வாகோ சோகக்கதை (1994)

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

ஜேம்ஸ் ஏ ஹாட்


(ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கையில் 1994 கோடைக்கால இதழில் வெளிவந்தது)

வாகோ மதக்குழு விசாரணை முடிந்துவிட்டது. அந்த சோகக்கதை நடந்து ஒரு வருடத்துக்குப் பின்னர் இந்த விசாரணை முடிந்திருக்கிறது. ஆனால், இந்தக்கதை சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய ஏமாற்றத்தில் ஆரம்பித்தது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

வினோதமான மதங்கள் என்னுடைய பொழுதுபோக்காக இருப்பதால் அந்தக் கதையை உங்களுக்குச் சொல்கிறேன்.

1830 ஆம் வருடம், அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் வசித்துவந்த வில்லியம் மில்லர் என்ற கிரிஸ்துவ பாப்டிஸ்ட் சபை மத போதகர், விலிலியத்தில் இருக்கும் டானியலின் புத்தகம் என்ற பகுதியில் இருக்கும் புரிபடாத தூரதரிசனங்களை வைத்து கணக்குப்போட்டு யேசு கிரிஸ்து, 1843ஆம் வருடம் மார்ச் மாதம் 21ஆம் தேதியிலிருந்து 1944ஆம் வருடம் மார்ச் மாதம் 21ஆம் தேதிக்குள் பூமியில் தோன்றுவார் என்று அறிவித்தார். உடனே அவர் தன்னுடைய கணக்கை மக்களிடம் விளக்கி எதிரே வரும் மாபெரும் அழிவை பற்றி மக்களை எச்சரிக்க ஆரம்பித்தார். 1840ஆம் வருடத்துக்குள் சுமார் 100,000 பேர்கள் அவரைப் பின்பற்றினார்கள்.

இவர் குறிப்பிட்ட விதிப்படி நேரம் வந்ததும், இவரைப் பின்பற்றுபவர்கள் ( ‘மில்லரைட்டுகள் ‘ என்று குறிப்பிடப்பட்டவர்கள்) பிரார்த்தனை பிரார்த்தனையாகச் செய்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. உடனே மில்லர் தன்னுடைய பைபிளை எடுத்து மீண்டும் கணக்குப்போட்டு தான் கணக்கில் தவறு செய்துவிட்டதாக அறிவித்தார். சரியான நேரம் 1844ஆம் வருடம் அக்டோபர் 22ஆம் தேதி என்று அறிவித்தார். அது அருகே வர வர, மத நம்பிக்கை தீவிரமாகக்கொண்டவர்கள் தங்கள் சொத்துக்களையும் வீடுகளையும் விற்றுவிட்டு மலை உச்சிகளில் அமர்ந்து சொர்க்கம் திறப்பதற்காகக் காத்திருந்தார்கள். மீண்டும் அதே கதை. ஒன்றும் நடக்கவில்லை.

பல மில்லரைட்டுகள் தங்கள் நம்பிக்கையை இழந்தார்கள். ஆனால் ஒரு மத்தியக்குழு தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. அதில் ஒரு சிறு குழுவினர் ஏற்கெனவே அக்டோபர் 22ஆம் தேதி இறுதிநாள் வந்துவிட்டதாகவும், அது சொர்க்கம் திறப்பதற்கு முன்மாதிரி நிகழ்வு என்றும், வெகு விரைவிலேயே யேசு கிரிஸ்து வானத்தை பிளந்து கொண்டு பூமிக்கு வருவார் என்றும் வலியுறுத்தியது. இந்தக் குழுவே செவண்த் டே அட்வெண்டிஸ்ட் Seventh-day Adventist Church என்னும் சர்ச்சை உருவாக்கியது.

இந்த செவண்த் டே அட்வெண்டிஸ் குழுவினர் வளர்ந்து 30 லட்சம் பேர்கள் கொண்ட சர்ச்சாக வளர்ந்தது. இந்த சர்ச்சில் இருந்த ஒருசிலர் இந்த சர்ச் போதுமான அளவு புனிதமானதாக இல்லை என்று கருதினார்கள். 1930இல் ஒரு லாஸ் ஏஞ்சல்ஸ் அட்வெண்டிஸ்டான் விக்டர் ஹ்யூடெஃப் என்பவர் மிக மிகப் பரிசுத்தமான ஒரு சர்ச் தோன்றி அவரை வரவேற்கத் தயாராக இருக்கும் வரைக்கும் யேசு கிரிஸ்து பூமியில் தோன்றமாட்டார் என்று அறிவித்தார். ஆகவே ஹ்யூடெஃப் வாகோ பகுதியில் ஒரு மிகப்பரிசுத்தமான நம்பிக்கைக்கொண்டவர்களுக்காக ஒரு சிறு குழுமத்தை ஏற்படுத்தினார். இதனை டேவிடியன் செவண்த் டே அட்வெண்டிஸ்ட் என்று அழைத்துக்கொண்டனர்.

அவை 1955இல் இறந்தார். டேவிடியன் செவண்த் டே அட்வெண்டிஸ்டுகள் இவர் மீண்டும் உயிர்த்தெழுந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தனர். அது நடக்காது என்று புரிந்தவுடன் அவரது மனைவி ஃப்ளோரன்ஸ் அந்த குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார். யேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை 1959இல் ஈஸ்டர் நாளில் நடக்கும் என்று இவர் அறிவித்தார். இவரைப் பின்பற்றும் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளைத் துறந்துவிட்டு தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு வாகோ பகுதிக்குச் சென்று யேசு கிரிஸ்து தோன்றுவதைக் காண விரைந்தார்கள். மீண்டும் ஒன்றும் நடக்கவில்லை.

மீண்டும், அதே போல ஏமாற்றப்பட்டோம் என்று உணர்ந்தவர்கள் வாகோ பகுதியை விட்டு காலி செய்ததும், அதன் மிக உறுதியான நம்பிக்கை கொண்ட குழு அங்கு தொடர்ந்து இருந்தது. அந்தக் குழுவில் இருந்த பென் ரோடன் என்பவர் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டு அந்தக் குழுவில் இருந்தவர்களை பிராஞ்ச் டேவிடியன்கள் Branch Davidians என்று பெயர் மாற்றம் செய்தார். மவுண்ட் கார்மெல் என்று அழைக்கப்பட்ட இந்த குழுவையும் தன் மனைவி லோயிஸ் மற்றும் மகன் ஜார்ஜ் ஆகியோரையும் விட்டுவிட்டு 1978இல் இவர் இறந்தார்.

வெகு விரைவிலேயே டெக்ஸாஸைச் சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி அடையாத 23 வயதான வெர்னன் ஹோவல் என்னும் அட்வெண்டிஸ்ட் இங்கு வந்தார். இவர் வெகு விரைவிலேயே 67 வயதான இந்த லோயிஸ் அவர்களின் காதலராகவும் ஆனார். இவர் மிகவும் ஹிப்னாடிக் சக்தி உடையவராகவும், மற்றவர்களை வெகுவிரைவிலேயே வரப்போகும் இறுதி நாள் பற்றி புல்லரிக்கும் படி பேசுபவராகவும் இருந்தார்.

அந்த குழுமத்தில் இருந்த ஒரு ஜோடியின் 14 வயது நிரம்பாத மகளை திருமணம் செய்து கொண்டார். டேவிடின் வீட்டை அங்கு ஸ்தாபிக்க கடவுள் அவருக்கு ஆணை கொடுத்ததாக அவர் அறிவித்தார். டேவிட் அரசர் போன்றே எண்ணற்ற பெண்களை திருமணம் செய்யவேண்டும் என்று கடவுள் ஆணை பிறப்பித்ததாக அவர் கூறினார். அங்கிருக்கும் ஏராளமான பெண்களோடு அவர் படுத்தார். ஒரு பெண்ணின் வயது 11 இன்னொரு பெண்ணின் வயதோ 50. டேவிட் அரசரால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தன்னுடன் படுத்த பெண்களுக்கெல்லாம் டேவிடின் நட்சத்திரம் என்ற அடையாள நட்சத்திரத்தை எப்போதும் அணிந்திருக்குமாறு வழங்கினார்.

லோயிஸ் ரோடன் 1986இல் இறந்தபிறகு அவரது மகன் ஜார்ஜ் இந்த ஹோவெல் அவர்களுடன் அந்த குழுமத்தின் தலைமைப்பதவிக்குப் போட்டியிட்டார். ரோடன் ஜெயித்தார். ஹோவெல் தன்னுடைய பின்பற்றுபவர்களைக் கூட்டிக்கொண்டு மவுண்ட் கார்மல் இடத்தைவிட்டு கிளம்பி நாடோடிகள் போல திரிந்தார்கள். பிறகு 1987இல் இவர்கள் திரும்பிவந்து ரோடன் அவர்களை தலைமைப்பதவிக்கு போட்டியிட சவால் விட்டார்கள்.

ரோடன் காவியத்தனமான ஒரு போட்டியை பிரேரணை செய்தார். கல்லறையிலிருந்து 85 வயதான ஒரு மூதாட்டியின் சடலத்தை தோண்டியெடுத்தார். யார் இந்த சடலத்தை உயிர்ப்பிக்கிறார்களோ அவரே இந்த மவுண்ட் கார்மெலின் உண்மையான தீர்க்கதரிசி என்று அறிவிக்கலாம் என்றார். ஹோவெல் திணறி நகரத்துக்குச் சென்று ரோடன் அவர்களை ஒரு சடலத்தை கேவலப்படுத்தியதற்காக கைது செய்ய போலீஸிடன் புகார் செய்தார். ஹோவெலும் அவரது துணையாளர்கள் 7 பேரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இருளில் மவுண்ட் கார்மலுக்கு வந்து இருட்டாக காத்திருந்தார்கள். ரோடன் தன்னுடைய யுஜி சப் மெஷின் துப்பாக்கியை எடுத்து இவ்வாறு உள்ளே நுழைந்தவர்களைச் சுட்டார். இவர் சற்றே கையிலும் நெஞ்சிலும் காயமடைந்தார். ஹோவலின் குழுவினர் கொலை முயற்சிக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்து ரோடன் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக ஜெயிலில் போடப்பட்டார். காரணம் இதற்குச் சம்பந்தமில்லாத ஒரு கேஸில் அபத்தமான வக்கிரமான வரிகளை நீதிமன்றத்துக்கு எழுதிக்கொடுத்தது. ரோடன் ஜெயிலுக்குப் போனதும், ஹோவெல் தன்னுடைய பின்பற்றுபவர்களோடு இணைந்து மவுண்ட் கார்மல் வளாகத்தைக் கைப்பற்றி தலைவரானார்.

இவர்களை கொலை முயற்சிக்காக நடந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்கள். பதவி இழந்த ரோடன் ஒரு ஆளைக் கொன்றதனால் அரசாங்க மன மருத்துவமனையில் சிறை வைக்கப்பட்டார். (சென்ற வருடம் அவர் அங்கிருந்து தப்பிவிட்டார்)

ஒரே தீர்க்கதரிசியாக ஆட்சி செய்த ஹோவல், தான் ஒரு தேவதூதன் எனவும், யேசு கிருஸ்துவின் இரண்டாம் வருகையை பூமியில் நிலை நிறுத்த தான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரச்சாரம் செய்துவந்தார். இஸ்ரேலுக்குச் சென்று அங்கிருக்கும் யூதர்களை கிரிஸ்துவத்தில் இணைக்க வேண்டும் என்று கடவுள் தனக்கு ஆணையிட்டதாகவும் கூறினார். யூதர்கள் கிரிஸ்துவர்களாக ஆகிவிட்டால், இறுதி நாள் வந்துவிடும் என்றும், அப்போது பெரும் உலகப்போரில் உலகம் அழிந்து மீதமிருக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்காக சொர்க்கமாக பூமி மாறிவிடும் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். ஹோவெல் இஸ்ரேலுக்குச் சென்றார். ஆனால் அங்கிருக்கும் யூதர்களை மதமாற்றம் செய்யமுடியவில்லை.

உலகம் முழுவதும் சுற்றிய ஹோவெல், ஏராளமாக தன்னுடைய மதத்துக்கு மக்களை மதமாற்றம் செய்வித்தார். இவ்வாறு மதம் மாறியவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் விற்று இவரிடம் கொடுத்து இவர் பின்னேயே வந்து வாகோ பகுதியில் இருக்கும் இந்த வளாகத்தில் குடியேறினார்கள். 1989இல் இவர் அந்த வளாகத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களும் இவரது மனைவியர் என்று அறிவித்தார். இவர் தவிர மற்ற ஆண்கள் எல்லோரும் உடலுறவில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவித்தார். சில திருமணமான ஜோடிகள் இதனை எதிர்த்தனர். இவர்கள் வெளியேறினார். மற்றவர்கள் இவரால் முழுதுமாக மூளைச் சலவை செய்யப்பட்டு இதற்கு ஒப்புக்கொண்டனர்.

1990இல் ஹோவல் தன்னுடைய பெயரை டேவிட் கொரேஷ் என்று மாற்றிக்கொண்டார். மாபெரும் இறுதிநாள் உலகப்போர் டெக்ஸாஸில் நடைபெறும் என்று பிரச்சாரம் செய்தார். அவரைப் பின்பற்றியவர்கள் ஏராளமான துப்பாக்கிகளையும் மெஷின் கன்களையும் வாங்கிக்குவித்தனர். விஷவாயு முகமூடிகள் இன்னும் பல போருக்குத் தேவையான தளவாடங்களை வாங்கிக்குவித்தனர்.

இந்த குழுமம் சட்டத்துக்குப் புறம்பான துப்பாக்கிகளை வைத்திருப்பது மத்திய அரசின் உளவுதுறைக்கும், அமெரிக்க மத்திய அரசின் ராணுவத்துறைக்கும் தெரியவந்தது. அவர்கள் வந்திறங்கி இந்த குழுமத்திடமிருந்து ராணுவத்தளவாடங்களை அகற்ற முனைந்தார்கள். பின்னால் நடந்தது அனைவரும் அறிந்தது.

வாகோ சோகக்கதை வரலாற்றில் நுழைந்துவிட்டது. ஜோன்ஸ்டவுணைப் போலவே. இன்னும் சூனியக்காரிகளை கொளுத்துவதும், இன்னும் வினோதமான நிகழ்ச்சிகளையும் போல இதுவும் வரலாற்றில் சேர்ந்துவிட்டது. நாம் நம் வாழ்க்கையை வழக்கம்போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதே நேரத்தில் நம்மில் சிலர் நம்பமுடியாத கற்பனைகளை நம்புவதற்கும், அதற்காக உயிரையும் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பது நம்மை சிந்தனையில் ஆழ்த்துகிறது.

‘The Waco Tragedy ‘ is copyright © 1994 by James A. Haught. All rights reserved.

http://www.infidels.org/library/modern/james_haught/waco.html

Series Navigation

ஜேம்ஸ் ஏ ஹாட்

ஜேம்ஸ் ஏ ஹாட்