முள்பாதை 59

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

கிருஷ்ணன் ஒரு அடி முன்னால் வைத்து அம்மாவின் கையை பலமாக பற்றிக் கொண்டான். “மாமி! மீனாவின் உடல் மீது இன்னும் ஒரு அடி விழுந்தால் கூட மரியாதையாக இருக்காது.”
“வாயை மூடு!” அம்மா அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டாள். விரலை நீட்டி வாசலை காண்பித்துக் கொண்டே “போய்விடு. உயிர் மீது ஆசை இருந்தால், என் வேலைக்காரர்கள் உன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முன் இங்கிருந்து போய்விடு” என்று கத்தினாள்.
“போகிறேன். போகும் முன் என் மனைவி மீனாவை அழைத்துக் கொண்டு போகிறேன். மீனா! வா போகலாம்.” கிருஷ்ணன் என் பக்கம் திரும்பினான்.
“மனைவி! அப்படிச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? தாலி கட்டிவிட்டாய் என்பதால் கணவன் ஆகிவிட்டதாக பெருமைபட்டுக் கொள்ளாதே. பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பாவியான என் மகளை ஏமாற்றி வலுக்கட்டாயமாகக் கல்யாணம் செய்து கொண்டாய் என்று உன்மீது கேஸ் போடுவேன். உன்னை ஜெயிலுக்கு அனுப்பி திண்டாட வைக்கவில்லை என்றால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன். கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் என் வீட்டுப் படியேறி வந்திருக்கிறாயே? உன்னைப் போன்றவர்களுக்கு வெட்கம் மானம் இருந்தால்தானே?”
“கிருஷ்ணவேணி!” அப்பா அம்மாவை சமாதானப்படுத்த முயன்றார். “நடந்தது நடந்துவிட்டது. இத்தனை பேருக்கு முன்னால் நாமும் அவசரப்பட்டால்?”
அப்பாவின் வார்த்தைகள் இன்னும் முடியக்கூட இல்லை. அம்மா அவர் பக்கம் திரும்பினாள். அம்மாவின் முகத்தில் மாறுதல் தென்பட்டது. திடீரென்று ஏதோ யோசனை வந்தவள் போல் அப்பாவையும், கிருஷ்ணனையும் மாறி மாறி பார்த்தாள்.
“ஓஹோ! அதுதானா விஷயம்? இதெல்லாம் தங்களுடைய ஏற்பாடுதானா? திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு இந்த நாடகத்தை நடத்திய சூத்ரதாரி தாங்கள்தானா? மேலும் எதுவும் தெரியாதது போல் நடிக்கிறீங்களே? மகளைக் காணவில்லையே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தால், அவள் எங்கே போனாளோ? என்ன செய்கிறாளோ தெரிந்தும்கூட எதுவும் தெரியாதது போல் வேஷம் போடுறீங்களா?”
“கிருஷ்ணவேணி!” அப்பா குழப்பமாக பார்த்தார்.
ஒரு கையால் என்னை அழுத்தமாக பிடித்துக் கொண்ட அம்மா இரண்டாவது கையால் அப்பாவின் ஷர்ட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். “சொல்லுங்கள். எனக்குத் தெரியாமல் மகளை இந்தப் போக்கத்தவனுக்குக் கட்டிக் கொடுப்பீங்களா? தொடக்கத்திலிருந்தே நீங்க உங்க தங்கைக்கு என் வீட்டை கொள்ளையடித்து தாரை வார்க்கணும்னு பார்த்தீங்க. உங்கள் ஆட்டத்தை நான் நடக்க விடவில்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த விதமாகப் பழி வாங்கி விட்டீர்களா? நீங்களும் ஒரு தந்தைதானா?”
“மாமி! மாமாவுக்கு எதுவும் தெரியாது. இதில் அவருடைய பங்கு எதுவும் இல்லை.” கிருஷ்ணன் சொன்னான்.
“என்னங்க? உண்மையிலேயே உங்களுக்கு எதுவும் தெரியாதா? நீங்க சொல்லாமலேயே அவன் இன்னாரென்று மீனாவுக்கு எப்படி தெரிந்தது? உங்களுடைய தூண்டுதல் இல்லாமலேயே அவள் இவ்வளவு தூரத்திற்குத் துணிந்தாளா?”
“கிருஷ்ணவேணி!” முதுகில் கத்தி குத்து வாங்கியது போல் பார்த்தார் அப்பா.
அம்மாவுக்கு திடீரென்று அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. அழுதுகொண்டே சொன்னாள். “உங்களுக்கு என்மீது பகையைச் சாதிக்க இதைவிட வேறுவழி தெரியவில்லையா? இந்த எண்ணம் ஏற்கனவே உங்கள் மனதில் இருந்தால் என்னிடம் ஏன் சொல்லவில்லை? என்னை இப்படி அவமானப்படுத்துவதில் உங்களுக்கு என்ன லாபம்? அவளைத் தெருவில் போகிறவனுக்குக் கொடுத்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு வேதனை இருந்திருக்காது. ஆனால் இந்தத் திமிர்ப் பிடித்தவனுக்கு, கிள்ளுக்கீரையாக கூட என்னை மதிக்காதவனுக்கு…”
அம்மா திடீரென்று என்னையும் அப்பாவையும் விட்டுவிட்டு கையை உயர்த்தியபடி கிருஷ்ணனை நோக்கிப் போனாள். “கோழைப் பயலே! நிஜமாகவே நீ ஒரு ஆண்மகனாக இருந்தால் என்னிடம் தைரியமாக வந்து சொல்லியிருப்பாய். இப்படி திருட்டுத்தனமாக ஒருநாளும் நடந்து கொண்டு இருக்க மாட்டாய்.”
அம்மாவின் கை கிருஷ்ணன் கன்னத்தில் விழுந்திருக்கும். ஆனால் கிருஷ்ணன் மின்னல் வேகத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு பின்னால் நகர்ந்து கொண்டான். அம்மா நிலை தவறி கால்கள் தள்ளாட தரையில் குப்புற விழுந்தாள். அப்பா சட்டென்று அருகில் சென்றார்.
கீழே விழுந்த அம்மா உடனே எழுந்து கொள்ளவில்லை. தலையால் தரையில் முட்டிக் கொண்டே “எல்லாமே பொய்!” என்று கத்தத் தொடங்கினாள். அந்த கத்தல் அடுத்த வினாடி “நான் நம்பமாட்டேன். நம்பமாட்டேன்” என்று தீனமான அழுகையாக மாறியது.
அப்பா “கிருஷ்ணவேனி!” என்று பதற்றத்துடன் அழைத்துக் கொண்டே தோள்களைப் பற்றி எழுப்ப முயன்றார். அம்மாவின் உடல் விரைப்பாக மாறியது. கண்கள் அகலமாக விரித்து திரும்ப இமைகள் மூடிக் கொண்டன. வாயிலிருந்து நுரை வர ஆரம்பித்தது. அப்பா சட்டென்று சாவிக்கொத்தை எடுத்து அம்மாவின் கையில் வைத்தார். எனக்குப் புரிந்துவிட்டது. ரொம்ப நாட்கள் கழித்து அம்மாவுக்கு மறுபடியும் ·பிட்ஸ் வந்து விட்டது.
ஏற்கனவே அங்கே கும்பலாக நின்று கொண்டிருந்த மக்கள் “அய்யோ… அய்யோ..” என்றபடி நெருங்கி வந்தார்கள். அப்படி வந்தவர்களில் எங்கள் குடும்ப டாக்டரும் இருந்தார். எல்லோரையும் விலக்கிக் கொண்டு முன்னால் வந்த டாக்டர் அம்மாவின் நாடியை பரிசோதித்துப் பார்த்தார். பிறகு “எல்லோரும் கொஞ்சம் விலகி நில்லுங்கள் ப்ளீஸ்” என்றார்.
சித்தப்பாவும், சித்தியும் மன்னிப்பு கேட்டபடி கும்பலை விலக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பா அம்மாவைத் தூக்க முயன்றார். பக்கத்திலேயே இருந்த சாரதி உடனே உதவிக்கு வந்தான். அப்பா, சாரதி, டாக்டர் மூன்று பேருமாக சேர்ந்து அம்மாவை மாடிக்குக் கொண்டு போனார்கள்.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஹாலில் மக்கள் கூட்டம் குறைந்துவிட்டது. டாக்டர் வேகமாகப் படியிறங்கி வந்து வாசலுக்குச் சென்றார். சித்தியும், சித்தப்பாவும் எல்லோரிடமும் என்ன சொன்னார்களோ தெரியாது. வெளியே கார்கள் கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.
நானும், கிருஷ்ணனும் ஹாலில் தனியாக நின்று கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து ராஜேஸ்வரி எங்களை நோக்கி ஓடிவந்தாள். கிருஷ்ணனைப் பார்த்ததும் “அண்ணா!” என்று நெருங்கி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“இத்தனை நேரம் எங்கே இருந்தாய்? கண்ணில் படவே இல்லையே?” வலிந்த சிரிப்புடன் கிருஷ்ணன் கேட்டான். ராஜி கிருஷ்ணனை விட்டு விலகி நின்றாள். எங்க இருவரையும் அப்பொழுதுதான் சரியாக கவனித்தது போல் வியப்புடன் பார்த்தாள்.
“இதென்ன? அண்ணா! நீ… நீ…” என்று தடுமாறினாள்.
“ராஜி! மீனாவை நான் திருமணம் செய்து கொண்டு விட்டேன்.” அந்த முறுவலில் சற்று முன் அம்மாவால் ஏற்பட்ட அவமானத்தின் பாதிப்பு லேசாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
“அண்ணா! இது எப்படி சாத்தியமாயிற்று?”
“சாத்தியம் ஆவது போல் செய்தாள் உங்க அண்ணி.”
ராஜி குழப்பமாக பார்த்தாள். “மாமா நான் தங்கிருக்கும் அறைக்கு வந்து கிருஷ்ணன் வந்திருக்கிறான். கீழே இருக்கிறான் என்று சொன்னார். நான் வேறு விதமாக நினைத்துக் கொண்டேன்.”
அதற்குள் டாக்டர் வேகமாக எங்கள் முன்னாலிருந்து மாடிக்கு போனதால் எங்கள் உரையாடல் நின்றுவிட்டது. எனக்கும் மாடிக்கு போய் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் தைரியம் போறவில்லை.
டாக்டர் மாடிக்குப் போன பத்து நிமிடங்கள் கழித்து அப்பா வேகமாகக் கீழே வந்தார். “ராஜி! டாக்டருக்கு வெந்நீர் வேண்டுமாம். சீக்கிரமாகக் கொண்டு வருகிறாயா? திருநாகம் மாமி மாடியில் இருக்கிறாள்” என்றார்.
“இதோ கொண்டு வருகிறேன்” என்றபடி ராஜி சமையலறை பக்கம் விரைந்தாள். அப்பா எங்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் மறுபடியும் மாடிக்குப் போனார்.
ராஜேஸ்வரி பாத்திரத்தில் வெந்நீரை எடுத்துக் கொண்டு மாடிக்குப் போனாள். வெளியிலிருந்து வந்த சித்தி, சித்தப்பா பதற்றத்துடன் மாடிக்குப் போனார்கள். அவர்களுடன் உள்ளே வந்த ஸ்வீட்டீ என்னிடம் வந்து “அக்கா!” என்று ஏதோ சொல்லப் போனாள்.
“ஸ்வீட்டீ! இங்கே வா” என்று சித்தி கத்தினாள்.
தாயின் கத்தலைக் கேட்டதும் ஸ்வீட்டீ மிரண்டு போனவளாய் என்னிடமிருந்து விலகினாள். சித்தி என்னை புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள்.
ஏறத்தாழ ஒருமணி நேரம் கழிந்தது. கிருஷ்ணனும், நானும் புதுமண தம்பதிகளாக வீட்டுக்கு வந்திருக்கிறோம். எங்களை உட்காரச் சொல்லி கூட யாரும் சொல்லவில்லை. இருவரும் அப்படியே நின்று கொண்டிருந்தோம். கிருஷ்ணன் எனக்காக இந்த அவமானத்தை விழுங்கிக் கொண்டான். மனதிலேயே அவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
“எத்தனை நேரம்தான் நின்று கொண்டு இருப்பாய்? உட்கார்ந்துகொள்” என்றான் கிருஷ்ணன். மறுப்பதுபோல் தலையை அசைத்தேன்.
ரொம்ப நேரம் கழித்து டாக்டரும், அவருக்குப் பின்னால் அப்பாவும் கீழே வந்தார்கள்.
“டாக்டர்!”
டாக்டர் என் அருகில் வந்தார். “அம்மாவுக்கு எப்படி இருக்கு என்றுதானே கேட்கிறாய்? அம்மாவுக்குப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த அதிர்ச்சியில் அவளுக்கு மூளை கலங்கிபப் போனாலும் போகலாம். நீ செய்த காரியம் கொஞ்சம்கூட நன்றாக இல்லை. மீனா! எந்தப் பெண்ணும் தன் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ளக் கூடாதே அந்த விதமாக நடந்து கொண்டு இருக்கிறாய். உன் திருமண விஷயத்தில் உங்க அம்மா எவ்வளவு கனவுகளை வைத்திருந்தாளோ உனக்குத் தெரியாதது இல்லை. உன் மனதில் வேறு எண்ணம் இருந்தால் முன்னாடியே சொல்லியிருக்கணும். உன் கோழைத்தனம் காரணமாக இன்று உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு கெட்ட பெயர் வந்து விட்டதோ நீயே பார். நீ செய்த இந்தக் காரியம் எங்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.” சொல்லிவிட்டு போய்விட்டார். டாக்டர் எங்கள் குடும்ப நண்பர். அப்பாவிடம் இருக்கும் உரிமை அவரிடமும் எனக்கு இருந்தது. அவர் இப்படிச் சொன்னதும் என் கண்களில் நீர் நிறைந்தது. உதட்டைக் கடித்தக் கொண்டு கண்ணீர் வெளியேறாமல் கட்டுப்படுத்தினேன்.
அப்பா டாக்டரை வழியனுப்பி விட்டு வந்தார். எங்களைப் பார்க்காதது போல் மாடிக்கு போய்க் கொண்டிருந்தார்.
“மாமா!” கிருஷ்ணன் பின்னாலிருந்து அழைத்தான். அப்பா அதே இடத்தில் நின்றார். கிருஷணன் அப்பாவின் அருகில் சென்று மென்மையான குரலில் “மாமா! என்னால் ஏதாவது தவறு நடந்திருந்தால் மன்னித்துவிடுங்கள்” என்றான். அப்பா பின்னால் திரும்பினார். “கிருஷ்ணா! இதில் மன்னிப்பதற்கோ, குறை சொல்லவோ என்ன இருக்கு? இதற்கெல்லாம் காரணம் நான்தான். மீனாவை அவளுடைய அம்மாவுக்குத் தெரியாமல் மெலட்டூருக்கு அனுப்பி வைத்தது என்னுடைய தவறு. அப்படியே அனுப்பி வைத்தாலும் அவள் உன் பக்கம் ஈர்க்கப் படுகிறாள் என்ற சந்தேகம் வந்ததும் உன்னை அழைத்து “தம்பி! இது நடக்காத காரியம்” என்று உன்னை எச்சரிக்காமல் இருந்தது அதைவிட பெரிய தவறு. ஆனால் விஷயம் இவ்வளவு தூரத்திற்குப் போகும் என்றும், மீனாவிடம் இவ்வளவு துணிச்சல் இருக்கும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை. இப்படி நடக்கக் கூடும் என்று கொஞ்சமாவது சந்தேகம் இருந்திருந்தால் முன்கூட்டியே ஜாக்கிரதையாக இருந்திருப்பேன். இதற்கெல்லாம் என்னுடைய சப்போர்ட்தான் காரணம் என்று மாமியின் மனதில் பதிந்துவிட்ட தவறான அபிப்பிராயத்தை இனி கடவுளே வந்தால்கூட மாற்ற முடியாது. என் மகளால் எனக்கு ஏற்பட்ட நன்மை இது.” கிருஷ்ணன் தோளில் கையைப் பதித்துவிட்டு அப்பா மேலும் சொன்னார். “நடந்தது நடந்துவிட்டது. மீனா இன்னும் சில நாட்களுக்கு மாமியின் கண்ணில் படாமல் இருப்பது நல்லது என்று டாக்டர் எச்சரித்து இருக்கிறார். நீங்க இருவரும் எதைப் பார்த்து பரஸ்பரம் ஈர்க்கப் பட்டீர்களோ அந்த ஈர்ப்பு உங்கள் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்கணும் என்று ஆசீர்வாதம் செய்கிறேன். உங்க மாமி ரொம்ப பிடிவாதக்காரி. இதுவே நம்முடைய கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். நீங்க சந்தோஷமாக, சௌக்கியமாக இருந்தால் அதைவிட நான் விரும்புவது வேறொன்றுமில்லை.”
“இன்று இரவே கிளம்புகிறோம் மாமா.”
அப்பா பெருமூச்சு விட்டார். “நல்லது. உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போ.” பற்றற்ற குரலில், வெறுமையாக ஒலித்த அந்தக் குரல் என் மனதை காயப்படுத்தியது. அப்பா என் பக்கம் திரும்பக் கூட இல்லை. மாடிக்கு போய்விட்டார்.
அதற்குள் ராஜேஸ்வரி அங்கே வந்தாள். “ராஜி! நாங்கள் கிளம்புகிறோம். நீயும் எங்களுடன் கிளம்பு.” கிருஷ்ணன் சொன்னான்.
நடந்ததை எல்லாம் ராஜி புரிந்து கொண்டு விட்டாள் போலும். குறுக்காக தலையை அசைத்துவிட்டு திடமான குரலில் சொன்னாள். “இப்போ நான் வரவில்லை அண்ணா! மாமிக்கு கொஞ்சம் உடம்பு தேவலை ஆன பிறகு நடந்ததையெல்லாம் தெரிவித்துவிட்டு வருகிறேன்.”
“உனக்கு மூளை கலங்கிவிட்டதா ராஜி! இன்னும் இந்த வீட்டில் நீ அவமானப்பட வேண்டியிருக்கும்.” கோபமாக சொன்னான் கிருஷ்ணன்.
“பரவாயில்லை. நீ பட்டதைவிட அதிகமாக இருக்காது. உன் சார்பில், அண்ணியின் சார்பில், என் சார்பில் மாமியிடம் சொல்ல வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கு. சொல்லி முடித்ததும் நானே வந்து விடுகிறேன்.”
ராஜியின் பேச்சைக் கேட்டதும் என் மனதில் இருந்த பாரம் பாதியாக குறைந்தவிட்டது. “ராஜி இங்கேயே இருக்கட்டும். இந்த நேரத்தில் அம்மாவைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள யாராவது இருக்க வேண்டும்” என்றேன்.
உன்னுடைய விருப்பம் என்பது போல் பார்த்தான் கிருஷ்ணன். ராஜி என் அருகில் வந்தாள். என் கழுத்தைச் சுற்றிலும் கைகளைக் கோர்த்து அணைத்தக் கொண்டே “என்னை மன்னித்துவிடு அண்ணி! உன்னை தவறாகப் புரிந்துகொண்டு விட்டேன்” என்றாள்.
என் விழிகளில் நீர் சுழன்றது.
“கிளம்புவோமா?” கிருஷ்ணன் கேட்டான்.
“சரி” என்றேன்.
ராஜி எங்களை வழியனுப்ப வாசல் வரை வந்தாள். “அண்ணா என்மீது கோபம் வேண்டாம். இரண்டு நாட்களுக்கு மேல் இங்கே இருக்க மாட்டேன்” என்றாள்.
“உன் விருப்பத்தின் படியே ஆகட்டும்” என்றான் கிருஷ்ணன்.
விருந்தாளிகள் எல்லோரும் கிளம்பிவிட்டார்கள். நாற்காலிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். விளக்குத் தோரணங்கள் நீக்கப்பட்டன. நாங்கள் கிளம்பி வரும்போது அந்த வீடு இருளில் மூழ்கி நிசப்தமாக இருப்பது போல் தோன்றியது.

***********

ஹோட்டலுக்கு எப்படி வந்து சேர்ந்தேனோ எனக்கே நினைவு இல்லை. அறைக்கு வந்ததும் கிருஷ்ணன் மதூவுக்கு போன் செய்தான்.
எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்றும், திருப்பதிக்குக் காரில் போகலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும், கார் வேண்டும் என்றும் கேட்டான். மதூவையும் எங்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தினான். மதூ ஒப்புக் கொண்டு விட்டான் போலும். கிருஷ்ணன் தாங்க்ஸ் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
“நாம் காரில் போகப் போகிறோம். மதூவும் நம்முடன் வருகிறான்” என்றான்.
நான் பதில் சொல்லவில்லை. சோபாவில் சரிந்தபடி அப்படியே உட்கார்ந்திருந்தேன். டாக்டர் சொன்னது போல் அம்மாவுக்கு உண்மையிலேயே மூளை கலங்கிப் போய் விடுமா? அப்படி ஏதாவது நடந்தால் என்னால் கிருஷ்ணனுடன் நிம்மதியாகக் குடித்தனம் நடத்தத்தான் முடியுமா? அப்பா என்னை மன்னிப்பாரா? எத்தனையோ எதிர்பார்ப்புகளுடன் தொடங்கப் பொகும் என் திருமண வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது?
அருகில் வந்து நின்ற கிருஷ்ணன் “மீனா! எழுந்துகொள். போய் உடைகளை மாற்றிக் கொண்டு வா” என்றான்.
“மாற்றுப் புடவை எதுவும் கொண்டு வரவில்லை” என்றேன். “இதோ சூட்கேஸ் சாவி. டிரெஸ்ஸிங் ரூமில் என் பெட்டியில் இருக்கும் பார்.” என் தோளைப் பற்றி வலுக்கட்டாயமாக எழுப்பினான்.
சாவியை எடுத்தக் கொண்டு உள்ளே போனேன். இயந்திரகதியில் சூட்கேஸை திறந்தேன். சூட்கேஸில் கிருஷணனின் உடைகளுடன் புடவைகளும் இருந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிடம் அப்படியே நின்றேன். ‘உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போ.’ அப்பா சொன்னது காதில் எதிரொலித்தது. என்னால் அழுகையை அடக்கிக் கொள்ள முடியவில்லை. வெள்ளம் கரைபுரண்டு வெளியேறுவது போல் கண்ணீர் வெளியேறத் தொடங்கியது. மௌனமாக அழுதுகொண்டிருந்தேன்.
சற்று நேரம் கழித்து என் தோள்கள்மீது கைகள் படிந்தன. கிருஷ்ணன் வலுக்கட்டாயமாக என்னை தன் பக்கம் திருப்பிக் கொண்டே மென்மையான குரலில் கேட்டான்.
“மீனா! எனக்கு தண்டனை காலம் தொடங்கிவிட்டதா? அவசரப்பட்டு விட்டேன் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறா?”
“இல்லை இல்லலை.” கம்மிவிட்ட குரலில் சொன்னேன்.
“அப்போ அழுகையை நிறுத்து. நீ அழுவது இதுதான் கடைசி தடவையாக இருக்க வேண்டும். உன் கண்கள் ஈரமாவதை நான் பார்க்கக் கூடாது. தெரிந்ததா?” மார்போடு அணைத்துக் கொண்டே சொன்னான்.
அந்த ஸ்பரிசத்தின் மூலமாக என்னுள் தைரியம் பரவுவது போல் இருந்தது. மிருது கம்பீரமான குரலில் கிருஷ்ணன் மேலும் சொன்னான். “மீனா! சொத்து சுகம் இல்லாதவன் என்பதுதானே உங்க அம்மாவின் குற்றச்சாட்டு? ஐந்து வருடங்கள் எனக்கு அவகாசம் கொடு. ஸ்டேடஸ் இல்லாதவன் என்று என்னை எடுத்தெறிந்து பேசிய உன் அம்மாவே, கிருஷ்ணன் என்னுடைய மாப்பிள்ளை என்று பெருமைப்பட்டு கொள்ளும் நாள் வரும் விதமாக செய்கிறேன். கிருஷ்ணவேணியம்மாளின் மாப்பிள்ளை என்று இல்லாமல் கிருஷ்ணனின் மாமியார் என்று உங்க அம்மா அறியப்படும் விதமாக தகுதிகளை வளர்த்துக் கொள்வேன். இதுதான் என்னுடைய சபதம்.”
நடுங்கும் விரல்களால் அவன் வாயை பொத்தினேன். “நீ அதை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாதே. மறந்துவிடு.”
“மறப்பதா! அந்த அவமானம் என் இரத்தத்தில் கலந்து போய் விட்டது. என் சபதம் நிறைவேறும் வரையில் எனக்கு நிம்மதி இருக்காது. ஒன்று மட்டும் உண்மை. நம் இருவருக்கும் நடுவில் இந்த சபதம் ஒரு நாளும் குறுக்குச் சுவராக இருக்காது. திறமையும், உழைப்பும் இருந்தால் சொத்து சுகம் சம்பாதித்துக் கொள்வது அவ்வளவு கஷ்டம் ஒன்றும் இல்லை. என் வாழ்க்கையின் தரம் பத்து மடங்காக விரியணும் என்பதற்காகத்தான் நீ எனக்கு மனைவியாக வந்து சேர்ந்திருக்கிறாய் என்று தோன்றுகிறது. நீ மட்டும் என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தியடைந்திருப்பேனோ என்னவோ.”
மெய் மறந்த நிலையில் அவன் அணைப்பில் நின்றிருந்தேன். அந்த நல்ல நாள் உண்மையிலேயே வரணுமே ஒழிய என்னைவிட சந்தோஷப்படுபவர்கள் யார் இருப்பார்கள்?
கிருஷ்ணன் என் தலையை கோதிவிட்டபடி சொன்னான். “அரைமணி நேரம் தனியாக இருக்க முடியுமா? நீ குளித்து விட்டு உடைகளை மாற்றிக்கொள். நான் மாமி வீடு வரையிலும் போய் வருகிறேன்.”
“மாமியின் வீட்டுக்கா?”
“ஆமாம். மாமா என்னுடன் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில் சொன்னார். ரொம்பநாளாக திருப்பதிக்கு போகணும் என்று நினைத்தாலும் ஏனோ போக முடியவில்லையாம். காரில்தானே போகிறோம். நம்முடன் வரச்சொல்லி கூப்பிடப் போகிறேன்.”
“இந்த இரவு நேரத்தில் நீ சொன்னதும் அவர்களால் புறப்பட முடியுமா?”
“மாமிக்கு உன்னிடம் ரொம்ப பிரியம். நீ கேட்டுக் கொண்டாய் என்று சொன்னால் கட்டாயம் புறப்படுவார்கள்.”
“இந்த நேரத்தில் அவர்களை சிரமப்படுத்துவானேன்?”
“உனக்காகத்தான். இந்த இரண்டு மூன்று நாட்கள் நீ தனிமையாக உணர வேண்டாம் என்றுதான். மாமி உன்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும்.”
கிருஷ்ணன் கிளம்பிப் போனான். அவன் போனபிறகும் நான் அதே இடத்தில் நின்றபடி யோசித்துக் கொண்டிருந்தேன். என் மனதில் இருப்பதை அம்மாவுக்குத் தெரிவிப்பது என்னுடைய கடமை என்று தோன்றியது.
பேப்பரையும் பேனாவையும் எடுத்து அம்மாவுக்குக் கடிதம் எழுதத் தொடங்கினேன். அதில் சாரதியிடம் எனக்கு ஏற்பட்ட சலிப்பு. அவனிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக மெலட்டூருக்கு போனது முதல் இன்று வரையில் நடந்தவற்றை சுருக்கமாக எழுதினேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கிருஷ்ணனிடம் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, அவனுடைய தனித்தன்மை என்னைக் கவர்ந்தவிதம் எல்லாம் விவரமாக எழுதினேன். கடைசியில் “மம்மி! நீங்க விரும்புவது என்னுடைய மகிழ்ச்சிதான் என்றால் என்னை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தான் விருமபியவனை கணவனாக அடைவதை விட ஒரு பெண்ணுக்கு வேறு சுவர்க்கம் இருக்காது. கிருஷ்ணனுக்கு அவமானம் நடந்த இடத்திற்கு இனி நான் வரமாட்டேன். கமலா அத்தையின் மகன் என்பதைத் தவிர அவனிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் எதுவும் இல்லை. உங்களுக்கு வேண்டியது என்னுடைய சந்தோஷமா? இல்லை நினைத்தது நடக்கவில்லையே என்ற பிடிவாதமா? எது முக்கியமோ காலம்தான் முடிவு செய்யும். மன்னிக்க முடியாத தவறு எதுவும் செய்யவில்லை என்று நம்புகிறேன். கடித்தை முடிக்கும் கடைசி தடவையாக என்னை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”
கடிதத்தை மற்றொரு முறை படித்துக் கொண்டு இருந்தபோது கிருஷ்ணன் வந்தான். “மீனா! நீ இன்னும் தயாராகவில்லையா? மதூ மற்றவர்கள் எல்லோரும் வந்து கொண்டே இருக்கிறார்கள்” என்றான்.
“இதோ ஒரு நிமிடத்தில் ரெடியாகி விடுகிறேன். எனக்கு ஒரு கவர் வேண்டும்.”
“வெறும் கவர் இருக்கும். ஸ்டாம்ப் இல்லை.”
“பரவாயில்லை. வெறும் கவரையே கொடு.”
கிருஷ்ணன் கவர் எடுத்துக் கொடுத்தான். “கடிதம் மாமாவுக்கா?”
“இல்லை அம்மாவுக்கு.”
கிருஷ்ணன் போன் அருகில் சென்று எங்கள் வீட்டுக்குப் போன் செய்தான். “மாமா! நான்தான் கிருஷ்ணன் பேசுகிறேன். மாமிக்கு எப்படி இருக்கு? அப்படியா! தாங்க் காட்! சரி” என்று போனை வைத்துவிட்டு என் பக்கம் திரும்பினான். “மாமிக்கு நினைவு வந்து விட்டதாம். நீ எங்கே என்று கேட்டாளாம். டாக்டர் சொன்னது போல் ஊரில் இல்லை என்று சொல்லி விட்டாராம்” என்றான். என் கவலை கொஞ்சம் குறைந்தாற்போல் இருந்தது.
குளியலை முடித்துக் கொண்டு தலை பின்னிக் கொண்டிருந்த போது மாமி, மாமா, மது எல்லோரும் வந்துவிட்டார்கள். கால்மணி நேரத்தில் கிளம்பிவிட்டோம். ஹோட்டல் வளாகத்திலேயே போஸ்ட் பாக்ஸ் இருந்தது. என் கையால் நானே கடிதத்தைத் தபால்பெட்டியில் சேர்த்தேன். அது வெறும் கடிதம் இல்லை. வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளச் சொல்லி கடவுளுக்கு செய்து கொள்ளும் பிரார்த்தனை.

Series Navigation