பரிமளவல்லி – 16. ஏ.டி.எம்.

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

அமர்நாத்16. ஏ.டி.எம்.

“பொதுவா வெள்ளிக்கிழமைன்னா நான் வீட்டிலேதான் இருப்பேன். ஹிக்கரி அனுப்பிச்ச சாம்பில்களைப் பண்ணறதுலே ரெண்டுமணி வேலை பாக்கி. இன்னைக்கு முடிவுசொல்றதா அவனுக்கு வாக்கு தந்துட்டேன். அதை முடிச்சப்புறம் மீதிநேரம் உன்னோடதான். சாமி பாட்டுக்கு வேலைக்குப் போகட்டும்” என்றாள் சரவணப்ரியா மன்னிப்புகோரும் குரலில்.
“போயிட்டுவரேன்னு சொல்லிட்டு மனசுமாறி திரும்பிவந்தது என் தப்புதானே” என்றாள் பரிமளா.
“தப்பென்ன இருக்கு? நீ வந்தது எங்களுக்கு சந்தோஷம்தான். நேத்திக்கி சாப்பிட்டப்புறம் ‘கட்-த்ரோட் ப்ரிட்ஜ்’ விiளாடினப்போ என்ன அமர்க்களம்! நாம ரெண்டுபேரும் ஒண்ணுசேர்ந்து சாமியை ‘சிக்ஸ் நோ-ட்ரம்ப்’லே தோக்கடிச்சதுதான் பிரமாதம்.”
பரிமளா ஆறுமணிக்கு முன்னதாகவே எழுந்துவிட்டாள். சரவணப்ரியாவிடம், “நாளைக்கு ஏர்போர்ட் போறதுக்கு இன்னிக்கே ப்ராக்டிஸ்” என்றாள். “வீட்டிலே இருந்து என்ன பண்ணப்போறேன்? உன்னோடு நானும் வரேன்” என்று அவளுடன் சேர்ந்துகொண்டாள்.
பரிமளாவுக்கு ஏற்கனவே பரிச்சயமான சரவணப்ரியாவின் ஆய்வுக்கூடம்.
“நான் ‘மாஸ்-ஸ்பெக் லாப்’ போகணும். நான் வர்றவரைக்கும் உனக்குத்துணையா இது” என்று சரவணப்ரியா தன்மேஜைமேல் இருந்த கணினியை இயக்கியதும் அது கடவுச்சொல் கேட்டது. அதைக் கொடுத்ததும் திரை முழுமைபெற இன்னும்சில நொடிகள்.
“நீ இல்லாதப்போ நான் ஈ-மெயில் பாக்கறேன்.”
ஒரு பணிப்பெண் சரவணப்ரியாவின் தபால்களை அவள்பக்கத்தில் வைத்துவிட்டுச் சென்றாள். முக்கியமானது ஏதேனும் இருக்கிறதா என்று அவற்றில் அவள் தேடியபோது, விஞ்ஞான ஆராய்ச்சிக்கான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் வணிகக்கடிதங்களுக்கு நடுவில் ஒரு பழுப்புநிற காகிதஉறை. நிதி அலுவலகத்திலிருந்து உட்பிரிவுத் தபாலில் வந்திருந்த அதைப் பிரிக்காமலே பரிமளாவின் கையில் தந்தாள்.
“நீ இங்கே வந்ததுக்கு ஞாபகார்த்தமா வான்டர்பில்ட் தரும் அன்பளிப்பு.”
அதைக் கைப்பையில் வைத்த பரிமளா, “நேத்திக்கி ‘கெம்-சேஃப்’லே குடுத்த செக்கும் இருக்கு. வீட்டுக்குப் போறவழிலே ‘பாங்க் ஆஃப் அமெரிக்கா’ இருக்கா?” என்றாள்.
“இருக்கு, ஆனா செக்குகளை மட்டும் போடணும்னா பாங்க் வரைக்கும் எதுக்குப் போகணும்? இங்கியே ஒரு ஏடிஎம் இருக்கு. போறதுக்கு வழி சொல்றேன்.”
சரவணப்ரியா வெள்ளை கோட் அணிந்து வெளியேறியபோது பரிமளாவும் எழுந்துநடந்தாள். கட்டடத்திலிருந்து வெளியேவந்ததும் ‘மக்டானால்ட்ஸ்’ கண்ணில் பட்டது. அதைக்கடந்து மருத்துவமனையின் நீண்ட நடைவழியில் நடந்தாள். உடல்நிலை சரியில்லாதவர்கள், கை கால்களில் கட்டுப்போட்டவர்கள், துணைக்கு வந்தவர்கள். இளமைதுள்ளும் ஆரோக்கியமான மாணவர்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட அவள், இப்படிப்பட்ட சூழலில் உற்சாகமற்ற முகங்களை தினம் தரிசிப்பது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தாள். அவர்களில் ஒருவராக தான் இல்லையே என்ற சுயநலமான சந்தோஷம் வரலாம்.
நடைவழி முடிந்தபோது பலவித உணவுப்பண்டங்களின் வாசனைகளைப் பிரித்தறியாதபடி கலந்து வெளிப்படுத்திய பெரிய சாப்பாட்டுக்கூடம். அதன் எதிரில் மூன்று ஏடிஎம். அதில் ஒன்று அவள் செருகிய அட்டையைப் படித்து அவளைப் பெயர்சொல்லி வரவேற்றது. கணக்கில் செக்கைப் போடவேண்டும் என்கிற விருப்பத்தைத் தெரிவித்தாள். முதலில் வான்டர்பில்ட்டின் செக். வீட்டிலிருந்து விமான நிலையம் வருவதற்கும், மறுபடி திரும்பிச் செல்லவும், பிரயாணத்தின்போது சாப்பாட்டிற்கும் மற்ற வழிச்செலவுகளுக்கும் என மொத்தம் இருநூறு டாலர். அளவான மதிப்பீடு. இயந்திரம் அதை விழுங்கி அடுத்த செக் இருக்கிறதா எனக் கேட்டது. ‘கெம்-சேஃபி’ன் உறையைப் பிரித்தபோது அதிலொரு நீண்ட காகிதம். அதன் மேற்புறத்தில் ஒரு செக். கீழ்ப்பகுதியில் பல பாராக்கள் கொண்ட கடிதம். அதை பிறகு படித்துக்கொள்ளலாம். செக்கைத் தனியே கிழித்து அதன் பின்பக்கத்தில் கையெழுத்திட்டு திருப்பியபோதுதான் டாலர் தொகையை கவனித்தாள், திடுக்கிட்டாள். இருபத்தைந்தாயிரம். கல்லூரிகளில் இதுபோல் அவள் உரை நிகழ்த்துவதற்கு நூறிலிருந்து இருநூற்றிஐம்பது டாலர்வரை சன்மானம் கொடுப்பது வழக்கம். தனியார் நிறுவனம் என்பதால் தாராளமாக நானூறு தரலாம் என நினைத்தாள். இருநூற்றிஐம்பதுடன் இரண்டு பூஜ்யம் அள்ளிப் போட்டுவிட்டார்களோ? எழுத்திலும் இருபத்தைந்தாயிரமும் இரண்டுசுழி சென்ட்டும். என்ன செய்வது? மாதவியைக் கூப்பிட்டபோது பதிவுசெய்யப்பட்ட செய்திதான் பதில்.
ஏடிஎம்மைப் பயன்படுத்த அவளுக்குப் பின்னால் பொறுமையற்ற இருவர், உடனே முடிவுசெய்தாக வேண்டும். பணத்தைப் போட்டுவிடலாம், தவறாக இருந்தால் செக்கை ரத்து செய்யட்டும்.
ஏடிஎம் இரண்டாவது செக்கையும் சாப்பிட்டு இரண்டு செக்குகளின் படத்தை அச்சடித்து, அவள் கணக்கில் தற்காலிகமாக 25,200 டாலர் சேர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டு ஒரு நீண்ட காகிதத்தைத் துப்பியது. அதையும், வெளியே தலைநீட்டிய பாங்க் அட்டையையும் இழுத்துக்கொண்டு திரும்ப நடந்தாள். குழப்பமாக இருந்தது. வழியிலிருந்த ‘மெக்டானால்ட்ஸி’ல் நுழைந்தாள். காலை ஒன்பதுக்குமேல் என்பதால் கும்பலில்லை. உணவு வாங்குமிடத்தில் இரண்டுமூன்று பேர்கள்தான். எப்போதும் மூக்கை உறுத்தி முகத்தைச் சுளிக்கவைக்கும் சுடப்பட்ட மிருகக்கொழுப்பின் வாசம் அவளை ஒன்றும்செய்யவில்லை. ஒருமூலையில் அமர்ந்து ‘கெம்-சேஃப்’ செக்கின் கீழ்ப்பகுதியை எடுத்துப் பிரித்தாள். செக்கில் கையெழுத்திடுவது பின்வரும் ஒப்பந்தத்தை ஏற்பதாக அர்த்தம் என்று கோடிட்ட வரிகளைப் படித்ததும் சிறிது பயமாக இருந்தது. ஒப்பந்தத்தின் விவரங்களை நிதானமாகப் படித்தபோது பயம் அவசியமில்லை எனத் தோன்றியது. ‘கெம்-சேஃப்’ நிறுவனத்தின் தற்காலிக ஆலோசகராகப் பணிசெய்ய வேண்டும், அவ்வளவுதான். ஆலோசகரின் பொறுப்புகளும் அதிகமில்லை.
முதல்நாள் வரவேற்புப்பெண் கொடுத்த உறையை மாதவி இடைமறித்தது நினைவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்கியதில் அவள்பங்கு ப்ரதானமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மாதவி பரிமளாவுக்கு உதவிசெய்ய வேண்டிய அவசியம் என்ன? அவளிடம் தன் பணக்கஷ்டத்தை வெளிப்படச் சொல்லவில்லையே. க்ரான்ட் கிடைக்காததை சாதாரண செய்திபோல்தானே சொன்னாள். ஒருவேளை, நன்றிக்கடனோ? சிறுவயதில் மாதவியை மற்றவர்கள், ‘உன் வீட்டிலே இருக்கறது உன்னோட அப்பாவா, தாத்தாவா?’ என்று கேலிசெய்தபோது அவளுக்கு ஆதரவாக பரிமளா இருந்திருக்கிறாள். அதை ஞாபகம்வைத்து இப்போது உதவியிருக்கலாம். பரிமளாவின் மன்னியும், அவள் குழந்தைகளும் நிறைந்த உலகில் இப்படியும் ஒருத்தி.
மாதவியின் தயவில்தான் பணம் தரப்பட்டிருக்கும் என்கிற எண்ணமும் பரிமளாவுக்கு திருப்தி தரவில்லை. மாதவியிடம் கடன்பட வேண்டுமா என தன்மானம் தடுத்தது. அரசாங்கத்திலோ, பல்கலைக் கழகங்களிலோ பொறுப்பும் செல்வாக்கும் மிகுந்த பதவி வகிப்பவர்களுக்குத்தான் தனியார் நிறுவனங்களில் ஆலோசகர் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் ‘சில்லறைப்பணம்’ கிடைக்கும். அவள் ஒரு சாதாரண ஆசிரியைதானே, அவள் தயவு யாருக்கு வேண்டும்? அவளால் ‘கெம்-சேஃபி’ற்கு என்ன லாபம்? ஏன், சரவணப்ரியா அவளுக்குத் தருவதாக இருந்த வேலையை ‘கெம்-சேஃபி’ற்குச் செய்தால் போகிறது. ஆராய்ச்சியில் அவர்கள் உருவாக்கும் எண்ணற்ற எண்களை மேய்க்க உதவி தேவைப்படலாம். ஒப்பந்தத்தில் காலஅளவு குறிப்பிடப்படா விட்டாலும் ஓராண்டிற்கு இருபத்தைந்தாயிரம் டாலர் அதிகமில்லை என நினைத்தாள். அடுத்துவரும் ஆண்டுகளிலும் ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.
‘கெம்-சேஃபி’ற்கு ஏதாவதொரு வழியில் தன்னால் உதவமுடியும் என்ற எண்ணம் உதயமானதும் பணத்தை ஏற்பது தவறில்லை என்ற முடிவுக்கு வந்தாள். எழுந்து சரவணப்ரியாவின் இடத்திற்கு நடந்தாள். அவளைப் பார்த்ததும், “உங்க ஊர் அதீனா சக்திவாய்ந்த கடவுள்தான் போலிருக்கு. செவ்வாய்தான் அவகிட்ட என் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே எனக்கு இன்னொரு வேலை ஏற்பாடு பண்ணியிருக்கா, பார்!” என்று சொல்லவேண்டும். ஆனால், ஆய்வறையில் அவளைக் காணோம். வேலை முடியவில்லை போலிருக்கிறது. காத்திருக்கும் நேரத்தில், இரண்டு நாட்களாகச் சேர்ந்திருந்த மின்-தபால்களை தலைப்பைப் பார்த்தே அழித்தாள். லிபோன்டா நாட்டின் உயர் அதிகாரி லாட்டரியில் அவள் ஒருமில்லியன் டாலர் ஜெயித்ததாகச் அறிவித்ததை நம்ப அவள் ஆறுவயதுப் பெண் இல்லை. அறுபதுவயதில் அவளுக்கு கள்ளக் காதலர்களும் அவசியம் இல்லை. எல்லாம்போக மூன்று மின்-அஞ்சல்கள் மிஞ்சின.
முன்னிரவில் அனிடா அனுப்பிய கடிதத்தை முதலில் திறந்தாள்:
ஹாய் பரி!
எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்காவிட்டாலும் சிறுவயது நண்பர்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் நீ திளைப்பதாகத் தெரிகிறது. அதைக்கேட்டு எனக்கும் சந்தோஷம். நீ விரும்பியபடி செவ்வாய் உன்வீட்டிற்குச் சென்றேன். வேலையாள் வந்து ஜன்னலின் கண்ணாடியை மாற்றிவிட்டுச் சென்றான். பிறகு, உன்வீட்டிலேயே தங்கியிருக்கிறேன். தனியாக வாழ பழக்கிக்கொள்ள வேண்டாமா? ‘ரான்டம் அன்ட் சான்ஸை’ கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். சுpல பகுதிகளை நீ விளக்கினால்தான் புரியும். சனிக்கிழமை நீ வருவதற்குள் வீட்டை சுத்தம்செய்து உனக்காகக் காத்திருப்பேன். உன் பயணத்தைப்பற்றிக் கேட்க மிகுந்த ஆவல்.
அனிடா.
அடுத்தது அன்றுகாலையில் ‘மாதவி@கெம்-சேஃப்.காமி’லிருந்து வந்திருந்தது. மிக சுருக்கமான செய்தி.
அன்புள்ள பரிமளா:
இணைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரை ‘வொர்க்கர் சேஃப்டி’க்கு அனுப்பப்பட்டிருக்கிறது: 1-பிபி.டாக். தயவுசெய்து அதை சரிபார்க்கவும். அவசரம் இல்லை. நண்பர்களுக்கு நடுவில் இன்று உங்களுக்கு நேரமிருக்காது, நாளை சான்டா க்ளாரா சென்றபிறகு படித்தால் போதும்.
மாதவி.
பரிமளாவின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள கட்டுரை அனுப்பப்பட்டிருக்கும். அவர்கள் பணத்தைத் தன் கணக்கில் சேர்த்து சிலநிமிடங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் வேலை வைத்துவிட்டார்களே. அதுவும் சரிதான். சற்றுமுன் பணத்தை ஏற்றுக்கொண்டதால் அவளை வருத்திய குற்றஉணர்வு இப்போது இல்லை. ஊருக்குத் திரும்பிச்செல்லும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்? சரவணப்ரியா வருவதற்குள் திறனாய்வு செய்தால் போகிறது என்ற முடிவுடன் எழுத்துப்படியைத் திறந்தாள். சேமிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு சரி என்ற பதில்தந்து அதை சரவணப்ரியாவின் கணினியில் இறக்கினாள்.
ஸ்ரீஹரிராவ், அவர் கவனத்திற்கு வரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிலவற்றை, அவள் விமர்சனத்திற்கு எப்போதாவது அனுப்புவது வழக்கம். நடுநிலையில் நிற்பதற்காக அவள் கட்டுரையின் ஆசிரியர் பெயர்களைப் பார்க்காமல் அதை மதிப்பிடுவது வழக்கம். அந்தமுறையில் மாதவி அனுப்பிய கட்டுரையின் முதல்பக்கத்தை வேகமாக மேலே தள்ளிவிட்டு இரண்டாம் பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.
முதலிலிருந்தே 1-ப்ரோமோப்ரோபேனை உபயோகிப்பதில் எந்தவித ஆபத்துமில்லை என்கிற கோட்பாட்டை நிலைநாட்டுவதுதான் ஆராய்ச்சியின் குறிக்கோள் என்பது நிதர்சனமாகத் தெரிந்தது. அதை மனதில்வைத்தே பரிசோதனைகள் செய்யப்பட்டிருந்தன. வார்த்தை ஜோடனையில் அழகாகப் பூசிமெழுகி யிருந்தாலும் பரிமளாவின் அனுபவ அறிவுக்கு பல தவறுகள் உடனே தெரிந்தன. அவற்றை வரிசைப்படுத்தினாள்.
1. இருக்கைகள் தயாரிப்பில் நேரடியாக ஈடுபட்டவர்கள் பத்தொன்பது பேர் என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், சோதனைகளில் பதினேழு பேருடைய முடிவுகள் மட்டுமே. இருவரை சேர்க்காததற்குக் காரணம்?
2. வேலையாட்களை, தொழிலகத்தின் ஒருமூலையில் அமைந்த ஸ்டோர் ரூம் ஆட்களோடு ஒப்பிட்டு நரம்புணர்ச்சியில் வேறுபாடு இல்லை என்று காட்டியது சரியில்லை. அங்கே 1-ப்ரோமோப்ரோபேன் குறைவாக இருக்கும் என்று எப்படி நிச்சயமாகச் சொல்லமுடியும்? காற்றில் அந்த இரசாயனப்பொருளை ஏன் நிர்ணயிக்கவில்லை?
3. எதிரில் இருக்கும் பணிமனையிலிருந்து வெளியேறும் காற்றை சுவாசிப்பதால் ஊறுகள் ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்திற்கு ஆதரவாக அந்தப் பணிமனையில் வேலைசெய்யும் ஆட்களை ஏன் சோதனையில் சேர்க்கவில்லை?
4. ஏர்கன்டிஷன் செய்யப்பட்ட அலுவலகத்தில் வேலைசெய்பவர்கள், கட்டடத்தின் வெளிவேலைகளைக் கவனிக்கும் ஆட்கள், இவர்களை 1-ப்ரோமோப்ரோபேன் சுவாசிக்காத ‘கன்ட்ரோல் க்ரூப்’பாகப் பயன்படுத்தினால் முடிவுகளுக்கு கனம் சேரும்.
‘1-பிபி-பரி’ என்ற பெயரில் தான் கண்டுபிடித்த தவறுகளை பரிமளா சேமித்தாள். மறுமுறை கவனமாகப் படித்தால் இன்னும் சில கண்ணில்படும். அவற்றையும், எல்லா குறைபாடுகளை நிவர்த்திக்கும் வழிமுறைகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக இரண்டுநாட்களுக்குள் மாதவியின் கவனத்துக்கு அனுப்ப முடிவுசெய்தாள்.
சொன்னபடி இரண்டுமணிக்குள் சரவணப்ரியா திரும்பி வருவதாகத் தெரியவில்லை. மூன்றாவது மின்-தபாலையும் திறந்தாள். ‘வொர்க்கர் சேஃப்டி’ என்கிற சஞ்சிகையின் ஆசிரியரிடமிருந்து வந்த சுருக்கமான கடிதம்.
டாக்டர் கோலப்பன்:
‘1-ப்ரோமோப்ரோபேன் கையாளுவதைப் பற்றி’ என்கிற தலைப்பில் நீங்கள் சேர்ப்பித்த கட்டுரை கிடைத்ததை அறிவிக்கும் கடிதம் இது. விரைவில் கட்டுரையை ஏற்பதுபற்றி முடிவெடுப்போம். தங்கள் ஆராய்ச்சியை ‘வொர்க்கர் சேஃப்டி’யில் வெளியிட நீங்கள் முன்வந்ததற்கு மிக்க நன்றி.
டாக்டர் மார்வெல்.
அதைப் படித்ததும், செய்தி அவளுக்கு அனுப்பட்ட காரணம் பரிமளாவுக்குப் புரிபடவில்லை. கட்டுரைக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? இது அவளுக்கு வந்த கடிதம்தானா? முதல்வரியின் முகவரியில் பரிமளாபிகேசி@ஜிமெயில்.காம், அவளுக்கு வந்ததுதான்.
கட்டுரையை மறுபடி திறந்தாள். அவள் படிக்காமல் தள்ளிய முதல்பக்கத்தில் ‘1-ப்ரோமோப்ரோபேன் கையாளுவதைப் பற்றி’ என்கிற தலைப்பிற்குக் கீழே ஆசிரியர்களின் பெயர்கள்: சென்னை, இந்தியாவில் அமைந்திருக்கும் ரைடர் சீட்ஸ் தொழிலகத்திலிருந்து திரு கஜமுகன். சான்டா க்ளாராவைச் சேர்ந்த தனிப்பட்ட ஆராய்ச்சியாளர் டாக்டர் பரிமளா கோலப்பன், கட்டுரையின் பிரதம ஆசிரியர். கட்டுரையின் கடைசியில் ‘கெம்-சேiஃப’ச் சேர்ந்த இருவருக்கு நன்றி: பரிசோதனைகளைச் செய்வதில் உதவிய ஜான் கில்மர், கட்டுரை எழுதுவதில் துணைபுரிந்த டாக்டர் மாதவி ரங்கனாதன்.
சிலநாட்களுக்கு முன் சரவணப்ரியா ‘ரைடர் சீட்ஸை’யும், அதன் மேனேஜரையும் குறிப்பிட்டது பரிமளாவின் நினைவுக்கு வந்தது. கணினியின் முகப்பிலேயே 1-ப்ஆர்பி என்றொரு கோப்பு. அதில் தேடுவது நியாயமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. மானியம் என்னவோ கிடைக்கப் போவதில்லை. சரவணப்ரியாவின் ஆராய்ச்சியைத் திருடி பரிமளா விற்கப் போவதில்லை, என்ன தவறு? என்ற சமாதானத்துடன் அதைத் திறந்தாள். அதற்குள் இன்னும் பலகோப்புகள். சரவணப்ரியாவின் பெயரில் ஒன்று. அதில் பல எழுத்துப்படிகள். அவள் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரையைத் தேடியெடுக்க அதிக நேரமாகவில்லை. ‘கெமிகல் ரிசர்ச் இன் டாக்சிகாலஜி’ சஞ்சிகைக்கு அனுப்ப இருந்த அந்த அறிக்கையின் தலைப்பு, ‘1-ப்ரோமோப்ரோபேன் சுவாசிப்பதால் உடலில் உண்டாகும் மாறுதல்கள்.’ எழுதியவர்கள் வரிசையில் சாரா நாதனின் பெயர் முதலில் இருந்தது. அவள்தான் கட்டுரைக்கு முழுப்பொறுப்பு என்பதைக்காட்ட அவள் பெயரை ஒருநட்சத்திரம் அலங்கரித்தது. அவளை அடுத்து சாமி, ஜேசன், ஐரீன். கடைசியில் கஜமுகன். மேலே படித்தாள். சுருக்கமாக, ஆனால் எல்லா விவரங்களும் கட்டுரையில் அடங்கியிருந்தன. குழப்பமின்றி முன்வைத்த குறிக்கோள், மிக கவனமெடுத்து குறைவைக்காமல் செய்யப்பட்ட சோதனைகள், பல கோணங்களில் அலசப்பட்ட முடிவுகள், நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகள், மிக கோர்வையான தௌ;ளிய நடை. படித்து முடித்தபோது சரவணப்ரியா மீது அவளுக்குப் பொறாமையாகக்கூட இருந்தது.
மாதவியிடமிருந்து வந்த கட்டுரையை இன்னொருமுறை கவனமாகப் படித்தபோதுதான் பரிமளாவுக்கு உறைத்தது. கில்மர் நடத்திய அரைகுறை பரிசோதனைகளை வைத்து, பார்ப்பவர்கள் கண்களைக் கட்டும் மந்திரவாதியின் சாமர்த்தியத்தில் மாதவி எழுதியது. விஞ்ஞானத்தின் கண்ணோக்கில் சராசரிக்கும் குறைவான அதை மூன்றாம்தர சஞ்சிகையில் பிரசுரிப்பதற்குக் கூட பரிமளாவின் பெயர் தேவை. அதற்கு அவர்கள் தரும் விலை இருபத்தையாயிரம் டாலர். முதலில், தன்பெயருக்கு அவ்வளவு மதிப்பா என்று ஆச்சரியமாக இருந்தது. பிறகு, மாதவி ஒருவார்த்தை கேட்காமல் தன்னை விலைபேசியதில் அவள்மேல் கோபம் வந்தது. கடைசியில், சுயநலம் வென்றது. அந்தப்பணம் இருந்தால் விட்னியை வாடகைக்கு வைத்துக்கொள்ளும் அவஸ்தை இருக்காது. ஆண்டுதோறும் அச்சில் வெளிவந்து, பிறகு நூலகக்குவியலில் புதைந்து, யாரும் சீந்தாத எண்ணற்ற ஆராய்ச்சிக்கட்டுரைகளில் இதுவும் ஒன்றாகப் போகிறது. அதனால் யாருக்கு என்ன நஷ்டம்? பரிமளா சம்மதிக்காவிட்டால், பணத்திற்காகத் தங்கள் நல்லபெயரை விற்க வேறுயாராவது மாதவிக்கு உடனே கிடைப்பார்கள்.
கஜமுகனின் மனமாற்றமும் புரிந்தது. சரவணப்ரியாவுக்கு அனுமதி மறுப்பதற்கும், தன்பெயரை மாதவியின் கட்டுரையில் சேர்ப்பதற்கும் அவனுக்குத் தகுந்த பரிசு கிடைத்திருக்கும். இதையெல்லாம் சரவணப்ரியாவிடம் சொல்லிவிடலாமா என்றொரு உந்துதல். இந்த ‘டபில்-க்ராஸ்’ திரிசமம் அவசியமில்லை என விவேகம் உடனே தடுத்தது. இப்போது இல்லாவிட்டாலும், விரைவில் சரவணப்ரியா தன் கட்டுரையை பூர்த்திசெய்து வெளியிடுவது நிச்சயம். பரிமளாவின் உதவி அவளுக்குத் தேவையில்லை. நடைவழியில், “அவசர வேலை. அதனால்தான் இன்று வந்தேன்” என்ற அவள் யாரிடமோ காரணம் சொல்வது பரிமளாவின் காதில் விழுந்தது. அவசரம் அவசரமாக, மாதவி அனுப்பிய கட்டுரையையும், அதற்கு அவள் எழுதிய குறைபாடுகளையும் சரவணப்ரியாவின் கணினியிலிருந்து தன் ‘பென்-டிரைவி’ற்கு மாற்றிவிட்டு அவற்றைக் குப்பையில் தள்ளி அழித்தாள்.
“சாரி பரிமளா! உன்னைக் காக்கவச்சிட்டேன். வேலைமுடிய மூணுமணி ஆயிட்டுது, ப்ரின்டர்லே தகராறு” என்று சொல்லிக்கொண்டே அச்சிட்ட ஒரு தடியான காகிதக்கட்டைச் சுமந்துவந்த சரவணப்ரியாவின் முகத்தில் படுஉற்சாகம்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தாள் பரிமளா.
“என்ன ஆச்சு உனக்கு? ஏன், என்னமோ மாதிரி இருக்கே?”
“ஒண்ணுமில்லை. இதுவரைக்கும் நியுஸ் படிச்சேன்.”
“அப்படிப்பட்ட சோகமான செய்தி என்ன? லூசியானாலே இருக்குற எல்லா பள்ளிக்கூடத்திலேயும், டைனசார் உள்பட எல்லா உயிர்களையும் ஆறாயிரம் வருஷத்துக்கு முந்திதான் கடவுள் படைத்தார்னு சொல்லித்தர கவர்னர் பாபி ஜின்டால் ஆர்டர் போட்டிருக்காரா?”
அந்தக் கேலிக்கு என்ன சொல்வதென்று பரிமளா யோசிக்கையில் சரவணப்ரியாவுக்கு ஹிக்கரியிடமிருந்து அழைப்பு.
“டாக்டர் நாதன்! உங்களை நெருக்குவதற்கு மன்னிக்கவேண்டும்! இரத்தத்தின் மாற்றங்களை கணிக்கும் சோதனைகள் முடிந்துவிட்டனவா?”
“இப்போதுதான். சிறுநீரை அடுத்த வாரம்தான் சோதிக்க வேண்டும்.”
தயக்கத்துடன், “முடிவுகளை நான் தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டான்.
“ஒரு நிமிடம்.” சரவணப்ரியா உயர்மேஜையில் இடம் ஒதுக்கி அதன்மேல் அவள் எடுத்துவந்த காகிதக்கற்றையைப் பரப்பிவைத்து அதிலிருந்து சில தாள்களைப் பொறுக்கியெடுத்தாள்.
“எல்லா எண்களும் என்முன்னால். எந்தெந்த ‘ஸ்பெசிமன்’ யார்யாரிடமிருந்து எடுத்தது என்று நீதான் சொல்ல வேண்டும்.”
“என் கணினியில் விவரங்களை வைத்திருக்கிறேன்.”
அவன் அவற்றைத் தேடியெடுக்கும்வரை சரவணப்ரியா காத்திருந்தாள்.
“2, 3, 6, 9, 10, 11, 13, 14 என்று அடையாளம் செய்த குப்பிகளில் தொழிலாளர்களின் இரத்தம். மீதி அவர்களின் வீட்டில் வாழ்பவர்கள்.”
அந்த எண்களைத் தன்முடிவுகளோடு வேகமாக ஒப்பிட்ட சரவணப்ரியாவின் முகம் மலர்ந்தது.
“எண்களில் தவறெதுவும் இருக்காதே” என்று உறுதிசெய்யக் கேட்டாள்.
“சாத்தியமில்லை. குப்பிகளின் எண்களை இரண்டுமுறை சரிபார்த்து நானே உங்களுக்கு அனுப்பினேன்.”
“முடிவு ஓரளவு நான் எதிர்பார்த்ததுதான்” என்றாள் மிக சாதாரணமாக.
“நம் கட்சிக்குச் சாதகமான முடிவுகளா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் ஹிக்கரி.
“அப்படியும் வைத்துக்கொள்ளலாம்” என்று விஞ்ஞானிகளுக்கு உரித்தான ஜாக்கிரதை உணர்ச்சியோடு பதில் சொன்னாலும் குரலின் உற்சாகம் சரவணப்ரியாவைக் காட்டிக்கொடுத்து விட்டது.
“அவற்றை உடனே எனக்கு அனுப்பமுடியுமா?” என்று ஆவலுடன் கேட்டான்.
“இன்றுமாலை வரப்போகிறாயே, அப்போது நேரில் முடிவுகளை விவாதிக்கலாமே.”
சரவணப்ரியாவிடமிருந்து நல்லபதிலைப் பெற ஹிக்கரி வேறுவிதமாகக் கேட்டான். “வேலையாட்களின் நரம்புக்கோளாறுகளுக்கு அவர்கள் சுவாசித்த 1-ப்ரோமோப்ரோபேன் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?”
“இரண்டையும் சம்பந்தப்படுத்தி ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையை விரைவில் வெளியிட முடியும் என நினைக்கிறேன்.”
“அதுபோதும். தாங்க்ஸ், மிசஸ் நாதன்! நான் மாலை சந்திக்க வருகிறேன்.”
சரவணப்ரியா பரிமளாவின் பக்கம் திரும்பினாள். “ஹிக்கரி வேலை முடிஞ்சிபோச்சு. இனிமே உன்னைக் கவனிக்கிறேன். இங்கே, ‘வுட்லன்ட்ஸ்’லே வெஜிடேரியன் சாப்பாடு நல்லா இருக்கும். மதியத்துக்கு போகலாமா?”
“எனக்கு உடம்பு ஒருமாதிரிதான் இருக்கு. வீட்டுக்குப்போய் தெளிவா ரசம் சாதம் சாப்பிட்டு ஒரு குட்டித்தூக்கம் போட்டா சரியாயிடும்” என்றாள் பரிமளா தொங்கிய குரலில்.
“அப்படியே செய்வோம். செவ்வாயே பார்த்தனான் போனது நல்லதாப்போச்சு.”

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்