This entry is in the series 20100815_Issue

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ



இழுத்தறையப்பட்ட
அம்மூடிய கதவறைக்குள்ளே
காற்றோடு உன்னையும் சேர்த்து
மூன்றாமவனாய் மறைந்துள்ளது அது
அவ்வறைக்குட்பட்ட நீர்ம திண்ம
வஸ்த்துக்கள் ஏதாவதொன்றில்
வேவு பார்த்துக் கிடந்திருக்கலாம்
அல்லது இறுக உன் சிரம் பற்றிக்கிடக்கும்
கறு மயிர்களோடொன்றாய்
மறைந்து நில்லாடிக் கிடக்கலாம்
உன் மார்பு நீவும்
அவ்வுயர் ரக மாலையின்
அடிப்பாகம் தொட்டு அண்டிக் கிடக்கலாம்
இழுத்திழுக்கும் உன் நாசி வழியிலான
உட்காற்றோடு உள் நுழைந்து
நெளிந்து குழையும் உன்
வார்த்தைப் பிரயோகங்கள் வழியே
தெறித்தோடி தரை தட்டிக்கிடக்கலாம்
இழுத்திறுக்கும் உன் கீழாடை நாடா பற்றி
உன் தொடை தழுவியபடியோ
அல்லது உனை இயக்கியபடியிருக்கும்
உன் ஆன்மாவின் மற்றோர் பகுதியாகவோ
உன் நலன் பார்த்துக்கிடக்கலாம்
அப்படியோர் வஸ்து எதுவென்றால்
நீ கடவுளென்பாய்
அதை என் காதலென்பேன் நான்.

Series Navigation