பெரியபுராணம் – 14 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

பா. சத்தியமோகன்


231.
நம்பிஆரூரர் தம் இறைவனை எண்ணிய வண்ணம் பள்ளி கொண்டதைக்
கண்டார் திருவீரட்டானத்து சிவபெருமான்
முன்பு முதிய மறையவர் வேடம் கொண்ட அவர்
ஒருவரும் அறியா வண்ணம் மடம் புகுந்தார் !
ஆரூரர் திருமுடி மீது தம் தாமரை மலர்போன்ற திருப்பாதம் வைத்து
உறங்குவது போல் விளங்கினார்!
232.
அந்நிலை உணர்ந்த ஆரூரர் ?அரிய மறையாரே உன்னடியை
என் தலை மீது வைத்தீரே ? என்றதற்கு
முதுமையால் எனக்கு திக்கு திசை தெரியவில்லை என அருள
அதை ஒப்பினார் தமிழ்நாதனான ஆரூரர்
தம் தலையை அப்பால் வைத்து துயில் கொண்டார்.
233.
வேறு இடத்தில் தலை வைத்தபோது
அங்கும் அவன் திருமுடி மேல் மீண்டும் அவர் தாள் நீட்ட
கயல் மீன்கள் பாயும் நீர்நிலைகள் சூழ்ந்த நாவலூர்காரர் நம்பிகள்
அவரைப் பார்த்து இங்கு என்னைப்பலகாலும் மிதித்தீர் நீ யார் ?என்றதும்
கங்கையைச் சடையில் மறைத்த பிரான் ?அறியவில்லையோ ? என மறைந்தார்.
234.
செருக்கினால் யான் இறைவனை அறியாது
என்ன காரியம் செய்துவிட்டேன் ! என வருந்தி
?தம்மானை அறியாத சாதியார் உளரே ? எனும் திருப்பதிகத்தால்
திருவதிகைத் தலத்தில் உறையும்
இறைவரின் கழல் பணிந்து பாடினார்.
235.
பொன்கூட்டமும் மணிக்கூட்டமும் யானைக் கொம்பும்
ஒளிமுத்தும் மணமுடைய மலரும் நறுமணம் வீசும் சந்தனக்கட்டையும்
கொண்டுவந்து அலைகளால் திருவதிகையை வழிபடுகிறது கெடிலநதி
அந்நதியில் திளைத்து ஆடினார் நம்பிஆரூரர்.
236.
அழகிய நெற்றிக்கண்ணை அங்கத்தில் உடைய
அங்கணராகிய சிவனின் அடிபோற்றி அப்பெண்ணை ஆற்றின்
தென்கரை வழியாக
மூன்றடி வாமனன் என மண்ணை யாசித்து
போர்வலிவுடைய மாவலியை பாதலத்தில் அழுத்திய
திருமால் வழிபட்ட திருமாணிக்குழி அடைந்தார்.
237.
முழுமுதற்பொருளாம் இறைவனை வணங்கிப் பரவி
வேண்டியவர்க்கு வேண்டிய வரம் தரும் இறைவர் எழுந்தருளிய
திருத்தினை எனும் நகரம் வணங்கிப் பாடினார் திருப்பதிகம்.
யாழின் ஒலி முழவின் ஒலி வேதஒலி அரம்பையர் பாடும் கீதஒலி
அறுகாமல் தொடர்ந்து கேட்கும் திருத்தில்லை அடைந்தார்.
238.
தேனையுடைய புதியமலர் மாலையும்
மணிமாலையும் சூடிய மார்புடைய ஆரூரர்
அழகிய கயல் மீன்கள் பாய்வதால்
திண்ணிய தாமரை மலர்கள் ஆடுகின்ற
வண்டுகளும் நீர்ப்பறவைகளும் ஒலிக்கின்ற
அலைகளும் வெண்சங்குகளுமுள்ள நீரில் மீன்கள் குதிக்கின்ற
வணங்குபவரின் மூன்று மலங்களையும் போக்கி
வீடு பேறு அருள்கின்ற தில்லையம்பதி அடைந்து வணங்கி –
239.
நாவல், மா, மகிழம் சூழ்ந்த தென்னை
இலவங்கம், நரத்தம், கமுகு, குங்குமம், குளிர்ச்சியுடைய வாழை
இலுப்பை, நெருங்கிய வஞ்சி முதலிய மரங்கள் மேகமண்டலம் வரை ஓங்கி
சோலைகளாகி வளரும் அவற்றில் குயில்கள் கூவ
தேவலோகத்தை விடப் பொலிவுமிக்க புறநகரின் வயல்களைக்
கடந்து உள்ளே புகுந்தார்.
240.
வன்னி, கொன்றை,சுரபுன்னை,சண்பகம், சந்தனம்
முறுக்கு, செருத்தி, மந்தாரம், கோங்கு, குரவம்
மணம் கமழும் புன்னை, கற்பகம், பாதிரி, வில்வமென பூ மரங்கள் ஓங்கின
சாதிமல்லிகை, முல்லை முதலிய பூக்கொடிகள் நிரம்பி
நந்தியா வட்டம், அலரி முதலிய செடிகள் நெருங்கி
தூய்மையான நந்தவனங்களைப் பணிந்து சென்றார் நம்பிஆரூரர்.
241.
?இடப்பாகத்தில் அமர்ந்த உமையம்மையார் காணவும்
ஏழுலக உயிர்களும் உய்தி பெறவும்
கூத்தாடி அருளும் திருச்சிலம்பின் ஒலி போற்றுகின்ற
நான்கு மறைகளும் துதிக்கின்ற இத்தலத்தை நாள்தோறும்
நாமும் வலம் வருவோம் ? ? என
கடலானது சூழ்ந்து வளைந்தது போலவும்
மேகம் தவழும்படி உயரம் கொண்டதாகவும் உள்ள மதிலின்
புறத்தேயுள்ள அகழினைக் கண்டு மகிழ்ந்தார் ஆரூரர்.
242.
மன்றில் ஆடும் இறைவனெனும் தேன் மீது கொண்ட ஆசையால் மறைகள் ஒலித்தன.
அதன் வெளிப்பக்கம் குன்றைப்போல் உயர்ந்த மதிலைச் சூழ்ந்த
அகழியில் மலர்ந்த தாமரை மலரில் இருந்த வண்டுகள் மேலெழுந்து
தாமரை மலரில் செறிந்த மகரந்தத்தில் படிந்த மேனியோடு
அதனால் திருநீறு அணிந்த சிவனடியார்கள் போல் ஆகிய காட்சி கண்டு
அன்பால் சிந்தை திளைத்தார் ஆரூரர்.
243.
உலகமானது விளக்கம் அடைவதற்காக வளர்க்கும் நான்கு வேத ஒலிகள்
பயிலும் தன்மை மிகுந்து நிற்க வெண்கொடி ஆடும் சிறப்புடன்
மணி நாவின் ஒலி எழுந்து நான்கு திக்குகளிலும் எதிர்முகமாகப் புறப்படுவதால்
மாலைகள் அணிந்த நான்முகனின் நான்முகங்களே இவை என
சொல்லப் பெறும் தில்லைப்பதியின்
விளக்கம்மிகு நான்கு வாயில்களில் வடக்குத் திருவாயிலின் முன் சேர்ந்தார் ஆரூரர்.
244.
அன்பினால் வந்து எதிர்கொண்ட சிறந்த அடியாரோ அல்லது நம்பிஆரூரரோ
ஒருவரை ஒருவர் வணங்கும்போது எவர் முதலில் வணங்கியது என அறிய முடியாதபடி
வணங்கி மகிழ்ந்து பின்னர் ஆனந்தக்கூத்தரை தரிசிக்க
பொன்னால் எழுந்த மாளிகை விளங்கும் ஒப்பிலா வீதியில் புகுந்தார்.
245.
மூன்றாம் பிறை பொருத்திய சடையிலே கங்கை ஒலிக்கும் கூத்தர்
விரும்பி எழுந்தருளும் திருவீதியில் நான்குமறைகள் ஒலிக்கும்
தேவமங்கையர் ஆடல் முழக்கம் செய்ய ஐந்து தேவ துந்துபிகள் முழங்கும்
மணம் பொருந்திய பூமாலையில் வண்டுகளின் இசை ஒலிக்கும்
அன்பு பொழிந்து கண்ணீர் வழியும்
அடியார்கள் போற்றித்துதிக்கும் ஒலி எங்கும் ஒலிக்கும்.
246.
குபேரனின் பட்டினங்களைப்போல
அனைத்து போகங்களும் கொண்டு விளங்கிய மாளிகைக் கட்டடங்கள்
மேகமண்டலத்தைத் தம் முன் அடக்குவது போலிருந்தன
யோகசிந்தையால் அதன் மீது கட்டப்பட்டிருந்தன கொடிகள்
அம்மாளிகையில் வாழும் மறையோர்கள் வளர்க்கின்ற ஓமப்புகை
மேகக்கூட்டத்தில் வானளாவிச் சென்று மின்னல்கொடி போல் விளங்கும்
247.
கோபுரப்பக்கங்களில் எங்கும் மயில்கள் ஆடும்
வேள்வியில் அரணியால் கடைந்த நெருப்பு ஆடும்
இருபக்கங்களிலும் மாலைகள் ஆடும்
தேர்க்கூட்டங்களில் பேரொளி ஆடும்
அன்னசாலைகளில் நெல்லரிசிச் சோற்று மலைகள் விளங்கும்
நீர்ப்பந்தல்களில் குளிர்ந்த தண்ணீர் வகைகள்
வீதியின் அயல் இடங்களில் எங்கும் நிறைந்ததோர் கூட்டங்கள்
248.
எண்ணிலா பெரிய உலகங்கள் யாவிலும் உள்ள
எல்லையற்ற அழகுகள் திரண்டு கூடி
மண்ணுலகில் இத்தலத்தில் வந்ததுவோ எனக் கூறும்படி மங்கலம் சேர்ந்தது
புண்ணிய புனித அன்பர்கள் புகழ்ந்து பாடும் அழகுடன் விளங்கி
இறைவன் ஆடும் அம்பலத்தைச் சூழ்ந்திருக்கும் வீதியை
நாவலூரர் வணங்கிக் கொண்டு சென்று –
249.
திருமால் நான்முகன் இந்திரன் பெருந்தேவர்கள்
மற்றத் தேவர்களும் சீலமுள்ள மாமுனிவர்களும் சென்றும்கூட
தக்ககாலம் கிட்டாமல்
காவல் தலைவரான நந்திதேவர் ஆணைப்பிரம்பின் அடி தம்மேல்பட
அதில் திளைத்து காதல்மிக்க அடியார்களும் கணநாதர்களும்
தடையிலாது உள்செல்லும் அழகிய வாயிலை
குவித்த கையுடன் இறைஞ்சினார். புகுந்தார்.
250.
பெரிய மதில் சூழ்ந்த செம்பொன் மாளிகை
பெரிய அம்பலமான மேருமலை
இரண்டையும் வலம் வந்து இறைஞ்சி பின்னர்
அம்மகிழ்ச்சியுடன் புகுந்தார் திருஅணுக்கன் திருவாயில்
அத்தலம் வேதத்தின் முதல் இடை கடையில் ஒளிரும் ஒளி போன்றது
அன்பர் தம் சிந்தையில் அலர்ந்த ஒளி போன்றது.
251.
வையகம் பொலியும்படி வேதச் சிலம்பு ஒலிக்க
நான்முகனும் திருமாலும் தேடும்படி
அம்பலத்தின் வெளியே திருக்கூத்து ஆடுகின்றாரைஅஞ்சலி மலர்த்தினார்.
குவித்தகைகளும் ஆனந்தமுடைய கண்களும்
உள் கலந்த அந்த கரணங்களும் கொண்டு வணங்கி எழுந்தார்-
திருக்களிற்றுப்படி எனும் யானைத்துதிக்கை வடிவு கொண்ட ஐந்து படிகளை.
252.
ஐந்து வகையாய் ஐந்து பிரிவாய்ப் பெயர்கின்ற அறிவை
கண்களே கொண்டுவிட்டன
அளவிடமுடியா நான்கு கரணங்களின் செயல்கள் யாவும்
சித்தம் என்ற ஒன்றாகி விட்டன.
மூன்று குணங்களும் சுத்த சாத்வீகம் ஆயின
பிறைச்சந்திரன் வாழும் சடையுடன் ஆடுகின்ற
ஆனந்த எல்லையில் நிகழும் தனிப்பெரும் நடனக்கூத்தினால்
மாறா மகிழ்ச்சியில் மலர்ந்தார் ஆரூரர்.
253.
மகிழ்ந்து மலர்ந்து கண்கள் சொரிந்தன-
ஆனந்தக் கண்ணீர் அருவியாய்
கைகளை தலைமேல் குவித்துக்கூப்பி
?தெளிந்த பிறைச்சந்திர சடையோனே.
மண்ணிலே வந்த பிறவி துன்பமுடையது என்றாலும்
உன் திரு நடனம் கும்பிடும் வாழ்வு பெற்று
இம்மண்ணுலகில் வாழ்தலால்
மனிதப்பிறவியே கூட நல் இன்பம் ஆயிற்று ?
என்று பாடினார் திருப்பதிகம்.
254.
முன்பு தடுத்து ஆண்ட இறைவர்
ஆடினார் தனிப்பெரும் தாண்டவம்
எடுத்த சேவடியார் அருளினால்
மறந்து விழும் அலைகளில் முத்துவிழும்
பொன்னி நதி பெருகி வயல் வளம் பெருகிய திருவாரூரில்
நம்மிடம் நீ வருவாயாக ? என வானில் எழுந்தது ஓரொலி
அதனைக் கேட்டதும் உணர்ந்தார். எழுந்தார்.
255.
ஆடுகின்றவர் பேரருள் நிகழ்ந்தது
கட்டளையைத் தலை மேற்கொண்டார் ஆரூரர்.
இருகரங்களையும் தலைமேல் சூடி அஞ்சலிசெய்து தொழுது விடை பெற்றார்.
பக்கத்தே பரவும் ஒளியுடைய சிற்றம்பலத்தை வலம் வந்து வணங்கினார்.
நீண்ட வானமும் பணிவு கொள்ளுமாறு
உயர்ந்த பொன்மலை போல் விளங்கும் தெற்கு கோபுரம் கடந்தார்.
256.
நின்றார். கோபுரத்தை நிலத்தில் விழுந்து பணிந்தார்
நெடுந்திரு வீதியை வணங்கினார்
விழா பொருந்திய செல்வ வீதியில் ஏகிக் கடந்தார் தெற்கு திசை வாயிலை
தெற்கு எல்லை வணங்கி கொன்றை மலர்ச்சடையானின்
திருவருளைச் சிந்தித்தவாறே அடைந்தார் கொள்ளிடம் என்ற திருநதியை.
257.
பரிவாரங்கள் ஆரூரைப் போற்றி இசைக்க
புரிமுந்நூல் எனும் பூணூல் அணிமார்பர்
அறங்களெல்லாம் ஈந்த உமையம்மையின் திருமுலைப்பால் அமுது உண்டு வளர்ந்த
திருஞானசம்பந்தர் அவதரித்த பெரும்பேறு கொண்ட
சிறந்தபுகழ் கழுமலம் எனும் பெயர் பெற்ற திருத்தலம்
சீர்காழியை அடைந்தார்.
258.
பிள்ளையார் திருஅவதாரம் செய்த பெரும் சீர்காழி இது
இந்திரன் முதலானோர்க்கு அடைக்கலம் தந்ததால் புகலி இது
இத்தலத்தை என் காலால் மிதித்து நடக்கமாட்டேன் என
ஊர் எல்லைப்புறம் வணங்கி விடைபெற
வள்ளலார் ஆரூரர் வலமாக வரும்போது
காளையூர்தியில் உமையாருடன் எழுந்தருளி காட்சி தந்து அருள –
259.
மண்டிய பேரன்பு மிக்கவரானார் வன்தொண்டர்
நின்றார் இறைஞ்சினார் இறையை
ஊழியில் தெளிந்த அலைகளுள்ள கடலில் மிதந்த
திருத்தோணிபுரம் எனும் சீர்காழியின் இறைவனைக் கண்டுகொண்டேன்
கயிலையில் வீற்றிருந்தது போல
எனும் கருத்துக் கொண்ட (சாதலும் பிறந்தலும்) திருப்பதிகம் பாடினார்.
260.
ஆரூரர் எதிர் நின்று தன்கோலம் காட்சி அளிக்க பெருமான் எழுந்தருளியபோது
ஆரூரர் மனதில் அச்சம் கொண்டார். பின் தெளிவு கொண்டார்
திருவாரூர் செல்ல விருப்பம் கொண்டு
கடல் சூழ்ந்த புறவம் என்ற அந்தப் பதியை வணங்கி
திருக்கோலக்கா எனும் தலம் அடைந்து திருப்பதிகம் பாடினார்.
— திருவருளால் தொடரும்

cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்