயா?” கேள்விக்கணைகளை தொடுத்தான்.
“நீ போனை ஸ்பீக்கரில் போட்டு திவ்யாவை கூப்பிடு. விவரமாக சொல்கிறேன்.” ஹரியின் குரல் பொறுமையற்று ஒலித்தது.
“அண்ணா! என்ன ஆச்சு?” திவ்யா லைனில் வந்தாள்.
ஹரி எல்லாவற்றையும் விவரமாக சொன்னான்.
“நீ எப்போ கிளம்புகிறாய் ஹரீ?” ரவி கேட்டான்.
“இல்லை ரவீ! என்னால் போக முடியாது. சுஜாதாவுக்கு இரண்டு நாட்களில் டெலிவரி. திவ்யாவை அனுப்பி வைக்க முடியுமா?” வேண்டுகோள் விடுத்தான்.
“திவ்யாவை அனுப்பி வைக்கணும் என்றால் …” மென்று முழுங்கினான் ரவி. “இருந்தாலும் மைல்ட் அட்டாக்தானே. போகட்டும். பிரசவம் ஆனதும் நீ கிளம்பிப் போகலாம் இல்லையா?” இலவசமாக அறிவுரையை வழங்கினான்.
“என் உத்தேசமும் அதுதான். ஆனால் அதற்கு முன்னால் திவ்யா போக முடிந்தால் …”
“அது இல்லை ஹரீ! சமீபகாலமாக எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடல் நலம் சரியாக இல்லை. முட்டி வலியால் அம்மாவால் நடமாடவே முடியவில்லை. அதோடு இன்னும் பத்து நாட்களில் மூத்தமகள் ச்ரேயாவின் அரங்கேற்றம் இருக்கு. பன்டீயின் ஸ்பெல்லிங் பி காம்பிடீஷன் அடுத்த வாரம் இருக்கு.” தங்களுடைய நிகழ்ச்சி நிரலை ஒப்புவித்தான் ரவி.
திவாயாவை அனுப்பி வைப்பதற்கு அவன் தயாராக இல்லை என்று புரிந்துவிட்டது.
“அண்ணா! எனக்கும் போகணும்னுதான் இருக்கு. அப்பாவிடம் முதலில் பேசி பார்க்கிறேன். இந்த விஷயம் கேட்டது முதல் எனக்கு கையும் காலும் ஓடவே இல்லை. அப்பாவிடம் பேசிய பிறகு மறுபடியும் உன்னைக் கூப்பிடுகிறேன்.” திவ்யா பேச்சை மாற்றினாள்.
சரி என்று சொல்லிவிட்டு போனை வைத்த பிறகு என்ன செய்வதென்று புரியாமல் சோபாவில் சரிந்தான் ஹரி. இதற்குள் சுஜாதா எழுந்து கொண்டு விட்டாள். ஹரி விஷயத்தைத் தெரிவித்தான்.
“நீ உடனே கிளம்பிப் போகணுமா ஹரீ? ஏற்கனவே இந்த பிரசவத்தை நினைத்து பயந்துகொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் சமாளிக்க முடியாது.”
“பதற்றப்படாதே. அப்பாவிடம் பேசினேன். ஹி ஈஸ் ஆல் ரைட்! ஹார்ட் அட்டாக் என்றதும் கொஞ்சம் பயந்து விட்டேன். அவ்வளவுதான். இருந்தாலும் டாக்டர் அங்கிள்தான் இருக்கிறாரே. கவலைப்பட வேண்டியது இல்லை. தேவைப்பட்டால் உனக்கு டெலிவரி ஆன பிறகு, நீ வீட்டில் நடமாட ஆரம்பித்து வேலைகளை பார்த்துக் கொள்ளும் தெம்பு வந்த பிறகு போய்க் கொள்கிறேன். டோன்ட் வர்றீ!” தன்னுடைய முடிவை சொல்லிவிட்டான் ஹரி.
மற்றொரு முறை இந்தியாவுக்கு போன் செய்தான். எல்லோரும் ராஜாராமனிடம் பேசினார்கள், ஹரியின் மாமியார், மாமனார் உள்பட.
இரண்டு நாட்கள் கழித்து …..
வயிற்றில் குழந்தை குறுக்கே திரும்பிவிட்டதால் சீரியஸ் ஆகிவிட்டது. உடனே சிசேரியன் செய்ய வேண்டிய நிலைமை. சுஜாதாவுக்கு பெண்குழந்தை பிறந்தது.
நினைத்தது போலவே திவ்யாவின் மகள் ச்ரேயாவின் அரங்கேற்றம் முடிந்தது. பன்டீக்கு ஸ்பெல்லிங் பி இறுதி போட்டியில் பத்தாவது இடம் கிடைத்தது. ரவியும், திவ்யாவும் அதை தங்களுடைய தோல்வியாக நினைத்தார்கள்.
சுஜாதாவின் உடம்பு தேறுவதற்கு ஒரு மாதம் மேலாகிவிட்டது. பிறந்த குழந்தைக்கு ஏதோ அலர்ஜியால் உடம்பு முழுவதும் தடிப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஹரியால் இந்தியாவுக்கு போக முடியவில்லை. அடிக்கடி போனில் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான். ராஜாராமனுக்கு ஹார்ட்டில் ஒரு வால்விற்கு ஸ்டன்டை பொருத்தினார்கள். தந்தையை அமெரிக்காவிற்கு அழைத்து வந்துவிடலாம் என்று ஹரி நினைத்தாலும் முடியவில்லை. இந்த நிலைமையில் பயணம் செய்வது நல்லது இல்லை என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். நோயாளி கேட்டுக் கொண்டதும், மருத்துவர் கொடுத்ததும் ஒன்றுதான் என்பது போல் ஆகிவிட்டது.
ஒரு வருடம் கழித்து……
ஒரு நாள் லாஸ் ஏன்ஜெல்ஸிலிருந்து திவ்யா ஹரிக்கு போன் செய்தாள். “அண்ணா! உனக்கு இந்த விஷயம் தெரியுமா? சித்தியிடம் போன் செய்து கேட்டால் உண்மைதான் என்றாள்.” திவ்யா அழுவது ஹரிக்குக் கேட்டது.
“ஆமாம். டாக்டர் அங்கிள் எனக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னார். டாடீயிடம் பேசுவோம் என்றால் லைன் கிடைக்கவில்லை. எங்க மாமனாரின் தம்பி போன் செய்து சொன்ன போது நான் நம்பவில்லை. இருந்தாலும் இப்போ எந்த குடி மூழ்கிவிட்டதாம்? எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்பாவிடம் ஒரு முறை பேசினால் தவிர எந்த விஷயமும் புரியாது.”
“என்னவென்று பேசுவேம்? எனக்கானால் எங்க மாமனார் மாமியார் முன்னால் தலை குனிவாக இருக்கு. கேட்கும் போதே எனக்கு உடம்பு கூசுகிறது.”
“என்ன செய்வது? என்னுடைய நிலைமையும் அதுதான். எங்க மாமனார் மாமியார் அப்பாவை கிண்டல் செய்து நக்கலாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்பாவின் முன்னால் வாயைத் திறக்கவே பயப்படும் இவர்களுக்கு முன்னால் இப்போ நாம் இளப்பமாகிவிட்டோம். இந்த வயதில் அப்பாவுக்கு புத்தி இப்படி போவானேன்?” ஹரியால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
“இதில் அப்பாவின் பங்கு இருக்கும்னு நான் நினைக்கவில்லை. வாடகைக்கு குடி வந்தவள் ஹார்ட் அட்டாக் வந்த போது , நாம் வராததைக் கவனித்துவிட்டு மெதுவாக அப்பாவை கைக்குள் போட்டுக் கொண்டிருப்பாள் என்பது என்னுடைய சந்தேகம். எப்படியும் உடல் நலம் சரியாக இல்லாத கிழவர்தானே, கண்ணை மூடிவிட்டால் வீட்டையும் நிலத்தையும் சுருட்டிக் கொண்டுவிடலாம் என்று திட்டம் போட்டிருப்பாளாய் இருக்கும்.” திவ்யா தன் மனதில் இருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினாள்.
“டாக்டர் அங்கிள்தான் அருகில் இருந்து இந்தக் கல்யாணத்தை நடத்தி வைத்தாராம். சித்திக்கு போன் செய்து கேட்ட போது இதைத்தான் சென்னாள். ‘உங்க அம்மா போய் ஏறத்தாழ இருபது வருடங்கள் ஆகிவிட்டது. ஒருநாளும் கல்யாணம் என்ற பேச்சையே எடுக்காத உங்க அப்பா இப்படிச் செய்தது எங்களுக்கும் வியப்பாக இருக்கு’ என்று சொன்னாள். அப்பாவிடம் என்னவென்று பேசுவோம்? என்னவென்று கேட்போம்? எனக்கானால் மனசே சரியாக இல்லை. நினைத்துப் பார்க்கும் போதே அருவருப்பாக இருக்கு. எல்லோருக்கும் முன்னால் நம் மானம் மரியாதை கப்பலேறிவிட்டது. மாமனார், மாமியார் முன்னால் என்னால் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இனிமேல் இந்தியாவுக்குப் போனால் எங்கே போய் தங்குவது? எல்லோரும் வெளியில் நன்றாக பேசினாலும் உள்ளுர நம்மைப் பற்றி, நம் அப்பாவைப் பற்றி என்ன நினைப்பாங்க? என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.” வேதனையுடன் சொன்னான் ஹரி.
அவர்கள் இருவரும் புது விதமான வருத்தத்தில் மூழ்கியிருந்தார்கள். அவர்களுடைய வருத்தத்திற்குக் காரணம் ராஜாராமனின் திருமணம். சொல்லாமல் கொள்ளாமல், குழந்தைகளிடம் பெயருக்காவது கலந்துகொள்ளாமல் திருமணம் செய்து கொண்டுவிட்டார்.
ஹரி, திவ்யா முதலில் போன் செய்து பேச நினைத்தார்கள். ஆனால் பக்கத்திலேயே இருந்த மாமனார், மாமியாரின் கிண்டல் பேச்சுக்கு, இளக்காரத்திற்கு பயந்து அந்த முயற்சியை கைவிட்டார்கள். அவர்களால் இந்த விஷயத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஹரி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தாய் இறந்து போய்விட்டாள். அப்பொழுது ராஜாராமனுக்கு வயது முப்பத்தைந்து. குழந்தைகளுக்காக மறுபடியும் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி எல்லோரும் வற்புறுத்திய போதும் ஒரு நாளும் அந்தப் பேச்சை எடுக்கவில்லை. தானே தந்தையும் தாயுமாக நின்று குழந்தைகள் இருவரையும் வளர்த்தார். இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்கள். வாலன்டியர் ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டு ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் சொல்லிக் கொடுத்து காலம் கழித்து வந்தார். இரண்டு முறை அமெரிக்காவுக்கும் வந்தார். அவருக்கு மறுபடியும் கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் இருப்பதாக யாருக்கும் சந்தேகம் கூட வரவில்லை. அப்படி இருக்கும் போது இன்று இப்படி…. ஹரியின் மனம் ஏனோ ஏற்றுக்கொள்ள மறுத்தது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. எந்த பழமொழி நினைவுக்கு வந்து என்ன பிரயோஜனம், நடக்க வேண்டியது நடந்த முடிந்து விட்ட பிறகு.
சில நாட்கள் கழித்து ….
ஒரு நாள் ஹரி ஆபீஸில் இருக்கும் போது ப்ரூஸ் வந்தான்.
“ஹரீ! யு காட் எ மெயில், பை மிஸ்டேக் தெ கெப்ட் இன் மை ·போல்டர். பை த வே, ஐ ·பர்காட் டு டெல் யு, மரீனா ஈஸ் எக்ஸ்பெக்டிங் எ பேபி இன் ·பைவ் மன்த்ஸ்!”
“ஓஹ் .. ஐ .. ஸீ! கங்கிராட்சுலேஷன்ஸ்!” என்று ஹரி வாழ்த்துகளை தெரிவித்தான். வேலை இருப்பதாக சொல்லிவிட்டு ப்ரூஸ் அங்கிருந்து சென்று விட்டான். கடிதம் யாரிடமிருந்து வந்திருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் ஹரி கவரை பிரித்தான். அவன் தந்தை ராஜாராமன் எழுதியிருந்தார்.
ஹரி படிக்க ஆரம்பித்தான்.
அன்புள்ள ஹரி மற்றும் திவ்யாவுக்கு,
நான்தான் உங்கள் டாடீ….. எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை.
ரொம்ப நாட்களாகவே உங்கள் முன்னால் என் மனதில் இருப்பதை வெளிப்படுத்தணும் என்று பலமுறை நினைத்திருந்தேன். போனில் பேசலாம் என்றாலும் நான் சொல்லப் போகும் விஷயங்களுக்கு உங்கள் கேள்விகள் குறுக்கே வரக்கூடும். என் மனதில் இருக்கும் தனிமை உங்களுக்குப் புரிய வாய்ப்பு இல்லை என்பதால்தான் அந்த முயற்சியை கைவிட்டேன். நான் செய்த காரியம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களிடம் கலந்துகொள்ளாமல் நானே இந்த முடிவை எடுத்துக் கொண்டேன். உலகத்தில் பல பேருக்கு என் முடிவு தவறாக தொன்றலாம். ஆனால் நான் செய்தது தவறு இல்லை என்பது என் திடமான நம்பிக்கை.
உங்க அம்மாவும் நானும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எல்லோரையும் எதிர்த்து நின்று வாழ்ந்து காட்டினோம். நீங்கள் இருவரும் பிறந்தீர்கள். உங்க அம்மாவின் மரணத்திற்கு பிறகு நான் பாதி மனிதனாகிவிட்டேன். ஆனால் உங்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு என் மீது இருந்தது. உங்களுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துத் தருவதற்காக என் வேதனையை விழுங்கிக் கொண்டேன். எந்தக் குறையும் இல்லாமல் உங்களை வளர்த்தேன் என்றுதான் நினைக்கிறேன். உங்களுடைய திருமணங்கள் முடிந்து விட்டன. இருவரும் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டீர்கள். உங்க இருவரையும் பார்த்து நான் ரொம்ப பெருமைப் பட்டுக் கொண்டேன். உங்களுக்காக இரண்டு முறை அமெரிக்காவுக்கு வந்தேன். உங்களுடைய வாழ்க்கை முறையைப் பார்த்தேன். ஒரு நிமிடம் கூட ஓய்வு இல்லாத உங்களுடைய வாழ்க்கையை பார்த்த பிறகு எதற்காக இந்த தவிப்பு என்று தோன்றியது. நான் உங்களுடன் இருக்கிறேன் என்ற நினைப்பைத் தவிர, எனக்கு துணையாக தனிமைதான எஞ்சியிருந்தது. என் வயதை ஒற்றவர்களுடன் பேசி பழக முடியாது. அப்படியே இருந்தாலும் ஒரு எல்லைக்குள்தான். உங்களிடம் இருக்கும் போது எல்லாம் சரியாக இருந்தாலும் மனதில் தனிமை படர்ந்திருந்தது. அது உங்களுக்கு தெரியாத வகையில் நடமாடிக் கொண்டிருந்தேன்.
அமெரிக்காவிலிருந்து வந்த பிறகு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. உங்களுடைய பிரச்னைகளால், தவிர்க்க முடியாத காரணங்களினால் உங்களால் வர முடியாமல் போய் விட்டது. உடல்நலம் குன்றியதை விட நீங்க இருவரும் வரவில்லையே என்ற வருத்தம்தான் அதிகமாக இருந்தது. வரமுடியாமல் போனதற்கு தகுந்த காரணங்கள் உங்களுக்கு இருக்கக் கூடும். நான் மறுக்கவில்லை. ஆனால் என்னுடைய நிலைமையை யோசித்துப் பார்த்தீங்களா? வாரத்திற்கு ஒரு முறை போன் செய்து, பணம் மட்டும் அனுப்பி விட்டால் எனக்கு சந்தோஷம் கிடைத்துவிடும் என்று நினைத்துவிட்டீர்களா?
ஒரு விதமாக சொல்லப் போனால் நீங்க என்னைப் பார்ப்பதற்காக வரவில்லையே என்ற வருத்தம்தான் என்னை தகித்துக் கொண்டிருந்தது. நான் உங்களை அன்பாகத்தானே வளர்த்தேன். என்னுடைய வளர்ப்பில் ஏதாவது குறை வைத்து விட்டேனோ என்ற உணர்வு என்னை கலங்கடித்து விட்டது. எனக்கு நீங்கள் இருவரும் இருக்கீங்க என்ற நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது.
எனக்கு அட்டாக் வந்து ஆறுமாதங்கள் கழிந்தும் நீங்கள் வரவில்லை. உடல்நலம்தான் சரியாகி விட்டதே. இனிமேல் வருவானேன் என்று நினைத்திருக்கக் கூடும். அவ்வளவு தூரம் பிரயாணம் செய்து நான் அங்கே வந்து தனிமையுடன் கழிப்பதைவிட இங்கயே இருப்பது நலம் என்று தோன்றியது. ஒரு வருடம் கழிந்து விட்டது. நீங்கள் இருவரும் வருவீர்கள் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. இநத வயதில் தனிமை என்னை வாட்டியது. எனக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. அந்த சமயத்தில்தான் லக்ஷ்மியின் அறிமுகம் ஏற்பட்டது. அவளுடைய கணவன் இறந்துபோய்விட்டான். டீச்சராக வேலை பார்த்துக் கொண்டு, மகனை வளர்த்துக் கொண்டு காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தாள்.
நான் தனியாக இருந்து கொண்டு சமைத்து சாப்பிடுகிறேன் என்று தெரிந்த பிறகு அவள் தினமும் குழம்போ கறியோ கொடுத்து அனுப்பிவந்தாள். சித்தியும் மற்றவர்களும் நான் ஆஸ்பத்திரியில் இருந்த போது வந்துவிட்டு போனார்கள். பிறகு யாருமே வரவில்லை. டாக்டர் அங்கிள் எனக்கு நிறைய உதவி செய்தார். ஒரு மாதம் கழித்து அவர்களுடைய மகளிடம் ஆஸ்ட்ரேலியாவுக்கு போய்விட்டார். நான் மறுபடியும் தனி நபர் ஆகி விட்டேன். என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமலேயே எனக்கு பணிவிடை செய்தாள் லக்ஷ்மி. முன்பின் தெரியாதவனுக்கு பணிவிடை செய்யணும் என்ற அவசியம் அந்த அம்மாளுக்கு இல்லை. நான் உங்க அம்மாவை எந்த அளவுக்கு நேசித்தேனோ, உங்களை எல்லாம் எப்படி வளர்த்தேனோ எல்லா விவரங்களையும் டாக்டர் அங்கிளிடமிருந்து தெரிந்து கொண்டாள் லக்ஷ்மி. என் குடும்பத்தின் மீது அவளுக்கு இருந்த அக்கறை தான் அவள் மீது எனக்கு ஏற்பட்ட மதிப்புக்குக் காரணம். லக்ஷ்மியின் கணவன் அவளை ரொம்ப துன்புறுத்தி வந்தானாம். ஒரு நாளும் அன்பாக பார்த்துக் கொண்டதில்லை என்று பேச்சு வாக்கில் லக்ஷ்மி சொன்னாள். எதுவாக இருந்தால் என்ன? லக்ஷ்மிக்கு என் மீது கௌரவம், எனக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயயமும் ஏற்பட்டன.
அதுவே கல்யாணத்திற்கு வழிவகுத்தது. உடல்நலம் குன்றியிருக்கும் இந்த நேரத்தில் திருமணம் செய்துகொண்டால் என்னுடைய தேவைகளுக்காக பண்ணிக்கொள்வதாக உலகத்தார் எண்ணக் கூடும் என்று முதலில் யோசித்தேன். ஒரு விதமாக சொல்லணும் என்றால் தேவையை விட எனக்காக ஒரு மனுஷி தவிக்கிறாள் என்ற எண்ணம்தான் நான் இந்த முடிவுக்கு வரக் காரணம். வேண்டுமென்றால் ஏதாவது முதியோர் இல்லத்தில் போய் சேர்ந்து கொள்ளலாம். அங்கே இருந்தாலும் அதே தனிமைதானே. இந்த வயதில் எனக்கு துணையாக ஒரு மனுஷி பக்கத்தில் இருக்கிறாள் என்ற நினைப்பு எனக்கு தெம்பாக இருந்தது.
இந்த வயதில் எனக்கு திருமணம் எதற்கு என்று நீங்கள் நினைக்கக் கூடும். எனக்கு ஒரு துணை தேவை. உங்களுக்கு நான் வேண்டும் என்ற எண்ணம் என்னை விட்டுப் போய்விட்டது. வளமான எதிர்காலத்தை பணயமாக வைத்து உங்களை எனக்காக இங்கே வரச் சொல்வதும் நியாயம் இல்லை. வயதான காலத்தில் ஒரு துணையில்லாமல் இருப்பது எவ்வளவு கஷ்டமோ நாளடைவில் புரிந்துகொண்டேன்.
முதலில் என் மனதில் இருப்பதை உங்களிடம் சோல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் டாக்டர் அங்கிள்தான் வேண்டாம் என்று தடுத்துவிட்டார். என் முடிவை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்றும், அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் லக்ஷ்மியைத் திருமணம் செய்துக்கொள்ளச் சொன்னார். எதிர்பார்க்காத விதமாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
உடனே உங்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். என் திருமணச் செய்தி தெரிந்ததும் நீங்கள் இருவரும் டாக்டர் அங்கிளிடம் என்னை வேறுப்பது போல் பேசியது தெரிந்தது. உன் மாமனார் நேரில் வந்து நானேதோ மாபாதகம் செய்துவிட்டாற்போல் தூற்றிவிட்டு போனார்.
திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டுமா? சேர்ந்து இருந்தால் போறாதா என்று நீ கேட்கலாம். எனக்கும் லக்ஷ்மிக்கும் சுமுதாயத்தின் கண்ணோட்டத்தில் நல்லது என்றுதான் திருமணம் செய்துகொண்டேன். நீங்க அருவெறுப்பு கொள்ளும் அளவுக்கு வேண்டாத காரியத்தை எதையும் நான் செய்து விடவில்லை. இருந்தாலும் ஆவேசத்தில் இருக்கும் உங்களுக்கு என் மனம் புரியாது என்றுதான் உங்களிடம் பேசுவதற்கும் நான் முயற்சி செய்யவில்லை. நீங்கள் என்னை புரிந்து கொள்ளவில்லையே எனப்துதான் என் வருத்தம்.
ஹரீ! உனக்கு நினைவு இருக்கிறதா. உன் மேலதிகாரியின் திருமணத்திற்கு என்னை அழைத்துப் போனாய். பெயர் ப்ரூஸ் என்று நினைக்கிறேன். சரியாக நினைவு இல்லை. டைவோர்ஸ் ஆன பிறகு தனிமையை தாங்க முடியாமல் அவன் பைத்தியமாக தவித்துக் கொண்டிருந்தான் என்றும், மறுபடியும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நீ தான் அவனிடம் சொன்னதாகவும் நீ என்னிடம் தெரிவித்தாய். அன்று எனக்கு அந்தச் சடங்கு, அந்த விழா எல்லாமே குழப்பமாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. என்ன கல்ச்சர் இது என்று கூட நினைத்துக் கொண்டேன். ஆனால் நானும் ப்ரூஸைப் போலவே இன்னொரு கல்யாணம் செய்துக் கொள்வேன் என்று அன்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
ப்ரூஸின் திருமணத்தை ஏற்றுக் கொண்ட நீ என் விஷயத்திற்கு வரும் போது இவ்வளவு கடினமாக மாறியது ஏன் என்று எனக்குப் புரியவே இல்லை.
அமெரிக்காவில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும் உன்னைப் பொறுத்த வரையில் அதாவது உனக்கு வலி ஏற்படாத வரையில் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் உனக்கு நியாயமாக தோன்றுகிறது. ஆனால் உன்னைச் சேர்ந்த மனிதர்களிடம் உன்னால் அந்த நியாயங்களை பொருத்திப் பார்க்க முடியவில்லை. இது தான் எனக்கு புரியாத, பதில் கிடைக்காத கேள்வி.
ஒரு தந்தையாக என் கடமைகளை நான் முடித்துவிட்டேன். எஞ்சிய வாழ்க்கையை எனக்காக வாழும் உரிமை எனக்கு இருக்கிறது. என் முடிவுகள், ஒப்பந்தங்கள், நட்புகள் எதுவாக இருந்தாலும் என்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரம் எனக்கு இருப்பதாக கருதுகிறேன்.
பார்த்துக் கொண்டாலும் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் பெற்றோர்கள் குழந்தைகளை நேசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஏன் என்றால் குழந்தைகள் அவர்களின் பிரதிபிம்பங்கள்.
இப்பொழுது என் மனம் இலேசாகிவிட்டது. காரணம் இன்னது என்று சொல்ல முடியவில்லை.
உங்களுக்காக இந்த வீட்டின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.
அப்பா
ஹரி ஒரு முறை பாரமாக கண்களை மூடிக் கொண்டான். சுயவிளக்கம் தரும் கடிதம் போல் தோன்றியது. ஏனோ தந்தையின் முடிவை ஏற்றுக் கொள்ள அவன் மனம் மறுத்துவிட்டது.

முற்றும்

தெலுங்கில்: Sai Brahmanandam Gorthi
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


email id tkgowri@gmail.com

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்