முப்பருண்மையோடு நீர்கீழ் நிழலும் பிரும்மராஜன் எழுத்தும்

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

மாலதி


‘புரிந்து

புரிந்து

புரியாதிருந்து

இகழ்ந்து எக்காளமிட்டு

புனையப்படாமல் கிடக்கும் கச்சாப்பார்வை

களையப்படாதிருக்கும் போலி நான்கள் ‘

இந்த வரிகள் கவிதைத்தளத்திலிருந்து பிய்ந்து வேறிடத்தில் விழுந்து வேறெதையோ கூட புரிய வைப்பதாகலாம். இருப்பதற்கும் கண்டுபிடிக்கப்பட்டதற்குமான நீண்ட சச்சரவை நான் ஞாபகப்படுத்தியதாகவும் கொள்ளலாம். காலாதீனப் படாமல் விலகும் வரிகள் தம்மிடை ஒப்புக்கொடுக்கப்பட்ட நரம்புகளில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. காலம் மட்டுமல்ல, எதையுமே சொந்தம் கொண்டாடாத ,விட்டு விலகின அகங்கார எழுத்தாக பிரும்மராஜனின் எழுத்து அடையாளப் படுகிறது.

அதே சமயம் தழுவின நிழல்களைத் தாங்கியவாறு இருண்மைக்கும் கற்பிதப்பட்ட புரியாமைக்கும் இட்டுச்செல்கிறது.

பிரும்மராஜனின் முன்னெடுப்புக்கள் யாவும் வியப்புக்குரியவை. பிரும்மாண்டத்தின் கம்பீரமும் கீழ்மையின் அழகியலும் ஒரு சேர கவிஞரின் புது இயத்தில் சேரும். கடல் கவிதைகளையும் ‘வேனிற்கால உருவகம் ‘ வரிகளையும் மீட்டும் படித்துப் பார்க்கலாம் ,பிரமாணிகத்துக்கென.

‘நாம்: அறியப்பட்டதன் அறியா ஆம்கள்

நானின்

நீ : துல்லியமான இல்லையின் எல்லை

பார்த்ததின் கேட்டதின் கேளாமை

நினைவு மீட்பில் சொற்சாட்டை ‘

போன்ற அமைப்பாக்கங்களில் சாத்தியப்பட்டு ,ரீதியில் இல்லாத செம்மைப்பட்ட கவிதைகள், மொழியின் பிளவுகளைக் குறி பார்த்து தகர்த்து வாசகனின் மனக் குழிகளில் தன் சார்ந்த அனுபவங்களைத் தோண்டுபவை.

கட்டுரையை குணக்குறியீடுகளால் அடுக்கிக்கொண்டே போவதில் சம்மதமில்லை. இருந்தும் அந்தந்த கவிதைகளில் நாட்டப்பட்ட புதிய கொடிக்கம்பங்களைப் பிடுங்கி எறிவது யாருக்கும் இயலாத காரியமாயிருக்கும்.

புராதன இதயம்,நெய்தல் தேசம், சித்ரூபிணி,கடல் வரிசைகள் போன்ற கவிதைகள் கணிக்கப்படக்கூட முடியாத தொலைவில் உச்சம் பெறுகின்றன.ஒரே மொழிப்பரப்பில் வெவ்வேறு உச்சங்களும் ஒன்றற்கொன்று தொடர்பில்லாத தளங்களில் கண்டெடுக்கப் படுகின்றன.

எந்த வகையிலும் தன்னைத்தானே முன்னோடி என்று நிறுவியதில்லை இந்த எழுத்து. எனினும் இதன் வகைமையைக் குறிப்பதற்கான சொல்லாக்கமோ மதிப்பீட்டுமொழியோ இன்னும் உருவாக்கப்படவில்லை வாசக வட்டத்திலிருந்து.

தன் வகைக்கவிதைகளை இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார் என்பது விஷயமில்லை. அவற்றை அணுக முடியாத தொலைவில் இன்னமும் வாசகவட்டம் இருப்பது தான் செய்தி.

பிரும்மராஜன் கவிதைகளே சிலசமயம் வாசகப்பிரதியின் அமைப்பாக இயங்கும்.

‘புதிய கில்லட்டின் ‘ போல.

‘அதன் சாலைகளில் டாங்குகளை மறிக்கும்

மணல் மூட்டைத்தடுப்புகள் அடுக்கிய கவிதை

கேள் நினைவில் முடிவற்ற அறைகளில்

பாடியபடி இருக்கும் இசைத்தட்டு முறையீடு

விடுமுறை விமர்சகனுக்கு அடிபணியா

புதிந்த பாணி…….. ‘

இப்படிப்பட்ட வரிகளில் விழும் சிதறல்கள், அப்படியொன்றும் படிநிலைக்குள்ளாகாத , அமைதியின்மையின் படைப்பாளியைத் துளிப் போல வெளிக் காட்டி, ‘இக்கவிதை மனுவைச் சமர்ப்பிக்கும் யான் உமது ‘ என்று அடக்கமாகி முடிகின்றன.

‘நலனை நோக்காச் சொல்லும்

பலனைப் பாரா எழுத்தும் ‘

என்கிற மாதிரியில் முகம் பார்க்கும் தரையாகப் பளிங்கு தளம் வடிவங்களைக் களைந்து வகைமைகளைத் துறந்து வாசகனைக் கிறு கிறுக்க விடும் .

வட்டமாகவோ செவ்வகமாகவோ முக்கோணமாகவோ பழக்கப்பட்ட தளம் ,

‘சுய சித்திரத்தில் வான்கோ

வெட்டிக்கொண்டான் ஒரு காதை

கட்டுப்போட்டு அதையும் படமெழுதி

சுக்கான் பிடித்துப்புகை விட்டான்.

அந்தணர்க்கந்தணன் சொன்னான்

பிட்டும் பிடி சாம்பலும்

சொந்த மண்ணும்

சமமே சமம் ‘

என்கிற வரிகளின் ‘வான்கோ ‘வில் [self portrait with a cut ear எழுதிய வின்செண்ட் வான்கோ] அறியாத வாசகனை கால் நழுவ விடும்.. புதிய தளம் ‘நிலாத்தாளம் ‘ போட்டுத் தடுமாற விடும்.

ஒட்டிக் கிடந்து மாய்ந்து தேய்ந்து படைப்புகளோடு தேனீக்களாக பிற படைப்பாளிகள் சுற்றிக் கிடக்க, பிரும்மராஜன் தன் படைப்புகளை எறி குண்டுகளாக வீசி எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் விலகி ஓடுகிற, தீவிர வாதி போல செயல் படுவார்.

தேனடைச் சுற்றீசல் தனம் அவருக்கு நேராத காரணம் படைப்பிலிருந்து தன் ஆளுமையை அவர் சுருக்கிக் கொள்வதாக இருக்கலாம் அதே சமயம்அவர் பெரும்பாலும் முரண்பட்ட கருத்துக்களை உதிர்க்காமல் போவதையும் குறிப்பிடலாம். சமீப காலத்தில் சிறு முரண்களை வசன நடையில் அவர் செய்திருப்பதையும் முணுமுணுப்புகள் அறிவித்ததுண்டு. ‘அவர் கருத்து சொன்னால் அல்லவா முரண்பட ? ‘ என்று சில நண்பர்கள் அவரது நடுநிலைமையைக் கிண்டலடித்ததும் உண்டு. After all படைப்பு வேறு படைப்பாளி வேறு அல்லவா ?

பாலியக்கூறுகள் கவிதாம்சங்களில் அதிகப்படியான ஜரிகை சுற்றலின்றி ‘spade is a spade ‘ என்கிறபடி வருவது குறிப்பிடத்தக்கது, பாலியத்தின் பூகோளத்தையோ மனவியல் கூறுகளையோ எங்குமே ஜ்வலிக்க விடாமல் உள்ளது உள்ள படியே சொல்லிப்போவது ஒரு வித அழகியலில் வடிப்பதாகவே அமைந்து விடுகிறது. யதார்த்த விவரணையில் கற்பித காவ்ய வர்ணம் பலசமயம் சகிக்க முடியாமல் போய் விடும் அல்லவா ? ஓரிடத்திலும் மனப்பள்ளம் இல்லாமல் செயல் படுவது பிரும்மராஜனின் இன்னொரு அதீதம்.

அதாவது திரும்பத் திரும்ப ஒரே கருவை , ஒரே உணர்வை, ஒரு படிமத்தை மனப்பள்ள வயப்பட்டு சொல்லி வருவது கவிஞர்களுக்குப் பொதுவான விஷயம். பித்தர், பேதை, ப[க்]த்தர் [பிரேமிகள்] வரிசையில் கவிஞர்கள் உண்டே! இப்போது ஒரு சின்ன அறிமுகம் என்னைப்பற்றி. கட்டுரைக்குச் சம்பந்தப்பட்டது தான்.

1993ல் என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சிறு பத்திரிகை ஒன்றைப் பார்த்தேன். அதற்கு முன் ஆத்மாநாம் மரணம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் பெங்களூரில் ஒரு தோழி மூலம். தோழிக்கு மிக நல்ல ப்ரக்ஞை இருந்தது சிறு பத்திரிகை இலக்கியம் பற்றி. என்ன காரணத்தாலோ அவள் எனக்குப் பரிச்சயம் ஏற்படுத்தி வைக்கவில்லை. முதல் முறையாக ஒரு கணையாழி இதழைப் பார்த்தபோதும் உள்ளடக்கம் எதுவும் என்னைத் தாக்கவில்லை. கணையாழியின் கடைசிப்பக்கம் சுஜாதாவால் எழுதப்பட்டு வந்தது. அதை மட்டும் என்னால் ரசிக்க முடிந்தது. பின் இன்னொரு தோழியின் தூண்டுதலின் பேரில் வத்சலா எழுதிய ‘வெறுப்பைத் தந்த விநாடிகள் ‘ படித்தேன். இப்போது கலை படிந்து விட்டது. எல்லாம் படித்தேன். பழைய சுபமங்களா,காலச்சுவடு, இதழ்களைத் தேடித்தருவித்துப் படித்தேன். ஏதோ எனக்குள் அணுக்கமான ஒன்றைச் சரி பார்த்த திருப்தி வந்தது.1996-97 களில் தான் என் கவிதைகளை எனக்கு எழுதத் தோன்றியது. [கல்லூரி நாட்களில் விட்ட பொறியை] சிறு பத்திரிகைகளின் தாக்கம் என்று அதைச் சொல்லமுடியாது. 1996ல் எனக்குக் கிடைத்த ஏதோ ஒரு வகை விடுபாடு கவிதை எழுதுகிற அடாத செயலை என்னில் உந்தியது என்று சொல்ல முடியும்.

அத்துடனன்றி 1992ல் கட்டுரைகளும் சிறு கதைகளும் எழுத ஆரம்பித்த நடவடிக்கைக்குள் பூடகங்களைப் புதைத்து வைக்க முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அப்போதும் கூட ஒரு கவிதைக்குண்டான அந்தஸ்தோ அதன் வகைமைகளோ அதைக் குறித்த பேருவகைகளோ எனக்குப் பிடிபட்டிருக்கவில்லை. எப்போதுமே பேசப்படும் விஷயம் முக்கியம். பேசும் நபர் அல்ல. ஈர வெட்டிலிருக்கும் என் படிப்பனுபவம் பல புதிய உலகங்களைக் கண்டெடுத்ததும் அவற்றுள் பிரும்மராஜன் படைப்புலகத்தை முன்னெடுத்ததும் பெரிய ஆச்சர்யக்குரிய செய்தியல்ல.

‘முப்பருண்மையோடு நீர் கீழ் நிழலும்-பிரும்மராஜன் எழுத்தும் ‘என்கிற கட்டுரைத் தலைப்பை நியாயப்படுத்த எனக்கு கட்டாயமிருக்கிற்து. அதற்கு முன் இன்னும் சில குறிப்புகள்.

என் மனசுக்குப் பட்டவரையில் பிரும்மராஜனின் குறுக்குக் குறிப்பீடுகள் ,மேதாவித்தன்மையை எடுத்துக்காட்ட முற்பட்ட அதிகப்பிரசங்கம் என்பதையும் விட ,தன் வாசக நேர்மையின் பறை சாற்றல் என்பதையும் விட , தவிர்க்கவே முடியாமல் வந்து விழுந்து விடுகிற அறிவு அனுபவக் கலவைகளின் உண்டை உருளைகள் என்பது நிஜமாயிக்கலாம். அறிவு, குறுக்கீட்டு வரிகளாகவும் , அனுபவம் இடையீட்டு வரிகளாகவும் விழுந்திருக்கலாம். கொண்டுகூட்டுப் பொருள் செலவை அதிகம் நிரப்பி செய்தி வைப்பதும், மையம் கலைப்பதும், முடிவுகளை, பிரசாரங்களை நிறுவுதல்களை, தீர்த்துக் கட்டுவதும் பிரும்மராஜன் கவிதைப் போக்கு.

கண்ணாடித் தன்மையையும் புதிர்த்தன்மையையும் ஒரே சமயத்தில் கொண்டதென்று அவற்றைக் குற்றம் சாட்ட இயலும். முக்கியப் பொறுப்பைத் தலைப்புகள் ஏற்கின்றன. யுக அந்தரத்தில் ஒரு ஹரன், பித்தன் இழக்கும் நிலா , அணில் யுவதியுடன் கனவில், தொப்புள் தாமரையின் எஃகு , என்பதும் ஒன்பதும்+1 ….என்ன தலைப்புகள் ? தலை சுற்ற வைக்கவா ? அடுத்து கவிஞர் தேர்ந்தெடுத்து உடன் வெளியிடுகிற சித்திரங்கள்.

நீர் கீழ் நிழல் என்று நான் குறிப்பிட்டது மொழிபெயர்ப்பு முகமான கவிஞரின் பிரக்ஞையாவது எப்படிதன் கருவறையுள்ளும் செயல்பட்டு விதையூறல்களை வலிந்து தருவித்து மொழிக்குள் மொழியாகப் புகுத்துகிறது என்பதைத்தான்.அதாவது ஒரு புது வாசகனுக்கு ஒரு மொழி பெயர்ப்பு வடிவத்தைப் படிக்கிற அனுபவத்தை முதலில் ஏற்படுத்தி அதற்குச் சார்பாக நேரடி மொழிபெயர்ப்பு வரிகளையே கையாண்டு [உதாரணம் ‘கப்பல் நிறைய முட்டாள்கள் ‘] அதில் ஏமாந்து கை துடைத்து வெளியேற யத்தனிக்கும் நேரத்தில் மளுக்கென்று கைவாங்கி , உள்சுரப்பிகளில் ஊற்றுக்கண் தேடியலைந்து ,அவற்றோடு பொங்கி ,மணம் அதிர்வித்து, மனம் இறங்கி உள்ளுறையும் வரிகள் அவை.

‘எங்கோ புரிதல்கை

இங்கோ புரியாக்கால் ‘

‘செக்கிழுத்து உப்பெடுத்து

பூங்காவில் சரமாரியாய் சுடப்பட்டு

இறப்பது மட்டுமா வரையறை

மிஞ்சும் ஒரு சொட்டு பாதரசம்

ஒரு நாளில் பேசித் தீர்வதில்லை

கிழட்டு வேதாளமே ‘

‘பிறகின் பக்கங்களை

அழகாக்கும்

கடல் காக்கைகள் சில ‘

‘குடலறுத்துக்கிடக்கும் கேசட் டேப்

முள் துற்ந்து நிற்கும் தவசிக் கள்ளி ‘

‘சிமெண்டை உண்டு

வீடுகளாய் மாறும் மனிதர்

நித்திரையில்

தொப்புள் தாமரை

எஃகிலாகும் ‘

இப்படி வரிகள் சாட்சி.

இதுவும் போதாது நீர்கீழ் நிழல் என்ற நிலையை விளக்க.

அசலல்லாதது போலத் தெரியும் அசல், அசல் போலத் தெரியும் அல்லது, என்று மாறி மாறி கல்லும் கனிமமும், மண்ணும் மணியும் போல ஊடிரண்டாகி ‘கலங்காரி செய்நேர்த்தி ‘ போலப் படைப்பாகிவிடுகிறது. புராணிகத்தை எகத்தாளத்துக்கு உள்ளாக்காமலும் அதே சமயம் போதனைக்கோ ஒளி கூட்டலுக்கோ எடுத்துச்செல்லாமலும் கவிதையைக் கையாள்வது ஒரு தனிப் போக்காக எனக்குப் படுகிறது.

எதற்கெடுத்தாலும் படிமத்துக்குள் போகிற கெட்ட பழக்கம் களைந்திருக்கும் நிறைய கவிதைகள் உண்டு பிரும்மராஜனில். பாஷையின் வளமையை விளிம்புகளினின்றும் நீட்டி புதிய பிரயோகங்களுக்கும், பழைய பிரயோகங்களின் புதிய உபயோகத்திற்கும் வழி விட்டிருப்பவை நிறைய வடிவங்கள்.

‘உன்னையும் ஒட்ட ஒழுகு ‘

‘தீராப்பிணக்கு இப்பெண்மணிகளுடன் எந்நாளும்

என்பதால்

கடலடி சரணம் என்று ‘

‘அபயம் கேட்கும் மனம்

நித்ய கன்னியிடம்

பேசா மடந்தையெனில் ‘

‘நான் ஒருவனே உன் மகரந்தத் தோற்றுவாய்

அறிந்த குழந்தை முன் பின் என்பினும் ‘

‘…………..

தாய் ஆகுமப் பிறப்பிடம் ‘

……….

பிட்யூட்ரி செய்திகள் செவ்வனச் சேர்ந்தவனின்

மாது நீ ‘

‘அஷ்ட திக்குகளை ஆள்வது யாராம் இன்று ‘

‘அத்துயர் மாற்றாதே அது தளம் ஆகும் ‘

போன்ற வரிகள் சுய விளக்கம் பொதிந்தவை.

முப்பருண்மை என்று குறிப்பிட்டது கவிஞர், மொழிபெயர்ப்பாளர்,

பத்திரிகையாசிரியர்[மீட்சி] என்கிற

மூன்று நிலைகளை என்று சொல்ல வேண்டும்.

எனினும் நீர்கீழ் நிழலோடு கூடிய முப்பருண்மையில் ,எது அசல் எது நீர் கீழ் நிழல் என்பதற்கான கோடு புதைந்து முப்பருண்மை சுழன்று முழு கோளமாகி மேல் பாதி கீழ் பாதி புரிபடாமல் ,ஒரு புதுவடிவமாவதைத் தான் தலைப்பாக்கி யிருக்கிறேன் என் கட்டுரைக்கு. கவிதைகளில் அதிக பட்ச romantism கவனமாகத் தவிர்க்கப்பட்டும்கூட மீறின கசிவுகள் சொட்டுவது மானுடத்தின் அற்புத நிதர்சனமாக வெளிப்பாடு பெறுகின்றன. உதாரணம்….

‘பிரக்ஞை முகம் வியர்த்துப் பூக்கும்

என்னுடலில் உன் மனத்துகள்

உன் சருமத்தில் செழிக்கும் கிளிப்புல்

உறக்கத்திலும் திறக்கும் தாள்

மெளனமாய்ப் பதியும் என் சொல்

வார்த்தையால் வார்த்த உடல்

சொல் பதிந்து

பொருள் பெற்றுக் கிடக்கிறது

காலம் எதையும் எழுதிச்செல்லும்

உடைகளின் நிறம் எதுவானாலும்

அந்தக்கண்ணாடி வீறிடுவதில்லை

தேம்பலோ முனகலோ கிடையாது

உன் குரலை மூன்று பாடலுக்கு

விற்று விட்டாய் நானும்

அரைத் திசுக்களாய் பிரிந்து

கரைவேன் பசும் பாலைவனத்தில். ‘

தேய்ந்து போன,காலாவதியான வெளிப்பாட்டு முறைகளை முழு முற்றாக நிராகரித்த கவிதையாக்கத்துக்கு ‘நுரையீரல் அமைதி ‘ சான்றாக அமையும்.சார்புக்காக நாகார்ஜுனன் எழுதிய ‘பிரும்மராக்ஷசின் பிரதி என்கிற பிரச்னைப்பாடு ‘ கட்டுரையை வாசித்து விடவும். எஸ்ரா பவுண்டின் மிகப் பிரபலமான கொள்கையைக் கடைப்பிடித்தாற்போல ‘make it new ‘ எங்கும் தென்படும், பிரும்மராஜனில். சாதாரண வார்த்தைகளைப் புதிதாகக் கோர்த்திருக்கிற, [கீழ் வரும்] கவிதையைப் பார்க்கலாம்.

‘எனத் தந்தானை

தன்னா தந்தோம்

தன்னான தன்னாதிந்தோம்

திக்கிலாத சிக்கிலாத

திறனிலா தரமிலா தத்தோம்

தகதோம் தினதோம்

தித்தித்தோம் தத்வமசி

தப்பித்தோம் பிரணவாசி

எப்பித்துப் பிடித்து

மீள்வோம் சொல்வாசி ‘

இறுக்கம், புதிய படிமங்கள் ,புதிய லயங்கள், ஆங்கில சமிஸ்கிருத வார்த்தைகளை இடைநிறுத்துதல் கவனச்செறிவு, தெளிவற்ற பல வரிகளுக்குப் பதில் ஒரே ஒரு கச்சிதமான சொல்லை வைத்தல் போன்ற எல்லா பின் நவீனத்துவ யுக்திகளும் கைப்படுகின்ற் விதத்தைப் பார்க்க முடிகிறது. சில வார்த்தை அடையாளங்களாய், ‘வக்கிரப்பெருவழுதி ‘யையும், கல்பழம், கரும்புப்பூவையும் சொல்லி விடலாம்

புதிய கட்டுமானத்தில் நேரும் அசாத்தியத்தன்மை வாசகனை தளத்தடி வேலை முடித்து,

படித்து,திரும்பி

வரச்சொல்லி சவால் விடும்.

‘அரசமரத்தைப் பரப்பியது

புத்த பிக்குகள்

செய்தது தவறு.

பனை எங்கே ?பதர் எங்கே ? ‘

‘நீலத் திமிங்கிலங்களை வேட்டையாடும்

ஜப்பானியர்களின் நியாயம் ‘

‘யாருடைய தலையையோ சீவுவது போல

பென்சிலை சீவினார் ‘

‘………………………..முடியாது

சககிழத்தியாகக்கூட இந்த மலர்கள்

பெருந்திணை என்று கூடச் சொன்னார்களிதை ‘

‘தாந்தேயின் காதலியும் நீதானாக ‘

இப்படி நிறைய மூட்டை முட்டையாய்.

உருவகம்[imagism] தாண்டி அருகருகே அமைத்தல் [juxtaposition] என்பதையும் மீறி ஒன்றை ஞாபகப் படுத்தி இன்னொன்றைக் கோடிட்டு விடும் இரண்டுக்குமான வார்த்தைகளைக் கண்டெடுத்துக் கட்டமைக்கும் பாணி அதிகமாய் தமிழில் வாசகப்பிரதியாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பிரும்மராஜன் விலக்கு. மேலோட்டமான பகுதிகளும் கவிதையின் முழு சக்தியை காற்றாலை நகர்வதை ஒத்த வெளிக்காட்சி எற்படுத்துவது உண்டு.

‘பூவென்று குழலூதி மனமெல்லாம்

குழந்தையெனக்கூட்டமாய்

கூடிப் பல்கி

ஆகாயத்தை நெருக்கி மூச்சடைத்து

சிறகுச் சொற்கள் ஊமையாகி

பட்டெனப் பலூன் உடையும்

உடையும் பரிமாணம் நான்கு. ‘

சடங்கின் தீவிரத்துடன் கவிதைப்புதிர்கள் ஒருங்கிணைக்கப் பட்டிருப்பினும் யதார்த்த வாழ்வின் குழப்பங்களையும் நம்பிக்கையிழப்பு ,திருப்தியின்மைகளையும் கரிசனமாக வரையும் வரிகளுண்டு.

‘குரல் சிசு அழுது தேம்பும்

பொடிமணல் அற்பம் அதற்கும்

வாய் பிளந்து யுகம் நகர்த்தும்

சிப்பியை நகைக்கும் மீன்கள் குலம் ‘

கவிதைக்கான கச்சாப்பொருள் உணர்ச்சிகள் என்பதில் சந்தேகம் இருந்ததில்லை. நித்தியமான பொதுமைப்பட்ட உணர்ச்சிகளின் நொடிகளை இருத்துவதேயன்றி வேறு பொறுப்பில்லை கவிதைக்கு. கருத்துருவங்களுக்கு கவிதை கருவியாகக்கூடாது. மதத்திற்கோ தத்துவத்திற்கோ நாட்குறிப்பு, வரலாற்றுப்பதிவுக்கோ கவிதை பதில் இல்லை. படைப்பாளி , வேறு மதிப்பீடுகளை விளக்கி, மறுத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ன ? பிரும்மராஜனின் கவித்துவ சாதனையிலும் கருத்துருவங்களுக்கு உடன் போன நிகழ்வுகள் உண்டு. உதாரணங்கள் எல்லாருக்கும் தெரியும்.மரபு சார்ந்த ஒழுக்கப்பாடுகளின் மீது நவீன தொங்கல்களை நிறுத்தி அவற்றினூடு நித்தியத்தையும் பத்திரத்தையும் விரும்பும் கலைஞனாக, நிகழில் பழைய மதிப்பீடுகளை உள்ளடக்கிவிடும் சித்துவேலை கைவந்திருப்பது பிரும்மராஜனின் இன்னொரு பலம்.

சூசகங்கள் இல்லாத பூடகங்கள் சில சமயம் அவர் வாசகனை எரிச்சல் அடையச் செய்கின்றன. உதாரணம் ‘சித்ரூபிணி ‘. அந்த பல்பகுதி நீள் கவிதை பல காவ்யாம்சங்களைக் கொண்டது. கவிஞரின் நீண்ட கவிதைகளைப் பற்றி மட்டுமே ஒரு கட்டுரை எழுத இயலும். எனினும் சூசகங்கள் இல்லாத படிமங்கள் இந்தக் கவிதையில் அலைக்கழிக்கின்றன.

அமைப்பொப்புமை கவிதைப் பரப்பில் மெழுகப்படாததால் கல்முள் தடுக்கலும் உண்டு. இந்த மாதிரி கவிதைகள் பிரும்மராஜனை நாலாம் தரக் கவிதைகளின் படைப்பாளியாக்குகின்றன, William Fauckner சொன்னபடி. அவரை ஒருவர் கேட்டார். ‘உன்கள் எழுத்தை மூன்று முறை படித்துப் பார்த்தேன். எனக்குப் புரியவில்லை. என்ன செய்வது ? ‘ என்றார். ஃபாக்னர் சொன்னார் ‘நாலாம் தரம் படியுங்கள் ‘என்று.

பிரும்மராஜனின் கவிதை புரிவதில்லை என்பது மிகப் பரவலான குற்றச்சாட்டு. என் புரிதலை சில இணைக் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறேன். அதாவது, அவர் கவிதைக்கருத்தில் என் கவிதை செய்திருக்கிறேன் என் வாசக நேர்மைக்கு அடையாளமாக.

உதாரணத்துக்கு, இது பிரும்மராஜனின் ஒரு கவிதை


மொழி மீறிய காதல்[கள்]

***

இந்தச்செய்தி உன் யோனி வரை சென்று சேருமா

அன்றி அப்படி ஒன்றுனக்கு உளதா என்ற அறிதலின்றியே கூட

பச்சை உடல் மீது வெண்மையில் பின்னிய தேமல்களின் சருமத்தில்

எச்சில் அதரங்களை

குவித்துத் தொட்டேன்

என் சகதியின் ஆழ் இருள் நரகத்தில் புதைந்து கிடக்கிறது

உன் தாவரப் பெயர்.

மொழி மீறிய காதல்கள்

எழுதும் பலகையில் விரல்கள் தட்டும்போது

முதல் தொடுதலின் பதற்றக் காய்ச்சல் போல்

விரல்கள் பழுத்து விட்டன எலெக்ட்ரிக் பழங்கள்

மனிதச்சி ஒருத்தி சொன்னதை

என் தீட்டுப்பட்ட சொற்களை மீறி எப்படியாவது

வாழ்வின் பிராணன் ஊறிய என் தோல் செல்கள்

உனக்குத்தெரிவித்தாக வேண்டும்.

உன் இதயம் உன் லிங்கத்தில் துடிக்கிறது[முன்னவள் சொன்னாள்]

தாவரக்காதலி

என் மனம் உன் பச்சையத்தின் தொடர் மூச்சுகளின் ரிதங்களை

பின் வருடியும் செல்கிறது.

ப வில் தொடங்குவதன்றி வேறெந்த வர்ணமும்

நமக்கிடையில் நுழையாது, முடியாது

சகக்கிழத்தியாகக்கூட இந்த மலர்கள்.

பெருந்திணை என்று கூடச் சொன்னார்கள் இதை

வக்கிரப் பெருவழுதி நான்

எதை மறுப்பேன் ?


இப்போது இணை கவிதை.

என் முத்தம் உன் ஆழங்களை

நனைக்கிறதா அது

உனக்குக்கூடுமா என்பது

அறியாமலே உதடு குவித்தேன்.

க்ளோரோஃபில் மங்கிய

உன் வெளிர்பரப்பின் இலை மேனியில்.

உன் பேர் கூட

என் மூளை இருட்டுச்செல்

குவியல்களில் எங்கோ ஒளிந்திருக்கிறது

உனக்கான என் காதல்

பொருந்தாக்காமம் எனப்படலாம் எனினும்

விரல் வழி மின்சாரம் பாய்ச்சிய

என் சக மனுஷி

சொல்லிக்குதறினாள் என்னை

அவளிடம் பயின்ற அதே

ஸ்பரிஸ பாஷையில் உன்னிடம்

பகிர வேண்டும் என் துக்கத்தை

அவள் சொன்னாள்

என் மனமெலாம் உடல் தானாம்

நீயறிவாயென் தாவரத்தோழி!

உன் மூச்சின் புரிதலும் எனக்குண்டு

மலர் வண்ணமும் வேண்டிடாமல்

உன் பசுமையை யாசிப்பேன் நான்

என்னிடம் இல்லாத வக்கிரத்தை

யாரிடம் எடுத்துச்சொல்ல ? ‘

***

முடிந்தது

கவிஞர்களை சாகும் வரையோ, மணிவிழா, முத்துவிழா,வைரவிழா வரையோ காக்க விடாதீர்கள். குறைந்த பட்ச புரிதலை தூக்கி வீசி எறிந்து விடுங்களேன் இயல்பாகவோ ஆக்ரோஷமாகவோ!

BY மாலதி

பிரும்ம ராஜன் படைப்புலகம்… சென்னை கவிதைக்கணம் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது.

————————————

பிரம்மராஜன் பற்றி திண்ணையில் :

  • கலாப்ரியா பிரம்மராஜன் பற்றி

    பிரம்மராஜன் கவிதைகள் திண்ணையில்:

  • கவிதை

    Series Navigation