மாப்பிள்ளைத் தோழன்

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

கவியோகி வேதம்


மாப்பிள்ளைத் தோழன்-இவன்! மணமே டையில்

..மனக்கூச்சம் போக்க,என்னைக் கேலி செய்வான்!

‘மாப்பிள்ளாய்! பெண்அழகில் கண்ணை வைத்து

..மந்திரத்தை அல்வாபோல் முழுங்கா தேப்பா!

சாப்பிடாதே இங்கேயே அவளைக் கண்ணால்!

..சரியாக மந்திரங்கள் சொல்லிப் பின்னர்

கூப்பிட்டுப் பள்ளியறை போய்ப்பா ரப்பா!

..குனியாதே அவள்காலின் அழகைப்பார்க்க! ‘-

என்றெல்லாம் சொல்லிஎன்னைக் குட்டி யோன்தான்;

..எனக்காக என்றுசொல்லி காப்பி வாங்கித்

தன்வாயில் பலதடவை கொட்டி யோன்தான்;

..தனக்கிதுவே வாய்ப்புஎன்று அனைவ ரையும்

தன்போக்கில் அதிகாரம் செய்த வன்தான்;

..தடிமாடு! ‘சீட்டு ‘பெற்று விடியும் மட்டும்

நண்பருடன் விளையாடி எனைக்கேட் காமல்

..நம்செலவில் அனுபவிக்கும் அரட்டைக் கல்லி!

பயலுக்கே என்பொருட்டுப் பலரு டைய

..பலமான உபசரிப்பு; மணஅ ரங்கில்

பயல்வாயில் புகுந்திடாத ‘பாவை ‘ உண்டா ?

..பதிலுக்கு, கேலிசெய்யா, அனுப விக்கா

‘முயல்குட்டி ‘ அன்றுஅங்கே உண்டா ? ரொம்ப

..முன்கோபப் பெண்கூட மிகச்சி ரித்தாள்!

பயல்கண்ணில் நல்லபசை! ‘ஜோக் ‘என் னும்நீர்

..பாய்ச்சிஅவன் பலபேரின் மனம்தி றந்தான்!

இவனுக்குத் தெரியாத வேலை உண்டா ?

..எனைக்கேலி செய்வான்; என்பெற்றோர் தம்மை

சுவைப்பேச்சால் ‘காக்காய் ‘பி டித்துக் கொள்வான்!

..சுறுசுறுப்பாய் உதவிசெய்வான், ‘குட்டி ‘ கட்கே!

சுவைபடவே சமைக்கவந்தோன், ‘ஐயோ சாரே!

..தெரியலையே; முந்திரியை எங்கே வைத்தேன்

அவசரத்தில்.. ? என்றபோது, தன் ‘பாண்ட் ‘ பையில்

..அழகாகக் கைவிட்டான்;எடுத்தான்;தந்தான்!

ஆனாலும்,

சதைவயிற்றை நிரப்பிடயான் வேலை கேட்டுச்

..சங்கடப்ப டும்போதில் ‘இடங்கள் ‘ சொல்லி

இதமளித்தான் மனத்திற்கே;என்னு டம்பில்

..ஏதும்நோய் அலைச்சலினால் வந்த போதோ

பதைபதைப்பான்; பணம்கொடுப்பான்; ஆனால் பாரீர்!

..பச்சையிலை வந்துவிட்டால், நழுவிஓடும்

‘விதையிலை ‘போல் ,மாப்பிள்ளைத் தோழன் ‘இப்போ ‘

..மங்கைஎன்னோ டிணைந்தபின்,ஏன் ஓடு கின்றான் ?

****

sakthia@eth.net

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்