பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

தீபச்செல்வன்


உடைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக்கொண்டிருந்தது
நட்சத்திரங்கள்
பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்து கிடந்தன.

கனவு நிரம்பிய
அழகிய வாழ்வில்
புழுக்கள் நெளிந்தன.

எனது காதலியின் முகம்
ஒடுங்கிக்கொண்டிருந்தது.

அச்சம் அவளின்
முகத்தில் கசிந்து
நாடி வழியாக
வழிந்து கொண்டிருந்தது.

எனது கைகள் சோர்ந்திருந்தன.

நாம் அணிந்திருந்த
மோதிரங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரையத்தொடங்கின.

இருவருடைய மடிகளிலும்
மரணம் பிசுபிசுத்தது.

அவள் எனது கன்னங்களில்
அச்சம் பீறிடக் கண்டாள்
நான் அவள் உதடுகளில்
ஏக்கம் வழியக் கண்டேன்.

நமது கண்கள்
தத்தளிக்க வாழ்வு
அந்தரத்தின் துயரத்தில்
ஆடிக்கொண்டிருந்தது.

சிறிய துண்டு நிலத்தில்
கசங்கிய துணி விரிக்கப்பட்டிருந்தது.

பாம்பு விழுங்கிய
நிலத்தின் மீதியில்
நமது சொற்கள்
உயிரற்றுக்கிடக்க
உரையாடல்கள்
மடிந்துகிடந்ததன.

எனது முகம் சுருங்கிக்கொண்டிருந்தது.

நமக்காய் சிரட்டையில்
எடுத்து வைத்திருந்த
கஞ்சியில்
ஒரு துண்டு செல்
வந்து விழுகிறது.

நமது உடல்களில்
விசம் பரவ
துண்டு நிலமும் சிதைகிறது.


deebachelvan@gmail.com

Series Navigation