முகம் பார்க்க மாட்டாயா ?

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

வேதா


எரிப்பாய் அணைப்பாய் உன் இஷ்டம்
எதுவும் கேட்காது என் உள்ளம்
தீயோ நீரோ பிரவாகம்
நீ கொடுத்தால் அது பிரசாதம்

கொடுக்கத்தான் மனமில்லை…
குறைந்துவிடும் என்ற பயமில்லை,
என்
பாசம் குழைத்துவிடும் என்ற பயமா ?

உன் உயிருக்குள் இருக்கும் என்னை
தட்டியெழுப்ப,
உனக்கேன் மனமில்லை ?

ஊரையும் , உன்னையும்,
நம்பவைத்து ஏமாற்றுகிறாய்!
உண்மையைச் சொல்லிவிடு,
உனக்கும் எனக்கும் இனி என்ன பேச்சு ?

உன்னைத் தோண்டிப் பார்….
உன்
உயிரோடு உயிராக உறைந்துவிட்ட
என்னைத் தெரியும்!!

உறங்கியதெல்லாம் போதும்,
உள்ளத்துச் சங்கிலியை
உடைத்தெறிந்து வந்துவிடு…..

நம்
உள்ளத்துக் காதல், – உன்
சின்னச் சின்ன செய்கையால்
வலுப்பெறட்டும்!

உன் உறவுக்கான என் காத்திருப்பு,
அந்த நிமிடங்களில்
முழுமையாய், முற்றுப் பெறட்டும்….

என்
உள்ளங்கைகளில் முகமேந்திக்கொள்ளும்
உன் வருகை
நிகழத்தான் வேண்டும்,
இனியும் இந்தக் கவிதைகளால்
என்னைக் காப்பாற்ற முடியுமென்று தோன்றவில்லை….
*********

pitaati@hotmail.com

Series Navigation