கடிதம் அக்டோபர் 21,2004 – ஜெய மோகனின் கீதை

This entry is part [part not set] of 46 in the series 20041021_Issue

நா.திருப்பதி சாமி


திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம்!

கீதையை எப்படிப் படிக்க வேண்டும் என்று கட்டுரை எழுதி உள்ள ஜெய மோகன் அதை ஏன் படிக்க வேண்டும் என்ற தலைப்பில் எழுதி இருந்தால் இன்னும் பொருத்தமாக விவாதம் இருந்திருக்கும்.

தனது தேர்வாக சித்பவானந்தரின் கீதையையும் பாரதி மற்றும் கண்ணதாசனின் கீதையையும் அவர் குறிப்பிட்டிருந்தது குறித்து நாம் மகிழ்ச்சியே அடைவோம். ஏன் என்றால், பொருள் புரியாத பெரிய ‘பாஷ்ய ‘ காரர்களைக் குறிப்பிடாமல் அவர் விட்டு விட்டது நம் பேறு!

இந்து ஞான மரபை ஒரு மதமாக எண்ணுவது பெரும் பிழை என்ற அவரது கருத்தின் பின்னே இந்து மதத்தின் வரலாறே ஒளிந்து கொண்டிருக்கிறது. ஓர் இந்து என்பவன் இன்று அறிந்திருக்கும் இந்து மதமும் மத முனிவர்களின் இந்து மதமும் வேறானவை.

அது போல கீதை பிற மத மூல நூல்கள் போல ஒரு மூல மத நூல் அல்ல; அப்படிக் கருதக் கூடாது என்பது அவரது வாதம். அப்படி எந்த நூலையும் இந்து மதத்தின் மூல நூலாகக் காட்ட முடியா விட்டாலும் மூலச் சூழ்ச்சிகள் உண்டு.

பிற மதங்களின் மூல நூல்களை மாற்றவோ மறு பரிசீலனை செய்யவோ ஆராயவோ உரிமையற்றவர்களாக அம் மக்கள் இருப்பது கண்டு மனம் நோகிறார் ஜெய மோகன்! ஆனால், இந்து மத நூல்களைக் கையால் தொடுவதோ காதால் கேட்பதோ கூட பாவம் என்ற நிலைதானே இந்து மதத்தில் இருந்து இருக்கிறது. தண்டனைச் சட்டம் போல பிற மத மூல நூல்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொண்டால், ஒரு பண்ணையாடியின் தினசரி மனப் போக்குடன்தான் இந்து மதத்தின் ஒழுங்கை ஒப்பிட முடியும்.

பிற தரப்புகளை எதிர்க்காமல் அவற்றுள் பூர்வ மீமாம்சை (என்ன இம்சையோ ?) ஊடுருவுகிற உத்தி அதன் சிறப்பு என்கிறார் ஜெய மோகன்! எய்ட்ஸ் வைரஸ் அப்படித்தான் ஊடுருவும் என்கிறது அறிவியல். புத்தம் போன்று வேட மணிந்துதான் சமணம் ஊடுருவியது. இந்து மதம் என்று இன்று சொல்லப் படுகிற இந்து ஞான மரபு சமண-புத்தத்தைத் திருடிக் கொண்டது என்றும் சொல்லலாம்.

இந்து ஞான மரபுக்கு மூல நூல் இல்லை; எல்லாம் தத்துவ பக்தி நூல்கள்தான் என்கிறார் பெருந்தன்மையுடன்! யாருக்கு அந் நூல்கள் கிடைத்தன ? யார் விவாதம் செய்தனர் ? பிற மதத்தினரின் கையில் அவரவர் மூல நூல்கள் திணிக்கப் பட்டே வந்து இருக்கின்றன. ஆனால், இந்து மதம் தன் நூல்களை மறைத்து வைத்துக் கொண்டதே! விவாதம் எப்படி நடக்கும் ?

ஞானத் தேடல் கொண்டவனை மூல நூல்கள் திருப்திப் படுத்துவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அது மட்டும்தான் உண்மையல்ல! ஞானத் தேடல் கொண்டவனை எந்த நூலும் அமைதியடையச் செய்ய முடியாது.

வைணவ ஞானி இறுதிக் கட்டத்திலேதான் கீதையைப் பரிந்துரைப்பார் என்கிறார். கீதை தத்துவ நூல், மத மூல நூல் அல்ல என்று கீதைக்குப் பொதுமைப் பண்பைத் தருவதற்கு ஜெய மோகன் விரும்புகிறார். முழுமையாகப் படிக்காமல் மத நூல்களை விமர்சனம் செய்ததாகப் பெரியார் மேல் குற்றமும் சுமத்துகிறார். பெரியார் ஒன்றும் சும்மா சமணக் கால் போட்டுத் திண்ணையில் உட்கார்ந்து ஊர் வம்பு பேச வில்லை; செயல் முறையில் இருக்கும் இந்து மத மூடத்தனங்களையும் அதனால் விளையும் இழப்புக்களையும் இழிவுகளையும் பற்றிப் பேசினார். பிற்பாடு அவர் வழி வந்தவர்கள் பேசும் கடவுள் மறுப்புடன் பெரியாரைத் தொடர்பு படுத்துவது மிகச் சாதாரணமான சண்டை போலாகி விடும்.

கீதையை அதன் கால கட்டத்து ஆவணமாகப் பார்ப்பதில் யாருக்கும் மறுப்பு இல்லை. அதைப் புனிதமாகக் கருதுவதுதான் முறைகேடு! இதே ஒப்பீடு புற நானூறு, திருக்குறளுக்கும் பிறவற்றிற்கும் பொருந்தும்.

தோழர் சோதிப் பிரகாசம் தன் மனத்தின் விடுதலை நூலில் கீதையை ஒரு சமூக தத்துவ நூலாகவே குறிப்பிட்டுள்ளார். அவர் அதை ஒற்றை வரிக் குறிப்பாகக் குறிப்பிடாமல் விவாதப் பொருளாக வைத்திருந்தால் இப்போது இவ்விவாதத்தில் பயனுள்ளதாக இருந்திருக்கும். கரும மார்க்கம், ஞான மார்க்கம் என்பவை மார்க்சுக்கு ஏற்புடையவை என்று அவர் கூறுவதும் கவனிக்கத் தக்கது!

இக் கருத்தை (சமூகத் தத்துவம் என்னும் கருத்தை) சோதிப் பிரகாசத்திடம் இருந்து ஜெய மோகன் பெற்றாரா ? தன் குரு ‘யதி ‘யிடம் இருந்து பெற்றாரா ? என்பது தற்போது நிலுவையில் இருக்க, தொடர்ந்து வரப் போகிற அவரது கட்டுரைகளை எதிர் பார்க்கிறோம்.

இந்து மதம் பின்னர் பெற்றுக் கொண்ட அல்லது இன்று அடைந்து இருக்கிற வடிவத்தில் எத்தனை மதங்களின் கலப்பு இருக்கிறது ? பெரும் படிப்பாளியான ஜெய மோகனே இதை உண்மை உள்ளத்துடன் சொல்லட்டும்! ஏனென்றால், அவ்வளவு படிக்க நமக்கு நேரமில்லை (நான் சொல்லுவதன் பொருள் வாழ்க்கையின் கேள்விகளுக்கு ஜெய மோகன் எழுதிய முன்னுரையில் (பக்கம் 19) அடங்கியுள்ளது.) அல்லது கட்டுப் படியாகாது!

21-10-2004

nthiruppathisamy@yahoo.com

Series Navigation

நா. திருப்பதி சாமி

நா. திருப்பதி சாமி