முல்லையூர் லிங்கம்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

மணி வேலுப்பிள்ளை


ஏனக்கும் லிங்கத்துக்கும் ஒரே ஊர்: முல்லைத்தீவு. ஏன்னுடைய வீடு முல்லர் வீதியில் இருக்கிறது. அவனுடையது கடற்கரை வீதியில்…

நானும் லிங்கமும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். ஒரே திடலில் விளையாடியவர்கள். ஒரே கடலில் நீராடியவர்கள்…

பொழுது சாயும் வேளை, தரைக்காற்று கடல்கடந்து வீறுகொள்ள, தென்னோலைகள் கடல்நோக்கித் திசைகாட்ட, மீனவர்கள் அதே திசையில் படையெடுக்க, அதுவரை கடல்காற்று வாங்கியோர் எதிர்த்திசையில் நடைபயில, நாங்கள் இடைநடுவே புகந்து விளையாட… நினைக்க நினைக்க இனிக்கும் காலகட்டம்.

உண்மையில் நாங்கள் லிங்கத்துக்கு எவ்வளவோ கடமைப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். இளமையில் வேறு எவருக்கும் கிடைக்காத இன்பத்தை அவன் எங்களுக்கு அள்ளித் தந்தான். அப்படி என்ன பெரிய இன்பம் ? அவனுடைய தமிழைத்தான் சொல்லுகிறேன்.

லிங்கம் பேசிய தமிழ் விசித்திரமானது. ஏழுவாய் பயனிலை ஏறுமாறாய் இருக்கும். ‘தின்னுவோம் ஆய்ஞ்சு வாங்கோடா போய் மாங்காய் ‘ என்றுதான் சொல்லுவான். ‘வாங்கோடா போய் மாங்காய் ஆய்ஞ்சு தின்னுவோம் ‘ என்று சொல்லவே மாட்டான். ‘வந்தது பள்ளிக்கூடத்திலிருந்து நேற்று கடிதம் ‘ என்றுதான் சொல்லுவான். ‘நேற்று பள்ளிக்கூடத்திலிருந்து கடிதம் வந்தது ‘ என்று கடைசிவரை சொல்லமாட்டான்.

லிங்கத்தின் தமிழை ‘லிங்கத் தமிழ் ‘ என்று நாங்கள் சொல்லி வந்தோம். நாங்கள் செய்த பாக்கியம்: தமிழில் வேற்று உருபுகள் சொல்லின் இறுதியில் சேர்வதால் சொல்தொடரியலை மீறும் வசனத்திலும் கருத்து விளங்கும். அதாவது ‘லிங்கத் தமிழ் ‘ எங்களுக்கு விளங்கும். அது லிங்கத்தின் மகிமை அல்ல, தமிழின் மகிமை!

ஆங்கிலத்தில் வேற்றுமை உருபுகள் தனித்து நிற்கும். அங்கே சொல்தொடரியலை மீறினால் பெரிய விபரீதம்தான் உண்டாகும். நல்ல வேளை, லிங்கத்துக்கு ஆங்கிலம் ஓடாது. ஓடினால் கமலா வென்ற் ரு யவ்னா என்ற வசனத்தை யவ்னா வென்ற் ரு கமலா என்றுதான் சொல்லுவான்!

நாங்கள் லிங்கத்தின் தமிழை எள்ளி நகையாடுவோம். அவன் எங்களை விரட்டி அடிப்பான். நாங்கள் எட்டி நின்று ஏளனம் செய்வோம். அவன் கல்லாலும் மண்ணாங்கட்டியாலும் எறிவான். நாங்கள் ஓடி ஒளிவோம். நாங்கள் வேறு காரணத்துக்காகச் சிரித்தாலும், தன்னையே பகிடி பண்ணிச் சிரிப்பதாக எண்ணி எங்களுடன் சண்டைக்கு வருவான்.

அந்தக் காலத்தில் முல்லைத்தீவு காவலகத்தில் சில்வா என்ற சிங்களவன் வேலை பார்த்து வந்தான். அவன் அடிக்கடி சைக்கிளில் வலம் வருவான். அவனை எல்லாரும் ‘சில்வா மாத்தையா ‘ என்றுதான் குறிப்பிடுவார்கள். சிங்களத்தில் ‘மாத்தையா ‘ என்றால் ‘ஐயா. ‘

ஒரு தடவை நாங்கள் பள்ளிக்கூடத்து மாமரத்தில் மாங்காய் ஆய்ந்து சப்பியவாறு கடற்கரைக்குப் போய்க் கொண்டிருந்தோம். ஏங்களை வழிமறித்த சில்வா ‘அடோ, தாறது ஒண்டு மாங்கா ‘ என்று தனக்குத் தெரிந்த தமிழில் கேட்டான். உடனே லிங்கம் ‘தாறது ஒண்டு மாங்கா சில்வா மாத்தையா நான் ‘ என்று சொல்லி ஒரு மாங்காயை நீட்டினான். பளார் என்று லிங்கத்தின் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. லிங்கம் ‘ஐயோ, ஆத்தையரோ ‘ என்று குளறிக்கொண்டு ஓடினான். நாங்கள் கிலிகொண்டு ஆளுக்கொரு திக்கில் ஓடித் தப்பினோம்.

நடந்த விபரீதத்தைப் புரிந்துகொள்வதற்கு நாழி ஆகவில்லை. சில்வாவும் லிங்கமும் தத்தம் பாணியில்தான் தமிழ் பேசியிருக்கிறார்கள். ஆனால் தனது தமிழை லிங்கம் நையாண்டி பண்ணுவதாக சில்வா நினைத்துவிட்டான். மறுபுறம் சில்வா தன்னை வேண்டுமென்றே அடித்ததாக லிங்கம் சொல்லித் திரிந்தான்.

முல்லைத்தீவில் இந்தக் கதையைச் சொல்லிச் சிரிக்காதவர் எவருமே இல்லை. ஆனால் லிங்கமோ சில்வாவோ அதைப் பகிடியாய் எண்ணவில்லை. முல்லைத்தீவில் தன்னை நையாண்டி பண்ணிய ஒரே ஒரு ஆள் லிங்கம்தான் என்பது சில்வாவின் வாதம். தன்மீது கைவைத்த ஒரே ஒரு ஆள் சில்வாதான் என்பது லிங்கத்தின் வாதம். லிங்கத்துக்கு விழுந்த அடி எங்களுக்கோ வெறும் பகிடி. அவனுக்கோ அது ஒரு வடு. ‘அடித்து நொருக்காவிட்டால் லிங்கம் நான் இல்லை சில்வாவை ஒரு பொலிசுக்காரனாய் வந்து நான் ‘ என்று சூளுரைத்தான் லிங்கம்.

இதற்கிடையே மேல்படிப்பிற்காக நாங்கள் வெவ்வேறு கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டோம். சிலர் திருகோணமலைக்கும், சிலர் யாழ்ப்பாணத்துக்கும், சிலர் மட்டக்களப்புக்கும், சிலர் கொழும்புக்கும் அனுப்பப்பட்டோம். லிங்கம் தமிழில் சித்தி அடையாதபடியால், மேல்படிப்புக்கு அனுப்பப்படவில்லை. நான் மட்டக்களப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லிங்கத்தை என்னால் மறக்க முடியவில்லை. அடிக்கடி அவனை நினைத்து வாய்விட்டுச் சிரித்தேன்.

வழக்கம்போல் ஒரு பண்டிகைக்காக நான் முல்லைத்தீவுக்குத் திரும்பியபொழுது லிங்கத்தைச் சந்திக்க முடியவில்லை. அவன் வன்னிக்குப் போய் போராளிகளுடன் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள். எனக்கோ லிங்கம் இல்லாத முல்லைத்தீவும் ஒரு முல்லைத்தீவோ என்று சலிப்புத் தோன்றியது. ஏனது வாழ்க்கையில் முதல் தடவையாக எந்தவித சிரிப்பும் இல்லாமல் லிங்கத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். அவன் பேசிய தமிழைத் தவிர அவனைப் பற்றி வேறெதுவும் தெரியாதவனாக, போராட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு அவன் ஓர்மம் கொண்டவன் என்பதைக் கண்டுகொள்ளாத பேதையாக இருந்துவிட்டேனே என்று என்னை நானே கடிந்து கொண்டேன். போராளிகள் முல்லைத்தீவைக் கைப்பற்றியபோது நான் மட்டக்களப்பில்தான் இருந்தேன். அதனை அடுத்து லிங்கம் ஊர் திரும்பிய சேதி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

அடுத்து பண்டிகைக்கு நான் மிகுந்த வேட்கையுடன் முல்லைத்தீவுக்குப் புறப்பட்டேன். முல்லைத்தீவுப் பேருந்து நிலையத்தில் இறங்கி வீட்டை நோக்கி வீறுநடை போட்டேன். கடல்காற்று என்னைத் தள்ளிக் கொடுத்தது. சீருடை அணிந்த போராளிகளின் வாகனங்கள் குறுக்கு மறுக்காய் விரைந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே அவர்களுடைய கொடிகளும் பதாகைகளும் படங்களும் காணப்பட்டன. தேவாலயத் தெருவில் கால் வைத்தபோது அதன் பெயர் ஆலயத் தெரு என்று குறுக்கப்பட்டிருந்ததை அவதானித்தேன். முல்லர் வீதியை நெருங்கிபோது அது முல்லை வீதி என்று மாற்றப்பட்டிருப்பதைக் கண்டேன். முல்லைத்தீவின் மூலைமுடுக்கெல்லாம் உருமாறியிருக்கும் உன்று உள்மனம் சொல்லியது.

முல்லைவீதியும் ஆலயத் தெருவும் குறுக்கிடும் சந்தியில் சீருடையும் தொப்பியும் அணிந்த காவலர் ஒருவர் ஒரு பீப்பாயில் ஏறிநின்று பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கும் திசைகாட்டிக் கொண்டிருந்தார். காவலர் திசைகாட்டுவது முல்லைத்தீவில் இதுவே முதல் தடவை. ஆதலால் அவர் திசைகாட்டும் சிறப்பை ஆசைதீரப் பார்த்து மகிழ்ந்தேன்.

நான் ஆலயத் தெருவிலிருந்து முல்லை வீதிக்குத் தாவியபோது, ‘நில்லடா, வேலாயுதம், நேரம் கொஞ்சம்… ‘ என்று அந்தக் காவலர் கூவினார். வசனத்தில் புரிந்தது லிங்கம்தான் என்று. சடாரென்று நின்று திரும்பிப் பார்த்தேன். தொப்பியும் சீருடையும் என்னை ஏய்த்துவிட்டன! ஏன்னைப் பீடித்த வியப்பும் சிரிப்பும் அகல நாழி ஆகிவிட்டது. லிங்கத்தின் வாய்ப்பேச்சில் மெய்மறந்த காலம் போய் அவனுடைய கையசைப்பில் குதூகலிக்கும் காலம் மலர்ந்ததோ என்று வியந்தேன்.

அப்புறம்தான் அவன் செய்யும் கடமையைச் சரிவர அவதானித்தேன். லிங்கம் இடைக்கிடை என்னைப் பார்த்து முறவலித்தாலும் தனது கடமையில் கண்ணும் கருத்துமாய் இருப்பதாகவே புலப்பட்டது. ஆனாலும் எனது கண்களுக்கு ஆட்களும் வாகனங்களும் ஏதோ ஒரு குழப்பத்தில் நகர்வது போலவே தென்பட்டது. நான் கண் வெட்டாமல் லிங்கத்தை அவதானித்தேன். ஆட்களும் வாகனங்களும் குழம்பிய காரணம் புரிந்தது. ஆலயத் தெருவில் ஏற்கெனவே விரைந்துகொண்டிருந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தாமலேயே முல்லை வீதியில் காத்திருக்கும் வாகனங்களை முன்னேறும்படி கைகாட்டினான். அதன் பிறகுதான் ஆலயத் தெருவில் அசையும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தினான்!

லிங்கத்தின் கையசைப்பு அவன் வாய்ப்பேச்சுக்கு நிகராய் இருந்தது கண்டு மெய்சிலிர்த்தேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குபீரென்று சிரித்துவிட்டேன். லிங்கம் என்னை முறைத்துப் பார்த்து, ‘பொத்தடா, வேலாயுதம், வாயை ‘ என்று கத்தினான். அதைக் கேட்டு நான் சிரித்த சிரிப்பில் தடுமாறிய வாகனங்கள் இன்னும் அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

அப்புறம் பீப்பாயை விட்டிறங்கிய லிங்கம் என்னை முல்லைத்தீவு காவலகத்துக்குக் கூட்டிச் சென்றான். நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது எங்களுக்குப் பின்புறமாக ஒரு காவலக ஜீப்பு வந்து நின்றது. லிங்கம் என்னையும் அதில் ஏறச் சொன்னான்.

முல்லைத்தீவு காவலகத்தில் லிங்கமும் வேறு தனிக்கட்டைகளும் தங்கும் மாடத்துக்கு அவன் என்னைக் கூட்டிக்கொண்டு போனான். தனது கட்டிலில் என்னை இருக்கச் சொல்லிவிட்டு, ஒரு பணியாளைக் கூப்பிட்டு, ‘கொண்டுவா வெட்டி இளநீர் இரண்டு! ‘ என்று சொன்னான்! நான் அட்டகாசமாய்ச் சிரித்தேன். பணியாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு போய்விட்டான். லிங்கம் என்னைப் பார்த்து முறைக்க முறைக்க நான் தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தேன். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு லிங்கம் தெரிவித்த சங்கதி என்னைத் துணுக்குற வைத்தது:

‘கொடுத்துவிட்டேன் சில்வாவுக்கு முதலும் வட்டியுமாய்! ‘ என்றான் லிங்கம்.

‘ஐயோ, பாவம். அப்படிச் செய்திருக்கக் கூடாது ‘ என்றேன் நான். அதை அவன் காதில் விழுத்தவில்லை.

‘ஒரு காலம் சில்வாவுக்கு, ஒரு காலம் லிங்கத்துக்கு ‘ என்றான்!

‘லிங்கம், சில்வா உனக்கு வேண்டுமேன்றே அடிக்கவில்லை. அவனை நீ என்ன செய்தாய் ? ‘ என்று கேட்டேன்.

‘அறைந்தான் தெரியுந்தானே என்னைக் கையாலே அவன் ? ‘

‘தெரியும். ‘

‘உதைத்தேன் அவனைக் காலாலே நான்! ‘

‘கொடுமை! கொடுமை! ‘

லிங்கம் என்னை முறைத்தான். இப்பொழுது எனக்குச் சிரிப்பு வரவில்லை. எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ‘பாவி, என்ன காரியம் செய்தாய் ? ‘ என்று கத்தினேன். லிங்கம் திகைத்துப் போனான். அப்பால் நடமாடிய காவலர்கள் எங்களை ஓரக் கண்ணால் பார்த்தார்கள். எனது வாழ்க்கையில் முதல் தடவையாக லிங்கத்தின்மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அவனிடம் சொல்லிக் கொள்ளாமலேயே புறப்பட்டுவிட்டேன்.

லிங்கம் எனது கையைப் பிடித்து இழுத்தான். ‘சில்வா என்ன ஆனான் ? ‘ என்று கேட்டேன்.

‘இருக்கிறான் சிறையிலே வன்னியிலே. கதைக்கிறான் நல்ல தமிழ் தனிமையிலே ‘ என்றான்.

இந்த லிங்கத்தை எண்ணிச் சிரிப்பதா ? அழுவதா ?

manivel@hotmail.com

Series Navigation