மரணம் பயணிக்கும் சாலை!
Published March 20, 2011 • By
ரசிகன்
ரசிகன்

தலை நசுங்கிக்கிடந்தவனின்
செருப்பொன்று
சாலையை வெறித்துக்கொண்டிருக்க
ரத்தம் உறைந்த தார் ரோட்டை
தேய்த்துக்கொண்டிருக்கின்றன
மரணம் சுற்றும் சக்கரங்கள்!
மாண்டவனின் கடைசி நிமிட
முனகல்களை
பதிவு செய்ய தவறிவிட்டன
வண்டிகளின் ஹாரன் சத்தமும்
ஆம்புலன்ஸின் சைரன் சத்தமும்!
நிராசைகளாய் போய்விட்ட
வாழ்க்கையின் இறுதிப்படிவம்
சொந்தக்காரனின் கையெழுத்துக்காய்
பிணவறையின் வரவேற்பறையில்…
மீண்டும் பருகத்துடிக்கும்
மரணத்தின்
சாலையை ஒட்டிய மரத்தடியில்
அவன் கனவுகள்
அனாதையாய் விசும்பும் சத்தம்
என்னை பின்தொடர்ந்துகொண்டிருக்கிறது!
கவனமாய் செல்லுங்கள்!
-ரசிகன்