உனக்கும் எனக்குமான உரையாடல்

This entry is part [part not set] of 37 in the series 20071025_Issue

கே.பாலமுருகன்



அன்பு நண்பன் சுந்தருக்கு,

இந்தக் கடிதத்தை வெறும் கடிதமாகவே பாவித்துக் கொள்ளவும். நேரடியாகவே பேசியிருக்கக்கூடிய விஷயங்களை இப்படிக் கடிதம் மூலம் தெரிவிப்பது உனக்கு அசௌகரிகத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள். அல்லது என் சுயம் குறித்தோ அணுகுமுறை குறித்தோ உனக்கு என் மீதான மரியாதை குறைந்திருந்தால், நானும் உன்னை மன்னித்துக் கொள்கிறேன். வழக்காமான கடிதத் தொடக்கம்: நான் இங்கு நலம், நீயும் அங்கு நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். இந்த மாதிரி வசனங்கள் மிகவும் செயற்கையாகத் தெரிந்தாலும் கடித வம்சவழியத்தை நான் மாற்ற விரும்பவில்லை.
இந்தத் திடீர் கடிதம், அதுவும் மோட்டாரில் கிளம்பி வந்திருந்தால் 10 நிமிடத்திலேயே உன் இல்லம் வந்து சேர்ந்திருக்கக்கூடிய என்னால் எழுதப்பட்ட இந்தக் கடிதம், உன் வீட்டின் தபால் பெட்டியின் சிறிய வாயில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மறுகணமே உனக்குச் சிறிதளவாவது ஆச்சர்யம் தோன்றியிருக்கலாம். அதைப் பற்றி எந்தவித அலட்டலும் இல்லாமல், நேரடியாகவே கடித நோக்கத்திற்கு வந்துவிடுகிறேன்.
அன்மையில் நடந்த குறும்படம் போட்டியில் இருவரும் வெவ்வேரு குறும்படத்தைத் தனி தனியாக இயக்கிப் போட்டிக்காக அனுப்பியிருந்தோம். இந்தக் குறும் படம் போட்டியைப் பற்றி நவீன் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. முதலில் உன்னுடன் இணைந்துதான் கால மாற்றம் என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது. நானும் அதற்கு இணங்கியிருந்தேன். கால மாற்றம் என்ற தலைப்பில்தான் குறும்படத்தின் கரு அமைய வேண்டுமென்றும் மூன்று காலங்களை நுணுக்கமாகப் பிரித்துக் காட்டுவதுதான் குறும்படப் போட்டியின் விதிமுறை என்றும் நீ கூறியதன் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
அதன்படி 1930-1960 மற்றும் தற்போதைய காலம் என்று மூன்று காலங்களை வகைப்பிரித்து அந்தந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வாழ்ந்த மனிதர்களின் தோற்றம், பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை என்று ஓரிரு தடவை சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட்டது. அன்றைய இரவு அதே போல கலந்துரையாடலுக்குப் பிறகு உன்னுடன் இருந்துவிட்டு வீட்டிற்குச் சென்றவுடன்தான் மனதில் ஒருவிதமான அழுத்தம் இருந்து கொண்டிருந்ததை உணர்ந்து கொண்டேன்.
சினிமா இயக்கம் குறித்த அல்லது தரமான சினிமா பார்வை குறித்த பிரக்ஞை எனக்கு அவ்வளவாக இல்லை என்று நீ கருதியிருக்கலாம். அதனால்தான் நீ எப்பொழுதும் நேரடியாக என்னுடன் சினிமா அல்லது குறும்படம் இயக்கத்தைக் குறித்துப் பேசியதில்லை. ஒப்புக்காவது நானே வந்து

இனைந்து கொண்ட சமயங்கள்தான் அதிகம். இதுவே எனக்குள் ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திவிடும் என்று நீ சந்தேகத்திருக்கலாம். அதற்கு நான் பொறுப்பு கிடையாது.
பலவிதமான மனப் போராட்டங்களுக்குப் பிறகு நானே தனியாக ஒரு குறும்படம் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இது எனது சுயத்தை அடையாளப்படுத்தும் ஒரு பாங்காகத்தான் நினைக்கிறேன். குறும்படத்தைப் போட்டிக்காக இயக்க வேண்டும் என்றும் அதன் தலைப்பு கால மாற்றம் என்றும் மூன்று காலங்களை மையமாகக் கொண்டுதான் குறும்படத்தின் கரு அமைந்திருக்க வேண்டும் என்றும் நான் உன்னிடமிருந்துதான் தெரிந்து கொண்டேன். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவையனைத்தும் வெறும் தகவகல்கள் மட்டுமே. சித்தம் இருந்திருந்தால் யார் வேண்டுமென்றாலும் இந்தத் தகவலை எனக்குக் கூறியிருக்கலாம்தான். அதில் ஆச்சர்யபடுவதற்கோ சஞ்சலப்பட்டுக் கொள்வதற்கோ எதுவுமே இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
அதன் பிறகு உன்னிடம் முறையாகத் தெரிவிக்காமல் நான் விலகிக் கொண்டு வேறு ஒரு குறும்பட இயக்கத்தில் தீவிரமானது உன்னை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். காரணம் நீயும் ஒரு கலைஞன்தானே. கலை பார்வை எல்லாம் மனிதனுக்குள்ளும் இருக்கும் என்பதும் அது வெளிப்படும் காலமும் அளவும்தான் வித்தியாசப்பட்டுப் போயிருக்கும் என்பதையும் நீ அறிந்திருப்பாய் என்று நம்புகிறேன். என்னுடைய கலை பார்வை விரிவடைந்து கொள்வதற்கு நீ தூண்டு கோளாக இருந்திருக்கலாம். தயவு செய்து நீ இதைக் கருத்தில் கொள்ள வேண்டும், நீ வெறும் தூண்டுகோளாக மட்டும்தான் இருந்திருக்கலாம். அந்தத் தூண்டுகோள்தனத்திற்கு வேண்டிய அனைத்து மரியாதைகளையும் நன்றி உணர்வுகளையும் நான் உனக்காக என்றுமே மனதில் சேமித்து வைத்திருக்கிறேன்.
அதற்காக உனக்குப் பின்புதான் நான் கலையைப் பற்றியும் இலக்கியம் பற்றியும் விரிவாகத் தெரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறேன் ஆதலால் உன்னிடமிருந்து நான் உன் கலை அறிவைச் சுரண்டியிருக்கிறேன் என்ற அபத்தமான சிந்தனை உன்னிடம் தோன்றியிருக்காது என்று நம்புகிறேன். நீ கலை உணர்வதற்குரியது அதை யாரும் வலியுறுத்த முடியாது. அல்லது பிறரிடமிருந்து அபக்கரித்துக் கொண்டு பெருமையாகப் பிதற்றிக் கொள்ள முடியாது என்பதை நான் உனக்கு வலியுறுத்த விரும்பவில்லை. காரணம் நீயும் கலைஞன்தான்.
அன்று நான் நண்பன் நவீனிடமிருந்து அதை எதிர்பார்க்கவில்லைதான். உன்னுடைய சுயப் படைப்பை நான் திருடி படம் பண்ணிவிட்டேன் என்றும் நான் ஒரு மிகப் பெரிய அறிவு சுரண்டல் செய்திருக்கிறேன் என்றும் நீ அவனிடம் கூறிக் குறுமையான சிந்தனையுடன் அலட்டியிருக்கிறாய். உனக்குச் சரியாகப் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். தொடக்கத்தில் நீ குறும் படத்தையொட்டி பேசிய விஷயங்கள் அந்தப் போட்டிக்கான விதிமுறைகளாகத்தான் நான் எடுத்துக் கொண்டேனே ஒழிய உன் கருத்துகளை நான் திருடிக் கொள்ளவில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.
அன்றிலிருந்துதான் உன் குறித்து என் மனதில் தாழ்வான சில எண்ணங்கள் எழுந்து கொண்டன. இனி உன்னுடன் நான் இலக்கியம் பேசப் போவதில்லை, உயிர்மையில் வெளிவரும் சிறுகதைகள் பற்றியும் பேசிக் கொள்ள போவதில்லை. உலகத் தரம் வாய்ந்த சினிமாவின் நுட்பம் குறித்தும் உரையாடிக் கொள்ள போவதில்லை. நமக்குள் இனி இதைப் பற்றிய சம்பாஷனைகள் வேண்டாம். நீயும் நானும் நல்ல நண்பர்கள், அந்த உறவை நாமே நாசப்படுத்திக் கொள்ள வேண்டாம். இனி உன்னை நான் எங்காவது சந்தித்துக் கொண்டால், உன் அம்மாவின் உடல் நலம் குறித்துப் பேசிக் கொள்ளலாம், உன் தங்கை புதியதாக ஒரு தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருக்கிறாள், அதைப் பற்றியும் பேசிக் கொள்ளலாம். மீதம் இருந்தால், நம் வேலையைப் பற்றியும்கூட உரையாடிக் கொள்ளலாம். அத்துடன் நம் உரையாடல் முடிவடைந்து கொள்வதே சிறப்பு என்று நினைக்கிறேன்.
இந்த முடிவு குறித்து உனக்கு மனக் கஸ்டம் ஏதும் நிகழ்ந்திருக்காது என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை நீ ஆழமாக உணர வேண்டும். அறிவையும் சேர்த்துதான் சொல்கிறேன். இனி மீண்டும் சந்திக்கும்வரை மோட்டாரிலிருந்து கிளம்பி வந்திருந்தால் 10 நிமிடத்திலேயே உன் வீட்டு வாசலை வந்தடைந்துவிடக்கூடிய சாத்தியங்கள் நிரம்பிய கணேசன்.

இப்படிக்கு,
உனக்கும் எனக்குமான உரையாடலை முடிவு செய்த நண்பன்
ஆர்.கணேசன்.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்