பார்சலோனா -2

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


முதல் நாள் மாலை ஐந்துமணிக்குமேல், எங்கள் விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மரங்கள். எதிர்ப்படும் மனிதர்களை கவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துகாலிட்டு அமர்ந்தபடி, கும்பல் நடுவே “வை ராசா வை ரக”, என நம்மைப்பார்த்து தூண்டில் போடும் ‘மூணு சீட்டு’ ரக மங்காத்தா ஆசாமிகளின் வசீகரிக்கும் குரலை சாமர்த்தியமாக ஒதுக்கிவிட்டு, வேற்றுலக மனிதர்கள்போலவும், இடைக்கால மனிதர்கள் போலவும், வரலாற்று புருஷர்கள் போலும் வேடம் பூண்டு ஜீவிக்கும் மனிதர்களையும், பூக்கடைகளையும், ஐரோப்பாவின் பெரிய நகரங்களின் சுற்றுலாப் பகுதிகளில் காண்கிற பிற அம்சங்களையும் போகிற போக்கில் ரசித்து, மகிழ்ச்சியுடன் உலாவர உதவும் ரம்பலாவீதியைக் குறித்து நிறைய எழுதலாம். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் லா ரம்பலாவென்று எங்கள் கைவசமிருந்த வழிகாட்டிக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் கட்டலோன் மொழியில் லெ ரம்பால் என்கிறார்கள்; அரபுச் சொல்லான ரமலாஸ் அதற்கு மூலம் என்கிறார்கள்.

பிலாசா தெ கட்டலோனாவில் ஆரம்பித்து இறங்கி கிழக்கே நடந்தால் கொலம்பஸ் நினைவு தூண்வரை லா ரம்பலாவின் ஆதிக்கந்தான். கொலம்பஸ் நினைவுதூணை கடக்கிறபோது, சிலுசிலுவென்று காற்று, உப்பு நீரின் மணம், வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் உல்லாசப் படகுகள், வலது பக்கம் சற்று தூரத்தில் துறைபிடித்து நிற்கும் உல்லாசக் கப்பல்கள், துறைமுகம், சரக்கு கப்பல்கள்- துறைமுகத்தை நெருங்கியதும் அனுமதிக்காகக் காத்திருக்கும் சரக்குவாகனங்கள். கரையோரங்களில் கலைஞர்கள் உருவாக்கியுள்ள மணற் சிற்பங்களை வியந்து மகிழலாம். மனமிருந்தால் அக்கலைஞர்களுக்கு உதவலாம், கிராஸியாஸ் என்று சொல்லி வாங்கிக்கொள்கிறார்கள்.பிறகு தண்ணீர் தண்ணீர்…மத்திய தரைகடல்:பார்த்தவுடன் ஸ்படிகம்போன்ற கடல்நீரை கைகொள்ள வாரி கொள்ளதோன்றும். நீலநிற மஸ்லினைப் போர்த்திக்கொண்டதுபோல கடலுக்கடியில் மணல்மூடிய தரை; அதில் நொடிக்கொருதரம் நட்சத்திரகும்பலொன்று நிதானமாய் அசைந்து செலவதுபோல மீன்கள் நீந்தும் அழகையும், கரகாட்டக்காரியின் பாவடைபோல விரிந்து பின்னர் நிலைக்குத் திரும்பும் நீர்த்திரைகளையும் பார்த்து மகிழ நேரம் போதாது. லா ரம்பலாவை வீதி என்பதைக்காட்டிலும், அகன்ற நடபாதை என்று சொல்வது மிகவும் பொருத்தமானது. சுமார் 150 அடி அகலங்கொண்ட அச்சாலையில் சுமார் ஐம்பது அடிகளை இருமருங்கிலும் வாகனங்களின் போக்குவரத்துக்கென்று ஒதுக்கியிருக்கிறார்கள், மீதியுள்ள சாலை மக்கள் நடமாட்டத்திற்கென்று தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. பார்சலோனா நகரில் பார்க்கவேண்டியவை என்று நாங்கள் தீர்மானித்திருந்த அல்லது அப்படியொரு தீர்மானத்திற்கு எங்களைக் கொண்டுவந்திருந்த புகழ்வாய்ந்த இடங்கள், கட்டிடங்கள், போதைதரும் வெளிகள் அனைத்துமே இந்த ரம்பலாவைச் சுற்றியிருந்தன என்பதால், பார்சலோனாவில் தங்கியிருந்த ஐந்து நாட்களிலும் ரம்லாவின் காலைநேரங்களும் மாலை நேரங்களும் பழகி இருந்தன. ரம்பலா பாதசாரிகளை கடற்கரையை நோக்கிச் செல்லுபவர்கள், கடற்கரையிலிருந்து திரும்புபவர்கள் என இருவகையாகப் பிரித்தாலும் உலகின் எல்லா பெரிய நகரங்களின் பாதசாரிகளின் கால்களுக்குள்ள குணங்கள் ரம்பலா பாதசாரிகளுக்கும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை, அர்த்தமற்று கால்போனபோக்கிலே நடப்பவர்கள், அவசரகதியில் எதையோ அல்லது எவரையோ தேடிப்போகிறவர்களைப்போல நடையும் ஓட்டமுமாய் விரைந்துசெல்பவர்கள், தேவதைகள், தேவர்கள், பரத்தைகள், அசுரர்கள், பணம் படைத்தவர்கள், பிச்சை எடுப்பவர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், ரோஜா விற்கும் பாகிஸ்தானியர், குளிர்பானங்கள் அடைத்த சிறுடின்களை கூவி விற்கும் சிவப்பிந்தியர், ஏமாளிகளுக்காகக் காத்திருக்கும் கிழக்கு ஐரோப்பிய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்; மலைப்பாம்புபோல மரத்தில் சுற்றிக்கொண்டு கஞ்சா புகைக்கும் ஆசாமி, அவனருகே வானத்தை விழிவெண்படலத்தால் அளந்தபடி சொள்ளொழுக உறங்கும் பெட்டை, திரிசைடை சிவனார்போன்ற தலைமுடியும் சிவந்த கண்களுமாய் வயலினா, மாண்டலினா என தீர்மானிக்கமுடியாத இசைக்கருவியை வாசிப்பதில் லயித்திருக்கும் மனிதர்; புராண இதிகாச நாயகர்களாக, சரித்திர புருடர்களாகவும், வேடம் தரித்து வெள்ளை, அல்லது பொன்வண்ணத்தில் நாள்முழுக்க, பாதசாரிகள் இரக்கப்பட்டு அல்லது தாமாக மனமுவந்து தரும் ஒற்றை நாணயத்தை வாங்குகிற நேரங்கள் தவிர்த்து பிறநேரங்களில் அசைவின்றி மணிக்கணக்கில் சிலைபோல நிற்கும் வீதிக் கலைஞர்களென ரம்பலா பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.

ரம்பலாவோடு இணைந்த பொக்கெரியா அங்காடியைப்(Boquria) பற்றி அவசியம் சொல்ல வேண்டும். காய்கறிகள், பழங்கள், மீன்கள், கிளிஞ்சல்கள், நத்தைகள், இறைச்சி, பருப்புகள் என அத்தனையும் கிடைக்கிறது. மீன் நண்டுக்குரிய வாசத்தை சகித்துக்கொள்ள முடியுமெனில் தயக்கமின்றி சந்தையை ஒரு முறை வலம்வந்து வியக்கலாம். அவ்வளவும் அன்றைக்குத்தான் சந்தைக்கு வந்ததுபோல பச்சைபசேலென்று, புத்தம்புதியதாய், வாடாமல் வதங்காமல் இருக்கின்றன. ஒரு ஈரோவில் ஆரம்பித்து மூன்று ஈரோக்கள்வரையிலான பழத்துண்டுகள் சிறிய பிளாஸ்டிக் டப்பிகளில் அடைத்துக் கிடைக்கின்றன. கடலுணவு சாப்பிடுகிறவர்களுக்கு பார்சலோனா சொர்க்கபுரி என்பதற்கு பொக்கெரா அங்காடியும் சாட்சி, இறால், கணவாய் ஆகியவற்றை உடனுக்குடன் பொரித்து தருகிறார்கள். அயளைமீன்களை விறகுக்கரியில் சுட்டுப்பொசுக்கும் மணம் நுழைவாயிலிலேயே ஆரம்பித்துவிடுகிறது. கிராமத்துத் திருவிழாக்களில் எங்கள் பக்கம் வண்ணவண்ணமாய் கண்ணாடி டம்ளர்களில் பாயசம் விற்பார்கள் அங்கும் அதுபோல ஏதோவென்று விற்கக்கண்டேன்.

இலக்கியத்திற்கும் காதலுக்குமான உறவென்பது, கற்பனைக்கும் உணர்வுக்குமானது. மானுடம் உருக்கொண்ட நாளிலிருந்தே அவ்வுறவின் அடித்தளத்தில் மனிதரினம் தம்மைமேம்படுத்திக்கொண்டிருக்கிறது. இலக்கியத்தையும் காதலையும் இணைத்து உலகில் வேறு எங்கேனும் விழா எடுக்கப்படுகிறார்களாவென்று தெரியவில்லை, ஆனால் ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியா பிரதேசத்தில் எடுக்கிறார்கள். பார்சலோனா கட்டலோனியா பிரதேசத்தின் முதன்மை நகரம், எனவே அவ்விழாக்கோலத்தை நேரில் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. பார்சலோனியா நகருக்கு நாங்கள் சென்றிருந்த மறுதினம் அதாவது ஏப்ரல் 23ந்தேதி செயிண்ட் ஜார்ஜ் தினம் (Saint George day(1) என்றார்கள் ஸ்பானிஷ் மொழியில் ‘La Sant Jordi’. அன்றைய தினம் கட்டலோனியாவைச் சேர்ந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணொருத்திக்கு ரோஜாவொன்றை காதல் வெகுமதியாக அளிக்கிறான், பதிலுக்கு பெண்கள் ஆண்களுக்கு அவன் வாசிப்புக்கு உகந்ததென்று தீர்மானிக்கிற புத்தகமொன்றை பரிசாக அளிக்கிறார்கள். ஆக ஏப்ரல் 23ஐ கட்டலோனிய மக்களின் காதலர் தினமென்று குறித்துகொள்ளுங்கள். இருபதுவயதில் ஏபரல் 23 அன்று பார்சலோனாவில் இருந்திருந்தால், கூடுதலாகக் கொண்டாடியிருக்கக்கூடும். இந்த ஏப்ரல் 23க்கும் ஒரு பாட்டிகதை இருக்கிறது. செயிண்ட் ஜார்ஜ் என்பவன் ஒரு குதிரைவீரன், அவனும் அவன் பணியாளனும் ஒரு பயனத்தின் போது சிலென் (Silene)என்ற ஊரில் தங்குகிறார்கள். அங்கு வெகு நாட்களாக கொடிய மிருகமொன்று உள்ளூர்மக்களை கொன்று தின்றுவந்தது. நித்தம் நித்தம் விலங்கின் தாக்குதலால் அஞ்சிவாழும் மக்கள் அம்மிருகத்துடன் ஓரு ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள், அதன்படி ஒவ்வொருநாளும் விலங்கிற்கு ஓர் ஆடும், ஓர் இளம்பெண்ணும் ஊரார் சார்பாக வழங்கப்படுகிறது. ஜார்ஜ் அந்த ஊருக்கு வந்திருந்த நாளில் அரச குமாரியை விலங்குக்குக் கொடுக்கவேண்டிய தினம். அரசனுக்கு ஆறுதல் கூறிய வீரன், விலங்குடன் போரிட்டு அதன் வயிற்றில் ஈட்டியைப் பாய்ச்சுகிறான். பீச்சிய ரத்தத்திலிருந்து ரோஜா மலரொன்று பூக்கிறது, அதைப் பறித்து அரசகுமாரிக்குக் காதற்பரிசாக அளிக்கிறான், அன்றுமுதல் ஜார்ஜ் அவ்வூர்மக்களின் காவல் தெய்வமாகப் போற்றப்படுகிறான். கட்டலோனிய மக்களின் கதாநாயகனாக ஜார்ஜு அவதாரமெடுத்ததற்கு இக்கதையே பின்னணி. அவனைப்போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 23 தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். La Sant Jordi தினத்தன்று மனைவிக்கு அல்லது காதலிக்கு அல்லது தோழிக்கு கட்டலோனிய ஆண் ரோஜா மலரைக் காதற்பரிசாக வழங்குகிறான். La Sant jordi தினம் காதலர்களுக்கிடையேயான ரோஜாமலர் பரிமாற்றத்துடன் முடிவடைந்துவிடுவதில்லை. அந்நாள் ஐரோப்பிய படைப்பிலக்கிய பெருமக்களான மிகெல் தி செர்வாந்த்தெஸ் மற்றும் ஷேக்ஸ்பியர் இருவருக்குமான நினவுதினமும் ஆகும், எனவே. யுனெஸ்கோ அமைப்பு ‘உலக புத்தகம் மற்றும் படைப்புரிமை’ நாளாக அதை அறிவித்திருக்கிறது. அதைக் கணக்கிற்கொண்டு, ரோஜாமலரை அன்புப் பரிசாக பெற்ற பெண்கள், பதிலுக்கு தங்கள் அன்புக்குப் பாத்திரமான ஆண்களுக்கு புத்தகங்களைப் பரிசாக அளித்து மகிழ்கிறார்கள்.

Sant Jordi நாளுக்குண்டான அத்தனை ரம்மியத்தையும், பெருமையையும், ரம்பலா தெருவில் கடந்த ஏப்ரல் 23ல் காண முடிந்தது. அன்றைய தினம் லா ரம்பலா ரோஜாமலர் விற்பனையாளர்களாலும், புத்தக விற்பனையாளர்களாலும் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்ததென்று சொல்லலாம். குறிப்பாக கைகளில் ரோஜாவைக் காம்புகளுடன் சுமந்தபடி, ஒரு ஈரோ, இரண்டு ஈரோவென்று கூவி கூவி விற்ற குரல்களில்கூட ஒருவித கவர்ச்சி இருந்ததென்று சொல்லமுடியும். ஒன்றிரண்டு ஈரோவுக்காக விற்பனையாளர்களிடையே போட்டி கடுமையாக இருந்தன. அடுத்தடுத்து ரோஜா மலர்க்கடைககளாலும், புத்தகக் கடைகளாலும் நிறைந்திருக்க, அவை இரண்டுக்குமான இடைவெளியை மக்கள் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். ரோஜா மலர்களுக்கிடையே, புத்தகங்கள் பூப்பதும் அழகுதான். புத்தகக் கடைகள் தோறும் நின்றபடி மனிதர்கள் ஆவலுடன் அவற்றின் பக்கங்களைப் புரட்ட, கைக்காம்புகளில் புத்தகங்களும் பூத்திருப்பதுபோலத்தான் அக்காட்சி அமைந்திருந்தது. அந்திச்சூரியனையொத்த முகத்துடனும், கன்னத்தில் பாதியும் தோளில் மீதியுமென்று கூந்தலை வழியவிட்டு, இரு கைகளிலும் புத்தகத்தை விரித்தபடி பார்சலோனா பெண்கள், அகன்ற விழிகளால் சொற்களைச் சீண்டி விளையாடுவதை ஒரு ஓரமாக நின்று பார்க்கவேண்டும். மக்கள் கூட்டத்தில் நீந்தும்போது, ஒரு ரோஜாவோ அல்லதொரு புத்தகமோ உடலைத் தீண்ட சிலிர்த்த அனுபவமும் மறக்கக்கூடியதல்ல. ரோஜாவை வாங்குபவர்கள், அதற்கான விலையைக்கொடுத்து சட்டென்று வாங்குகிறபோது, புத்தகங்களை வாங்குகிறவர்கள் அந்தகூட்டத்திலும் அவசரமின்றி நிதானமாகப் பக்கங்களைபுரட்டி, ஒரு சில பக்கங்களை படிக்கவும் செய்து புத்தகங்களை வாங்கத் தீர்மானிப்பதுபோலிருந்தது. கட்டலோனிய பதிப்பகங்கள் தங்கள் வெளியீடுகளை பெரும்பாலும் Sant Jordi தின நெருக்கத்தில் வைத்துக்கொள்கிறார்களென்று அறிந்தேன். குறிப்பாக கட்டலோனிய மொழி வெளீயீடுகள் அனைத்துமே Sant Jordi நாளை குறிவைத்தே இயங்குகின்றன என்று கூறினார்கள்.

(தொடரும்)

Series Navigation