பட்டமரங்களும் பச்சைமரமும்

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

கவிதா நோர்வேஅதைப்பற்றித்

தெரியாமல் இருப்பதே

புனிதம் என்று

சொன்னார்கள்

தெரிந்தததையெல்லாம்

தெளிவாய் எழுதிய

என் கைகள்

புரிந்ததையெல்லாம்

புரியாததது போல் நடப்பதுவே

நல்லபெயர் தருமென்று…

மூலையில் முடங்கிப்

முடமாய்ப் போனது

என் கைகள் மட்டுமல்ல

கவிதைகளும்தான்

உணர்வுகளை

அடக்கி விழுங்கி

காலத்தின் காட்டாயத்தில்

மொட்டையாக நிற்கிறதே

இப்பனிதேசத்துப்

பச்சைமரம்

அதைப்போலவே

நிர்வாணகோலமாய் நான்

என்னைச்சுற்றிலும்

எப்போதும் பனிகாலமாய்

இவர்களும் அவர்களும்…

வசந்தம் காண

ஆசைதான்.

கிளைகள் வளர்ந்தால்

வானம் இடிக்குமென்று

சொன்னார்கள்

உலகளந்து செல்லும்

சில ஊர்க்குருவி

கைகொட்டி

சிரித்துச் சென்றபோதும்

எதைப் பற்றியும்

அறியாமல் இருப்பதே

புனிதம் என்று சொல்லி

குருவிகளையும்

வெறுத்தொதுக்கினர்

காற்றும் புகாத

நாற்சுவருள்

என்னை இருத்திவைத்து

ஒடுங்கி இருப்பதே

ஒழுக்கம் என்று

ஊர்குருவிகளை விமர்சித்தனர்…

அடக்கி வைத்த

என் உயிர் அணுக்களை உசுப்பி

பசமை என்னில் துளிர்விடுவதையும்

எல்லைக்கோடுகளைத் துளைத்து

கிளைகள் தாண்டிப் படர்வதையும்

மகரந்தம் காற்றில்

மிதந்து செல்வதையும்

மொட்டுக்கள் விரிவதையும்

நான் ரசித்துக்கொண்டேன்

அதைப் பற்றித்

தெரியாமல் இருப்பதே

புனிதம் என்று

சொன்னவர்களும்

செயலற்றுப்

பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே