முள்பாதை 43

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

நான் பயந்தது போலவே நடந்துவிட்டது. இவனைச் சமாதானப் படுத்துவது கொஞ்சம் கஷ்டமா வேலைதான். கிருஷ்ணன் சற்று தொலைவில் பலாமரத்தில் சாய்ந்து கொண்டு அந்தப் பக்கம் திரும்பியிருந்தான்.
அவன் எவ்வளவு ரோஷக்காரன் என்று எனக்குத் தெரியாமல் இல்லை. ஆனால் என்னுள் இருக்கும் பெண் மனமானது எப்படியாவது அவனைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று தவியாய் தவித்தது.
எழுந்து அவனருகில் சென்றேன். என் காலடிச் சத்தம் கேட்ட பிறகும் அவன் என் பக்கம் திரும்பவில்லை. தயக்கத்தை விடுத்து நான் அவன் கையைப் பற்றிக்கொண்டேன். ஒரே உதறலில் விடுவித்துக் கொண்டான்.
“என் பேச்சை கேட்க மாட்டாயா?” தாழ்வான குரலில் கேட்டேன்.
சடாரென்று திரும்பினான். அவன் முகத்தைப் பார்க்கும்போதே பயமாக இருந்தது. கோபம், அபிமானம், இயலாமை எல்லாம் சேர்ந்து இதயத்தை தகிக்கும் போது ஏற்படும் வேதனை அவன் முகத்தில் பிரதிபலித்தது.
பற்களை கடித்துக் கொண்டு சொன்னான். “இன்னும் பாக்கி ஏதாவது இருக்கா சொல்வதற்கு? இருந்தால் அதையும் சொல்லிவிடு.” முகத்தில் அடிப்பது போல் சொன்னான். “இன்னும் என்னென்ன சொல்லணுமோ எல்லாவற்றையும் சொல்லிவிட்டு உடனே கிளம்பிவிடு. நான் மிருகமாக மாறி உன்னை அவமானப் படுத்துவதற்கு முன் இங்கிருந்து போய்விடு. அது உனக்கும் எனக்கும் நல்லது.”
பயந்துகொண்டே அவன் பக்கம் பார்த்தேன். உக்கிர நரசிம்ம மூர்த்தியாக கோபத்தில் திக்கு முக்காடிக் கொண்டிருப்பவனை சமாதானப்படுத்துவது நான் நினைத்த அளவுக்கு எளிமையான விஷயம் இல்லை. ஏனோ எனக்கு அழுகை பொங்கிவந்தது. சற்று முன் என்னிடம் சிரித்துப் பேசி கலாட்டா செய்த மனிதன்தானா இவன்! தலையைக் குறுக்கே அசைத்தபடி திடமான குரலில் சொன்னேன்.
“மாட்டேன். நீ என் பேச்சை முழுவதுமாகக் கேட்கும் வரையில் இந்த இடத்தை விட்டு போக மாட்டேன். நான் செய்த இந்தக் காரியம் உனக்கு வேதனையை ஏற்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடு. உன்னிடம் மன்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதற்கு நான் வெட்கப்பட மாட்டேன். உன் தன்மானத்தைப் பற்றி எனக்குத் தெரியும். எங்கேயும் பணம் கிடைக்காத பட்சத்தில் தோட்டத்தை வேண்டுமானாலும் துறக்கச் சம்மதிப்பாயே தவிர எங்களிடமிருந்து சல்லிகாசு வாங்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும்.உன்னைக் காயப்படுத்துவதோ, தாழ்த்துவதோ என்னுடைய உத்தேசம் இல்லை. அப்பாவால் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வர முடியவில்லை என்பது உண்மைதான். அதற்காக அவருக்கு உங்களிடம் பிரியம் இல்லை என்று நீ நினைப்பது தவறு. தான் அவ்வளவு பணக்காரனாக இருந்தும் உங்களுக்கு உதவி செய்ய முடியாத சூழ்நிலை! அதற்காக அப்பா எவ்வளவு வேதனைப் படுகிறாரோ, அமைதியின்றி அவர் மனம் எப்படி தவிக்கிறதோ எனக்குத் தெரியும். இந்த பணத்தை உனக்கு சும்மா தரவில்லை. கடனாக தந்திருக்கிறோம். உனக்கு சௌகரியப்பட்ட போது திருப்பிக் கொடு. வேண்டுமென்றால் வட்டியையும் சேர்த்துக் கொடு. உன் அவசரத்திற்குக் கைகொடுக்கும் நோக்கம் தவிர வேறு எதுவும் இல்லை.”
அவன் என் பேச்சை லட்சியப் படுத்தவில்லை. அதற்குப் பின்னால் இருந்த அன்பைப் புரிந்து கொள்ள முயற்சியும் செய்யவில்லை. தலைமுதல் கால் வரையில் என்னை பரிசீலித்துவிட்டு ஏளனமான குரலில் கேலி செய்வதுபோல் சொன்னான்.
“அடடா! என்னே தங்களுடைய தாராள குணம்! எதற்காக என்மீது இவ்வளவு கருணை?”
பழித்துக் காட்டுவது போல் அவன் பேசிய பேச்சுக்கு எனக்கு உடல் பற்றி எரிவது போல் இருந்தது. கையில் எதுவும் இருக்கவில்லை. இருந்திருந்தால் அவன் முகத்தில் வீசி எறிந்திருப்பேன்.
“கருணை உன்மீது இல்லை, உங்கள் மீது.” உங்கள் என்ற வார்த்தையை அழுத்தி உச்சரித்தேன். உண்மையிலேயே எனக்குக் கோபம் வந்து விட்டது. “நான் இந்தக் காரியத்தை செய்தது உனக்காக இல்லை. உங்களுக்காக, அத்தைக்காக, குழந்தைகளுக்காக. எங்களுக்கு உன் மீது அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அத்தை மற்றும் குழந்தைகளின் நல்லது கெட்டதை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எங்களுக்கு இருக்கு. அதை உன்னால் மறுக்க முடியாது இல்லையா?”
“அட! அப்படியா?” கேலி செய்வதுபோல் தலையை மேலும் கீழுமாக அசைத்தான்.
“உன்னைடைய கேலி பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள். உனக்கு சுந்தரியுடன், எனக்கு சாரதியுடன் நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் உண்மையிலேயே உன் திமிரை அடக்கியிருப்பேன். உனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்து உனக்கு மூக்கணாங்கயிறு போட்டு, புடவை தலைப்பில் முடித்து வைத்திருப்பேன்.”
கிருஷ்ணன் புதிய விஷயம் கேட்பது போல் பார்த்தான். அவன் புருவங்கள் லேசாக உயர்ந்தன.
“நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி. அதான் என்னிடம் மாட்டிக்கொள்ளாமல் கட்டிய பசுபோல் இருக்கும் சுந்தரியை மனைவியாக அடையப் போகிறாய்.”
கிருஷ்ணனின் முகத்தில் கோபம் கொஞ்சம் குறைந்தது. பதில் சொல்ல முடியாதவன் போல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
இந்தச் சூழ்நிலையில் கோபமாக இருப்பது போல் நடிப்பதுதான் உத்தமம் என்று எனக்குத் தொன்றியது. வேண்டுமென்றே வருத்தப்பட்டுக் கொள்வது போல் கோபமாகச் சொன்னேன். “போய்விட வேண்டுமாமே? போகாமல் சாசுவதமாக உன் வீட்டில் இருப்பதற்கு வந்திருக்கிறேன் என்று நினைத்தாயா? இப்பொழுதே போய் விடுகிறேன். ச்சி… ச்சி… கொஞ்சம் கூட வெட்கமில்லை எனக்கு. நீ அழைக்காமலேயே உன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். இதைவிட எனக்கு வேறு மரியாதை என்ன கிடைக்கும்? சாமிகண்ணுவைக் கூப்பிட்டு வண்டிக்கு ஏற்பாடு செய். இங்கிருந்து இப்படியே போய் விடுகிறேன்.” பின்னால் திரும்பி அவனுக்கு முதுகைக் காட்டியபடி நின்றேன்.
“மீனா!”
பதற்றத்துடன் அழைத்தான்.
அவன் குரலில் கோபம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் அது அவனுக்குத் தெரியக்கூடாது என்பதுபோல் வேகமாகச் சொன்னேன்.
“இது வரைக்கும் நீ சொன்னதும் நான் கேட்டதும் போதும். இனி எதுவும் பேசத் தேவையில்லை. வேண்டாமென்று நீ மறுத்த பிறகும் உனக்கு உதவி செய்யணும்னு நினைத்தது அபராதம்தான். மகா அபராதம்! என்னை மன்னித்துவிடு. நீ காட்டிய அன்பை, நட்பை, பிரியத்தை வைத்துக் கொண்டு உனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் இந்த உதவி செய்யும் உரிமை, அதிகாரம் எனக்கு இருப்பதாக பிரமையில் இருந்தேன். அந்த எண்ணத்தில்தான் தஞ்சாவூரில் உன்னுடன் ஜாலியாக ஊர் சுற்றினேன். இப்பொழுதாவது என் கண்களை திறக்கச் செய்து உண்மையைப் புரிய வைத்தாய்.”
விருட்டென்று அவன் பக்கம் திரும்பி அவன் முகத்தை நேராக பார்த்துக் கொண்டே கேட்டேன்.
“எந்த உரிமையும், தகுதியும் இல்லாத நான், நீ கொடுத்த புடவையை எதற்காக வாங்கிக் கொள்ளணும்? தஞ்சாவூரில் எனக்காக அவ்வளவு பணம் செலவு செய்தால் சும்மா ஏன் இருக்கணும்? சுயஅபிமானம் என்பது உன் ஒருத்தனுக்கு மட்டுமே சொந்தமானதா? வேறு யாருக்கும் இருக்காதா?”
“மீனா! நீ ரொம்ப தவறாக நினைக்கிறாய்.” கலவரத்துடன் சொன்னான்.
“இதுவரையில் தவறாகத்தான் நினைத்தேன். இனி அப்படி நினைக்க மாட்டேன். கொஞ்சம் இரு. கணக்குப் பார்த்து உன் பணத்தைக் கொடுத்து விடுகிறேன். வாழ்க்கையில் இனி ஒரு நாளும் அழைப்பு இல்லாமல் யார் வீட்டுக்கும் போக மாட்டேன்.” வேகமாக போய் வைக்கோல் மீது கிடந்த பேக்கைத் திறந்து கைக்கு வந்த பணத்தை எடுத்தேன். ஆயிரம்ரூபாய்க்கு மேல் இருக்கும்.
அதை எடுத்துக் கொண்டு திரும்பி வந்த போது கிருஷ்ணன் அந்தப் பக்கம் திரும்பி ஏதோ யோசிப்பது போல் நின்று கொண்டிருந்தான்.
“இதோ உன் பணம்! கணக்கில் நான் உன் அளவுக்கு கெட்டிக்காரி இல்லை. உனக்கு வர வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதியை அப்புறமாக அனுப்பிவை” என்றேன்.
கிருஷ்ணன் மெதுவாக என் பக்கம் திரும்பினான். என் வார்த்தைகள் அவனை எந்த அளவுக்கு வேதனையை அளித்ததோ அவன் முகத்தைப் பார்த்தாலே புரிந்தது.
என் கையில் இருந்த ரூபாய் நோட்டுகளை பார்த்து விட்டு “என்ன இது?” என்றான்.
“பணம்! பாத்தால் புரியவில்லையா?”
அவன் ஒரு வினாடி என் கண்களுக்குள் ஆழமாக பார்த்தான். “உண்மையாகவே புரியவில்லை. மூளை கலங்கிவிட்டது போல் இருக்கு. காற்று இல்லாமல் மூச்சு திணறி திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறேன். ஒரு நிமிஷம் என்னை நிதானமாக யோசிக்கவிடு.” என் கையை மிருதுவாக நகர்த்திவிட்டு அங்கிருந்து போய்விட்டான்.
இதழ்களை இறுக்கி ‘அப்படி வா வழிக்கு’ என்பது போல் பார்த்துக் கொண்டு அங்கேயே நின்று கொண்டேன். அய்யர்வாளின் பலவீனம் என்னவென்று இப்போ எனக்குப் புரிந்து விட்டது. அவன் நம்மை குற்றம் சாட்டிப் பேசும் முன்பே, குற்றத்தை நாமே நம் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும். அவன் சொல்ல வந்த வார்த்தைகளை அவனை முந்திகொண்டு நம்மை நாமே பழித்துக் கொள்ளணும். இந்த ரகசியத்தை சுந்தரியிடம் கட்டாயம் சொல்ல வேண்டும்.
தோட்டத்திற்கு அழகு சேர்ப்பதற்காக கிருஷ்ணன் சிமெண்டில் சிறிய குளம் ஒன்றை ஏற்படுத்தி அதில் சிவப்பு மற்றும் வெள்ளை தாமரைக் கொடிகளை போட்டிருந்தான். அங்கே ஒன்றும் இங்கே ஒன்றுமாக தாமரைப் பூக்கள் மலர்ந்திருந்தன.
கிருஷ்ணன் குளத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தான். நான் இடத்தை விட்டு அசையாமல் யோசித்தபடி நின்றிருந்தேன். நான் ஜெயித்து விட்டாற்போல்தானா? என்னுடைய இந்த முயற்சி வெற்றி பெறுமா? கிருஷ்ணன் இந்த உதவியை ஏற்றுக் கொள்வானா? கொந்தளித்துக் கொண்டிருந்த மனதை அமைதிப் படுத்த முயன்றபடி அங்கேயே நின்றிருந்தேன்.
ஐந்து நிமிடங்கள் கழித்து பின் பக்கமாக அவனை நெருங்கினேன். “முடிந்ததா உன் யோசனை? இதோ உன் பணம்.” கையை நீட்டினேன்.
“ஒருத்தருக்குக் கொடுத்ததைத் திரும்பி வாங்கிக் கொள்ளும் பழக்கம் எனக்கு இல்லை.”
“நன்றாக யோசித்து பிறகு சொல்லு. அந்த வார்த்தையை நானும் சொல்ல வேண்டிவருமோ என்னவோ?”
“சொல்லி விடுவாய் என்பதுதான் என் பயம். ரொம்ப திறமையாக நீ என் வாய்க்குப் பூட்டு போட்டு விட்டாய்.” கிருஷ்ணன் திடீரென்று தோள்வழியாக பணத்தை நீட்டியிருந்த என் கையைப் பற்றி பலமாக இழுத்தான். எதிர்பாராமல் அவன் அப்படி இழுத்ததும் நான் அப்படியே அவன் தோள் மீது சாய்ந்து விட்டேன்.
“தோற்றுப் போய் விட்டேன் மீனா! படு தோல்வி அடைந்து விட்டேன்” என்றான். அவன் குரலில் இனம் புரியாத கோபமும் இயலாமையும் கலந்திருந்தன.
நான் இரண்டாவது கையை அவன் இடது தோள் வழியாக முன்னால் நீட்டிக் கொண்டே அவன் காதில் தாழ்ந்த குரலில் சொன்னேன். “அப்பா எப்போதும் என்ன சொல்வார் தெரியுமா? வாழ்க்கை ஒரு ஓட்டப் பந்தயம் போன்றதாம். நாம் ஓடிக் கொண்டே இருக்கணுமாம். வெற்றி தோல்விகளைப் பற்றி யோசிக்கக் கூடாதாம்.”
கிருஷ்ணன் என் இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்தான். “அசல் உன்னை இங்கே வருவதற்கு அனுமதி கொடுத்தது என்னுடைய பிசகு. முடியாதுன்னு முதலிலேயே எழுதியிருக்கணும். நன்றாக இருந்திருக்கும்” என்றான்.
“அதோ! மறுபடியும்…” நான் எழுந்து கொள்ளப் போனேன். ஆனால் அவன் என்னை எழுந்துகொள்ள விடவில்லை. குளத்தில் நீர் சலனமில்லாமல் இருந்ததால் எங்க இருவரின் உருவங்களும் கண்ணாடியில் தெரிவது போல் பிரதிபலித்தன. என் இரண்டு கைகளும் அவன் கழுத்து பிணைத்தபடி அவன் மார்பின் அருகில் அவன் பிடியில் சிறைபட்டிருந்தன. தண்ணீரில் பிரதிபலித்த நெருக்கமான அந்த பிம்பங்களைப் பார்த்ததும் என் கன்னத்தில் சூடாக ரத்தம் பாய்ந்தது. முகத்தை லேசாகத் திருப்பி முன்பற்களால் அவன் கன்னத்தை கடித்தேன்.
“ஏய்! என்ன இது?” கிருஷ்ணன் என் கையை விட்டுவிட்டு வலது கையால் கன்னத்தை தடவிக் கொண்டான். அவன் கன்னத்தில் என் பற்கள் பதிந்த இடம் சிவந்து கன்றிவிட்டிருந்தது.
“நான் என்ன செய்யட்டும்? சில சமயங்களில் எதிராளியை கிள்ளுவது என் பழக்கம். நீ என்னடாவென்றால் என் கைகளை அசைய விடாமல் பிடித்துக் கொண்டு விட்டாயே?”
“லாபம் இல்லை. இன்னும் கொஞ்சம் நேரம் உன்னுடன் தனியாக இருந்தால் பெரிய ஆபத்து வந்துவிடும் போல் இருக்கு. கிளம்புவோம் வா.”
இந்த முறை நான் அவனை எழுந்து கொள்ள விடவில்லை. கைகளைத் தோள் மீது அழுத்தமாக பதித்துக் கொண்டே கேட்டேன்.
“எங்கே? என்னைத்தான் ஊருக்கப் போகச் சொல்லிவிட்டாயே?”
“இனிமேல் அப்படிச் சொல்ல மாட்டேன். நீ இப்போ எனக்கு யஜமானி. நான் உன்னுடைய சேவகன்.”
கலகலவென்று நகைத்தேன். “உண்மைதானா? உன்னைப் போன்ற சேவகன் கிடைப்பது எவ்வளவு அதிர்ஷ்டம்? அத்தை உன்னை கடைத் தெருவில் நிற்க வைத்து ஏலம் போட்டால் நன்றாக இருக்கும். நிம்மதியாக பணம் கொடுத்து வாங்கியிருப்பேன்.”
“இப்போ நீ செய்த காரியம் மட்டும் என்னவாம்?”
“உனக்குத்தான் தெரியணும்.”
கிருஷ்ணன் கையைப் பின்னால் நீட்டி என் மூக்கைப் பிடித்து ஆட்டினான். “எல்லாம் புரிகிறது. ஒன்று மட்டும்தான் புரியவில்லை.”
“என்ன அது?”
“படிப்பு இல்லாத இந்த பட்டிகாட்டு முட்டாளின் மீது உனக்கு இவ்வளவு கருணை ஏன் என்று.”
“இந்தப் பட்டிக்காட்டான் கொஞ்சம் முட்டாள்தான். ஆனால் அறிவு இல்லாதவன் இல்லை. பெரிய பெரிய படிப்பு படித்துவிட்டோம் என்று தற்பெருமை பட்டுக்கொள்வர்களை விட அறிவாளி என்று எனக்குத் தெரியும்.”
சற்று முன் எங்க இருவருக்கும் நடுவில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கம் போன்ற ஆபத்து அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் தப்பிவிட்டது. மறுபடியும் இயல்பாகக் கிண்டலடித்தபடி பேசிக் கொண்டிருந்தோம். மனதளவில் நெருங்கியிருந்த அந்த நேரத்தில் சுற்றுவட்டாரத்தையே மறந்து விட்டோம். தோட்டத்திற்கு யாராவது வரக்கூடும் என்ற நினைப்புகூட இருக்கவில்லை.
“ரொம்ப நேரமாகிவிட்டது. நம் இருவரையும் காணாமல் வீட்டில் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். போகலாம் வா.” எதற்காகவோ தலையை உயர்த்தி மேலே பார்த்த கிருஷ்ணன் என் கையை விட்டுவிட்டு எழுந்து கொண்டான்.
நானும் எழுந்து கொண்டேன். யதேச்சையாக அந்தப் பக்கம் திரும்பிய இருவரும் சிலையாக அப்படியே நின்றுவிட்டோம்.
எங்களுக்கு எதிரே பத்தடி தூரத்தில் சுந்தரி நின்று கொண்டிருந்தாள். அவள் அங்கே எப்போ வந்தாளோ இருவரும் உணரவில்லை. ஆனால் வந்து ரொம்ப நேரமாகிவிட்டிருப்பதை நெருப்புத் துண்டங்களாக ஜொலித்துக் கொண்டிருந்த அந்தக் கண்களும், பொறாமை மற்றும் அவமானத்தால் சிவந்திருந்த அந்த முகமும் பறைச்சாற்றிக் கொண்டிருந்தன.
என்னையும் அறியாமல் கிருஷ்ணன் பக்கம் பார்த்தேன். அவன் என் பக்கம் பார்க்வில்லை. கற்சிலையாக நின்றிருந்தான்.
அந்த வினாடி நிலம் பிளந்து அப்படியே நான் புதைந்து போய்விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கிருஷ்ணனிடம் எனக்கு இருக்கும் உரிமை ரொம்ப அபூர்வமானது. மற்றவர்களின் பார்வையில் அது ஒரு குற்றமாகப் படுவதை என்னால் சகித்தக் கொள்ள முடியாது. உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் வாய்வார்த்தை வராதபடி அப்படியே நின்று விட்டேன்.
கிருஷ்ணன் ஒரு நிமிடத்தில் தன்னைத் தானே எப்படி சமாளித்துக் கொண்டானோ தெரியாது. என் பக்கம் திரும்பி “மீனா! ரொம்ப நேரமாகவிட்டது. வீட்டுக்குப் போ” என்றான். அவன் குரலில் எந்தத் தடுமாற்றமும் இருக்கவில்லை.
சுந்தரியின் பார்வை என்மீது நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது. நான் குன்றிப் போகாமல், தவறு செய்து விட்டவள் போல் தலையைக் குனிந்து கொள்ளாமல் இருப்பதற்குப் பெரும் முயற்சி தேவைப்பட்டது. அங்கிருந்து நகர்ந்து வந்து கீழே கிடந்த பேக்கை எடுத்துக் கொண்டேன்.
தோட்டதை விட்டு வெளியேறும்போது தலையைத் திருப்பி பின்னால் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. கிருஷ்ணன் நான் வெளியேறுவதற்காக காத்திருப்பது போல் நின்றிருந்தான்.
ஒற்றையடி பாதையில் திரும்பி வரும்போது என் மனதில் கசப்பான உணர்வு பரவியிருந்தது. எங்க இருவருக்கும் நடுவில் இருந்த நெருக்கத்தை சுந்தரி எப்படி எடுத்துக் கொள்வாளோ ஊகிக்க முடியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை.
அது போகட்டும். என் மனதில் எந்த சாத்தான் குடிபுகுந்து கொண்டுவிட்டது? கிருஷ்ணனிடம் இப்படி அதிகப்படியாக உரிமையை எடுத்துக் கொண்டு பழகுவானேன்? அவனுடைய அருகாமையில் என் மனம் நான் சொல்வதைக் கேட்காது. தன் இஷ்டம்போல் அது நடந்து கொள்ளும்.
“நீ என் பக்கம் பார்த்த போதெல்லாம் ஏதாவது குறும்பு செய்ய வேண்டும் போல் தோன்றும். என் கண்களுக்குள் நேராக பார்க்காதே.”
கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. இந்தப் பேய் என் ஒருத்தியை மட்டுமே இல்லை. சில சமயம் அவனையும் பிடித்துக் கொண்டு ஆட்டுவிக்கும் போலும்.
இன்னும் ஐந்து நிமிடங்கள் சென்றிருந்தால் நான் பாட்டுக்கு வீட்டுக்குக் கிளம்பியிருப்பேன். இந்த மாலை நேரம் ஒரு இனிய நினைவாக என் வாழ்க்கையில் சாசுவதமாக பதிந்து போயிருக்கும். சுந்தரியின் வருகை அதை முற்றிலும் தலைகீழாக மாற்றிவிட்டது.
எவ்வளவு நிதானமாக, அடி மேல் அடி வைத்து நடந்தாலும் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
என்னைப் பார்த்ததும் மங்கம்மா உள்ளே குரல் கொடுத்தாள். “அதோ! மீனா வந்துவிட்டாள். என்னடீ பெண்ணே? தோட்டத்திற்குப் போவதாக வீட்டில் சொல்லவில்லையா? உன்னைக் காணுமேன்னு உங்க அத்தை கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். நீ தோட்டத்திற்குப் போகும் போது பார்த்தேன்னு நான்தான் சொன்னேன்” என்றாள் வாயெல்லாம் பல்லாக.
‘அம்மா தாயே! அந்த புண்ணியம் கட்டிக் கொண்டது நீதானா?’ மனதில் நினைத்துக் கொண்டேன்.
“சுந்தரி அண்ணி மல்லிமொட்டு பறிப்பதற்காக தோட்டத்திற்கு வந்தாளே? உன் கண்ணில் படவில்லையா?” ராஜேஸ்வரி கேட்டாள்.
அந்தப் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாதது போல் உள்ளே வந்து விட்டேன். என்னதான் வேண்டாமென்று நினைத்தாலும் என் மனம் கலவரப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. சுந்தரியை சமாதானப்படுத்த கிருஷ்ணனால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும் என் மீதே எனக்கு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டன. சுந்தரிக்கு வேதனையைத் தருவது என்னுடைய எண்ணம் இல்லவே இல்லை. நான் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு அவனிடம் பழகியது உண்மைதான். சுந்தரி வந்ததும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடுகிறேன். எங்களுடைய நட்பில் எந்த விதமான களங்கமும் இல்லை என்றும், தோட்டம் விஷயத்தில் கிருஷ்ணனை சம்மதிக்க வைப்பதற்காக அப்படி நடந்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் விவரமாக எடுத்துச் சொல்லி அவளுக்கு நிலைமையைப் புரிய வைக்கிறேன்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்