நிஜத்தின் நிறங்கள்..!

This entry is part [part not set] of 47 in the series 20110430_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்



நிஜம்…
தன் நிழல்களையே முன்னிறுத்துகிறது,
நிறைய நேரங்களில்..
வரவுக்காக.. வாய்ப்புக்காக..
சரிசமமான பயணத்திற்காக..
பொய்யானப் புகழ்ச்சிக்காகக் கூட..

தனக்கென்றுத் தனியாக
நிறமொன்று இருப்பதால்,
இடத்துக்கேற்ப பயன்படுத்த
இருப்பில் வைத்திருக்கிறது,
வெவ்வேறு நிழல்களை,
பல்வேறு நிறங்களில்..!

ஊற்றப்படும் கலத்துக்கேற்ப
உருமாறும் திரவம் போல
பாத்திரங்கள் பலவாகக்
காட்டிக் கொள்ள முயல்கிறது..!

ஆனாலும்,
எதேச்சையாகவோ,
இடறி விழுந்தோ
தெரிந்து விடுகிறது
நிஜத்தின் நிறம்..!

பாமரர்கள் நாங்கள்
பயணிக்கும் வண்டியிலும்,
ஊடுருவியிருக்கின்றன போலும்
மாறுவேட நிழல்கள்.. – வண்டி
மாடுகள் மிரள்கின்றன..
மனமிரங்கி இறங்கிடுங்களேன்..!

உமக்கான அலங்கார வண்டிகள்
பின்னால்(ள்) வரக்கூடும்..!!!

– பனசை நடராஜன், சிங்கப்பூர் –

Series Navigation